*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 30, 2010

முடிவின் முடிவில்...

ஒருதலைப் பட்சமாய்
சொல்லிக்கொள்ள என்னவனாய்
கவிதைகளுக்குள்
ஆச்சரியக் குறியும்
கேள்விக் குறியுமானவன்
பெயர் தெரியாப் பறவையின் இறக்கையில்
தொங்கித்
தொலைந்துகொண்டிருப்பதாய் செய்தி.

என்னிடம் செய்திகள் பகிர்தலில்
இஷ்டமில்லாதவன்
இரவின் வயிற்றையும்
பகலின் நெஞ்சையும் கிழிக்க
கேள்விகளோடே காத்திருந்தவன்.....

உலகம் அழிதலும்
நிச்சயமற்ற மனிதர்களின் வேள்வியும்
எப்போவென வெறியோடு
பிரசண்டமாய் பிராணசங்கடம் தர
அகலமுடியா இரவும் பகலும்
கொட்டும் குருதி
கொட்டி நனைத்து
பூமி பரவத்தொடங்க.....

வானம் தொடங்கி பூமிவரைக்குமான
அபயக்குரலும் அவிப்பலியும்
அவனோடும் என்னோடும் அதிர
அந்தரஊஞ்சலில் என்னை இறுக்கித்
தன் உதிர இதழால் உறிஞ்சியபடி
தன்னையும் கடித்து முடித்தான்.

யார் தடுக்க இனி !

சிதைந்த உடலைத்
தழுவ
அணைக்க
இணைய
இறுக்கி முத்தமிட.

அவனாலும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 24, 2010

அந்திமத்தில் அம்மா...

"இந்தக் கட்டையை
என்ர மண்ணிலேயே எரிச்சிடு பிள்ளை"
அம்மாவின் அடிமன ஆசை அது.

வாழ்வின் யுத்தங்கள் முடித்தவளாய்
வாழ்வின் பொருள் பரிசளித்தவள்
கிளை விட்டெழும் பறவையாய்
இலையசைத்து
பிரிந்துவிட்டாள் பின்னொருநாள்.

அனுப்பிவிட்டேன் பக்குவமாய்.
படுக்கை....
அம்மாவின் சேலை
வாசனை கலைக்க விரும்பாதவளாய்.

அக்காதான் பேசினாள்.

"சவம் வந்திட்டுது
பொறுப்பெடுத்து ஊருக்குக் கொண்டு போறம்.
இடது கால் சொக்ஸ்க்குள்ள இருந்த காசும்
பாவாடை மடிப்பில இருந்த சங்கிலியும்
றவுக்கைக்குள்ள இருந்த
அம்மான்ர காப்பும்
நீ சொன்னபடி நானும் தம்பியும்
பிரிச்சு எடுத்துக்கொள்றம்.

செத்தவீட்டை
குறையொண்டும் இல்லாமல்
வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன் நான்
கவலைப்படாமல் இரு என்ன."

வாழ்வு வரிசையின் ஒழுங்குமுறை
அம்மாவின் குரலில்
"என்னடி லட்சணம் இது"
என்று கேட்படி!!!

நேற்றைய "எங்கள் புளொக்"ல் சிறுகதை
ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்திய தாக்கம்.
நன்றி ஸ்ரீராம்.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 20, 2010

மகனே வந்துவிடு...

தாயே...
சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
மாளிகையில் கொலுவிருப்பாய்
மகனும்
துணையாய் அணைத்திருப்பான்
உலகில்
வஞ்சனையில்லா வரவேற்பும்
வாழ்வும் இனித்திருக்கும்.

வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்
மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே
தங்கத்தை நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, April 18, 2010

சூரிய விசாரிப்பு...

பனி தேசமும்
என் தனிமையும்
என்னை தன்னிச்சையாய்
இயங்க விடுவதாயில்லை.

காலநிலை கனிய
சூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது.

