*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 20, 2008

நிமிடத்து வாழ்வோடு....

மறந்தால்தானே
நினப்பதற்கு...
எம் வாழ்வே நீங்களாய்
நிறைந்திருக்கும்போது
மறத்தல் எப்படி?
ஈழத்தாயின் கழுத்தில்
கார்த்திகை மலர்
மாலையாய்
என்றுமே நீங்கள்தானே.

பருவத்து வாசல் தாண்டி
வசந்தத்தை தூரவே விரட்டி
எந்த நேரத்திலும்
சாவை மட்டுமே
சந்திக்கத் துணிந்து
கந்தகக் குடுவையாகி
காவல் தெய்வங்கள்
நீங்கள்தானே.

சுதந்திரத் தாய்
உங்களைத் தாங்குகிறாள்.
நீங்கள் சிந்திய குருதியே
தமிழ் ஈழத்தின்
வரைபடமாய்.

நீங்கள்
இல்லையேயென்று
மனம் அழுதாலும்
இல்லை...... இல்லை
எம் நிமிடத்து
வாழ்வோடு நீங்கள்தானே.
நீங்கள் விட்டுப் போன
மூச்சைத்தானே சுவாசிக்கிறோம்
இன்று நீங்களே
எங்கள் மூச்சாய்.

தமிழ்த்தாயின் விலங்கொடிக்க
விலங்குகளோடு
விலங்காய் நீங்கள்.

ரணங்கள் தந்த வாழ்வில்
நிவர்த்தியே தவிர
நிவாரணம் தவிர்த்து,
வெளிச்சமாய்
இருந்து வழி காட்ட
நாங்கள்
அவ்வழி நடக்கிறோம்.

பெற்றவர் மானம் காக்க
பிறந்த மண் காக்க
சுற்றம் சூழல்
சுய நலம் மறந்து,
உறுதி கொண்ட மனதில்
ஒன்று மட்டுமே
எதிர்பார்ப்பாய்
உங்கள் இலக்கை
மட்டுமே கையிலேந்தியபடி
மெழுகுதிரியாய் நீங்கள்.

உங்கள் கல்லறைப்
புல் பூண்டுகள் கூட
முளை விடும்
உங்கள் இலக்கோடுதான்.

உங்கள் கனவுகளின்
தொடர் பாதையிலேதான்
இன்றைய
எம் இறுதிப் பயணங்கள்.

உம்மைக் கொடுத்து
எம்மை வாழ வைத்த
உங்களை மறத்தல் எப்படி?
எம் வாழ்வே நீங்களாய்
நிறைந்திருக்கும்போது!!!!!!

ஹேமா(சுவிஸ்)22.11.2007

1 comment:

விச்சு said...

உங்கள் கனவுகளின்
தொடர் பாதையிலேதான்
இன்றைய
எம் இறுதிப் பயணங்கள்.

Post a Comment