*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, August 30, 2008

நீயும் தமிழன்தான்...

நீயும் தமிழன்தான்
நீ... என் சகோதரன்
நீ... என் உறவு
நீ... என் இனம்
நீயும் தமிழன்தான்
என்றாலும்...

நீ...ஒரு இந்தியன்!!!

நீ...உன்
நாட்டிலேயே
நிராகரிக்கப் பட்டிருக்கிறாயா...
உன் உயிர் காக்க
ஓடி ஒழிந்திருக்கிறாயா
அநுபவித்திருக்கிறாயா...
அகதி வாழ்வு.
இரத்தமும் சதையும்
தந்த பெற்ற தெய்வங்கள்
கண் முன்னே
இரத்தமாய் சதையாய்
சிதறிக் கிடந்தும்
இறுதிக் கிரியைகள்
செய்யக் கூட
கையாலாகாதவனாகி
உன் உயிர் காத்து
ஓடி ஒளித்திருக்கிறாயா!!!

சிதறிய உடல்களைக்
கிண்டிக் கிளறி
அப்பாடி.....
எவருமில்லை
என் வீட்டில் என்று
நின்மதிப் பெருமூச்சு
விட்டிருக்கிறாயா!!!

இறந்து கிடக்கும்
தாயின் உணர்வறியாப்
பச்சைக் குழந்தை
முலை பிடித்துப்
பால் குடிக்கும்
பரிதாபம்
பார்த்திருக்கிறாயா!!!

சொட்டு அசைந்தாலும்
"பட்"என்று
உன் தலையிலும் வெடி
விழுமென்று
இரத்த வெள்ளத்துள்
பிணத்தோடு பிணமாக
பாதி இரவு வரை
படுத்திருக்கிறாயா!!!

உயிரோடு புதைகுழிக்குள்...
கழுத்தில்லா முண்டங்கள்...
காணாமல் போனவர்கள்...
கற்பையும் பறித்துக் கொண்டு
கருவறைக்குள்ளும்
குண்டு வைத்துச்
சிதறடிக்க விட்டவர்கள்...
ஐயோ ஐயோ...
எத்தனை எத்தனை
கொடிய நச்சு விலங்குகள்
நடுவில் நாங்கள்
அகப்பட்டிருக்கும்
வேதனை அறிவாயா நீ!!!

இலங்கைத் தீவில்
தமிழனாய்ப் பிறந்த
பாவம் தவிர......
தவறு வேறொன்றும்
செய்யவேயில்லையே!!!

ம்ம்ம்.....
கேட்டு உணர்வதை விட
பட்டு உணர்வதே மேல்.
இருந்தும்...
புரிந்துகொள்
இனியாவது என்னை...
உன் தமிழ் சகோதரர்
நிலைமை அறிந்துகொள்.

நீயும் தமிழன்தான்
நீ...என் சகோதரன்
நீ...என் உறவு
நீ...என் இனம்
நீயும் தமிழன்தான்
என்றாலும்....

நீ ஒரு இந்தியன்!!!

ஹேமா(சுவிஸ்)18.01.2007

Friday, August 29, 2008

மனிதனா இவன்?

ஒரு முறை...ஒரே ஒரு முறை


நாட்கள் அலட்சியமாய்
அடுத்தவர்களைப் பற்றிச்
சிந்திக்காமலேயே நகர்ந்தபடி.
தவறவிட்ட
எத்தனையோ ஆசைகள்
தேவைகளைக் காவியபடி
கொஞ்சமாவது
மனச்சாட்சியே இல்லாததாய்.

மிகமிகத் தவறிய
உறவுகள் சொந்தங்கள்.
தவறினாலும்...
தேடிக்கொண்டேயிருக்கும்
உறவாய் பெற்றவர்கள்
அப்பா...அம்மா.

மாறாத ரணமாய்
புரையோடியபடி
அவர்களின் நினைவுகள்.
தேவையாயிருக்கிறது
அன்பும் ஆறுதலும் அரவணைப்பும்.

வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்.
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது.
வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்.

ஏங்கும் மனப்புகை கண்குழி பட்டு
ஆவியாகி கண்ணீராய்த் தெறிக்கும்.
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இரவை நனைக்கையில்
தலையணையையும் நனைத்தபடி.

