*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, February 19, 2014

மகள்களின் செல்லப்பூனைகள்...

மகள்களின் தேவைகளை
ரசனைகளை
அப்பாப் பூனைகள் மட்டுமே
வாசம் பிடிக்கிறார்கள்.

கனவு கண்டால்
வீபூதி பூசிவிடவும்
மார்பை 
எழுதுபலகையாக்கி
விரல்களை
எழுதுகோலாக்கி
அ...ஆ கிறுக்கவும் 
'பித்தா பிறைசூடி' பாடும்
கடவுளர்கள் அவதாரத்தோடு...

அம்மா விடுத்து
கைப்பிடித்து நடக்கவும்
முதுகில் தொங்கவும்
அழகான நண்பனும்
ஆசிரியனும்
ஆனையும்
அப்பாக்கள்தான்
மகள்களுக்கு.

காதலிக்கும் மகளுக்கு
பூனைச் சமாதானம் சொல்லவும்
அம்மாக்களின் திட்டுக்களில்
பங்கெடுக்கவும்
கொடி பிடிக்கும்
மந்திரிகளாகவும்
அப்பாக்கள்.

சுவாரஸ்யமாக
பகிர்ந்துகொள்கிறார்கள்
செல்ல அப்பாக்கள்
அம்மாவிடம் சொல்லாத
டைரிக் காதல்களை
மகள்களிடம்.

புகை பிடிக்கும் பூனைகள்
தைரியமாக
சத்தியம் பண்ணுகிறார்கள்
அம்மாக்கள் தலைமீது
மகள்களின் தைரியத்தில்.

அம்மாப்பூனையின்
உறுமலைக் காப்பாற்றும்
வீரத் தேவதைகளாகிவிடுகிறார்கள்
மகள்கள் எப்போதும்.

மகள்கள் இல்லா வீட்டில்
கொலுசொலி கேட்பதில்லையென்று
பூனையின் காலில் கொலுசு கட்டியும்
விட்டுப்போன உடையைத்
துவைக்காமல்
மகள் வாசனையை  
சுவாசிக்கிறது அப்பாப்பூனை.

அப்பாக்களுக்கு மகள்களும்
மகள்களுக்கு அப்பாக்களும்
இல்லாவீடு
புழுதி பிடித்தும்
பேசாமலும் கிடக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, February 14, 2014

ஒற்றைச் சிறகில் அடைகாக்கும் பிரியம்...

கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லாத நாளொன்றின் கடைசியில் வானில் திட்டுத்திட்டாய் திரண்டுருளும் சில மாற்று நிறங்களை ரசித்தபடி குவளைத் தேநீரோடு சபித்துக்கொண்டிருந்தேன் உன் நினைவுகளையும் என் காலங்களையும்.

நீ....
தந்த
மதுவும் போதையும்
தீரவில்லை அன்பே...

நிரம்பாக் குவளையில்
ஊற்றிப்போனவனே
நீதானே...

முடிந்துவிட்டதாய்
நினைக்கிறார்கள்
அவர்கள்...

முடிவிலிருந்து
தொடங்கி வைக்கிறாய்
யாருமறியா
ஏதோவொன்றை
எப்போதும்
நீ...!


அன்று....இரவின் வாசனையோடு நுழைகிறாய் நீ.ஒரு குளிர்தருவோ தளிர்நிழலோ உவமானமாகிட முடியாது நம் சந்திப்புக்கு.ஒரு மலையுச்சி தொட்டு நகரும் மேக இருப்பின் கால அளவேதான் கதைத்திருப்போம் எப்போதும் நம் கதை கேட்கும் பூவரம் பூ சாட்சியாய்.

எப்போதாவது இருளில் முகம் காட்டும் உனக்கு மறைத்த என் மார்பினிடை மத்தியில் உனக்காய் ஒற்றைமலர் எனக்கும் பிரியம் காட்டத்தெரியும் என்பதாய்.எதிர்பாராமல் திக்கித்திணறிய நீ.....துணைக்கழைக்கிறாய் உன் பத்து விரல்களைப் போர்க்களத்திற்கு......பழக்கத்தின் தோஷமாய்.


