*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 27, 2011

சின்னச் சின்ன...

சம்பிரதாயம்...தவமாய்
சில ஒட்டுப் பொட்டுக்கள்
கண்ணாடியில்
வெள்ளைச் சேலையின்
விவரம் அறியாமல்!!!

குப்பைத்தொட்டி...
தவறியவள்
போட்டுவி(ட்)ட
பரிதவிக்கும்
உயிருக்காக
உயிரற்ற என்
தவிப்பு!!!

அசுத்தங்கள்...
அலுக்கவில்லை
அள்ளிக்கொண்டே இருக்கிறது
காற்று ஊத்தைகளை
மனிதனைத் தவிர்த்து
பூமி சுத்தமாகவேயில்லை!!!

காவல்...
நாய்க்கு உணவிட்ட
வீட்டுக்காரரிடம்
நேற்றிரவெல்லாம்
மாறி மாறி
முற்றத்திலும்
கொல்லையிலும்
படுத்தபடியும்
ஓடியபடியும்
உறுமியபடியும்
குரைத்த நாயைப்
புகழ்ந்துகொண்டிருந்தார்
அயல்வீட்டுக்காரர்!!!

வயதுக்கேற்றபடி...
நெஞ்சில் படுத்தபடி
இடக்கு முடக்கான கேள்விகள்
பதில்கள் சரியானதாயில்லை
வளைந்தேன்
நிமிர்ந்தேன்
முறிந்தேன்
வார்த்தைகள் இல்லாமலில்லை
இருந்தும்...!!!

பெண்...
சில...
எழுத்துப் பிழைகளோடு

எழுதப்பட்ட கவிதை
சிலரால்...
திருத்த விரும்பாத பக்கத்தில்!!!


ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 20, 2011

முந்தி ஒரு காலத்திலே...

மூலையில் பயந்தொதுங்கும்
எலியென ஒரு கும்பி உருவம்
உக்கிய சப்பல் குச்சியென
கைதொட உதிர்ந்து கரைய
ஆயுள் முழுதும் சேமித்த மூச்சை
விட்டு விட்டு இழுத்தபடி
சரிவரப் புரியாதபடிக்கு.

நூற்றாண்டின் நினைவலைகள்
புரட்டித் திருப்ப
எண்ணற்ற முகங்கள்
சிரித்தும் அழுதும்
கைகுலுக்கியும்
இரவும் பகலுமில்லா ஒரு பொழுது
நீர்த்து மறைந்துகொண்டிருக்க...

தூக்கத்தின் நடுவில்
சொண்டு சுளித்தழுது
அம்மாவைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையாய்
சொல்லி முடியா
கதைகளை
விக்கி விழுங்கி
சொல்லிச் சொல்லி
களைத்துப் போகுமது
ஒரு சாடையில் நானாக!!!

உயிரோசையில் ஹேமா(சுவிஸ்)

Friday, December 16, 2011

மழை முத்தம்...

அன்றைய நாளில்...
நம் முத்தச்சண்டை குறித்து
யோசிக்கையில்
காற்றும் மழையும் குசுகுசுத்தபடி
ஏதோ சதித்திட்டமாயிருக்கலாம்.

இன்னொரு நாளில்...
உன்னை வெளியில் தள்ளி
கதவுகளை மூடிக் கொஞ்சம்
அழுது துயில்வோம் என்று
முற்றத்து நிலவில்
அண்ணாந்து சரிகையில்
வார்த்தைகள் பிடுங்கி
கண்களின் கனவுக் கோடுகளை
அழித்துப் போனது அதே மழை.

மற்றொரு நாளில்...
நீ என்னை விட்டுப் பிரிவாய்
என மின்னலாய் இடியாய்
மழைச் சாத்திரம் சொல்லி
என்னை நனைத்துச் சேறாக்கியது
மீண்டும் அந்த மழை.

அதே நாளில்...
என் கன்னத்து
உன் இதழ்ப் பதிவைப்
பறித்து போனது
அந்தப் பாவிக் காற்றும்.

பிறிதொரு நாளில்...
இரண்டும் இயல்பு மாறாமல்.

என்னருகில் அணைத்தபடி
அன்று நீ...!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, December 08, 2011

சும்மாவே போனது...

MySpace Graphics

நீ...
தோழனாய் கை கோர்த்தபோது
நான் இருப்பேன்
இறுதிவரை என்றேன்
சும்மா...எதுவரை என்றாய்.

பின்னொருநாள்
நம் தோழமைக்குள்
சும்மா...எத்தனை நாள்தான்
காதலை ஒளிப்பாயென்றாய்.

நீயும் இருப்பாய்
நானும் இருப்பேன்
அதுவரை என்றேன்
நீ...சும்மா
காதல் சொன்ன முதல் நாளில்.

அம்மா என்றாய்
சமூகம் என்றாய்
நானும் இருப்பதைச் சொன்னேன்
எதுவும் இப்போ நம்மோடு இல்லை
எதுவும் இருக்கப்போவதுமில்லை
சும்மா...ஒரு தத்துவம்
சொன்னோம் இருவரும்.

இருக்கும் எல்லாமே
இல்லாத ஒன்றைத்தான்
இருப்பதாய் சும்மா சொல்கிறது
இருக்கும்...
இந்தக் கணம் மாத்திரம் இருப்பில்
இப்போ அதுவும் "சும்மா"தான்
இல்லாமல் போய்விடும் பாரேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, December 03, 2011

இல்லாத ஒன்றுக்கு...