சுற்றும் பூமியில் ஆயிரம் உறவுகள்.
இருந்தும்...
சுயநலமில்லா உறவு
உங்களுக்காய் காத்திருக்கிறேன்.
தளர்ந்துவிட்ட விரல்களின்
வருடலுக்காய்.
தலைகோதும் தழுவலுக்காய்.

அம்மா...அம்மா
ஆசையாய் இருக்கிறது
ஒரு முறை...
ஒரே ஒரு முறை
உருமாறிச் சிறிதாகும்
வரம் ஒன்று தா தாயே.
மீண்டும் கொஞ்சம் குடியிருக்க
உன் இருண்ட கருவறைக்குள்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, August 26, 2008

திருமலை அதிர்வு...

இப்போ...இப்போ
ஒரு நொடிக்குள்
இரத்தம் உறைந்து நீராய்.

பெற்றவர் குரலோடு
இணைந்திருக்க
அவலக் குரல்களும்
வெடிச்சத்தமும்
வானூர்தியின் இரைச்சலும்
நாய்களின் குரைப்பும்
கைபேசியில் தெளிவாய்
மிக மிகத் தெளிவாய்.

"அப்பா வாங்கோ...
அம்மா லைட்டை நிப்பாட்டுங்கோ...
உள்ளுக்கு வாங்கோ...
பின் வேலி கேட்டைத் திற...
ஓடு..ஓடு...
புரியவில்லை
ஏன் எதற்குப் புரியவில்லை
அழுகிறேன் .
தவிர தெரியவில்லை எனக்கு.
திரும்பத் தொடர்பு தரவில்லை.

சுவிஸில் தம்பிக்கும்
ஜேர்மன் தங்கைக்கும் சொல்லிவிட்டு
அழுது கொண்டிருக்கிறேன்
கையாலாகதவளாய்.
என்ன நடந்திருக்கும்.
யாருக்கு என்ன ஆகியிருக்கும்.
ஐயோ...ஐயோ...

திசைகளின் நோக்கம் அரசியல்.
முடியுமோ முடியாதோ
பெரிய பாறாங்கற்களை
விரும்பியபடி
எங்கும் எதிலும்
தூக்க முடிந்த பாரம் தூக்கி
எறியப்படுகிறது.
ஆயுதங்களால்
பாறாங்கற்களைப் புரட்டி
பற்றைக் காடுகளை
வெட்டிப் புற்தரையாக்கி
பசுமையாக்கி
வா பந்தாடுவோம் என்றாலும்
வர மறுக்கும்
வன்மைப் புரட்சியாளர்கள்.

அழிவோம்
ஆனாலும் விட்டுக்கொடோம்
ஆணவ அதிகாரங்கள்.
எறிகின்ற கற்களுக்குள்
புதைபட்டு
ஆயுளை விடுவது
அற்பப் பதர்களே.

வயோதிபம் தள்ளாட
தானுண்டு தன் மருந்துண்டு
உயிர் போகும் வயதினில்
நின்மதியாய் மூச்சைவிட்டு
மூச்சைவிட
கொஞ்சம் விடுங்களேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 25, 2008

நிழல்...

தொலைத்துவிடுவேன் உன்னை.

ஏன் பின் தொடருகிறாய்?

ஐயோ....

முடியவும் இல்லையே.

உபத்திரவமே தவிர

உதவி எதுவுமே இல்லை

உன்னால்.

உன்னைப் பார்த்தே

அலறியிருக்கிறேன்

சில சமயங்களில்

நான்.

துன்பம்தான் நீ

எனக்கு.

காதலனாய்

கட்டிக்கொள்கிறாயா!

சிநேகிதியாய்

சேர்ந்து சிரிக்கிறாயா!

தோழனாய்

தோள் தருகிறாயா!

சகோதரியாய்

சோர்வு தீர்க்கிறாயா!

அம்மாவாய் அப்பாவாய்

அணைத்துக் கொள்கிறாயா!

மனப்பாரம் குறைத்தால்

ஆறுதல்

சொல்லியிருக்கிறாயா!