உன் ஆக்கிரமிப்புக்களில் தோற்று நானே நீண்ட முத்தங்களைப் பரிமாறினேன்.”காடும் மேடும் கடந்து வேர்கள் இடித்துப் புண்ணாகும் கால்விரல்களில் மீண்டும் பதிப்பேனடி இம்முத்தங்களை”.... என்றாய் கண் இமையால் என் கன்னம் வருடியபடி.

தொலைத்த ஆன்மாவை
தலை தடவி
சுகம் கேட்டுக்கொண்டிருக்கிறது
வெள்ளைப் பூவொன்று....

இப்போ....
பக்கமிருந்து போனாயா
தனிமை
தள்ளி நிற்கிறதே!


பறவைகளின் மீது இயல்பாகவே எனக்கிருந்த நெகிழ்வு இந்தப்பறவையை துரத்தவோ இருக்கச்சொல்லவோ இடம்தரவில்லை.பறவைகள் வருவதும் போவதும் கானகத்து மரங்களுக்கு வழமைதானே.இக்காட்டுப்பறவை பாடிக்கொண்டே  எனக்காகவே என் கானகக்கிளை வந்ததமர்ந்தது பட்டகிளையை அழகுபடுத்திக்கொண்டு.அதன் வருகையை நான் என்ன சொல்லிப் பரவசப்படுத்த....

அத்தோடு எனது காத்திருப்பெல்லாம் தேசத்து வேரை அசைக்கும் புயலாய் சிறகடிக்கும் பறவையின் வருகைக்காகத்தானே.முதன்முதலில் அப்போதுதான் ஒற்றைச் சிறகைப் பரிசாய்த் தந்திருந்தது அந்த வானொலிப் பறவை.முன்பே ஒருமுறை நான் சொல்லியிருக்கிறேன் உங்களுக்கு !

இப்போதும் அடைகாக்கிறேன் அச்சிறகில் நினைவு முட்டைகளைக் காலம் பிந்தினாலும் பொரிக்காதெனத் தெரிந்தபோதும்.                     எப்போதாவது வந்தணைத்துப்போகும் புகையிரதத்திற்காகக் காத்திருக்கும் காடுவழித் தண்டவாளங்கள்போல விவரிக்கமுடியா அதன் அன்பிற்காகக் காத்தும் இருக்கிறேன்.

பறித்துக்கொண்டிருக்கிறேன்
கனவிலும் நினைவிலும்
பிரியக் கிளையில்
சாய்ந்துன்னை...

உதிர்வதாயும்
நிலம் படர்வதாயும்
காற்றின்
வாகு படித்தவனாய்
நர்த்தனமாடுகிறாய்
நெளி பரப்பிலும்
நெளி பறப்பிலும் !

நீ தந்த
ஒற்றைச் சிறகோடு
வலிக்க வலிக்க
ஒருபக்கக் கோணலாய்
வலிந்து
சரிந்து பறக்கையில்
இன்னும் உன் பிரிவை
விதி பறித்ததாயும்
பரவாயில்லையென்றும்
மன்னிக்கமுடியாமல் !


தேவதைகளுக்கு மட்டுமல்ல என் தேவனுக்கும் சிறகுண்டு.தேவகுலத்தினர் தூங்குவதில்லையாம் யாரோ சொன்னார்கள்.நிச்சயமாய் உறங்குகின்றான் என் தேவன் அவனுக்கான காடுகளில் அதுவும் மிக இனிமையான கனவுகளுடன்...என் கனவில் எனக்குச் சொல்லியிருந்தான் கதை கதையாய்....அந்த நேரத்தில் தனித்துவமாய் சிரமமில்லாமல் எனக்காய் எனக்காகவே ஒரு புன்னகை வெடிக்கும்  கானம் சுமக்கும்
அந்தக் கடினமுகத்தில்.அவன் இயல்பு அன்பேயாயிருந்தாலும் சிலசமயங்களில் கோரைப்பற்களும் முளைத்துவிடும் ராட்சதனாய்...

