*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 29, 2008

பிறந்த நாள்!

Monday, April 28, 2008

எம் அரசியல்...

Saturday, April 26, 2008

காத்திருக்கிறது போதிமரம்....

தடுமாறி
பாவங்களைச் சுமந்தபடி
காத்திருக்கிறது...
புத்தனின் போதனைகள்
சுமந்த போதிமரம்.

புத்தனின் வருகைக்காக
அவனைத் தண்டிக்க...
புதிய போதனைகளைத்
தூசு தட்டிப் புதுப்பிக்க.

மூப்பும்...நரையும்
நோயும்...வறுமையும்
ஆசையும்...அரசும்...
இறப்பும்...இரத்தலும்
வேண்டாமென்று
ஆசைகள் துறந்த புத்தன்
புதிதாய் பிறந்து
இரத்த பூமியில்
தன் பாதம் நனைத்தால்
புதிய வேதம் போதிப்பானோ!?

புத்தனின் புத்திரர்கள்
மனிதராயும் வாழவில்லை
மதத்தின் வழியில்
செல்வாரும் இல்லை.

போதித்து
ஆசைகள் துறந்த பிக்குக்கள் கூட
யுத்தம் வேண்டிச் சத்தியாக்கிரகம்.

மதம் போதிப்பவர்
மதம் கொண்டு
இனபேதம் போதித்தபடி.

ஆசைகள் வெறுத்தவர்
அரசாளக் கட்சிகள் அமைத்தபடி
பிரிவினை கேட்டு
கொடும்பாவி கொளுத்தியபடி.

அரசு சமாதானம் சொல்லி
அரங்கு வந்தாலும்
அரசையே...
கொலை செய்யத் துணியும்
பன்சல(புத்தர் கோவில்)ஆசாமிகள்.

போதிமரம் தவமே இருந்தாலும்
என்றுமே வரப்போவதில்லை
புத்தன்...
இரத்த வாடையோடு வாடும்
பூமிக்கு...

பாவம் போதிமரம்
காத்திருக்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, April 25, 2008

மனித நேயம்...

விண்ணைத் தாண்டி
விண்ணென்று நிமிர்ந்து நின்றான்.
ஊர்வலமும் வருகிறான்
ஒரே நிமிடத்தில் உலகைச் சுற்றி.
என்ன செய்து...என்ன இலாபம்
என் சாதி உயர்வு என்று
அடி ஒன்று தள்ளியே நிற்கிறான்.
கல்வியில் உயர்ந்தாலும்...
வாழ்வில் வளர்ந்தாலும்...
மனங்கள் மாறாத சேறாய்
மனம் கொண்டான் மானிடன்.

குண்டு வெடிக்கக் குளறியடித்துக்கொண்டு
கோவிலுக்குள் ஓடுகிறான்
மாடி வீடோ...மண் குடிசையோ
தலைமாடு கால்மாடு தெரியாமல்
தடுமாறித் தவிக்கும் வேளை கூட
சாதிச் சகதிக்குள்.
வேண்டியதை விலை கொடுத்து வாங்க
வெளி நாட்டு வெள்ளியிருந்தும்
வயிற்றுப் பசியோடு
வரண்ட தொண்டையுமாய்.
உயிரை உயிர்...
உருவிடும் வேளையிலும்
வறட்டு றாங்கியோடு
மனம் விட்டுக் கேட்காத
வாய் ஜாலத்தோடு.
ஏழ்மைக்குள் வாழ்கிறது
உண்மையான மனித நேயம்.
மனிதம்...
ஒன்று காண் உன் ஊருக்குள்.
உன் வீட்டு உப்பை ஒரு தரமாவது
ஒதுங்கி...
நின்று தின்ற நன்றியோடு
தெருவைத் தாண்டி
துண்டுப் பாணுக்காய்
தன் உயிர் நலம் மறந்து
கடந்து கொண்டிருக்கிறது
உனக்காயுமாய்...
இன்னும்...இன்னும்
மனிதம்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எங்கோ சில...
மனித மனங்களுக்குள் மட்டும்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, April 24, 2008

இன்னும் புரியவில்லை...

எம் கலாச்சாரம் தாண்டி...
ஐரோப்பியக் கலாச்சாரம்
புதுமையாய் இருக்க...
பிரித்துப் பார்க்க
தப்புக்கள் சில இருந்தாலும்
சரிகள் நிறையவே நிறைவாய்.
நண்பன் ஒருவனிடம் கலந்து அலசினேன்.