எப்போதாவது...எப்போதாவது.

பிறகு எதற்கு

நீ...என்

பின்னால்.

தொல்லைதான்

உன்னால்.

என் தனிமை...

இரகசியம்...திருட்டு

எதிலும் பங்கெடுக்கிறாய்.

வேண்டாம் நீ...

எனக்கு போய்விடு.

இருளில்தானே

துணை தேவை.

அவ்வேளை

நீ இல்லை.

ஒளிந்து கொள்கிறாய்.

பகலில் மாத்திரம்

முன்னாய்...பின்னாய்

இடமாய்...வலமாய்

ஐயோ எதற்கு நீ.

தொலைந்து போ.

பிரயோசனம் இல்லாத

பிசாசு நீ.

ஓ....

சுலபம் இல்லையோ

நீ விலகுவது.

நீ விலகினால்....

நானும் இல்லையோ

கடவுளே!!!!!!ஹேமா(சுவிஸ்)03.06.2007

Sunday, August 24, 2008

கானல்...

Friday, August 22, 2008

சந்தோஷம்...

நிறை நாட்களின் பின்
மனம் முழுதும்
வீட்டுக்குள்ளும் வெளியிலும்
பூக்களின் வாசனை
நிறைந்து வடிவதாய்...

முகப் புன்னகை இதழ்களில்
முட்கள் முறித்து
சிரிப்பின் பாதைகள்
செப்பனிடப்பட்டதாய்...

வார்த்தை வரம்புகளில்
களைகள் பிடுங்கப்பட்டு
போதுமான் நீர் பாய்ச்சி
வறண்ட சொற்களில்
குளிர்ச்சி நிரம்பியதாய்...

எண்ண வனாந்தரத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பசுமைப் புரட்சி செய்து
ஓரளவு இயல் வாழ்வில்
பச்சையம் காண்பதாய்...

இரத்தக் குழாயில்
கவலைப் புண்கள்
மெல்ல ஆறி
செயல்களின் சாமர்த்தியத்தில்
மனம் மருந்தோடு மயிலிறகாய்...

ஏமாற்றத் தீ
தெய்வம் புகுந்ததாலோ என்னவோ
தென்றலின் சோலைப்
பூக்களாய் மாறி
திகைக்க வைப்பதாய்...

காத்திருப்பின் கைகளில்
புன்னகைப் பூக்கள்
திணறத் திணறத்
திணிப்பதாய் இன்று!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, August 20, 2008

வேண்டும் நீ...வேண்டும்

உன்னோடு நான் வேண்டும்.
உயிரோடு கலந்தே வேண்டும்.

விழிகளுக்குள் மலராய் வேண்டும்.
வாடாமல் நீர் வார்க்க வேண்டும்.

காலை மாலை நீயாக வேண்டும்.
குழந்தையாய் மடிதவழ்ந்து
மார்புக்குள் புதைய வேண்டும்.

விடியாத இரவில் நீ
நிலவாக வேண்டும்.
முடியாத கதையொன்றை
மொழிகடந்த மொழியாலே
மௌனமாய் பேசவேண்டும்.

தாயாக நீ வேண்டும்.
சே(தா)யாகும் வரம் ஒன்றை
விரும்பியே தர வேண்டும்.

தலை தடவி முடி கோதி
தமை மறக்கும் அன்பு வேண்டும்.
அழியாத முத்தங்கள்
மூச்சுக்குள் நிறைய வேண்டும்.

காதலால் மனம் கனிய வேண்டும்.
கண்ணுக்குள் உனை இருத்தி
கவிதையாய் வாழவேண்டும்.

விரல்கள் இருபதும்
இணைய வேண்டும்.
விண்ணோடு மறையும்வரை
பிரியாத உறவு வேண்டும்.

நீ மட்டும் முழுதாய் வேண்டும்.
எனக்கே எனக்காய்
இறுதிவரை வேண்டும்.

அன்பே...அன்பே நீ வேண்டும்.
அலுக்காமல் என் பெயரை
சொல்ல வேண்டும்.

காமம் கடந்தும்
காதல் கடக்கவேண்டும்.
குறைவில்லாச் செல்வங்கள்
இறைவன் தரவேண்டும்.

