*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, February 27, 2011

நிதானித்த வேளை...

அரைக்குவளை சிவப்பு மது
தூக்கிய குளிரைச் சமப்படுத்தியபடி
தெருவோடு கண் அலைய...
தவளைகளின் சத்தமில்லா இரவு
செயற்கை மின்மினிகளாய் வெளிச்சம்
அசையா வெள்ளை மரங்கள்.

இறுக்கிய குளிருக்குள்
முத்தங்களோடு இளசுகள்.
இல்லாத பிள்ளைக்காய் மார்வலிக்க
அனுங்கியபடி ஒரு பெண்.
மாற்றுத்திறானாளிக்கு
உதவும் ஒரு ஆசிரியர்.

பிண ஊர்தியின் குரல்.
வாடகைப் பெண்ணும்
அன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.
வழுக்கும் பனியில் கைத்தடிதான் உறவாய்
தனித்தே நடக்கும் முதுமை.

குளிர் உயிரை உறைய வைக்க
சிந்திக்கச் சிந்திக்க
வெறுக்கும் வாழ்வின் உச்சம்.
இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே
இவர்கள் எங்கே.

இன்னொரு அரைக்குவளை
எடுத்துக்கொள்கிறேன்
ஏன் என்றால்....
இன்றிலிருந்து பழகவேண்டும்
என் பிணத்தை நானே காவல் காக்க!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 17, 2011

பொம்மை தேசம்...

ஓதிக் கட்டப்பட கயிற்றோடு
யானையின் முடியும்
சாத்தானின் சாபமும்
விஷத் தேளின் ஊர்ந்த எச்சமுமாய்
தோல் உரசிய காந்தலுடன்
முகம் தவறிய ஓர் நாளில்
பறந்துகொண்டிருந்தது
அந்தச் சர்ப்பம்.

சற்றுக் கண்மூடி மௌனித்த
அல்லது சைனித்த பொழுதில்
புணரியாய் திரண்ட கலம்
குறிச்சுவட்டில்
பாதை பிரித்து வகுத்த கோட்டுக்குள்
புத்தனாய் புத்திமானாய்
ஒரு சாடை.

நூதனமான ஒரு போதனையும்
அதன் ஏற்பாடுகளும் நிரம்பியிருந்தாலும்
தெளியவோ ஆராயவோ
திராணியற்ற ஒரு பொழுதில்
விடிகின்ற
காலையாய் அது!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, February 14, 2011

ஒரு நான் ஒரு அறிவிப்பாளன்.

முக விழிப்பிற்கே முழித்து விழித்து நிற்கிறேன்.நீ என் அன்பா,காதலனா இல்லை என் கணவனா.எப்படித்தொடங்க நான்.சரி அது அப்படியே இருக்கட்டும்.என் உயிர் நீ.இப்போதைக்கு இது போதும்.வாழ்ந்த காலங்கள்,வாழப்போகும் காலங்கள் அனைத்துமே உன்னோடுதானே.

திட்டமிட்ட எழுத்துக்கள் இங்கு எதுவுமில்லை.கணணி பழுதடைந்துவிட்டது.நேற்றுப் பின்னேரம்தான் புதிதாய் ஒன்று வீடு நுழைந்தது.முழுமையான கணணி அறிவு என்னிடமில்லை.ஓரளவு தொடர்பு நூல்களை இணைத்து மின்சாரம் கொடுத்திருக்கிறேன்.
இதைச் செப்பனிட நீ மட்டுமே சொல்லித் தந்துகொண்டிருந்தாய். இப்போ சொல்லித்தர யாருமில்லாமல் கணணி முழுமைடையாமல்....!

இனி நீ இல்லை என்பதை பொய்யாக்கிக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு கணமும்.புதிதாய் ஒரு கணணிபோல இதயத்தை மாற்றமுடியாமல் புதுக் கணணித் திரையிலும் முழுதாக உன் முகமே தெரிய நான் செத்துக்கொண்டிருக்கும் செய்தியைக் கிறுக்கிகொண்டிருக்கிறேன்.