மனதளவில் மட்டுமே பாசம்...
மனதை அழுத்தும் வரை அல்ல.
பிறந்த பச்சைக் குழந்தை
தனியறையில் இரவு விளக்கின் துணையோடு.
சிநேகிதனோடு சுற்றுலா வழியனுப்பும் கணவன்.
பிடிக்காத மண உறவை பேசித் தீர்க்கும்....
இல்லை...அமைதியாய் பிரிந்துவிடும் அழகு.

வயது பதினாறில்
துணையோடு பழகாவிட்டால்
உடம்பில் குறையென
வைத்தியரைத் தேடும் சந்தேகம்.
பதுனெட்டு வயதை எட்டிவிட
பழகும் புதுத் துணையோடு
பெற்றவரை விட்டு எட்டிப் போகும் பண்பு.
இந்த வயதிலேயே
தன் காலில் ஊன்றி வாழும் உறுதி.

வீட்டிலோ காப்பகத்திலோ
பிறந்த நாளுக்கொரு தரமும்
அன்னையர் தினத்தில் ஒரு தரமும்
திகதி குறித்தே...
பெற்றவரைச் சந்திக்கும் புதுமை.

முகம் அறியாதவர்கள் கூட
வணக்கம் சொல்லும் முறை.
முதலாளி தொழிலாளி பேதமற்ற சிநேகித உறவு.
எந்தச் சமயத்திலும் சுகம் விசாரிக்கும் அருமை.
அவர்கள் வீட்டுக்கே வேலைக்குப் போனாலும்
எம்மை உபசரித்து அனுசரிக்கும் தன்மை.
இன்னும் இன்னும் ....

அமைதியாய்க் கண்கள் விரியக்
கேட்டுக்கொண்டேயிருந்த நண்பன்
ம்ம்ம்ம்...
நக்க வந்த நாட்டுக்கே
நக்கலா????????
ஊரில் வாழ்கையில்
வரைபடத்தில் கூடக் கண்டதில்லை
ஐரோப்பாவை
என்றானே பாருங்களேன்
அதிரடி பதிலடியாய்
அதிர்ந்தே போனேன்.

தஞ்சம் தந்த நாட்டின் நடப்பை
புதுமையோடே அதிசயித்துப் பேசியது
நக்கலா...நளினமா??????????
இன்னும் புரியவில்லை!
கேட்டவனும்...
எம் பச்சைத் தமிழன் தான்!!!!

ஹேமா (சுவிஸ்)

Tuesday, April 22, 2008

காதல்=கடவுள்

Monday, April 21, 2008

வேள்விக் கூடம்...


இறுகக் கட்டிக் கொள்...
இன்னும்...
இன்னும் இறுக...
விட்டு விடாதே...
விரகத்தின் வேட்கை...
மொட்டைப் பிரித்து...
மோகம் புகுத்து...
முகை தொட்டு...
முற்றுகை இடு...

பேச்சிழக்க வை...
மூச்சு முட்டி
இதழுக்குள்
உன்னை அழுத்து...
செயல் இழக்கச் செய்...

உன் பெயரை
மட்டுமே
உச்சரிக்க வை...
உச்சத்தின் கூச்சலை
உன்னக்குள்ளேயே
அமுக்கு....
மீண்டும் மெள்ள
இறங்கு...
கண்ணுக்குள்...
முத்தம் ஒன்று
இறுக்கமாக...

மோகம் கலை...விடு
முந்தானை தேடு...
வேட்கை தணி...
வெட்கத்தால்
போர்த்திவிடு...
சீ...சீ
போடா...
போக்கிரி!!!

ஹேமா(சுவிஸ்)2006

எதிர்பார்ப்பு...31.10.2005

இன்று ஒக்டோபரின்
இறுதி நாள்
மனம் களைத்துப்
பாரமாயிருக்கிறது.
எனக்குள் ஒரு குழந்தையின்
அழுகுரல் உனக்காக...
உன் தாய்மையைத் தேடியபடி.

இப்போ எல்லாம்
நீ மிகத்தூரமாகி...
மிக மிகத் தூரமாகி.
என் மனப்பாரங்களை உனக்குள்
நிறையவே ஏற்றிவிட்டேனோ?
தாங்க முடியாமல்
தூரமாகினாயோ!!!
ஓ......
நீயே பாரமாகிறாய் இப்போ.
ஞாபகப் போர்வைக்குள்
நான் மட்டும் இன்று
உன் கற்பனை மகனைக்
கைப்பிடித்தே
நடமாடிக்கொண்டிருக்கிறேன்.
எங்காவது மனதின்
ஒரு இடுக்கில்
என் காலடித் தடங்கள்
காண்கிறாயா.