பிறர் அன்பைப்
புறம் தள்ள வேண்டும்.
வீணாகக் கண் வைத்தால்
அவர் கண்
காணாமல் போக வேண்டும்.

காகிதக் கப்பல் ஒன்று
கரை சேர வேண்டும்.
காணாத வாழ்வொன்று
கற்பனையில் வரையவேண்டும்.

கனவோடு போராட வேண்டும்.
நினைவோடு நிறைந்திருக்க வேண்டும்.

கவிபுனையக் காதலனாய்
கருவாக வேண்டும்.
தவறென்று நினைத்தால் நீ
பொறுத்தருள வேண்டும்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 18, 2008

நீறான காதல்...

முகிலைப் போர்த்திக்கொண்டு
வானிலேயே என் உறக்கம்.
ஆதாரம் ஏதுமற்ற தள்ளாட்டம்.
உணர்வு மரத்த சிந்தனைகள்.
பிடிமானம் தளர்ந்த நடைகூட
அலைபோலத் தள்ளாடி
காற்றடித்த திசையில்
கால்கள் நடைபோட
மனம் எதிர்த்திசையிலேயே
போராடியபடி.

முள் மீது படுக்கை போட்டவன் நீ.
இரத்தம் வருகிறதா என்பது போல்
ஒரு பார்வை.
உருகி ஆவியாகிய எனக்குள்
கண்ணீரின் ஈரமாய் நீ.
எலி பிடித்து
விளையாடும் பூனைக்குத்
தெரியாத வலி எனக்குள்.

ஆழக்கிணற்றின்
அடியில் வாழும்
நீர்ப்பாசிபோல
ஆசைகள்
அமீபாக்களாய் பங்கசுக்களாய்.
உன்னோடு இணைந்து பறக்க
இறக்கைகள் கேட்க
இருந்ததையும் பிய்த்துப்
பிடுங்கி எறிந்துவிட்டு,
இன்னும் எங்காவது ஒட்டிக் கிடக்கிறதா
என்று பரீட்சித்துப் பார்க்கும்
இராட்சதக் காதலனாய்.
இனிமை கொடுமையாய் மாறிய
விந்தைதான் எப்படி!

காலம் எதுவித சைகையுமே
இல்லாமல்
நீயும் எட்டாத் தூரத்திலேயே.
சேர்ந்திருக்கும்
தருணங்கள் கிடைக்காமலேயே
பிரிவின்
தருணங்கள் மிகச் சுலபமாய் அருகில்.
இன்று ஒரு பெருமூச்சின்
நெருப்புச் சுவாசத்திற்குள்
நீர்த்தும் நீறாமல்
நடைப்பிணமாய் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 15, 2008

சமூகச்சாத்தான்கள்...

கேள்விகள்.....
விம்மல்கள்.....
பதில்கள்.....
கேலிகள்.....
சமூகச் சந்தையில்
அகவிலைகள் புறவிலைகள்.
சமூகவேலி தாண்டி
வெளியே வந்தால்
அநாதையாகிவிடுகின்ற
வெற்று ஞாயங்கள்.
தடுமாறித் திரிகின்ற
தவறான வார்த்தைகள்.
அழுத்தும் ஆசைகள்
குரோதங்கள்.
துணிவில்லா மனங்களில்
பொறாமைச் சிரங்குகள்.
சொறிகின்ற வதந்திப் புண்கள்.
புள்ளிகள் கோடுகள்
பார்வைகள் புரியாத
கவிதைப் புதிர்கள்.
எனக்கொன்றும்...
நமக்கென்றும்...
உனக்கென்றும்...
மாறுபட்ட நியாயங்கள்
தேவையற்ற உறவுகள்
ஒவ்வாத கருத்துக்கள்
சொந்த உறவுக்காய்
தவறை உணராத
தப்பான குறைப் பிரசவங்கள்.
அயல் வீட்டு அடுப்பை
ஊதி எரிய வைக்கும்
அந்தரத்து வெளவால்கள்.
பைபிளையும்
பகவத்கீதையையும்
குரானையும்
தம் வசதிக்கு
மாற்றும் தர்மவான்கள்.
தன் புண்ணை மூடிக்கட்டிச்
சிதம்ப வைக்கும்
புண்ணியவான்கள்.
பசப்புப் போர்வைக்குள்
புகுந்துகொள்ளும்
போலிச் சீமான்கள்.
பிஞ்சு மனங்களைப்
பற்றவைக்கும்
வன்ம விரோதங்கள்.
ஆண்டுகள் கடந்த பின்னும்
அடுக்களைப் பூச்சிகள்.
ஆணாதிக்க அந்தரங்க
அடக்கு முறைகள்.
அடங்காத பெண்ணை
வேசியாய் வர்ணிக்கும்
அவதார வேஷங்கள்.
சொல்ல முடியாத
செல்லரித்த சர்ச்சைகள்.
பறக்கின்ற சிறகுகளைப்
பிய்த்து எறிகின்ற
பேய் பிசாசுகள்.
இவர்கள்...
சமூகச்சாத்தான்கள்!!!