காதலர் தினம்.வருவேன் உன் கையோடு இருப்பேன்.உன் இதழின் சுவையோடு பசி மறந்திருப்பேன்.நீ எனக்கொன்றும் சமையல் செய்யக்கூட வேண்டாம்.நீயே சமையலாயிரு என்று சிரித்த ஞாபகம்.ஆனால் நீயுமில்லை...சமையலுமில்லாப் பொழுதில்தான் காத்திருக்கிறேன் உன் குரலின் சூன்யத்தோடு.பசிக்கிறது மனம்.இன்னும் நேரமிருக்கிறது வந்துவிடு.....!

திட்டமிடாத சமயத்திலேயே நான் விரும்பத்தொடங்கியிருக்கிறேன் இந்தக் கடிதம்போல உன்னை.ஆனாலும் என்னை முழுதாகச் சொல்லியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். என் சோகங்களைத் தின்று செரித்தவன் நீ.அப்பாவாய்,
அம்மாவாய்,சிநேகிதனாய்,வில்லனாய்,விமர்சகனாய்க்கூட இருந்திருக்கிறாய்.இப்போ.....!

உன்னால் அனுப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துக்குள் எம் திருமணத்தன்று எனக்குப் பிடித்த ஒற்றை ரோஜா இதழைச் சிறைப்பட வைத்தாய்.இன்னும் என் புத்தகங்கள் நடுவில் உயிரோடு.உன் ஒற்றை எழுத்துக்களைக்கூட நான் வீணாக்குவதில்ல.....உன் குரலை ஒலிப்பேழைக்குள் சேமித்ததைப்போலவே.ஆண்மை நிரம்பிய உன் குரலுக்குள் ஏதோ இறுகிய இறுமாப்பு எனக்கு.என்னவன் இவன்தான் என்கிற அறிவிப்பு.வானொலியில் முதல்நாள் உன் குரல் கேட்டபோதே விளங்கி வெட்கப்பட்டேன்.

இப்போ நான் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.அலைந்து அலைந்து நிலையில்லாத சிட்டின் இறகாய் அங்கு கொஞ்சம்...இங்கு கொஞ்சமாய் உன் நினைவுகளூடே.மனமும் அலைந்துகொண்டிருக்கிறதோ.
இப்போதைய என் எண்ணங்களை பதிந்துகொள்ள மட்டுமாய் இம்மடல்....!

என் வாழ்வமைப்பு சோகச் சிற்பமாய் என்னை இறுக்கியிருந்தாலும் உன் இறந்தகால வருகைதான் கண்முன் என்னை கொஞ்சம் என்னை உடைத்து உருக்கியிருந்தது.இன்று அதே அன்பு என்னை உலகத்து அத்தனை அன்பானவர்களையும் வெறுத்து விலகிக் கொன்று குவிக்கவும் வைக்கிறது.இதற்கெல்லாம் நீ பதில் தரப்போவதுமில்லை.எனக்கும் தேவையில்லை.தேடிக் களைத்து பின் தொலைத்த நித்திரைக்காலம்போல இனியும் இந்த இரவுகளைச் சலித்துக்கொள்ளப்போவதுமில்லை.

ஏப்ரல் முதலாம் திகதி எம் திருமணமத் தினத்தை நீ நினைக்காமல் போனாலும்,காதலர் தினமான இன்று என்னை நீ நிச்சயம் நினைத்துக்கொள்வாய்.இன்று பார்க்க நேரமில்லாவிட்டாலும்,ஒற்றை நடசத்திரத்தை இரவு முத்தமிடும் சமயத்தில் வெட்கத்தால் பளிச்சிடும் வெளிச்சத்தில் பார்த்துக்கொள்வாய்.

உனக்கான எத்தனை கவிதைகள்.ஆனால் உனக்குப் புரியாமலே இருந்திருக்கிறது.நீ முத்தமிட்ட முதல்நாள் என் உதட்டில் இன்னும் ஈரமாய்த்தான்.ஒரு அறிவிப்பாளனாய் செய்திகள் சேமிக்கும் ஒரு பத்திரிகையாளனாய் என் இந்தக் கடிதத்தையும் சேமித்துக்கொள்வாய்.அறிவிப்புப் பாணியில் வாசித்தால் இதில் உயிர் இருக்காது.இது செய்தியல்ல என் உணர்வு.உன் குரலில் பாவங்கள் வெளிப்படுவது குறைவு என்பது உனக்கே தெரிந்த குறை.இதனாலே கவிதைகளை நீ வாசிப்பதில்லை என்பதும் செய்தி.அன்பை அறிவிக்கும் அறிவிப்பாளனாகவே இருந்திருக்கிறாய்.