இல்லை என்பதும் நீ
இருக்கிறாய் என்பதும் நீ
இது காதல்
இல்லை என்பது
நிஜமுமல்ல
பொய்யுமல்ல
உனக்குள் நான் என்பதன்
மாயை !


இன்னொரு நிகழ்வில்....

என்னுடைய வாசனையும் ஒற்றைமுடியும் சேர்த்தனுப்பும் கடிதங்களை நண்பர்களுக்குப் பயந்து பாசறைக் கிணற்றருகே எலுமிச்சை மரத்தடியில் ஒளித்து வைத்திருப்பதாயும் அதைக் கறையான் தின்றுவிட்டதாகவும் சொல்லியிருந்தான் ஒருமுறை.


”அத்தனை வார்த்தைகளையும் நினைவில் வைத்திருக்கிறாயா?தொலைந்த கடிதங்களால் நினைவுகளைத் தின்றுவிடத் தெரிவதில்லை ஒருபோதும்” என்று ஆறுதலாய் சொல்லியிருந்தேன் எனை உருக்கி அவனுள் சிற்பமாக்கும் அவன் மயக்கும் கண் பார்த்து.

இப்போ....எனக்கும் உனக்கும் இடையில் எல்லாச் சொற்களும் தீர்ந்து நமக்கிடையே உரையாடல் இல்லாதிருக்கலாம்

இருந்தும்...

நான் இல்லாப்பொழுதுகளில் ஆயுதம் சுமக்கும் மிடுக்கான உன் தோளில் எப்போதாவது நானிருக்கும் உன் கனவுகளை ,அந்நேர அந்தரங்கங்களை,
கீறிட்ட இடம் தரும் புள்ளிகள் நிரப்பா நிச்சயங்களை உறுதிப்படுத்தி இன்னொருமுறை கடிதமொன்று எழுதுவாயா என் செல்வனே காத்துக்கிடக்கிறாள் உன் தேவதை.உன்னுயிர் நினைவால்தான் எஞ்சிருக்கிறது இந்த  நுரையீரல்கள் சுவாசித்துக்கொண்டு.ஆனால் ரணமாகிறது ஒவ்வொரு இரவும்...

எதுவும் நினைவிலில்லை
நான் உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை....

கொஞ்சம் முதல்
கொஞ்சிக்கொண்டிருந்தாய்
பின்னராய்
என் முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தாய்....

பேசித்தீரா பிரியங்களை
பெருவெளி மணலிலும்
வானின் எரிநட்சத்திரங்களின்
இருண்ட முனைகளிலும்
புதைத்து வெளியேறும் உன்னை....!

உறவுக்காய் விதியில் பிணைக்கப்பட்டவர்கள் நீயும் நானும்.உன் சக இணை நான்.அடிமையாகவும் எதிரியாகவும் உன் வக்ரங்களையும் குரூரங்களையும் கொட்டித் தீர்க்கும் நிலமாகவும்,நண்பணாயும்,காதலனாயும்,தாயுமானவனாயும்,என் மடிதவழும் குழந்தையாயும் என்னை உனக்கு அடையாளப்படுத்திய இச்சமூகத்துக்கு நன்றி.

உன் இணைப்பறவை நான்.கண்கள் தாண்டிய வானத்தில் நீ தந்த அந்தச் சிறகோடு உன்னோடு பறக்கக் கனவு கண்டவள்.என் மரத்தின் இலைகளை உதிர்த்தது விதி.என் சருகுகளின் இசையை தொலைத்துவிட்டேன். போகும்போது என் மரத்தின் பாடும் குருவிகளையும் கொத்திப் போய்விட்டாய் சுயநலக்காரனடா நீ...