ஹேமா(சுவிஸ்)07.12. 2003

Wednesday, August 13, 2008

ஒற்றையடிப்பாதையும் நானும்...

அதே ஒற்றையடிப் பாதை.

நானும் கலாவும் படக்கதையெல்லாம்
கதைத்துக் கதைத்துப்
பனம் பழம் பொறுக்கிச் சேர்த்த
பனங் கூடல்
அதே ஒற்றையடிப் பாதை.

வேப்பம்பழம் பொறுக்கிச் சூப்பித் துப்பிய
அதே ஒற்றையடிப் பாதை.
நெருஞ்சி முட்களை விலக்கி
இலந்தைப் பழம் பொறுக்கிச் சாப்பிட்ட
அதே ஒற்றையடிப் பாதை.

காக்காக் கூடும் குயிலின் கூவலுமாய்
குதூகலித்திருந்த அதே ஒற்றையடிப் பாதை.

முல்லைக் கொடியும்
பாம்புப் புற்றுமாய் படர்ந்திருக்க
தாத்தாவுக்காய்
கந்தன் இறக்கி வைத்த கள்ளைச்
சுவை பார்த்துச் சுள்ளித் தடியால்
குண்டி வீங்க அடி வாங்கிய
அதே ஒற்றையடிப் பாதை.

வருடம் இருபதைக் கடந்து
கால் வைக்கிறேன் என் மண்ணில்.
தேடி ஓடுகிறேன் ஆசையாய்
அதே ஒற்றையடிப் பாதைக்கு.

சிதைந்து கிடக்கிறது அது.
என்னில் கோபமோ என்னவோ
நெருஞ்சி முள்ளால்
மூடிக்கொண்டு தன் இடத்தில்
தடம் பதிக்க விடமாட்டேன் என்றபடி.
என்றாலும் செருப்போடு
அடம் பிடித்து தடம் பதித்து
நடக்கிறேன் நானும்.

நான் பழம் தின்று துப்பி முளைத்த வேம்பு
சரிந்து கிடக்க மனதின் சுமையோடு
கடந்து நடக்கிறேன்.
யாரோ கூப்பிடு குரலில் அசைகிறேன்.

கலாவின் வீடும் கலைந்தே கிடக்கிறது.
லெப்டினன் கலை வீரமரணம்.
அது கலாதான்.
மற்ற மகளோடு பிரான்சில் அவள் அம்மா.

யார் அது...என் பெயர் சொல்லி
அந்த வேம்பு அது.
கண்ணீர் கசியக் கதைத்தது வேம்பு.
நீதான் போவது போய்விட்டாய்
காக்கை எச்சத்தில்
எங்காவது முளைத்திருக்கும்
இரண்டு வேப்பங் கன்றுகள் எடுத்து வா.

என் தலைமுறை தளைக்க
என் இடம் பதித்து வாழ
இங்கு ஊன்றிப் போ என்றது
முகத்தில் அடித்தாற் போல்.

சொன்னதைச் செய்தேன் மௌனமாய்.
அதே ஒற்றையடிப் பாதை
பரிகாசமாய்ப் பார்த்துச்
சிரித்தது என்னை!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 10, 2008

எனது முத்தம்...

