*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 28, 2012

நிலாவின் கடவுள்...


வண்ணத் திரவங்களை
குழைத்து வீடெங்கும்
வீசிக்கொண்டிருந்தாள் நிலா.

பூனைக்கு இறகு
வண்ணத்துப்பூச்சிகள்
தமிழில் பேசி
தன்னோடு விளையாடுகிறதாம்
மனிதன் மிருகம் போல
நாலு காலில்
கடல் அலையின் நுனியில்
சூரியன் உதிக்கிறானாம்.

அப்பா நாலு காலோடு
பறக்கிறாரென வரைந்தவள்
என்னை
சாமியறையில் படங்களுக்கு
நடுவில் வரைந்துவிட்டு
"யார் சமைக்கிறது" என்றும்
கேட்டுக்கொண்டாள்.

கடவுள் கீறி
வாகனாமாய்க் குந்தியிருந்த
மிருகங்களை
"ஓடு காட்டுக்கு" கலைத்தாள்
வேல்,வில்,கத்தி,கடாயுதம்
மாலை மகுடங்களைக் களைந்து...

ஒவ்வொரு சாமிக்கும்
நான்கு நான்காகக் கைகள் கீறி
ஒவ்வொரு கையிலும்
பொட்டல உணவு
பால்புட்டி சூப்பி
புத்தகம்,பென்சில்
பூ,குடை
இனிப்புப் பொட்டலம்
போர்வை,தலையணையென
வரையத் தொடங்கினாள்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 26, 2012

திலீபனின் நினைவோடு...


உன் கண்ணின் ஒளி
நல்லூர்க் கந்தனின் கண்ணில்
ஈமச்சுடராய்
இறுதி ஈழப்பாடலோடு
எமைப்பிரிந்தாய்...

கல்லறை தேசத்திலும்
அழுகுரல்கள்
உப்பில்லாக் கண்ணீரோடு
அந்தரங்க ஆகாயத்தில்
சில பறவைகளின்
மொழி பேசியபடி...

இலட்சியக் கனவுகளை
கை மாறக்கொடுத்துவிட்ட
சந்தோஷமானாலும்
சதைகள் எரியும்
மணத்தை சுவாசத்துள்
சுமந்துகொண்டு...

தாயை,தாரத்தை,தங்கையை
புணர்ந்த நரியொன்று்
எக்காளமிடுகிறது
காகிதப்புலிகளென...

பெண்ணின் பிணவாடையென
காட்டுகிறது தொலைக்காட்சி
பிசுபிசுக்கும் சிவப்பொளியில்
புண்ணான சிதையொன்றை...

மீண்டும் உயிர்க்கிறாய்
உணர்வுள்ள
ஒரு வீரத்தமிழச்சியின் கருவில்
காகங்கள் கரைந்து
சாபங்கள் ஆனதில்லை வரலாறு!!!

நமக்காக உயிர்நீத்த அத்தனை உயிர்களுக்கும் என் வீரவணக்கம்.

ஹேமா(சுவிஸ்)

Monday, September 24, 2012

காதல் துளிகள் (3)...

என் மார்புக்குள்ளிருந்து வரும்
மூச்சுக்காற்றை
இசைக்குறிப்பாக்கியிருந்தான்
அவன்...
தன் ஸ்வரங்களில்
அற்புதமான பொழுது அது
இப்போதைக்கு
எதுவும் பேசவேண்டாம்.
அவனும் நானும்
ஒருவரையொருவர்
பார்த்தபடி இருக்கிறோம்!!!
நிறைகுடமென்பாள்
என் தோழி என்னை
தளம்பச் செய்தவன் அவன்...

என்னைக் கொஞ்சம் அசைத்த
அவன் குரலை
அவன் ஒற்றை எழுத்தை
அவன் மௌனத்தை
அவன் பெயரை
என் இதயக்கோப்பை
நிரப்பிக்கொண்டே இருக்கிறது.