கடந்த நாளேடுகளில்
நீ மறந்தவைகளும்
மீட்கின்ற நினைவுகளும் எத்தனையோ.
என் பிறந்த நாளை மறந்தது எப்படி?
உன் அருகாமை கூடக்
கிடைக்காத நான் - கேட்காத நான்
வேறென்ன கேட்டுவிடப் போகிறேன்.
நெஞ்சில் பதிந்து கொள்ளும்படியாய்
உன் நினைவோடு
இதழின் அழுத்த முத்தத்தைத் தவிர.

மன்னிப்போ மறத்தலோ
எமக்குள் வேண்டாம்.
இனியாவது
என்றும் உனக்குள்
மறக்காமல் இருக்க
உன்னிடம்
வரம் ஒன்று வேண்டியபடி!!!!

ஹேமா(சுவிஸ்)

ஆசை...

ஆசை...ஆசை...ஆசை
உன்னோடு வாழ்ந்திட ஆசை
உயிருள் உறைந்திட ஆசை
பூ வைத்து பூஜிக்க ஆசை
போற்றிப் பாடிட ஆசை
பாதம் பணிந்திட ஆசை
பக்தையாய் தொழுதிட ஆசை
தென்றலாய் தடவிட ஆசை
திங்களாய் ஒளிதர ஆசை
நிழலால் தொடர்ந்திட ஆசை
நெஞ்சுக்குள் நிரம்பிட ஆசை
தூக்கமாய் தழுவிட ஆசை
துக்கத்தில் தோள்தர ஆசை
பேச்சின் குரலாக ஆசை
மூச்சின் காற்றாக ஆசை
கோபமாய் பேசிட ஆசை
கொஞ்சம் ஊடலும் ஆசை
செல்லம் கொஞ்சிட ஆசை
சொல்லும் கேட்டிட ஆசை
சிரிப்பில் கலந்திட ஆசை
அழுகையை ஆற்றிட ஆசை
சோகத்தில் மடி தர ஆசை
சுகத்தையும் பங்கிட ஆசை
தாயாய் அணைத்திட ஆசை
தாரமாய் நெருங்கிட ஆசை
எல்லாமே என் ஆசை...
இனி உனக்குள்ளும்
ஆசை...
இசையும் வரை
ஆசையோடு !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 19, 2008

1...2...3...

Friday, April 18, 2008

வாடகை தேசம்...

உண்மைதான்...இது என் தேசமல்ல.
வரவேற்பில்லாத
விருந்தாளியாக நான் இங்கு.
ஆறாயிரம் மொழிகளுக்குள்
ஆறே மொழியாம் ஆதி மொழி.
அதில் தமிழும் ஒன்றாம்.
புரியாத பெருமிதம்.
அந்தத் தமிழ் சீர்குலைந்து
எச்சில் இலையாய் கிடக்கிறது உலகம் எங்கும்.
உச்சரிக்கும் வேற்றுமொழி
வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே.
பிச்சைக்காரராய்...
தீண்டத்தகாத நச்சுப் புழுவாய்
அருவருப்பாய் பார்க்கின்றான் வெள்ளையன்.
ஏன் வந்தோம்...எதற்கு வந்தோம்
எங்கள் மொழியறிவு,பண்பாட்டின் வழியறிவு
பாரம்பரியத்தின் பகுத்தறிவு
அறிவானா அவன்.
என் ஊரில் பனையும்,தென்னையும்
முற்றத்துக் கோலத்தோடு...ஓலைக் குடிசையும்
முந்தலில் மல்லிகைப் பந்தலின் அழகையும்
அறிவானா அவன்.
கொல்லைப் புறத்தில் அழகாய் கிணற்றடி.
அதைச்சுற்றி மா,பலா,வாழை.
கிடுகு வேலிக்குள் எங்கள் உலகமே தனி.
ஆறடிக்குள் வாழபவன் அவன்.
நாளைய வாழ்வை நாளைக்கேதான் தேடுபவன்.
நெஞ்சில் பாசம் சுமந்தால்
பாரம் என்று
பாசம் நாக்கில் சுமப்பவன் அவன்.
என் ஊர் அழகு...என்வீடு அழகு...
என் கோவில் அழகு...என் மாடுகள் அழகு...
என் தெரு அழகு...என் பூக்கள் அழகு...
என் குழந்தை அழகு...என் தாய் அழகு...
என் தாய் தேசம் மட்டுமே அழகு...
இங்கு எது...என்ன...அழகு.
நாய் தின்னாப்
பணத்தைத் தவிர.
ம்ம்ம்...போடா...போ !!!