குழந்தையாய் உன் சின்னவிரலோடு பயணித்த காலங்கள் தடம் அழுத்தமாய்."எனக்காக என்று என்ன செய்திருக்கிறாய் நீ" என்று நேரிலும் கடிதத்திலும் தொலைபேசியிலும் சண்டை போட்ட நேரங்களில் எல்லாம் என் உள்மனதிற்குள் உன்னை உன் அன்பை நேசித்தபடியே நெகிழ்ந்திருக்கிறேன்.உன்னைத் தவிர வேறு யாரல் என்னை இத்தனை தூரம் வழிநடத்தி என உயிரை உனக்குள் பாதுகாக்கமுடியும்.என் கவிதைகளையும் கூடத்தான்.

ஞாபகங்கள் நிறையவே தந்திருக்கிறாய்.நானும்தான் என்பாய்.
பத்திரமாக்கிக்கொள்வாயா இனியும் தெரியவில்லை.கொஞ்சம் பயந்தாங்கோழி நீ.நாம் எத்தனை வருடங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலே அன்பைக் கொட்டி இறைத்துக் கொண்டிருந்தோம்....இருக்கிறோம்.அந்த இரவுகளும் ஏன் பகல்களும்கூட கூச்சப்பட எத்தனை கதைகளும் சேட்டையுமாய் என்னைத் திக்குமுக்காட வைத்திருப்பாய்.ஒரு பிறந்தநாளோ ஏன் தீபாவளி பொங்கலைக்கூட ஒரு கிழமை,இரண்டு கிழமை பிறகு ஒரு மாதம்,இரண்டு மாதம் என்றுகூடக் கொண்டாடிக்கொள்வாய்.அந்த நேரங்களில் என்னையும் உன் அன்புத் தலையணைக்குள் வைத்தடைத்து திணித்து ஒரு உருளையாய் உருட்டிப்போவதுதான் உன் கெட்டித்தனம்.மூச்சுத் திணறித் திட்டித் தீர்த்திருக்கிறேன்....!

இன்னும்....இன்னும் நிறைய.சலிப்பேயில்லாத உன் சவரம் செய்யப்படாத அழகான ஒற்றை நாடிக்குள் அடங்கும் அந்தச் சின்ன முகம்.சின்னக் கண்.புசுபுசுவென்று ஒழுங்காய் வராத உன் முடி.இதில் ஒரு வேடிக்கை ஒற்றை பியர்க்குவளை இன்னும் கூட்டிவைக்கும் உன் அன்பை.பொழிந்து கொட்டுவாய் உளறும் உன் நாக்குக்கூட உன்னை நக்கலடித்திருக்கும். பெயர்போன ஒரு அறிவிப்பாளன் இப்படி உளறித் தள்ளுகிறானே என்று.

பாடலும் வரும் சிலசமயம்.ரசிகையாக நான் எத்தனை ராத்திரிகள் சாமக்கோழியாய். இடைக்காலப் பாடல்களையும் எங்கள் போர்க்காலப் பாடல்களையுமே விரும்பிக் கேட்பாய். இதில் இம்சை என்னவென்றால் தொலைபேசியில் அந்தப் பாடல்களை நான் கேட்டு அபிப்பிராயம் வேறு சொல்லவேண்டும்.இல்லையென்றால் நீ சரியாகக் கேட்கவில்லையென்று திரும்பவும் கேட்கவைப்பாய்.திட்டித் திட்டி பாட்டுக் கேட்கும் முதல் ஆள் நான் என்று பலத்த சிரிப்போடு நீ....!

தூங்கும் அழகை ரசிப்பதா இல்லை திட்டுவதா என்று தடுமாற்றம் எனக்குள்.குளிரோ வெக்கையோ வளைந்து வயிற்றில் சூடு சேமித்து எத்தனை மணி வரைக்கும் என்றாலும் நித்திரை கொள்வதில் நீயேதான்.உன் நித்திரைக்காக நானும் படுத்திருந்த நாட்களும்.அப்படியே பகலை முத்தப்போர்வையாக்கி என்னையே களவாடிய தினங்களும்....படுக்கை வலிக்க போர்வை உன்னைத் தேட பதிலற்ற இரவுகளைத் துரத்தும் போராளியாய் நான் இப்போ.