இப்போதெல்லாம் புதிதாய் முளைவிடும் இலைகளை உற்றுநோக்குகிறேன்.திசையெங்கும் தேடி ஆதரவுக் கிரணங்களை கட்டி இழுத்து வருகிறேன்.
 

இசை தேடும் சாதகப் பறவைபோல அன்பு தேடி அலையும் பட்சி ஒன்று மனதுக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது.மடை திறப்பதற்காக என்னுள் மிகப்பெரிய நதி ஒன்றும் காத்திருக்கிறது.

மௌனமொழியில்
உயிரெடுக்கிறாய்...

இருவருக்குமான
ஊர் எல்லையில்
உதிரத்தொடங்கும்
வெண்மஞ்சள்
இலைகளைகளிலாவது
நீயனுப்பிய
ஏதோவொன்று
ஏதோ ஓரிலையில்
ஓட்டியிருக்குமென்கிற
நம்பிக்கையில்
இலையலசி நடக்கையில்
எல்லை கடக்கிறது
மனது.....
மிதக்கும் ஒற்றைச் சருகில்!


உனக்காக எத்தனை விரதங்கள் வேம்படி மூலை வைரவருக்கு உனக்குச் சொல்லாமலேயே.சொல்லப் பிடிப்பதுமில்லை சொன்னாலும் நீ அக்கறைப்படுவதில்லை.அக்கறைப்படுவதுபோலக் கேட்டாலும் நக்கலும் நளினமுமாய் உன் முகம் கோணலாகி...ஆனாலும் உன் கடிதங்களில் ஒரு வார்த்தை நழுவிப்போயிருக்கும் எனக்கான உன் வாஞ்சையில்.ஒற்றைக் கோப்பியில் வளரும் என் கோப்பித்தேவதையென்று..

ஒருமுறை நச்சரித்தாய் ஒரு விரதநாளில் அசைவ ரசம் வேண்டுமென்று.வீட்டுக்குத் தெரியாமல் ரசம் வைப்பதென்பது விளையாட்டா.வாசனை வரும் ஏன் - எதற்கு - யாருக்கு என்பார்கள் என்றேன். இதழில் ரசம் வச்சுக்கொண்டு என்னடி வாசம் - வீடு - விளையாட்டு என்கிறாயென...... அப்பப்பா....நீ....வாசனை இன்னும் இதழில் ஈரமாய்....என் விரதமும் கலைத்தாயன்று.

ஒற்றைப்புருவத்தால் மட்டுமே கோபிக்க முடியுமப்போ எனக்கு.உன் ஆக்கினைகள் அந்த நேரத்தில் பயத்தைக் கொண்டு வருமே தவிர அத்தனையும் ஆசையாய் இனிக்கும் இதயத்துப் பொக்கிஷங்கள்.

உன்னிடம் சொல்லாத ஒரேயொரு வேண்டுதலுக்கான விரதம் அப்போது என்னிடம் இருந்தது. கடவுள் கேட்கவுமில்லை தரவுமில்லை.எல்லாம்....எல்லாமே கொடுத்தும் தரவில்லை.


எனக்கு உன்னைத் தர  விருப்பமில்லா என் தேசம் முதலிலும் பின் கடவுளும்.....நான் விரதமிருந்தும் வீணாய்ப்போனது.மாதமொருமுறை ஒருகிழமை ஒற்றைக் கோப்பியோடு கோயில் போய் வந்திருந்தேன் உனக்கும் சொல்லாமல்.

நீ போன திசையில் கடவுளர்கள் இருக்கிறார்களா.கடவுளைக் காண்பாயா நீ இப்போ? நான் வந்ததும் சொல்லக் கதைகள் சேமிப்பாய்தானே.கேட்டு வை என் வேண்டுதலைச் செவிமடுக்காச் செவிட்டுக்கடவுளின் ஏனென்ற அந்தக் கதையையும்.உனக்கான ஆயிரமாயிரம் நம் தேசத்துக் கதைகள் மிஞ்சி மிஞ்சிக் கிடக்கின்றன என்னிடத்திலும் சொல்ல...