ஹேமா(சுவிஸ்)

இனியும் காத்திருப்போமா...

வறுமை...வறுமை
எங்கும் வறுமையின் ஓலம்.
மனித மனங்களில் வெறுமை.
வெட்ட வெளி வெறுமை.
தட்டுப்பாடு.
அன்பையே காணோம்.
என் இனிய நண்பனே...
ஒளிவில்லா ஒரு துளி
உண்மை அன்பு தெளிப்பாயா?
வாழ்கிறதா உனக்குள்?
வேராய் இருந்தால் அல்லவோ
மரமாய் நிழல் தர முடியும் உன்னால்
உன் மனக்கிண்ணத்தில்
எங்காவது...ஒரு துளியாய்
அன்பு என்கிற ஒரு பதார்த்தம்
ஒட்டி வாழ்கிறதா பார்.
பகிர்ந்து பசி தீர்ப்பாயா.
அன்பிற்காய் ஆணியில்
அறைபட்டவரை அறிவாயா.
ஆணியும் அறைதலும்
தேவையற்றது உனக்கு.
இருக்கும் அன்பை
அன்பிற்காய் ஏங்கும்
ஏழைக்குக் கொடுத்துப் பார்.
உலகின் உன்னதத்தையே
ஒரு துளி உன் அன்பால்
கண்டு களிப்பான்.
நன்றியாய் உன் நினைவோடு
காத்துக்கிடப்பான் காலடியில்.
கொடுத்தது கிடைக்காவிட்டாலும்
கோலப் புன்னகையாய் வாழ்வு
பூத்து மலரும்..மனமும் கூட.
நண்பனே,
கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தால்
அன்பை அள்ளிக்கொடு.
அன்பை அசிங்கமாக்காதே.
வேஷத்தோடு பசப்பி
பொய்யாய் வாழாதே.
பண்டமாற்றல்ல அன்பு.
அள்ள அள்ள நிரம்பியேயிருந்தது
அட்சயபாத்திரம்
தனக்கு மீறிய அன்பினாலதான்.
கர்ணனும் கொடை வள்ளளாகினான்.
நெஞ்சத்தில் அன்பு ஊற்று
உடைத்து ஓடினால்
அள்ளிக் கொடுப்பது...
அதுபெரும் அதிசயமில்லையே.
என் இனிய நண்பனே,
அன்பால் நிரம்பியிரு.
மலர்ந்த உன் முகம்
காணப் பசி பறக்கும்.
வறுமை வெறுத்தோடும்.
உனது...உனதென்று
சிறு முட்டைக்குள்
கோட்டை கட்டி குடியிருக்காதே.
முட்டை உடைத்து வெளி வா.
ஒரு துளி அன்பு தா.
வானத்திற்கும் பூமிக்குமாய்
அன்பின் பேரொளி காண்பாய்.
நண்பனே ஒரு துளி...
ஒரே ஒரு துளி...
உண்மை அன்புப் பிச்சை இடு.
நன்றியோடு அண்ணாந்து பார்க்கின்றார்
வறியோர் உன்னை.
இருளுக்குள் உருளாதே.
மலர்ந்த மனம் கொண்டு
அன்பைப் பகிர்ந்து கொடு.
அனுபவப் புண் நோக
அன்புப் பசியின் கொடுமை
அனுபவிப்பவள் நான்.
இன்னும் காத்திருக்கிறேன்.
இனியும் காத்திருப்போமா
பக்தராய்...
அன்பு நிறை பசி போக்கும்
இறைவனுக்காய் !!!

ஹேமா(சுவிஸ்)16.01.2001

Thursday, April 17, 2008

யார் இவர்கள்!

Wednesday, April 16, 2008

என்னதான் செய்ய நான்...

இப்போ எல்லாம்
மெளனமாய் இருக்கிறேன்
நான்.
நான்...
பேசியபோது
நீ...
மெளனமாய் இருந்ததால்.
நிறையவே பேசுகிறாய்
இப்போது-எல்லாம்
நீ...
தொலைத்துவிட்டுத்
தவிக்கிறேன்
உன்னை.
தவறுதான்....
என்...
தவிப்புக்களும்
ஏக்கங்களும்
என்...
வார்த்தைகளுக்குள்
குழம்பித் தவிப்பதை
கவனித்து இருக்கிறாயா.
நீ...எனக்குள்
பறந்து
கொண்டிருக்கிறாய்
உயிரோடு உரசியபடி.
பூட்டவும்
முடியவில்லை.
விட்டு விடவும்
முடியவில்லை.
என்ன
செய்ய நான்.
யாராவது
நினைத்தல் என்பது
தும்மல் என்றால்
நொடிக்கொருதரம்
தும்மிக்கொண்டேயிருப்பாய்.
எனக்கும்
தும்மல் வரும்
எப்போதாவது
நினைக்கிறாயா
என்னை
நீ...
குளிர்ந்து இறுகிக்
கிடக்கிறாய்
பனிக்கட்டியாய்
மனதுக்குள்.
வலிக்கிறது.
தடுக்கி விழுந்து
எழும்புகிறேன்.
வெளியில் தெரியாத
உள்
காயங்களோடு !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 15, 2008

அவ(ன்)(ள்)...