பிடிக்காத விஷயங்களைக்கூட
மிக மிகப் பிடித்ததாய்
இன்றைய நிகழ்வுகள்
நாளைய கதைகள்
அதுபோலத்தான்
எனக்கு அவன் .....!!!
நான் தள்ளப்படுகிறேன்
உன்னால்....
காற்றில் மிதக்கும்
ஒரு சடப்பொருளாய்
ஒரு நேரம் ஆக்ரோஷமாய்
பின் ஒருமுறை
மிக மிக அமைதியாய்
இருந்தும்....

அலையால் தள்ளப்படும்
சிறு வள்ளம் போல் நானும்
நீராய் நீயும்
உன் கட்டுக்குள்தான்
நான்....
இப்போதாவது சொல்
என்னை நீ....
நேசித்தாயா உண்மையாகவே ?!

ஹேமா(சுவிஸ்)

Saturday, September 22, 2012

ஏதோ...


பொத்தி.....பொத்தி
வைத்திருக்கிறேன் 
இதயப் பொத்திக்குள் 
உன் அன்பு வார்த்தைகளை 
உன் குரலை 
வானலைகளில் மட்டுமே 
அலைய விட்டிருக்கிறார்கள் 
எதுவும் புதிதாய் கிடைக்கவில்லை 
இப்போதைக்கு எனக்கு !

 ஹேமா(சுவிஸ்)

Friday, September 21, 2012

படுபள்ளம்...

சிலர்.... நேற்றைய இரவில்
விழுந்திருக்கலாமென்றும்
சிலர்....
கால் தடுக்கி
காலையில்
விழுந்திருக்கலாமென்றும்
சிலர்....
தற்கொலையாக
இருக்கலாமென்றும்...

சந்தேகப் பெயர்களை
சிலரும்...
ஏனையோர்
என் குடும்பம் குறித்தும்
பரிதாபப்படுகிறார்கள் !

ஹேமா(சுவிஸ்)

(படம் கவிஞர் மகுடேஸ்வரன் தந்தது)

Monday, September 17, 2012

பறக்கும் ரகசியங்கள்...

நான் சுகம் கேட்டவர்களும்
என்னைச் சுகம் கேட்டவர்களும்
சுகமாயிருந்தார்கள்
என் சுகங்களை
பக்கத்து வீட்டு முற்றங்களில்
பரப்பிவிட்டு.

புழுதிக்காற்றின் பேரிரைச்சலோடு
என் இரகசியங்கள்
என்னையே வந்து உரசிக்கொண்டன
வெப்பக்குழல் சூடேற்றினாலும்
குளிரில் அவதிப்படுவதாய்
சிலிர்த்துக்கொண்டிருந்தன.

இரவில் மட்டுமே
பாடும் பறவை குளிரிலும்
நவீனத்துவ மொழியில்
கேட்டுக்கொண்ட சுகதுக்கங்களை
பகிர்ந்துகொண்டிருந்தது
பிரபஞ்சத்தின் அடி இருளில்.

சுதந்திரச் சிறகு முளைத்து
கிளைக்குக் கிளை
தாவிய அவைகளுக்குள்
விஷப் பூச்சிகள் முட்டையிட
கிசுகிசுக் குஞ்சுகள்
என் தோளில்
அதி பாரத்தோடு!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 14, 2012

நல்லூரில் நீதானா...

பாவமன்னிப்புக்களை
புறக்கணிக்கும்
சிலுவையில்லா
புதிய
சாமி ஒன்று வேண்டும்
எமக்கிப்போ
ஒரு.....
கொலை செய்ய
மன்னிப்போடு.

எம்மைக்
கூண்டோடு அழித்தவன்
நல்லூர்க் கந்தன்
வீதி மண்ணில்
கால் புதைய.

கண்ணிருந்தால்
எம்மையும் அகதியாய்
அலைக்கழித்து அநாதையாய்
அழித்திருக்கமாட்டான்
திலீபனையும்
தின்றிருக்கமாட்டான்
தெய்வமா...
அவன் கந்தனவன் ?

நல்லூர்க் கந்தனே
இன்று உன் வீதி சுற்ற
அவனுக்கும்
கால்
கொடுத்திருக்கமாட்டாய்
இன்னுமா நாம் நம்ப
நீ......
நம் நல்லூரில்
உண்மையென ?!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 13, 2012

பார்வைப் போர்...