இப்பொழுதும் என்னிடமொரு விரதம் இருக்கிறது
அது கடவுளுக்கு அல்ல.உனக்குத் தெரியும் எதற்கானதென்றும் எவரிடமென்றும்....

எப்படி உதறினாலும்
ஒட்டிக்கொண்ட
வானம் உதிரா நட்சத்திரமென
எனதுகளில் வார்க்கப்பட்ட
உன் சிற்பங்கள்
உளியோ
கற்களோ அல்லாமல்....

என் மரணம்வரை
பிரமாண்டமாய்
பார்வையும் பரிசுமாய்
பிரகாசித்தாலும்
எனதில்
உனதின் உளிபட்டு
கை வழி வளியும் குருதி
காயா ஈரமாய்...

எனதுகளில்
எனக்காய்
உனதால் கீறிய காவியங்கள்
காலத்தால் சிதைக்கப்பட்ட
வாதைகள்...

அனாதையாக்கப்பட்ட
உனதறியா
உனதான நினைவுகளும் நானும்
எனதான கண்ணீருக்குள் வாழ்ந்து
கரைந்திறக்கும் சுகங்கள்...

இருந்தும்
எனதுகள் எல்லாமே
உனதுகளாக்கப்பட்டவை...!!!


உன் காதல் மறவா ஹேமா....... இப்போ சுவிஸ் ல் இருந்து...!

இனிமையான மகிழ்ச்சியான அன்பான காதலர்தின வாழ்த்துகள் சொந்தங்களே !!!

Wednesday, February 12, 2014

அவனுக்கான சிறுகுறிப்பு...

எவரெவரோ இருந்து
சுயம் நனைத்த
தெருநாற்காலியொன்றில்
இன்று நான்.

சிறுபிள்ளைக் காதலென்று
மறந்த குறிப்பின்
இருப்பொன்றை
உணர்கிறது மனது.

நீ இன்று
இறந்த செய்தி கேட்டபிறகு
யாருமறியா
தெருக்கதிரையில் தெளிக்கிறேன்
என் சிறு கூச்சலை. 

எத்தனை இரகசியங்களை
உயிர்ப்புக்களை
ரசித்தும் ரட்சித்தும்
உள் வைத்த குறிப்புக்கள்
கைப்பிடியிலும் முதுகிலும்
தாங்கிக்கொண்டு இக்கதிரை.

’நிறையப் பேசக் கிடக்கடி உன்னட்ட’

காலம் கடந்த சந்திப்பில்
ஒரு நாள்
ஒரு நிமிடச் சந்திப்பில்
இதே நாற்காலியில்.

என்னதான் இருந்திருக்கும்
உன் அடிமனதில்...

என் கைதொட்டு
விட்டதற்கான காரணமா
அதற்கான மன்னிப்பா ?!

இல்லை....
உறவுகள் விரும்பா
உக்கிய
காதல் கயிற்றின்
கதை சொல்லவா ?!

தனித்தவிழ்த்த நினைவுகளை
தாங்கிய நாற்காலி
தர மறுக்கிறது
உன்....
ஆழ்மனக் கிடக்கையை.

என்னதான்
சொல்ல நினைத்திருப்பாய்
சொல்லுமா இந்த நாற்காலி
நான்.....
இறப்பதற்குள்!!!

அவனுக்கான நினைவஞ்சலியுடன் .....ஹேமா(சுவிஸ்)

Monday, February 10, 2014

உணர்வுகளின் தவம்...

நான்.....
தவித்த நேரமெல்லாம்
இறுகிப் பிடித்துக்கொண்டாய்
என்னிரு கைகளை
பாவியாய் நான் தர
எதுவும் என்னிடம் இருக்கவில்லை.