காற்றோடும்...
கனவுகளோடும் பேசிக்கொண்டும்
பூக்களோடும்...
பூச்சிகளோடும் புன்னகைத்துக் கொண்டும்
முகிலோடும்...
நிலவோடும் சண்டை போட்டுக் கொண்டும்
இருக்கிறேனாம்.

புறுபுறுக்கும் குற்றச்சாட்டுக்கள் நிறைய.

என்னவன்
கொடுத்துவிட்ட முத்தங்களைத்
தர மறுக்கும்
இவர்களைப் பற்றி
எங்கே சொல்வது
நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 08, 2008

தோழிக்காக...

"கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்"
தர்மத்தின் தாரக மந்திரமிது.
தோழியே...
அங்கத்தில்தான் பங்கம்
தங்கமடி உன் இதயம்.

மழைக்கு ஏங்கும் பூமியாய்
நிலவுக்கு ஏங்கும் அல்லியாய்
கதிரவனுக்கு ஏங்கும் பனித்துளியாய்
துவள்கிறாய் தோழியே ஏன்?
துயரத்தைக் கொஞ்சம்
பங்கிட்டுச் சிந்திவிடு.
இலேசாகும் உன் இதயம்.

சில சமயங்களில்
இறைவனிடம் கூட
எரிச்சலாய் வரும்
உன்னை நினைத்தால் எனக்கு.
உடம்பில் சிறு குறை என்றால்
அன்பும் அற்றுவிடுமா
ஆசையும் ஆகாதா.

தோழியே தளராதே
தளராத காரியம் சிதறாது.
நம்பிக்கையோடு நகர்ந்துகொள்.
மனதை ஒளிக்காதே.
அன்போடு அணுகிக்கொள்.

நண்பியே...
வாழ்வின் விளிம்பில் எதிபார்ப்பு.
முடியாமல் வெடிக்கின்ற
வேதனையே ஏமாற்றம்.
கோழையாகி விடாதே.
கருமுகில் விலகி ஓடும்.

ஆண்டவனை வேண்டிக்கொள்.
காத்திரு...
தனிமை விட்டகல
காலப்போக்கில் உன்னை...
உன் மனதை உணர்ந்திட்ட
வாழ்வொன்று
வசந்தமாய் வரவேற்கும்
காதலொடு!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 03, 2008

கண்டால் பிடியுங்கோ...

இங்கையொரு வெங்காயம்
யாழ்ப்பாணம் போய் வந்தது...
சொன்னதை சின்னக் கவிதைக்
கதையாய் மனம் வலிக்க.
என்னடா...எங்கட கோண்டாவில்
(யாழ்ப்பாணம்)எப்பிடி இருக்கு.
சனங்கள் எல்லாம் என்ன செய்யினம்.
நீ போகேக்க ஊரடங்குச் சட்டமோ.
ஆமிக்காரன்கள்...
எங்கட கோயில் சந்தியிலயுமோ!
எங்கட பள்ளிக்கூடம்
இப்ப ஆமிச் சென்றியாமே!
நிரு டியூசன் டியூட்டறி இருந்த வீட்லதான்
அவங்கட சமையலாம்!
தொடங்கினான்...

ம்ம்ம்...பரவாயில்ல
எங்கட சனங்கள் அதுகளுக்கென்ன.
நல்லாத்தான் இருக்குதுகள்.
வெளிநாட்டுக் காசில சுதியா...சோக்கா.
சுதியென்டா...சோக்கென்டா...அப்பிடியென்டா...?
உடுப்பென்ன நடப்பபென்ன
நாங்கள்தான் இஞ்ச குளிருக்க
கோழிபோல குறுகித் திரியிறம்.
அவையள் அங்க தடல்புடல் கல்யாணம்
கோயில் திருவிழாக்கள்.
வீட்டுக்கு வீடு ஹோம்சினிமா
இன்ரனெட் எண்டு மூச்சுவிடாமல்
நக்கலாய்ச் சொன்னான்.