உதறிவிட்ட கைகளில்
திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது
ஒற்றை இறகோடு இலையான் ஒன்று
தோலைத் துளைக்க மறந்ததோ
இல்லை இயலாமையோ
இருக்கிறது அசையாமல்.

குப்பையாய்
கூட்டி அள்ளிய சொற்கூட்டம்
இலக்கியங்கள்
வல்லின மெல்லினங்கள்
யாப்பு தொகை தொடையென்று
கண்சிமிட்டியபடி
ஒற்றை இறக்கையாலேயே
கோர்த்து அடுக்கத் தொடங்க...

தலையணையோடு
சொட்டிக் காய்ந்த இரத்தக் கறை
உயர்த்திக் காட்டிய ஊனக்கைகளோடு
விளங்காமலே விழிக்கிறேன்
தலைமாட்டிலும் கொழுவியிருக்கிறது
யாரோ பரிசளித்த வீணையொன்று
கை இருக்குமிடத்திலோ
மொட்டுப்போல் ஒரு மழுங்கல்.

இறக்கை அசைத்து
படபட வென வட்டமிட்ட அது
தன் ஒற்றை இறகையும் உலர்த்தித் தர
பலமாய் சிரிக்கத் தொடங்கினார்கள்
வால் இல்லாக் கோணங்கிகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 29, 2011

மனப்புலம்பல்...

தமிழ் உணர்வோடு இந்த வாரம் முழுதும் நம் மாவீரரோடு இணைந்திருந்த அத்தனை உறவுகளுக்கும் தமிழன்னை சார்பின் மனம் நெகிழ்ந்த நன்றி.

நடுநடுவே பெயரில்லாமல் யாரோ ஒருவர் சின்னக் குழப்படி.இவரும் புலம்பெயர்ந்து வாழ்பவர்தான் என்றே நினைக்கிறேன்.பாவம்.ஏதோ மனதால் பாதிக்கபாட்டிருக்கிறார்.ஆனாலும் நம் நாட்டுப் போர்ச்சூழல்தான் வெளிநாட்டில் இருத்தியிருக்கிறது.உழைத்து வீடு கட்டி,அக்கா தங்கைக்குச் சீதனம் கொடுத்து,அப்பா அம்மாவை வெளிநாடு வரவழைத்து....இப்பிடி எல்லாமே செய்து வாழ்வை உயர்த்தியிருப்பார்.ஆனால் அதற்காகப் போராடியவர்கள் அவருக்குக் கேவலமாகப் போய்விட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் வாழத்
தெரியாவர்கள்.பணமில்லாதவர்கள்.படிப்பில்லாதவர்கள்.காடு மேட்டிலே அலைந்து ஒளிந்து சாப்பாடில்லாமல் மக்களுக்காக தங்களை தங்கள் உறவுகளை வாழ்க்கையை சந்தோஷங்களை கழுத்தில் கட்டிய சயனைட்டோடு கட்டித் தொங்கவிட்டவர்கள்.இளிச்சவாயாய்த் தெரிபவர்கள்.இவர் மட்டுமே புத்திசாலி !

உண்மையில் நம் நாட்டுப் பிரச்சனையைத் திட்டுபவர்கள்மேல் எனக்குக் கோபம் வருவதில்லை.அவர்கள் ஏதோ ஒரு வழியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்.அதன் பாதிப்பே "ஏன் இந்தப் போர்..."என்கிற நிலைமையைத் தோற்றுவிக்கிறது.உதாரணமாக அவர்கள் குடும்பத்தில் யாராவது இயக்கங்களினாலோ இராணுவத்தினராலோ மரணமடைந்திருக்கலாம்.இடம்பெயர்ந்து பொருளாதாரச் சேதம் ஏற்பட்டிருக்கலாம்.இதுபோல எத்தனையோ.நானும் என் வாழ்வின் ஒரு பக்கத்தையே இந்தப் போரினால் தொலைத்தவள்தான்.ஆனால் எனக்கு இன்னும் கோபமும் வேகமும் அதிகரித்ததே தவிர,விடுதலைக்காய் போராடிய அது எந்த இயக்கமாக அல்லது நாற்றுப்பற்றாளர்களாக இருந்தாலும் சரி எவரிலும் வெறுப்பில்லை.எமக்குச் சிங்களவர்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்கிற உத்வேகம்தான் என் இழப்புத் தந்து போனது.ஒன்றை இழக்காமல் ஒன்று கிடைத்துவிடாது.அழிவில்லாமல் ஆக்கமில்லை.சுகமாய் கால் நீட்டிச் சாய்ந்திருக்க விடுதலையைக் கதவு தட்டிச் சிங்களவன் தரமாட்டான்.புரிந்துகொள்ளுங்கள்.

போராடியவர்கள்,எழுத்தால் பேச்சால் வாதாடியவர்கள் என அத்தனை பேரும் உங்களை எங்களைப்போல வெளிநாடுகளுக்கு வந்திருக்கலாமே.சரி தலைவர் முள்ளிவாய்காலில் தொலைந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்வோம்.ஏன் அவர் ஒருவருக்கு மட்டுமே எமக்கு விடுதலை வேண்டும் என்கிற எண்ணம் இருக்கவேண்டும்.அவருக்கு மட்டுமா தலைவிதி.அவருக்கு மட்டுமா விடுதலை தேவைப்பட்டது.நான் நீங்கள் எல்லோருமே தமிழர்கள்தானே.