தாளம் தவறிய பாடல்.
தனித்துவிட்ட தீவு.
பிறப்பின் பலன்...
அதிஸ்டம்...பெருமை
இறைவன் ஆயுள் முழுதுக்குமே
தந்த தண்டனை...பரிசு.
குமுறும் கொந்தளிப்பைக் கொட்டியழக் கூட
கை கொட்டிச் சிரிக்கும் சமூகம்.
பார்ப்பவர் புறக்கணிக்க
பருவம் பின்வாங்க
சொல்ல முடியா சோகம்.
பிறப்பில் குறை வைத்தான் பிரம்மன். குற்றம் எனதில்லை.
உரக்கக் கூறியும் புரிவார் யாரும் இல்லை.
என்னை நொந்து...
இறைவனை நொந்து...
பெற்றவரை நொந்து...
எத்தனை இரவுகள் விடியாமலேயே.
உடலை விற்றால்,உடல் குறைந்தால்
உதவும் உலகம்
எட்டியே உதைக்கிறது.
உடம்பால் ஆணாகி
உணர்வால் பெண்ணாய் நான்.
உடம்புக்கும் ஆன்மாவுக்கும்
சம்பந்தமே இல்லாமல்
அருவருப்பாய்.
பராக்குப் பார்த்தான் பிரம்மன்
அரைகுறையாய் ஓரமாய் நான்.
பெற்றவரே பிரித்து ஒதுக்க
வரமா வேண்டி வந்தேன்.
பிறத்தலில் தெரியாத குறை
பருவம் வளர...புரிய வர
பகிர முடியா பரிதவிப்பாய்.
தாயிடமா...அயலிடமா...ஆசிரியரிடமா???
பார்வைகள் அசிங்கமாய்
வரிசையாய் பட்டப் பெயர்கள்.
பிறப்பின் உரிமையோடு
சேர்ந்து வாழ சிறகுகள் இல்லை.
இயல்பு மாற பள்ளியில் கேலி.
அள்ளி அணைத்த அன்னை,
கூடப்பிறந்தவர்,கூடிய நண்பர்களும்
வெறுத்து அடித்துக் கலைக்க,
பட்டத்து நூலாய் ஆதாரம் அறுந்ததாய்
அடுத்த பட்டம் அநாதை.
பிச்சை பசிக்கு...
கை நீட்டக் கூசினாலும் பத்தும் பறக்க
பத்தே நாளில் பழகிய ஒன்றாய்.
என்றாலும் இரங்கும் மனம் குறைவாய்
இல்லை...இல்லாமலே.
குள்ளம் போல்...கோணல் போல்
குறைதானே இதுவும் கூட.
பெற்றவர் பொறுத்து ஆதரிக்க
சுதாகரிக்கும் சுற்றமும் சூழலும்.
வாழ்வே சூன்யமாய்.
ஆண் பாதி...பெண் பாதியாய்.
காற்றும்...கடலும்,
வானும்...மண்ணும்,பூவும்...மரமும்
புண்ணாண என் மனதை அனுசரிக்க,
அர்த்தநாரீஸ்வரர் என்று
இறைவனைப் போற்றும்
உலகம் மட்டும்...என்னை ஏன் !!!

ஹேமா(சுவிஸ்)

அம்மாவின் நினைவில்...

Sunday, April 13, 2008

வாழ்கிறோமா நாம்...


வேதனையின் விளிம்பில்
வெடிக்கிறது கவித் தீ ஒன்று.

வாழ்கிறோமா நாம்!!!

தாய் மண்ணை உதறி விட்டுப்
பாச பந்தங்களை பறக்கவிட்டு
பெற்றவர்களைப் புறக்கணித்துவிட்டு
சுக்காய்ச் சிதறிய உள்ளத்தைத்
தேடிப் பொறுக்கிச் சேர்த்துக்கொண்டு
வெளி நாடு என்று
வெளியேறி விட்டோமே

வாழ்கிறோமா நாம்!!!