சோதனைச் சாவடியும்
பாஸ் பாக்கிறதும் சும்மா கண் துடைப்பு.
அங்க ஆமிக்காரங்களும்
எங்கட பெடியளும் நல்ல ஒட்டு.
வீடுகளில எங்கட பெண்டுகள்
யாழ்ப்பாணச் சாப்பாடு எண்டு
சமைச்சுமெல்லோ குடுக்கினம்.
இதில வேற இளநீரும் குடிக்க.
அங்க ஒரே ஜாலிதான் என்று...
தேனீயாய்த் துளைத்து
நெஞ்சை நோண்டி நுரையீரல் பிய்த்தான்.
அப்பிடியெண்டா யாழில் சுதந்திரம்தான்
ஆமிக்காரன்ர அட்டகாசம் இல்ல.
நாங்களும் அங்க போயிடலாம் என்ன...
போதும்தானே எங்களுக்கு
இந்த சுதந்திரமும் சந்தோஷமும்.
கடுப்பு எனக்கு.
சோத்து முண்டம்..எருமை மாடு
எங்கே விளங்கப் போகுது சுதந்திரம்.
வெளிநாட்டில் பிராங்கில் உழைச்சு
கசினோ பார்ல விட்டு
பாத்ரூம்ல படுக்கிற சென்மத்துக்கு
தாய் மண்ணும்...உறவும்
ஊரும் ...சுதந்திரக் காத்தும்.
விடுதலை என்றால்
பாட்டும் படமும்
ஹோம் சினிமாவும் கொம்யூட்டரும்
எண்டு நினைக்குது இது.

செம்மணிச் சுடலைக்குள்
இன்னும் இருக்காம் எலும்புக்கூடுகள்.
அங்க உறவுகளைத் தேடினபடி
இன்னும் எங்கட சொந்தங்கள்.
எத்தனை கிருஷாந்திக்கள்
எத்தனை சாரதாம்பாக்கள்.
பிராணணோடு புதைக்கப்பட்ட புதை குழிகள்.
"அ"எழுதின முற்றத்திலும்
பின் கொல்லையிலும்
கிணற்றடியிலயும்
வயல் வெளிகளிலும்
புகையிலைத் தோட்டத்திலயும்
ஒரு தமிழனின் எலும்புக்கூடு
எந்த நேரத்திலும் கண்டு பிடிக்கலாம்
என்கிற அவல நிலை.
மனம் அழுத்த உயிரை உலைக்குள்
கொதிக்க விட்டுத் தவிக்கும்
என் பூமியில் சிரிக்க வழியுண்டா.
எங்கள் பாரம்பரிய
பழக்க வழக்கங்களையே மாற்றி
சமூகச் சிதைப்பையே செய்து கொண்டிருக்கும்
காமுகக் கரடிகள் கூடாரங்களோடு
கை கோர்த்து வரவேற்பாம்.
இன அழிப்புஇசமூகச் சிதைவு
கல்விப் பறிப்பு,ஊட்டச்சத்து மறுப்பு.

இலங்கையின் வரைபடத்தில்
வடக்கு நோக்கிய திசையில்
இப்போ சுடுகாடு.
எங்கள் யாழ் கற்பகக்தையே
மாற்றியமைத்த கைங்கரியச்
சீமான்களோடு சமாதானமாம்.
மனைவியோடு பாய் விரிக்கவும்
மாந்தோப்பில் காதல் செய்யவும்
குழந்தைகளோடு கொஞ்சவும்
வேளையையும் விதியையும்
குறிக்கிறது சிங்கள அரசாங்கம்.
எங்கள் கையில் ஏதுமற்று வெறுமையாய்.

அபத்தம்...அவலம்...ஆக்கினை
இவ்வளவு நடப்புக்கும் புகார் கொடுத்தால்
அவர்கள் காலடியிலேயே மண்டியிட்டு
விசாரணை என்னும் பெயரில்
போலி நாடகங்கள்.
பிச்சை எடுக்கிறோம்
எங்கள் அழகிய எங்கள் தீவுக்குள்ளேயே.
ஒரு நாளைக்கு எத்தனை தடவை
உன்னை நீதான் என்று உறுதிப்படுத்த
பாஸ் என்கிற அறிமுக அட்டையைக் காட்டுகிறாய்.
இன்னொரு அன்னிய தேசத்தில் கூட
என்றோ ஒரு நாள்தான் அறிமுக அட்டை
தேவையாய் இருக்கிறது எங்களுக்கு..