இதோ பெயர் சொல்லாமல் "அரிப்பு" என்று எழுதும் நீங்களும் ஒரு தமிழன்தானே.அவர் தொடக்கிவிட்டிருக்கிறார்.60-65 வருடங்களாக நம் முன்னவர்கள் இலங்கை அரசாங்கத்தோடு எம் உரிமைகளுக்காக எழுத்திலும் பேச்சிலும் வாதாடிக்கொண்டிருந்தாலும்,இலங்கை/ஈழம் என்கிற ஒரு தேசமும் அங்கு தமிழன் என்கிற இனமொன்று வதைபடுவதையும் உலகம் பேசவைத்தவைத்தவர்கள் ஆயுதம் ஏந்தித் தங்கள் உரிமைகளைக் கேட்டவர்கள்.எங்கே அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடரலாமே.எமக்குத் தேவையானதைக் கேட்க எனக்கும் உங்களுக்கும் துணிச்சலும் வீரமும் வேணும்.அது அவருக்கும்,அவரோடு அங்கு வாழ்ந்த மக்களுக்கும்,ஆயுதம் ஏந்திய அத்தனை போராளிகளுக்கும் இருந்தது.ஓடி வந்த நாங்கள் கோழைகள்.பேச அருகதை அற்றவர்கள்.உங்களாலும் எங்களாலும் முடிகிறதா சாவை கழுத்தோடு கட்டிக்கொண்டு அலைய.சாவுக்குத் திகதி வைத்து எங்களை நாங்களே வெடிக்க வைக்கமுடிகிறதா.தயவு செய்து மாவீரர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

விடுதலை கேட்பதும் பெறுவதும் சுலபமல்ல.எத்தனையோ சரித்திரங்கள் சொல்லும் பலகதைகள்.அது கைமாறிக் கைமாறி ஒ......ரே குறிக்கோளோடு போய்க்கொண்டேயிருக்கும் முழுமையாகக் கிடைக்கும்வரை.பெயர் சொல்லாத ஐயாவே.....தலைவர் பிரபாகரன் இடத்தை இனி நீங்கள் வகித்தால் நாங்கள் உங்களுக்கும் அதே மரியாதை நீங்கள் விடுதலைப் பாதை வகுத்தால் அதன் வழி நாங்களும் நடக்கிறோம்.நல்லது செய்ய யார் என்கிற கேள்வில்லை.நீங்கள் தொடர்கிறீர்களா ?

இதற்காகத் தலைவர் புகழ்பாடுபவள் இல்லை நான்.ஆயுதம் எடுத்து ஈழத்திற்காய் போராடிய அத்தனை இயக்கங்கள் போராளிகள் எல்லோருமே வீரமறவர்கள்தான்.ஆனால் தலைவர் தொடர்ந்து வழிநடத்தினார்.உள்பூசல்கள் எனக்குப் பெரிதாகத் தெரியாது.அவ்வளவு அரசியல் பேச நான் வரவில்லை.ஆனால் குழப்பமும் முரண்பாடுகளும் இல்லாத மனிதன் இல்லை.சரியும் பிழையும் எங்குமுண்டு.இங்கு யாரும் 100% முழுமையானவர்கள் அல்ல.

ஆனையிறவு,மாங்குளம்,அநுராதபுரம் வென்ற நேரம் இதே நாங்கள்தான் குதித்து மகிழ்ந்தோம்.ஏதோ தமிழர்களின் கஸ்டகாலம் எத்தனயோ நாடுகளின் சதியில் மாட்டி எம் போராட்டம் மழுங்கிக்கிடக்கிறது.ஆனால் மனங்களில் விடுதலைத் தீ எரிந்தபடிதான்.எப்படி உங்களைப் போன்றவர்களால் இப்படிக் கேவலமாகப் பேச முடிகிறது.அல்லது அடிமைப்பட்டே வாழ்வை வாழப் பழக்கிக்கொண்டீர்களா.சனல் 4 க்கு இருக்கும் உணர்வில் ஒரு துளிகூட எம்க்கு வேண்டாமா.சிங்களவன் ஆயிரம் கட்சிகளில் இருந்தாலும் தமிழனுக்கு ஒரு துளியளவுகூட உரிமை கொடுக்ககூடாது என்பதில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறான்.எம் போராட்டப் பின்னடதலுக்குக் காரணமும் உங்களைப்போன்றவர்களின் இடறி ஒற்றுமையில்லாத தன்மையும்கூட.

நம் தலைமுறையின் எதிர்காலம் என்ன.நம் மண் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு பறிபோய்க்கொண்டிருக்கிறது.சிங்களவர்களின் நிரந்தரக் குடியேற்றத்தால் எமது பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது.
போதைவஸ்துக்கள் ஆசை காட்டி கல்வியை அழிக்கிறார்கள்.எங்களது தமிழ்ப்பிரதேசங்களில் புத்தர் கோயிகள் முழத்துக்கு முழம் வளர்ந்துகொண்டிருக்கிறது.ஈழத்தில் தட்டிக் கேட்க ஆட்கள் இருந்தவரை இதெல்லாம் நடந்ததா.சொல்லுங்கள்.இதையெல்லாம் ரசித்தபடி ஒருசொட்டுக்கூட யோசிக்காமல் "பிரபாகரனின் தொலை நோக்கு முள்ளிவாய்காளில் கோடாறி அடி பட்ட போது உலகமே விய்ந்தது. அதுவும் சிங்களவன் காலில் விழுந்து சரணாகதி ஆகி கோடாறி அடி பட்ட போது அவரின் சிந்தனைகள் சிரித்தது.தொலை நோக்கு தகர்ந்தது."என்று சொல்கிறீர்கள்.

