*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 18, 2008

வாடகை தேசம்...

உண்மைதான்...இது என் தேசமல்ல.
வரவேற்பில்லாத
விருந்தாளியாக நான் இங்கு.
ஆறாயிரம் மொழிகளுக்குள்
ஆறே மொழியாம் ஆதி மொழி.
அதில் தமிழும் ஒன்றாம்.
புரியாத பெருமிதம்.
அந்தத் தமிழ் சீர்குலைந்து
எச்சில் இலையாய் கிடக்கிறது உலகம் எங்கும்.
உச்சரிக்கும் வேற்றுமொழி
வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே.
பிச்சைக்காரராய்...
தீண்டத்தகாத நச்சுப் புழுவாய்
அருவருப்பாய் பார்க்கின்றான் வெள்ளையன்.
ஏன் வந்தோம்...எதற்கு வந்தோம்
எங்கள் மொழியறிவு,பண்பாட்டின் வழியறிவு
பாரம்பரியத்தின் பகுத்தறிவு
அறிவானா அவன்.
என் ஊரில் பனையும்,தென்னையும்
முற்றத்துக் கோலத்தோடு...ஓலைக் குடிசையும்
முந்தலில் மல்லிகைப் பந்தலின் அழகையும்
அறிவானா அவன்.
கொல்லைப் புறத்தில் அழகாய் கிணற்றடி.
அதைச்சுற்றி மா,பலா,வாழை.
கிடுகு வேலிக்குள் எங்கள் உலகமே தனி.
ஆறடிக்குள் வாழபவன் அவன்.
நாளைய வாழ்வை நாளைக்கேதான் தேடுபவன்.
நெஞ்சில் பாசம் சுமந்தால்
பாரம் என்று
பாசம் நாக்கில் சுமப்பவன் அவன்.
என் ஊர் அழகு...என்வீடு அழகு...
என் கோவில் அழகு...என் மாடுகள் அழகு...
என் தெரு அழகு...என் பூக்கள் அழகு...
என் குழந்தை அழகு...என் தாய் அழகு...
என் தாய் தேசம் மட்டுமே அழகு...
இங்கு எது...என்ன...அழகு.
நாய் தின்னாப்
பணத்தைத் தவிர.
ம்ம்ம்...போடா...போ !!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

Anonymous said...

அந்தத் தமிழ் சீர்குலைந்து
எச்சில் இலையாய் கிடக்கிறது உலகம் எங்கும்.
உச்சரிக்கும் வேற்றுமொழி
வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே.




உங்கள் கவிதைகள் மிகவும் உண்மையாகவும்
இனிமையாகவும் இருக்கிறது நண்பி ..
தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்

ஓவியன்

ஹேமா said...

வணக்கம் ஓவியன்.
உங்கள் கருத்துக்கள் எப்போதும் என்னை ஊக்குவிக்கும்.தொடர்ந்தும் உங்கள் மனதின் ஓட்டங்கள் தேவை.மனதின் வலிகள் ஒவ்வொன்றும் கவிப்பிரசவங்களாக நன்றி ஓவியன்.அழகான எனக்குப் பிடித்த தமிழ் பெயர் உங்களுக்கு.தமிழால் கை கோர்ப்போம்.

விச்சு said...

இங்கு எது...என்ன...அழகு.
நாய் தின்னாப்
பணத்தைத் தவிர.
ம்ம்ம்...போடா...போ !!!// சொந்த ஊரைப்பற்றிய உங்கள் பெருமிதம் ரொம்பவே அழகு ஹேமா.

Post a Comment