சில கவிதைக் கிறுக்கல்களின்
மடிப்பு விளிம்புகளுக்குள்
மறைத்த உன் முகம்
வழியாமல் தவிப்போடு
எனக்கு மட்டுமே தெரியும்படியாய்.

கோடு கிழிக்காவிட்டாலும்
தாண்ட மனமில்லா
அன்பைத் தந்திருந்தாய்
உள்ளங்கை வெப்பத்துள்
நீ...

மிகச் சுதந்திரமாய்
சாகவாசமாய்
சாமான்யமாய்
காத்திருப்பதே சுகமாய்
நானங்கு.

எதார்த்தமும்
நிதர்சனங்களும்
சமூகமும்
முகம்தானென்று
எதிர்கொண்டால்
வாழ்வு எமக்கானதாய்
நம்பிக்கையில்லையெனக்கு.

உன் முகத்தை
விளிம்பிலிருந்து வழிந்தோடவிட
அதிக நேரமில்லையெனக்கு
ஆனால்....
உன் உள்ளங்கை வெப்பம் குறித்த
கவலைதான் அதிகமெனக்கு.

இன்னும்...
இறுக்கிய
உன் கைகளுக்குள்தான்
என் அன்பு.

சிலுவைகளை
கைகளுக்குள்
ஒளித்து வைத்திருப்பதாய்
பதை பதைக்கிறாய்.

விடுத்து விட்டெழும்பு
கையின் ரேகைகள்
உன் பிறப்பின் அளவைகளை
நிர்ணயிப்பதில்லை.

கைகளைத் திற
என் கவிதை விளிம்புகள் சொல்லும்
வெப்பத்தின் அளவை
என் கைகள் புதையுண்ட
அளவையும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, February 08, 2014

பிரயணம்...

உன்னால்...
நேற்றிரவு விதைக்கப்பட்ட
விதைகளின் பலன்களை
இப்பகலில்
பிடுங்கிக்கொண்டிருக்கிறேன்.

நேற்று நீ...
விதைத்தபோது
உன் விரல்களைப்
பற்றிக்கொண்டிருந்தது
நம் காதலும்
களைப்பும்.

முளைத்த
செங்காந்தள் பூவிதழிலின்
தேன் சொட்டுக்களை
பருகிக்கொண்டிருந்தாய்
உயிர் கிழித்து.

மிண்டி மிகுந்த
மேண்டலின் இசையில்
மோகத்திமிர் ஸ்வரங்களை
மீட்டவும்
பின் பசியடக்கவும்
கற்றிருக்கிறாய்.

திக்கற்றுத் தவித்த
இவ்வுயிரின் வாதை
இப்போ
யாரோடுமில்லை
ஆனால் தனித்துமில்லை!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 06, 2014

உயிரின் சுழற்சி...

எப்படி இணைந்தாய்
என்னோடு நீ
உறவின் பாதையை செப்பனிடும்
ஒரு கைதேர்ந்த ஊழியக்காரனாய்.

கை கோர்த்து
எத்தனை பக்குவமாய்
வழிநடத்த முடிகிறதுன்னால்
பாதை மாறாமலும்
தடுமாறாமலும்.

கொஞ்சம் பிசகினாலும்
உறவின் அர்த்தமே
மாறுமென
ஆதி மனிதன்
கதைசொல்கிறாய்.

உன்னை
சந்திப்பதற்காகத்தானோ என்னவோ
சில துரோகங்களை
நானே உண்டாக்கியிருப்பதாக
நம்பிக்கை மனிதர்கள்
சொல்கிறார்கள்.

உடைத்தெறிய
நமக்கான காரணங்கள்
கிடைக்கும்வரை
ஒத்த உணர்வலைகள்
உயிரைச் சுற்றும்.