நிச்சயமாய் உங்களில் மட்டும் என் கோபம் இல்லை.உங்களைப்போலச் சிலர் இருக்கிறார்கள்.போராளிகளுக்காக மட்டுமில்லை போராளிகள் தினம்.எமக்காக மரணித்த பொதுமக்கள் தொடக்கம் பூச்சி புழுக்கள்வரைதான்.இதில் பிரிவு பேதம் வேண்டாம்.இப்போகூட தலைவர் இருக்கிறார் இல்லை என்கிற பிரிவு.இருக்கிறார் இல்லை.நம்புவோம் நம்பவில்லை.அவர் இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்ட பணியைத் தொடராமல் பிரிந்து நின்று சண்டை போடுகிறோம்.எமக்கே வெட்கமாயில்லை.சிங்களவன் பார்த்துச் சிரிப்பான்.எங்கள் பலஹீனம் அவனுக்கு பலம்.

"சுவிஸில் சுகமாக இருந்து கதைத்து கொண்டு பிரபாகரன் வருவான் புலி அடிக்கும் என புலம்பும் லூசுகள் என்று தான் திருந்துமோ."ஐயா பெயரில்லதவரே....சுவிஸ்ல் சுகமாக இருந்தால் நானும் உங்களைப்போல திட்டிக்கொண்டுதான் இருப்பேன் மாவீரர்களை.நான் இதுவரை சுவிஸ் பாஸ்போட் எடுக்கவில்லை.என் உயிர் மட்டும்தான் இங்கே.நினைவு முழுதும் என் மண்ணில்தான்.கையாலாகாத நான் உங்களைப்போல் துணிச்சலாணவர்கள் யாரும் வழிநடத்தினால் விடுதலைக்காய் தோள் கொடுப்பேன்.

ஐயா பெயர் சொல்லாதவரே....புலம்பெயர்ந்த எம்மிடம் எத்தனையோ பொறுப்புக்கள் செய்யக்கூடியதாக இருக்கிறது.சரி ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்கள் இல்லை பலம் இல்லை.இலங்கையில் இருந்துகொண்டு சிங்களவர்களின் அடக்குமுறைக்குள்ளும் சட்டத்துக்குள்ளும் இருந்துகொண்டு செய்யமுடியாத எத்தனையோ எழுத்துவழி,பேச்சுவழி,கல்விவழிப் போராட்டங்களை ஏன் நானும் நீங்களும் வெளிநாடுகளில் இருந்தபடி செய்யலாமே.இதற்கெல்லாம் எங்களுக்குள்ளும் விடுதலை என்கிற எண்ணம் வேண்டும்.போராளிகளுக்கு மட்டும் அது இருந்தது.நீங்கள் அவர்களை மட்டுமே நம்பியிருந்தீர்கள்.சரி நானும்தான்.ஏதோ தவறு நடந்திருக்கிறது.நல்லது செய்தால் நல்லவர்கள்.அவர்கள் விடுதலை வேண்டித் தந்திருந்தால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிவிட்டு பிறகு மறந்தும்விட்டு ஊரில் போய் சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்போம் இல்லையா.

ஒட்டுமொத்தத்தில் நீங்கள் சுகமாய் எங்கேயோ இருக்க அவர்கள் மட்டுமே விடுதலையை எடுத்துத் தருவார்கள் என்கிற பெரு எதிர்பார்ப்பு இருந்தபடியால்தால் உங்களுக்குள் இந்த ஏமாந்த தமிழன் என்கிற ஏமாற்றம் வந்திருக்கிறது.யாரும் ஏமாறவில்லை.விட்டதைத் தொடர்வோம்.அவர்களைத் திட்டாமல் கொஞ்சம் தமிழ் உணர்வோடு ஒற்றுமையோடு தொடர்ந்தால் நிச்சயம் ஒருநாள் நம் காலத்தில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்திற்காக நாமும் அணிலாய் ஒரு புல் எடுத்துப் போடுவோம்.நிச்சயம் அது விருட்சமாகும்
நம் குழந்தைகளுக்கு !

பெயர் சொல்லாத ஐயாவே...நான் சொன்னவற்றில் ஏதாவது பிழை இருந்தால் நாகரீகமாகத் தெரியப்படுத்துங்கள்.உங்களுக்கும் சரி நமக்கும் சரி தெளிவு பிறக்கட்டும்.துஷி,சுதன் போன்றவர்கள் கருத்துச் சொல்வார்கள்.என் கருத்துப் பொதுவானவையே.எவருக்கும் சார்பற்றது.தமிழர்கள் எமக்குச் சுதந்திரம் தேவை அவ்வளவுதான்.வெளிநாடுகள் எமக்குத் திறந்த வெளி அகதி முகாம்கள்.அல்லது வாடகை நாடுகள்.எமக்கு என்றொரு நாடு தேவையில்லையா.வேண்டாம் என்றால் உங்களைப் போன்றவர்களுக்காக நான் செலவு செய்த நேரம் வீண் !

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 27, 2011

அடங்கிய எழுத்துக்கள்...

உரத்துக் குரலிட்ட
பேனாக்களை
வானரங்கள் உடைத்து
மையை உறிஞ்ச
மௌனித்த செய்திகள்.

யாருமில்லாப் பொழுதில்
அலைகள்
சப்பித் துப்பிய சிப்பிகள்
கீறிப்போயின
கவிதையின் தொங்கல்கள்.