ஓடி ஓடி உழைக்கிறோம்
கடிகாரத்தின் முட்களோடு
நாமும் சேர்ந்தோடி
முகவரி அற்ற அகதியென்ற
அழகான அடிமைப் பெயரோடு.
ஆடம்பரப் பெருவாழ்வு
அருவருப்பாயிருக்கிறது.
அவிந்த நிறத்தில்
வெளிறிய முகங்கள்.
முகமூடியற்ற
மூடி மறைத்த முகமூடி முகங்கள்.

வாழ்கிறோமா நாம்!!!

மின்சார மூழ்கடிப்பால்
சந்திரன் சிந்தும் சிரிப்புக் கூட
கண்களை விட்டுக் காணாத்தூரம்.
முற்றத்து மல்லிகையின்
சுகந்த வாசனையோடு
நிலவின் கொள்ளை அழகில்
அம்மா குழை சோறு குழைத்துத் தர
எனக்கு முந்தி...உனக்கு முந்தி என்று
தம்பியோடும் தங்கையோடும்
சண்டையிட்டுப் பகிர்ந்துண்ட நாட்கள்
அன்று...

இன்று...
நாலு கறிகள் சமைத்தும்
நாலு பேர் இல்லாமல்
மனம் முழுதும் விரக்தியோடு
வெறுமனே தின்று திணித்து
பெருமூச்சொடு பஞ்சுப் படுக்கையில் நாம்.

வாழ்கிறோமா நாம்!!!

காடு களஞ்சிகளை விற்று
நகை நட்டுக்களை விற்று
நின்மதியையும் சேர்த்தல்லவா
விற்றுவிட்டு வந்திருக்கிறோம்.
புயல் காற்றில் அல்லாடும்
இலவம் பஞ்சிற்குக் கூட
ஏதோ ஒரு நாள்...
என்றோ...எங்கோ
அமைதி கிடைக்கும்.
கேட்பதுவும் கிடைக்கப்படும்.
எமக்கு..???

வாழ்கிறோமா நாம்!!!!

வருடமும் பிறப்பும் என்றும்தான்.
ஈழத் தமிழனுக்கு எப்போ
புதிதாய் பிறப்பொன்று!!!

ஹேமா(சுவிஸ்)

என்னருகில் நீ இருந்தால்...

காத்திருந்து களைத்ததினால்
காதலுடன் உனை நினைத்து
கண்ணீரால் நான் நனைத்த
தலையணைக்குள் முகம் புதைத்து
மென்மையான முத்தங்களுடன்
உன்னவள் வரைகின்ற
இன்ப மடல் இது.
என் அன்பே...
காலத்தால் கரையாத
காவிய நினைவுகளின்
துணை கொண்டு வாழ்கின்ற
உன் இனியவளின்
ஒரு துளி நினைவுகள்.
தனித்தவள் என்று
நான் என்றுமே கலங்கியதில்லை.
நீ மாயமாய் மறைந்துவிட்டாய்.
நீ விட்டுச் சென்ற
உன் நிறைவான
நினைவுகள் எனக்குள்.
நீ மீண்டும் வந்தால்...
என் நினைவுக்குள் நீ நிறைந்தால்...
கற்பனை கொடிகட்டும்
காவியங்கள் மாயமாகும்.
வாழ்வு வசந்தமாகும்
வாலிபம் தூக்கம் கலையும்.
சொந்தம் சுருதி சேர்க்கும்
சோகங்கள் சொரிந்து சாகும்.
உறவு சிறகு விரிக்கும்
உறக்கம் உதிர்ந்து ஓடும்.
கண்கள் நிறையப் பேசும்
கனவுகள் உன் முன் நாணும்.
கோடை பூக்காடாகும்
மாரியும் தூவானம் தூவும்.
நரை விழுந்த கண்ணுக்குள்
திரையாய் உன் விம்பம் விழும்.
கண் பூக்கள் அர்ச்சனை போடும்
காதலும் கதறி அழும்.
உதடுகள் மெளனமாகும்
ஊமையாய் மணி நகரும்.
அன்பின் இறுக்கத்தில்
காற்றும் திசை மாறும்.
ஆசையும் அலைந்து களைக்கும்
அசையாது இயற்கையும் நிலைக்கும்.
இத்தனையும் நிஜங்களாகும்
என்னருகில் நீ இருந்தால் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 12, 2008

வலி...

மாற்றம்...