எத்தனை சுதந்திரங்கள் இழந்து தவிக்கிறோம்.
கல்வி தொடக்கம் கலவி வரை.
வயிறு பசிக்க சோற்றை விழுங்கி
பயம் போக்கப் படம் பார்த்து
விதியை மாற்றக்
கெஞ்சிக் கேட்க கோவில் போய்
காலம் கழித்து விட்டால்
சுதந்திரம் கிடைத்ததாய்
சுகமாய் வாழ்வதாய் அர்த்தமா?

இரத்தம் கொதிக்க கண்டபடி திட்டிக் கொண்டு
திரும்பிப் பார்த்தேன்.
புழுதி கிளப்ப பென்ஸ் ல்
பறக்கிறான் பன்னாடைப் பயல்.
கண்டால் சொல்லுங்கோ...
கஞ்சி காய்ச்சி
தோய்ச்சுக் காயவிட....அவனை!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 01, 2008

சக்கரவியூகம்...

மனிதம் மருகிப்
பணம் பறிக்கும் பேய்களாய்
மாறிய மனிதன்.
தொலைக்கப்பட்டதாய்
தொலைந்து நிற்கும்
மனிதர்களில் மாத்திரம்
மனிதம் கொஞ்சம் வாழ்வதாய்.

சலனமில்லா மௌனம்.
என்னைச் சுற்றி "சக்கரவியூகம்"
ஓடி ஓய்ந்து நிற்கிறது.
பணம்...பணம்...பணம்
காய்ந்து வறுத்த தொண்டைக் குழிக்குள்
தேவைப்படுகிறது ஒரு சொட்டு ஈரம்.

ஒரு மிடர் நீர்
மிண்டு விழுங்கிக் கொள்கிறேன்.
என்றாலும் ஆழ்மனதிற்குள்
அமைதியா இரைச்சலா!
கடற்கரைக்கு
அமைதி தேடிப் போனால்
அலை அமைதியைக்
கெடுக்காத மாதிரி.

மீண்டும் தாவுகிறது சக்கரவியூகம்.
பணம்...பணம்...பணம்
நாட்டைப் பிளந்து
மனிதனைப் பிளந்து
மனிதத்தைப் பிளந்து
தன்னையே பிளந்து கொல்லும்
சாகசப் பேய்.

நாய் தின்னாக் காசு என்று
வாய் ஜாலம் பிளந்தாலும்
ஆ...வென்று வாய் பிளக்கும்.
பிணமும் மெல்லமாய் அசையும்.
மனிதனால் முடியாததெல்லாம்
ஆக்கிக் காட்டும்.

பொய்யான பனிக்கட்டு இதழுக்குள்
போலிப் புன் சிரிப்பு.
ஆசைகளால் அடுக்கிய
எலும்பைப் போர்த்திக்கொண்டு
ஓர் உடலும் பொய்யாய்.
நிழலில்கூட நிஜமில்லா
வேஷதாரிக் கூட்டம்.

உள்ளுக்குள் போராடும்
எரிமலைச் சிந்தனைகள்.
நாலு பேர் போற்றப்
படித்தவனும்
பல் இளித்துப் பண்பையே
பரணுக்குள் ஏற்றும் பரிதாபம்.
மனிதன் தொலைய விட்டது
ஆறாவது அறிவையா
ஆறு அறிவையும் புதைத்த
புதைகுழியா மூளை.

மண் ஆசை பெண் ஆசை
பொன் ஆசை கொண்டவர்களை
ஒரே செல்லில் கொன்று குவித்து
ஒரே படுக்கையில்
மூச்சை இழுத்துச் செல்கிறார்களே.
எங்கே பணம்?

மனம் வறண்டு தவிக்க
வானம் வெடித்து மழையாய்.
அண்டவெளிகள் முழுதும்
அனைத்து ஜீவராசிகளும்
காத்துக் கிடக்கிறதே
வேறு ஏதோ ஒன்றுக்காய்.
புரிகிறதா!!!

ஹேமா(சுவிஸ்)