மிஞ்சிய காகிதத்தில்
தொடக்கங்கள்
தொங்கல்களோடு இணைய
இனி ஒருக்காலும்
வரப்போவதில்லை
அந்தப் பேனாக்கள்
செய்திகளிலும்கூட!!!
யுத்தபூமியில் மரணித்த வீரர்களோடு ஆயுதம் ஏந்தாத அத்தனை உயிர்களுகளுக்குமான தினம்தான் இந்த மாவீரர்தினம்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கற்பனை ஒவ்வொரு ஆசை.ஆனால் ஈழத்தமிழருக்கோ ஒருமித்த ஒரே கற்பனை ஒரே ஆசை.உலகத் தமிழர்களுக்கும் விடுதலையை ஊட்டியவர்கள்.அதைத் தந்தவர்களும் இந்தத் தெய்வங்கள்தான்.அவர்களை வணங்கி அவர்வழி நடக்க அவர்களே எங்களுக்கு மன உறுதியையும் தர வேண்டிக்கொள்வோம்.

ஒரு நிகழ்வு சொல்ல ஆசை.

அச்சுவேலி நவக்கிரியைச் சேர்ந்த ஒரு மாணவன் புதிதாக இணைவதற்காக இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் கதைத்து வந்துகொண்டிருந்தார்.இந்த மாணவனை உள்வாங்குவதற்கான ஆரம்ப கதைப்புகள் எல்லாம் முடிந்த ஒருநாள் தலைவர் தானே அந்த மாணவனை சந்திப்பதற்கு நேரம் குறித்து இடமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்தநாளில் அந்த மாணவனும் அவனை அமைப்பில் சேர்ப்பதற்காக கதைத்துக்கொண்டிருக்கும் இயக்க உறுப்பினரும் தலைவரை சந்திக்கிறார்கள்.கதைத்து கொண்டிருக்கும்போது தலைவர் அந்த புதிய மாணவனை பார்த்து கேட்டார்."எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்" என்றார்.

அந்த மாணவனும் "4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்” என்று சொன்னான்.உடனே தலைவர் "இல்லை...இவன் ஒரு வட்டத்தை விட்டுவிட்டான்.40 வருடமும் ஆகும்.400 வருடமும் ஆகலாம்.இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம்.அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்" என்றார்.

திரும்பவும் அந்த மாணவன் கேட்டான் "விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா?"என்று அதற்கு தலைவர் சொன்னார்.

"விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல.விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி,எங்கள் மக்களின் எழுச்சி,சிங்கள தேசத்தின் வீழ்ச்சி,தமிழகத்தின் ஆதரவு,சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்" என்று சொன்னார்.

மறவாத தமிழின் வேட்கையோடு உங்கள் வழி தொடர்வோம் என உறுதி சொல்லி உங்கள் பாதம் விளக்கேற்றித் தொழுகின்றோம்.

"தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்"

ஹேமா(சுவிஸ்)

Friday, November 25, 2011

ஐயா ஐ.நா ஐயாவே...

நீதியற்ற எலும்புகளால்
கோர்த்துக் கட்டிய
வானுயர்ந்த கட்டிடமொன்று
சுவிஸ் ஜெனீவாவில்.

அசையும் கொடியில்
வதைக்கப்பட்ட உயிர்கள்.
ஈழத்துயிர்களை
விதைத்த மேடைமேலொரு
வெ(ட்)டிப்பேச்சுக்கள்
பேசுங்கள்...பேசுங்கள்
பூச்சாண்டி காட்டுங்கள்
ஆவிகள் துரத்திக்
கண் குத்தும் ஒருநாள்.

பதவிப் பயங்கரவாதம்
சிங்களத்தைப் பொத்திக் காக்கின்றீர்
பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்
பத்தாயிரம் முறை கொட்டும் பனியிலும்
கொளுத்தும் வெயிலும் வாசல் நின்று
உயிர்ப்பலியும் தந்தோம்
அன்றொருநாள்.


கருக்கொள்கிறது காலம்
வயிறு பெருக்க பிரசவித்தே ஆவீர்
உண்மைக் குழந்தையை.
உன்னதக் கோட்பாடாம்
உலக சமாதானமாம்
பருந்துகளையும் காத்து
உம்மையும் காக்கும் தீக்கோழியாய்
கோட்டும் சூட்டும் போடும்
வேடுவர் கூட்டத்தோடு
நீரும் எனக்கெப்போதும்
அம்மணமாய்த்தான்.


எம் அழிவை உறுதிப்படுத்த
கள்வனிடமே சாவி கொடுத்தீர்
சுதந்திரமும் அதன் சோகமும்
சொந்தமாய் அனுபவம் உமக்கேதுமில்லை.
தேசமும் மக்களும் அழிவும் அடங்குதலும்
உரிமையும் தேவையும் எங்களுக்கே.

எத்தனை தியாகங்கள்
எத்தனை இழப்புக்கள்
அந்தத் திடல்களில் வளர்ப்போம்
இன்னும் எம் சுதந்திரத் தீயை.
பாதைகளும் பயணங்களும்
மாறுகிறதே தவிர

மறந்து சோரவில்லை
அவன் வழியே எங்கள் எண்ணங்கள்.

வருவீர்....வருவீர்
சந்திக்கவும் சமநிலையென்றும்
சமாதானமென்றும்.
பாடங்கள் சொல்லி
வகுப்பெடுப்போம் அப்போ உமக்கு
சுதந்திரம் பற்றிய
எம் சொந்த அனுபவங்களை!!!

ஹேமா(சுவிஸ்)

ஈழத்திற்காய் உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும் என் தலை சாய்த்த நன்றியும் வணக்கமும் !