முரண்பட்டுக் கொண்டேயிருந்த
நான்...
முதன் முறையாக
உன் முன் மண்டியிடுகிறேன்.
மொட்டவிழ்ந்து கொண்டிருக்கும்
மலராக...
வெளி உலகின்
அவலங்கள் புரியாமல்,
தாயின் கருப்பையை விட்டு
அவசர அவசரமாக
புது மண்
மணக்க மணக்க
கண் கூடத்
திறக்காமல் தெரியாமல்,
தடுமாறும் பச்சைச் சிசுவாக
களங்கங்கள் எதுவுமின்றி
நானும் புதியவனாக
மீண்டும்...
பிறந்தவனாகிறேன்.
எல்லாம் தெரிந்திருந்தும்
அறிந்திருந்தும்
ஏதுமறியாச்
சிறு குழந்தையாய்
முரண்பாடுகளுக்கு
ஒரு முற்றுப்புள்ளி வைத்து
புது மனிதனாய்...
அன்புக் காதலனாய்...
மாறிக் கொண்டிருக்கிறேன்
உன் இனிய வரவால் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, April 10, 2008

உன்னாலே...Tuesday, April 08, 2008

நட்பு...

கடும் வெயில் இங்கு.
காத்திருக்கிறேன்
நட்பின் குடை
கொண்டு வா.
நிழல் தர நீதானே.
கண்ணுக்குத் தெரியாத
கடவுள் போல...
எங்கோ மலர்ந்து
காற்றில் கலந்து வரும்
மலரின் வாசம் போல...
உன் பாசம்.
வானோடு வாழும் நிலவாய்...
பாரதி பாடிய கவிதைகளாய்...
புதிதாய் பிறந்த உறவாய்...
உறவுக்கோர் மாதிரியாய்...
கைகள் கோர்த்து வாழ்வோம்.
நட்பின் குடையோடு
காத்திருக்கிறேன்
வா!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, April 06, 2008

அம்மா...

வருவாயா...

Glitter Graphics
என் இதமான
பருவத் தோழன் நீ.
நீ... இல்லாத சமயங்களில்
நானே இல்லாமல் போகிறேன்.
வெயில்கால நிழலாக,
குளிர்காலக் கம்பளியாக,
மழை நேரக் குடையாக,
பசி நேர உணவாக,
இருளில் ஒளியாக,
துன்பத்தில் தலை தடவும்
தோழியாக,
வாழ்வில் வழி நடத்தும்
ஆசிரியராக,
நோய் நேரத் தாதியாக,
தாயாக... தந்தையாக,
தாரமாக,
மடி தவழும் குழந்தையாக,
தனிமைக்குத் துணையாக,
மரணம் வரை கூடவே
வருவாயா
என்னோடு நீ!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 05, 2008

மாறாதா விதி ...


விதியோ... வேளையோ
வேற்று நாடுகளில்
அகதிப் பதிவுகளோடு நாம்.

சொர்க்கம் தான்
சொந்தம் இல்லை.
இரத்தக் கறை
குறைந்தபாடாயில்லை
இலங்கைப் படத்தின்
விளிம்புகளில்.

சோமாலியாவை விட
கேவலமாய்
எம் வருங்காலச்
சந்ததிகள்.
களையிழந்து
கல்வியிழந்து...
பேரினவாதிகளின்
புதைகுழிகளுக்குள்
மனச்சாட்சியும்
மனிதாபிமானமும்
புதைந்தபடி.

தலையில்லா முண்டங்களும்
தாய் தந்தையில்லா
குழந்தைகளுமாய்
வரங்களும்
சாபங்களும்
பெற்ற
சபிக்கப்பட்ட
இனமாய்
தமிழ் இனம்
இலங்கைத் தீவில்.

வாழ்வின்
அத்தனை ஆசைகளும்
அடக்கி ஒடுக்கப்பட்டு
கண் முன்னே
கடத்தப்பட்ட
நிலையில்
வேற்று நாடுகளில்
அகதிப் பதிவுகளோடு
நாம்!!!!!!!!

ஹேமா(சுவிஸ்)23.07.2007

Friday, April 04, 2008

சுமைகள்...

Thursday, April 03, 2008

வாழ்வின் வரைபடம்...


மானுட வாழ்வை
வரைய நினைக்கிறேன்.
எழுதுகோலில் எண்ணக் கருக்கள்
கவிழ்ந்து கொட்டிக் கனக்கிறது.
அவலங்கள்...ஏக்கங்கள்
சந்தோசங்கள்...சந்தேகங்கள்
வேதனைகள்...இழப்புக்கள்
ஏமாற்றங்கள்...
இன்னும்...இன்னும்.
வந்தவை போனவை போக
நிரந்தரங்கள் எத்தனை
தரம் பிரிக்க முயல்கிறேன்.
உள்ளம் கொதித்துத் தவிக்கத்
தொடராய் வரும் காலச் சிந்தனைகள்.