குளம் தொடும்
மழைக் குமிழ்க் கண்களுக்குள்
விடுதலைக் கனவுகளை
சேகரித்த வன்னியன் அவன்
போதாதோ அது
அவனோடு
நான் போர் தொடுக்க.

வார்த்தைப் போர் தொடுத்தால்
மடித்திழுக்கிறான்
கண்களால் மடிமீது
வாள் எடுத்து வாவென்று
ஆணையிட்டேன்
இமைக்க மறந்தவனாய்
என்....
இடைவாளை எடுக்கின்றான்.

இரங்குவேனோ என்றவளை
ஓர்மம் கலைத்து
காதல்....
கன்னத்து
பருக்களை நிரப்ப
விரல்வழிக் கவிதை கேட்டு
கொஞ்சம்
ஒத்தி வைக்க
கெஞ்சுகிறான் வீரனவன்
போரையும் போரையும் !

ஹேமா(சுவிஸ்)

Monday, September 10, 2012

சிக்குபுக்குக் காதல்...

தண்டவாளைங்களை
அணு அணுவாக
ரசிப்பவனிடம்தான்
காதல் கொண்டிருந்தேன்.

கனவுகள்
ஆசைகள்
பாசம் மற்றும்
அன்பு பற்றியும்
கதைத்தபடி
கைகளை இறுகப்
பற்றியிருந்தா(தே)ன்.

திசைமாறும்
பயணங்களையும்
நிமிடங்கள் மட்டும்
பட்டு மறையும்
பார்வைகளையும் பகிர்ந்தவன்
புகையிரதச் சில்லுடன்தான்
சிநேகம் வைத்திருந்தான்.

தொட்டுவிடா உறவானாலும்
ஈருடல் சிலிர்க்க
அதிர்ந்து ஓடி மறைகிறது
புகையிரதம் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 07, 2012

இயல்பு மாறாதவைகள்...

நிபந்தனைகளற்று
மூடித் திறக்கும் எண்ணங்கள் சில
நிரந்தர நெருப்பின் நிறமாய்
சிவப்பும் மஞ்சளும் கலந்து.

உருமாறும் இரும்பை
உருக்கும்போதும் சரி
கொழுந்து விட்டெரியும்
கூரையிலும் சரி
நிராகரிக்கும் வார்த்தைகள்
துரத்தியடிக்கும் துரோகம்
துருத்தி எரிக்கும்போதும் சரி
நெருப்பு நிறம் மாற்றாது.

தன்னை பொசுக்கும்
உலோக நெருப்பின் நிறமறியாது
முகம் மூடப்பட்ட பிரேதம்
நிறமறியாமலும்
நிறமற்றிருப்பதும் நல்லது
வெண்ணிற ஆன்மாபோல்
பொதுவாக!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, September 03, 2012

அழைப்...பூ !


தள்ளிக்கொண்டேயிருக்கிற
மனதையும்
நெருங்கிக்கொண்டேயிருக்கிற
என்னையும்
அதட்டிக்கொண்டே
இதை எழுதுகிறேன்.

நான் ஆறிய
ஆடிய மகிழமரம் நீ...
வார்த்தைப் பூக்களைப்
பரப்பிவிட்டு
பிடித்தவற்றைப்
பொறுக்கியெடுவெனச்
சாபமிடுகிறாய்.

குழந்தைகளாய்
அள்ளியெடுக்கிறேன்
நீ தந்தது
நான் தந்தது
இதில்...
எதை விட
எதை அணைக்க.

நம் எண்ணங்கள் கருவுற
பெற்ற குழந்தைகளை
வளர்க்க
என்னிடமே தந்திருக்கிறாய்.

நீ தந்த
வார்த்தை வாரிசுகளை
என்னோடு கட்டியணைக்க
ஒருமுறை...
ஒரே ஒருமுறை வா
வந்துவிடு
இன்னும்....
கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
அந்த வாய்ப்பும் உனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)