நாளொன்று விடிய
காளான் குடையோடு
கண் வெளிக்கும்
அந்த மண்ணுக்குள்.

முளை வெடிக்கும்

வளரும்

பிரம்புப் பந்தலில்

கொடி படரும்

மேக நிறத்தில்
பூக்களும் குலுங்கும்

காத்திருப்பில்
கண்கள்தான்
கண்டல் கண்டு
நீலமாய் மாறியபடி.
 

முளைத்தலும்

படர்தலும்

வளைதலும்...வளைத்தலும்

மொட்டும் பூவும்

என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 14, 2010

நிலவோடு சித்திரைப் புத்தாண்டு...

வந்திருக்கேன் குழந்தைநிலா
நிறைய நாளாக் காணாத
உங்களையெல்லாம்
பாத்துக்கொண்டு
தமிழ்
புத்தாண்டுக்கு
வாழ்த்தும் சொல்லி
வாழ்த்துக் கேட்டும்.

மறந்தே போனீங்க என்னை !
போன வருஷம் பிறந்த நாளில
கண்டபிறகு.
இப்போ...சுகம் கேட்டு
கை விஷேசம் வாங்கவும்தான்.
நான் இப்போ தாயகத்தில்.
பாட்டி சொல்றா
கை விஷேசக் காசை வாங்கி
மண்ணுக்குள்ள புதைச்சு
தண்ணியும் விட்டா
காசுமரம் முளைக்குமாம்.

ம்...
இல்லைவே இல்லை
அஸ்க்கு...புஸ்க்கு
ஏமாறமாட்டேன்
இவங்களைப்போல.
ஏமாந்த இவங்களாலதானே
இழந்துபோனேன்
என் தாயகத்தை!!!

அத்தனை அன்புள்ளங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

Monday, April 12, 2010

கலைக்கப்பட்ட பறவை...

வற்றிய குளமானாலும்
தவமாய் நின்ற தடங்களின் ஞாபகத்தோடு
வெட்டிச் சரிக்கப்பட்ட
ஊசலாடும் ஒற்றைச் சருகில்
உட்கார்ந்தபடி.

தூரங்கள் கூடியதால்
பாசங்களில் பங்கசுக்கள்.
பசுமை நினைவுகள் தவிர
தர ஏதுமற்ற குளக்கரை அது.

எனதென்ற கூடு
சிதைக்கப்பட்ட பெருங்காடு.
விழிகளில் நீர்த்திரையோடு
எங்கு தேட என் பெருமரத்தை.

என்றாலும்....
எங்கள் சாபங்களை விழுங்கிக்கொண்டே
ராட்சத பறவைகள்
முன்னேறியபடி.
எங்கள் கூடுகளுக்குள்ளும்
அவைகளின் குடியிருப்பு.

குரல் உடைக்க
ஒரு சந்தோஷப் பாடல் பாட
முயன்றும் முடியாமல்.

வேற்று தேசமானாலும்
சுதந்திரமும் மரியாதையும்
தந்த மனிதர்களை
தேடியே பறத்தலின்
பாதை இலகுவாய்.

ராட்சத பறவைகளை
துரத்தத் திராணியற்று
மாறிய திசையில் பயணிப்பதை
தவிர்க்க முடியாமல்
கூடுகள் கலைந்த தவிப்போடு

திரும்பவும்
ஒரு பனிதேசம் நோக்கி
அசையமுடியா சிறகுகளை
அசைத்தபடி நான்!!!

ஹேமாப் பறவை வாடகைக் கூட்டுக்கு வந்தாகிவிட்டது.
என் உறவுகள் எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?சுகம்தானே.மீண்டும் சந்திக்கிறதில மிக மிகச் சந்தோஷம் நண்பர்களே.என்னைத் தேடிய அன்பு நண்பர்கள் அனைவருக்க்கும் என் அன்பின் நன்றி.
இன்னும் தொடர்வோம்.

ஹேமா(சுவிஸ்)