ஒரு சிகரெட்டை முழுதாக புகைக்கும் பழக்கமில்லாமல் அடிக்கொருதரமாய் புகைத்துக்கொள்வாய்.அதற்கும் திட்டும் சண்டையும்."ஐயோ....வாய் நாறுது கிட்ட வரவேண்டாம்" என்று வெறுத்துத் தள்ளிக்கூட வைத்திருக்கிறேன். பாவமாய் முகம் வைத்து நெருங்குவாய்.நானும் திருந்தவில்லை...நீயும் திருந்தவில்லை இந்தப் பழக்கத்தில்.

நேசம் மட்டுமே சொல்லித்தந்த உன் உதடுகளில் கொஞ்ச நாட்களாக அலட்சிய வார்த்தைகள் அலட்சியமாக வந்து விழுகின்றன.
வெறுக்கிறாயோ.நிறையவே பொய் சொல்லவும் பழகியிருக்கிறாய்.இந்தச் சமயத்தில் நீ சொன்னதொன்று வழுக்கி விழுகிறது மனதிற்குள்."யாரிடம் பொய் சொன்னாலும் நான் உன்னிடம் என்றுமே பொய் சொன்னதில்லை.சொல்லப்போவதுமில்லை"என்று அதன்படியும்தான் என்னோடு வாழ்ந்திருக்கிறாய்.வாழ்கிறாய்....!

என் சோகம் தனிமை என்கிற விரக்தித் தோட்டத்துள்ளுள் நுழைந்த நீ என் தோள் தொட்டுத் திருப்பி உன் நேசக் கரத்துள் அணைத்துக் கூட்டி இதுவரை வந்துவிட்டாய்.கண்ணில் ஒன்று, மூக்கில் ஒன்று,கன்னத்தில் இரண்டு,உச்சத்தலையில் ஒன்று,உதடு கழுத்து என இறங்கி வரும் உன் முத்தங்களாலேயே என் சோகம் குறைத்த நீ இன்னும் இன்னும் அதே அன்பு மாறாமல்தான் எனக்குள்.

ப்ரியங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது உன் உலகம்.என்னை அதற்குள் அனுமதித்து உலவவிட்டிருக்கிறாய் இதுநாள்வரை.அதற்கே நான் நன்றி சொல்கிறேன்.அம்மாவிடம் கிடைக்காத அன்பைக்கூட தந்து தாயுமானவனாய் தலைதடவி,என்னடி என்று அதட்டியும் அன்புமாய் அனுசரித்திருக்கிறாய்.பிரமித்த பாதை வழி என் விரல் பிடித்து கூட்டிப்போகுபோதெல்லாம் அன்பின் கடவுளோடு நடப்பதாய் மறுப்புச் சொல்லாமலே நடந்திருக்கிறேன்.பள்ளமும் குழிகளும் அறிந்து வைத்திருக்கும் அதிசயக் கடவுளாய் இருக்கிறாய் எப்போதும் எனக்குள் நீ.

இனி நீ என் வாழ்வில் இல்லையென்றாலும் தூரத்துக் கடவுளாய் என்னைக் காத்துக்கொள்வாய் என்கிற நம்பிக்கை இன்னும்.என்னால் முடியவில்லை. வந்துவிடு.பிரிவையும் இழப்புக்களையும் பழகிய இதயத்தோடு பழகியதால்....தெரிந்துதான் விலகினாயோ.கிராதகா.....
கவலைப்படாதே.
நான் செத்துக்கொண்டேயிருக்கிறேன்.ஆனாலும் உயிர் தொலைத்து அலையும் உன் பிசாசாய் நான்.உனக்கான என் கவிதைகளையும் கவனித்துக்கொள்.என்.....உன் சுவாச எண்ணங்களாய் அவைகள்.