Tuesday, November 22, 2011

சுகராகம்...

இதைத்தானே கேட்டுக்கொண்டாய்
பிடித்துக்கொள்
காதலும் நீ...கனலும் நீ...
தோழனாய்க்கூட கைநீட்டக்கூடாத
கல்லுளிமங்கனே....
மறந்திருக்கிறேன் உன்னை
சொற்படி நடக்கிறேனா
என்றாலும்
வெட்டிய வாழையில்
வெடிக்கும் குருத்தாய்
உன் நினைவுகள்.

கருத்த கனவுகளுக்குள்
நினைவுகளைக் கரைக்க
காயங்களுக்கு மருந்து தந்து
விடியலைத் தள்ளி
வெளிச்சமாகிறது நிலவு.

உன் வருகை விளக்கிலேயே
உறங்கிவிடுகிறேன்
என்னோடு நீயும்தான்
இளைப்பாறுகிறாய்
விழிகளும் இதயங்களும்
ஓய்ந்துவிட்டன
காத்திருப்புச் சந்திகளில்.

தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
இருமுனையில் ஒருமுனை
உன்னிடம் என்றறியாமல்.

போருக்குப் போக
ஆயுதமும் உடையும் தந்தபின்
வாளின் கூர்மைபற்றியும்
ஆடையின் அலங்கரிப்பு பற்றியும்
பேசிக்கொண்டு நீ
இடிபாடுகளுக்கிடையில்
எதிரியைக் காணும் ஆவலில் நான்.

நினைவுகளையும் கனவுகளையும்
காலத்தால் சலித்தெடுக்க
மிஞ்சுவதெல்லாம்
அவசியமில்லா
சப்பைக் கற்களும் குப்பைகளுமே
காதலும் கூட.

உன்னைக் காணாத நாட்களெல்லாம்
சூரியனுக்கு விடுமுறை
பூமிக்கு அமாவாசை
பனிக்குளிருக்குள்
ஒற்றை உயிரையும் தொலைத்து
யுகம் துழாவும் நான்
கனவை வரவழைக்க
வெப்பக் கருவியின் துணையோடு.

எத்தனை பொழுதுகள் விடிந்தன
நீ.....
இல்லையென்ற பூபாளத்தோடு

அதே பொழுதுகள் பழக்கித்தரும்
நீ......
இல்லையென்ற முகாரியையும்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 14, 2011

தப்பாகும் தப்புக்கள்...

முறைத்து...முழித்து
செல்லமாய் அடிக்கும்
குழந்தைக்கு திருப்பியடித்து
முரடனாக்கும் அம்மா.

மழலை மொழியில்
சொல்வதெல்லாம் இனிக்குமென்று
தப்பான சொற்களையும்
மழலையாக்கும் அப்பா.

செல்லமாய் தொடங்கி
மெல்லமாய் மெல்லமாய்
முரட்டு குணமும்
எதிர்க்கும் சக்தியும்
கொடுக்கும் உங்களையே
ஒரு நாள் வீழ்த்தும்
மழலை தாண்டிய
அதே குழந்தை!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 08, 2011

நான்...இங்கு...ஏன் ?

யார் நீ...
ஏன் இங்கு...
எங்கிருந்து...
என்று தொடங்கி
தொக்கி நிற்கும்
கேள்விகளோடுதான் இன்றும் !

வருடங்கள் கடந்து
நான்காவது தலைமுறை
நடக்கையிலும்
பார்வைகள் பிறத்தியாகவே !

இருப்பிடம் கேட்டால்
தெருப்பெயர் சொல்வேன்
இல்லை...இல்லை
உன் இருப்பிடம் என்பார்கள்
“இங்கு”தான் என்பேன் குனிந்தபடி !

நடுவில் ஒட்டிக்கொண்ட
நான்.....
நிலையானவர்களிடம்
சொல்லும் “இங்கு”
பிறழ்வாய் இருவருக்குமே !

அவர்களுக்கும் புரியவில்லை.
எனக்கும்...
தெரியவில்லை சொல்ல!!!

அடிக்கடி அடிபடுகிறேன்....ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 01, 2011

இருக்கை...

இயல்பை விடுத்து
இப்போ...
தனக்குத் தொடர்பில்லாத இடத்தில்
பறந்துகொண்டிருக்கலாம்.

நாளை...
நீந்திக்கொண்டும் இருக்கலாம்.

இன்னொரு நாள்...
இடப்புறச் சங்குக்குள்ளும்
ஒளிந்திருக்கலாம்.

பிறகொருதரம்...
பிணங்கள் புதைக்கும்
இடத்திலும் பார்த்ததாகச்
சிலர் சொல்லலாம்.

காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 18, 2011

முகிழ்ப்பு...

red rose love romance 3 pictures, backgrounds and images
அவிழ்த்துவிட்ட கூந்தலுக்குள்
குறுந்தாடி புதைய
ஒற்றைக்குச்சியென
ஒடிந்து கிடந்த தேகத்துள்
பிரியங்களோடு அணைக்கிறது
ஒரு சேகுவேரா டீசேர்ட்.

சந்தன மணம் பரப்பிய
சாதுர்யங்களின் தகிப்பில்
கலந்த மையிருட்டோடு
மெய்தேடிக்களைத்து
முதுகுத் தண்டில்
பனியூற்றும் பயிற்சிக்கு
கணங்களின் நுனியில்
பிரார்த்தனைகள்.