ஒரு துளி நீர் கலந்து
கருவுக்குள் உருவெடுத்து
காற்றை நிரப்பி
உயிராக்கி...
சிரிக்கவும் பேசவும் முடிந்த
மனிதனாகி...
ஒரு சிறு தீயில் சாம்பலாகும்
அதிசயப் பிறவி.

இதனிடை அவன்படும் பாடு.
பிறப்பு பெண் ஆனதால்
தாய் மடி தவழும்போதே
திணிப்புக்களின் திணிப்புக்களில்.
சாப்பிடுவது தொடக்கம்
சாலையோரம் நடப்பது வரை.
ஆடை அணிய...படிக்க
கதைக்க...சிரிக்க
எல்லாம்...எல்லாமேதான்.
விரும்பியதை விட்டு
திணிப்பின் விருப்பத்தில்.
அதன்பின் வாலிபம் வளர
கூடவே வளரும் சந்தேகச் சங்கதி.

முற்றத்தில் நின்று வாய் விட்டுச் சிரித்தேன்..
மாலையில் மல்லிகை தலையில் சூடினேன்...
மனம் குதூகலிக்க
இருவரிக் காதல் கவிதைகள் எழுதினேன்.
எனக்குள் காதல் நுழைந்ததாய்
புலனாய்வு அம்மா செய்ய,
அப்பா அங்கீகரிக்க
வலிகள் ஏராளம்.
அடிபட்ட வலியை விட
வாய் சுட்ட வலிகள்
சொற்களாய் குத்தும் ரணங்களாய்
மாறாமல் என்றும் என்னுடன்.

தொடரும் பாதையில்
முளை கொள்ளும்
காதலின் கனவுக் கோட்டை.
அது முதன் முதலாய் தலை சாய்த்து
ஒரு தடவை எனைத் தடவிச் சென்றபோது
முள்ளாய் சிறு நெருடல்.
முள்ளை எடுக்காமலே
வலியோடு காத்திருந்த
காதலின் கனவுலகத்து
சுக அனுபவம்.

வாழ்வியல் அரங்கில்
எத்தனை நாடக நகர்வுகள்
நெஞ்சத்தில் நிழலாய் கதை பேசும்.
பக்கம் வந்தமரும் சொந்தங்கள்
இரயில் பயணங்களாய்.
பயணத்தில் இழந்தவைகள் எத்தனை?
எதிர்பார்த்து ஏமாந்தவைகள் எத்தனை?
குழந்தை...வாலிபம்....வயோதிபமாய்
வாழ்வு கட்டாய நிதர்சனங்களாய்.
வாழ்வின்
சூழல் கைதிகளாகி
வாழ்வை எம்மோடு பூட்டி
அழகு பொம்மைகளாய் நாம்.

யதார்த்தக் குமுறல்களைக்
கொட்டித் தொட்டெழுத
நேற்றைய நாட்களை
இன்றைய நாட்களில்
மறக்காமல்
நினைவுகளை நிரப்பும்
வந்து போன வரவுகள்.
இதைத் தாண்டி
போர்... வறுமை...
அகதி வாழ்வு...தனிமை
ஒவ்வொன்றும்
அணு அணுவாய் எரிகையில்
அமைதி கொள்ள முடியாமல்
மூட மறுக்கிறது மனக்கதவு!!!

ஹேமா (சுவிஸ்)2004

Wednesday, April 02, 2008

ஏன் அப்படி???

Tuesday, April 01, 2008

மனிதாபிமானம்...

காத்திருந்த காதல்...

love

காத்துக் கிடந்த காலம்
காத்தோடு போக
பூத்துவிட்ட காலத்தின்
புது வருடம் ஒன்று.
என் நினைவுகள் முழுதும்
உன் எச்சங்கள்தான்
நீ போன பின்னும்
சுவாசம் கலந்த உன் வாசம் போல...
பூத்தமலர் சருகான பின்னும்
பரவிக் கிடக்கும் மணம் போல...
வானம் வெளித்த பின்னும்
போக மனமில்லா நிலவு போல...
மழை ஓய்ந்த பின்னும்
ஓயாத சாரல் போல...
பகலவன் வந்த பின்னும்
புற்களுக்குள் ஒளிந்திருக்கும்
பனித்துளி போல...
விரல் மீட்டி முடிந்த பின்னும்
வீணை தரும் அதிர்வு போல...
தள்ளி இருந்தாலும் நினைவுக்குள்
நெருக்கமாக !!!!

நினைவோடு ஹேமா(சுவிஸ்)01.04,2007