அன்பு அப்படியேதான் மாறாமல்.முத்தங்களின் ஈரத்துக்காகவே காத்திருக்கும் தகிக்கும் உதடுகளும் அப்படியேதான்.நீ மட்டும்தான் இன்று தவறவிடப்பட்ட பொருளாய். கண்டுகொள்வேன் ஆனால் என்னது என்று சொல்லிக்கொள்ளமுடியாத ஒரு இடமாய்க்கூட இருக்கலாம் அது!!!

குற்றம் சொல்ல முடியாத
உன் அன்பை
சுவிஸின் உயர்ந்த யுங்(F)ரௌ மலைகளில்
செதுக்கி வைத்திருக்கிறேன்.
காதுக்குள் பாடிய பாடல்களை
பனிமுடிய
முளைக்கும் முதல் புல்லின் துளிரிலும்
அப்பிள் மரங்களும் அடியிலும்
பியர்ஸ் மரங்களின் முதல் பிஞ்சிலும்
உன் பெயர் செதுக்கிய
காதலர்தின ஞாபகங்கள்.

கறுப்புக்கடலின் முகத்திலும்
ஆயிரமாயிரம் கேள்விகள்.
கோடிட்ட இடமும் நிரம்பாது
கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது.
அந்த இடங்களில்
வெறும் புன்னகைப் பூக்களை மட்டுமே
நட்டு வைக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

எவரும் விரும்பாத பூக்களையே நடுவேன்
பறிக்கும் ஆசை வராத பூக்கள்
எனக்குமானது மட்டுமாய்.
பனியில் கருகிய பூக்களைக்கூட
பொத்திப் பாதுகாத்து
பனியுடுத்திய
வெள்ளைமரங்களுக்கு நடுவில்
நானும் வெள்ளைச்சேலை
உடுத்தத் தொடங்குவேன்
இனி உன் அன்போடு!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 08, 2011

"ம்"...

தொடர்பாடலின் சந்திப்பாய்
சிவப்பு விளக்கிலும்
எச்சரிக்கை சமிக்ஞையிலும்
தவறாத
கை அசைப்பில் மாத்திரமே
உறவின் பிணைப்பு
தொடர்ந்தபடி
பேச்சில்லாத
சின்னப் புன்னகையில்
இணைப்புப் பாலமாய்
ஒரு நிழல் முகம்.

நாட்களின் கரைதலில்
சிலசமயம்
தேயும் சூரியனாயும்.

எப்போதாவது
மனம் நசிகையிலோ
சந்தோஷிக்கையிலோ
ஏன் என்றில்லாமல்
அது தோன்றி மறையும்.

எதிர்பார்க்காமல்
"ம்" என்றபடி
மீண்டும் தொடரும்
அதே புன்னகை
அதே பேச்சாடல்.

மறைகையில்
"ம்" என்ற கைகாட்டல்
உயிர் பிடுங்கிப் போகும்
மனத்திரையில்தான்.

எங்கிருக்கும் எப்படியிருக்கும்
என்றுகூட
அறிய முற்படாத உறவாய்
என்றாலும் அணுக்கமாய் அது.

எத்தனை உறவுகள்
சிரிக்கவும் அணைக்கவும்
கதைக்கவும்
பக்கம் இருந்தும்
எதுவும் இல்லாமல்
எதுவும் கேட்காமல்
எதுவும் தராத
அந்த நிழல் முகம்
தரும் புன்னகை
"ம்"
வாழ்வில்
இணக்கமாய்
தேவையாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 03, 2011

காதல் கள்வன்...

கேட்டுக் கேள்வியில்லை
முன்னறிவித்தலில்லை
அனுமதியில்லை.
புகுந்ததும் தெரியவில்லை
காவலுக்குக் கதவு
கள்வனுக்கு உதவ
யன்னல்.

எச்சரித்த திரைச்சீலை
மெல்லிசையாய்
காதில் ஜில்லென்று
புகுந்த தென்றல்
புரியவில்லை.

நித்தம் வரும் தென்றலென்று
இமையோடு படபடக்க
கண்ணிமைக்கும் கணத்தில்
விளக்கணைய
பயந்தணைத்த தலையணைக்குள்
மெல்லமாய்
உன் பெயர் சொன்னதால்.....

மறைத்த ரகசியம்
கெக்கலிக்க
வெட்கித்துக் கிடக்கிறேன்
இறுக்கிய உன் மார்போடு!!!

ஹேமா(சுவிஸ்)