சிகரெட்டின் வாசனைக்குள்
ஈரமுத்தம் சகித்த இதழோடு
குயவன் கையில் களிமண்ணாய்
தேகம் ஒத்துழைக்க
சலிப்பற்றுப்போகிறது முகிழ்ப்பு.

எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!

ஹேமா(சுவிஸ்)
நன்றி உயிரோசை பங்குனி இதழ்.

Thursday, August 11, 2011

கூழாங்கல்...

ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
உருண்டுகொண்டேயிருக்கிறேன்.
குதித்தும் தாவியும்
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை.

உருண்டுகொண்டேயிருப்பதால்
அறுபட்ட சில நிகழ்வுகள்
மாறி மாறி...
இருள் ஒளி கடக்கும் முகடுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள்.

ஓ.....
பாறையில் வேர் விட்ட
சிறுவிதை.
குட்டி மீன்கள்
பெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி
அடியில் ஊடுருவும் விஞ்ஞானம்.

என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!!

ஹேமா(சுவிஸ்)


விடுமுறை விடுமுறை கோடை...பெரிய விடுமுறை.சந்திப்போம் நண்பர்களே !

Tuesday, August 02, 2011

இருள் வழி...

எங்கோ...
போயிருக்கிறது அது
கண்ணைக் கட்டி
இருளுக்குள் விட்டுவிட்டு !

மலையும் ஆறும் கலக்கும்
மிருகங்கள் புணரும்
காடுபோலிருக்கிறது
கண்ணாமூச்சி விளையாடி
கை விட்டுப் போனது யார் இங்கே !

பிந்திய இரவின் முனகலும்
பயந்து ஒதுங்கும் மானை
மயக்க முயலும் துணையுமாய்
விரகத்தின் வேதனையை
நீட்சியாக்கிவிட்டபடி...

மூடித் திறக்கும் கதவுவழி
ஏதேதோ உருவகங்கள்
கற்பனைக் கழிவுகள்...

ஓடிக் களைத்த வீராங்கனையாய்
கண்ணாடி பார்த்து
களிப்படைந்து
உடை மாற்றி
மீண்டும் வந்து
போர்வைக்குள் நுழைகையில்
ஏதோ ஒன்று
குறுக வைக்கிறது என்னையே!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 24, 2011

1983 - 2011 கருப்பு ஆடி...

துண்டித்த தலைகள்கூட
புன்னகை சிந்தின 83ஆடியில்
நான் நினைப்பதுண்டு
"எனக்குண்டான வாழ்விது
என்னை வாழவிடு"
கெஞ்சுவதாக இல்லையா அது.

ஒட்டிய வயிறோடு
உயிர் விட்டிருந்தன
பசியோடு இருந்த
தமிழ்க் குழந்தைகள்
பெற்றவர்களின் கைகளில்.

1953 தொடக்கம்
சிங்கள
ஆட்சிக் கொடியெங்கும்
கொட்டிச் சிதறிக்கிடந்தன
தமிழ் இரத்தம்.

83 ஆடியில்
போதாத
சவப்பெட்டிகளுக்காக
காத்திருக்கவில்லை
தமிழ்ப்பிணங்கள்
தம்மைத் தாமே
அடக்கம் செய்துகொண்டன
கண்களைத் திறந்தபடி.

ஆடி இருளில்
வருடங்கள் கடக்கையிலும்
மெழுகுதிரிப் பொய் ஒளியில்
என்ன கொண்டு வந்தாய்
இந்த வருடத்திலாவது என்றபடி
காத்திருக்கின்றன அவைகள்
கரும்புலிகளையும் சேர்த்துக்கொண்டு.

உங்கள் நினைவு நாளில்
வேண்டுமென்றே வைத்த
உள்ளூராட்சித் தேர்தலில்
வெற்றி தமிழுக்கே
என்று சொல்வதைத் தவிர
இப்போதைக்கு வேறொன்றுமில்லை
பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, July 22, 2011

சொல்லா சாபமா...

சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்...

நீர்த்த உணவுக்குள்
ஒட்டாமலிருக்கும் உணவாய்
தனித்தேயிருப்பதாயும்
நாளைய வெக்கையில்
நசிந்து நாறப்போவதாயும்...

தொலைத்த கணங்களில்
மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
இம்மியளவாவது
இம்சிக்காமல் சாவு வராது என்றும்...

மூலை முடுக்குகளில்
இடுக்களில்
மீனின் செவுளாய்
கண் காணாத சாபங்கள்
உள்ளிருப்பதாயும்...

கோடுகளுக்குள்
நடந்து ஓடிக்கொண்டிருந்தாலும்
பிறழ்வுகளுக்குள்
அகப்பட்டேயாவாய் என்றும்...

சிவப்புச் சட்டைபோட்ட
உன் கருத்த வேண்டுதல்கள்
இப்போ விலகியே இருந்தாலும்
இறுதியில் உன்னுடனே
தொடரும் என்றும்....

இன்னும் இன்னும்...
சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்
பாவியவள்!!

நன்றி உயிரோசை.ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 12, 2011

கூடு...நீ !

காத்திருக்கும் தூரம்
கைக்கு
எட்டக்கூடியதேதான்
கூடும் உன்னதுதான்
என்றாலும்
நீ...
தொடுவதாயில்லை.

ஒற்றைச் சிறகு
முளைத்தபோதும்
பின் பறக்கும்போதும்
கண்டு பிரமிக்கிறாய்
ரசிக்கிறாய்.