நரமிருகங்களறிவதில்லை
ஒருமுனையும்
மறுமுனையும்
பிரிவையறியாதென்று...!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 04, 2014

66 வருட சுதந்திரமா???

கருப்பு தேசத்தில்
சிங்கங்களின் ஆட்சிக்குள்
பிறந்துவிட்டதால்
எத்தனை நாள்தான் நடிப்பது

நாம் ?

இன்னும்
இப்போதும்

இன்றும்
பாதம் தடக்கிய இடமெல்லாம்
நம் இனத்தில் எலும்புக்கூடுகள்
கேள்விகள் ஏந்திய முகங்களை
எந்தப் பதில்களுக்குள் புதைப்பது ?

கருப்பு வெள்ளை வ(வாக)னங்களில்
யுகப்பசியோடு காணாமல்போனவர்கள்
கனவுகளை
எந்த மணல்கடிகையில்
அடைப்பது ?

தினம் செத்துப் பிறக்கும்
ஈழத் தமிழனின் விதியை
66 வருடங்கள்
நஞ்சு நுரைத்த கடலில்
அலைய விட்டவர்களாய்
விதியை எழுதிய
பிரித்தானியர்களை....???

திடுக்கிட்டு விழிக்கும்போதெல்லாம்
முகத்தருகே 

தடமழுத்தி
" மன்னித்து மறந்து

வாழப் பழகிவிட்டீர்களா"
என்கிற கேள்விகளோடு
நொடிதானும் விலகாத
அந்த விம்பங்களை
என்ன செய்வது ?!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, February 02, 2014

காதல் துளிகள் (12)

பார்வைக்கு
மெல்லிய ஆடைகளை
பெட்டியில்
அடுக்கி வைத்துவிட்டு
என் பார்வைக்கு
மாத்திரம்
முரட்டுப் போர்வைகளையே
போர்த்துகிறாயே ஏன் ?!

நீ...
கிழக்கில் உதிப்பவன்
என்னை மேற்கிருத்தி
விட்டுப்போன இடத்திலேயே
இன்னும் இருக்கிறேன்
மேற்கு கிழக்காக
மாறும் விரதம்
சொல்லித் தராமல்
போனதுதான்
எனக்கான
கவலை இப்போ !

வெற்றிகள்..
சந்தோஷங்கள்..
துணிவு..
நம்பிக்கை..
தைரியம்..
அத்தனையும்
சரிந்து
தொலைந்து
மடிகிறது..
உன்
ஒற்றைப் ப்ரியத்தில் !!

பகலும் இரவும்
எனக்கானதாய் விடிய
தனக்கானதாய்
ஆக்கிவிடுவதில்
வல்லவன் அந்த வில்லன்
இன்று பகல்....
சருகற்ற தெருக்களில்
ஓடிவரும் சிறுமியோடு
ஒரு சிறுநாய்க்குட்டி
அவன் பெயர் சொல்லியே
தெருவைக் கூட்டிவிடுகிறது !

வட்டப் பரிதியின்
சுற்றளவையும்
தாண்டுகிறது
உன் நினைவு
ஓ.....
இன்று நீ
இல்லாமல் போன நாளோ !

துளும்பும் தாரகை
அளித்த தாழிசை
சில நிழல்களோடு
விளக்கமில்லா
ஒரு நீண்ட பொழுது
வழியனுப்பி வைக்கலாம்
சில குறிப்புக்கள்
போதும்
சேடமிழுக்கும் மனதிற்கு !

சுழலும்....
காதலின் கால்களை
இறுகக் கட்டினேன்
சொற்களுக்கு
வளைவுகள் தருவதாய்
ஒருவன் சொல்லிப்போனான்
கைகளையும் இறுக்கிக் கட்டி
காத்திருக்கிறேன்
சுகம் !

உன் குரல்
நிலவெழும் நேரத்தில்
முகம் திரும்ப
நிலவுதான் கையசைக்கிறது !

ஹேமா(சுவிஸ்)