கோதுடைத்த அன்றே
கொஞ்சித் தலைகோதி
நட்பாய் அன்னையாய்
ஆசானாய் அன்பாய்
அனைத்துமாய் ஏந்திய
ஒருங்கணைத்த உறவாய்
நீ எனக்கு.

சிறகும் பறத்தலும்
வேண்டியிருக்கவேண்டாம்
உன் சிறகால் கட்டிய கூடே
போதுமாயிருந்திருக்கும்.

இனியும்...
இன்னும்...
காத்திருக்கும் கூடு
என்னோடு கூட
உன்னோடு கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 04, 2011

கவிச்சோலைக்குள் நானும்...


எல்.கே கார்த்திக் அவர்கள் தனது கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம,குறுந்தொகை போன்ற சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை வடிவம் கொடுத்துப் பல பதிவுகள் போட்டிருந்தார்.அதன்பின்னர் போட்டியாகவே எழுதக் கேட்டிருந்தார்.நானும் கலந்துகொண்டேன்.எழுதிய ஏழ்வரில் என் வரிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.மனதிற்கு மிகவும் சந்தோஷம்.அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

பாடல்

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

நான் எழுதிய வரிகள்

சேரன்
எதிர்த்த படை
தேர் காண
பிளிறும் வீரயானை
நீட்டிய தந்தம் நசுக்கும்
வெண்குடை - இங்கு
மதி தவற
மாறித் தெறித்த திங்களென
தூக்கிய தந்தம் தவறாய்!!!


விளக்கம்

"தங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது.அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும்,நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது..."என்பதாம் இச்செய்யுளின் பொருள்.

ஹேமா(சுவிஸ்)

Sunday, June 26, 2011

தமிழ்மண நட்சத்திரமும் நன்றியும்.


மிகவும் சந்தோஷம்.அதேநேரம் தூக்கம் குறைவு.சாப்பாடு இல்லை இப்பிடியே இந்த வாரம் போச்சு.ஆனா மனசுக்கு நிறைவா எனக்கு முடிஞ்சதை எழுதிருக்கேன்னு நினைக்கிறேன்.தொடர் பதிவானதால உங்களுக்கும் கொஞ்சம் என்னால கரைச்சல்தான்.அப்பிடியிருந்தாலும் அலுக்காம வந்து என்னை உற்சாகப்படுத்தின எல்லாருக்கும்......எல்லாருக்கும் அப்புறம் வந்தும் பின்னூட்டம் போடாம ஒளிஞ்சிருந்து பார்த்த எல்லாருக்குமே நன்றி நன்றி நன்றி.

என்னை ஊக்கப்படுத்திய தமிழ்மணத்திற்கும் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.நகைச்சுவைப் பதிவு எழுதவே வராது.எப்படியாவது ஒரு நகைச்சுவப்பதிவு போட்டேயாகவேணும் என்கிற எண்ணத்தில்தான் "கள்ளக்கோழி" என்கிற பதிவு மிகவும் கஸ்டப்பட்டு எழுதினேன்.எழுத வைத்த தமிழ்மணத்திற்கு மீண்டும் நன்றி.இதில் என்னை உசுப்பேத்திவிட்டது நிரூவும் வடையண்ணாவும்.

முதல் நாளிலிருந்து காதல்,ஈழம்,இயற்கை,சமூகம்,நகைச்சுவையெனத் பலதையும் தொட்டு எழுதியிருக்கிறேன்.நட்சத்திரப்பதிவு இன்றோடு நிறைவாகிறது.என்றாலும் என் மனதில் தெறிப்பவைகள் இனியும் எழுத்துக்களாக எண்ணங்களாகத் தொடர்ந்தும் பதிந்துகொண்டுதானிருக்கும்.

இன்று இறுதி நாள் நடசத்திரப்பதிவுக்கு.அவசரமாக இன்று இரவு வீட்டிலிருந்து நன்றி சொல்லிப் பதிவு போடமுடியாததால் விரிவான பதிவாக எழுதமுடிதாமைக்கு வருந்தி இப்போதே நன்றி சொல்லிக்கொள்கிறேன்.ராமலக்ஷ்மி அக்கா முதன்முதல் வாழ்த்து உங்களிடமிருந்தே கிடைத்தது.மனதிற்கு நிறைவாய் நட்சத்திர வாரத்தை நிறைவாக்கி வைக்கிறேன்.மிக்க நன்றி உங்களுக்கு முதலில்.

வேலை மிகுதிக்குள்ளும் எனக்கு ஒவ்வொரு நாளும் வந்து ஓட்டும் போட்டு ஊக்கப்படுத்தியவர்கள் எல்லாருமே என் உறவுகள்.என் நண்பர்கள்.இத்தனை பேரும் என் நண்பர்களா என்று நினைக்கையில் மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன்.இன்னும் நிறையப்பேர் தனிப்படவும் பாராட்டினார்கள்.இன்னும் சிலர் பார்த்து ரசித்ததோடு சரி.ஒரு வார்த்தை வாழ்த்தியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.ஏதோ ஒரு குறையும் இருக்கவேணும்தானே.ஒருசிலரை மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.பரவாயில்லை.எப்போதும் என் உறவுகள்தான் அவர்களும்.

ராமலஷ்மி அக்கா,மேவீ,கலாநேசன்,பலாபட்டறை ஷங்கர்,ஸ்ரீராம்,மைந்தன் சிவா,றமேஸ், ஜோதிஜி,தமிழரசி,நண்டு நொரண்டு,அப்பாஜி அப்பாதுரை,ரதி,ராதாகிருஷ்ணன் ஐயா,காஞ்சனா அம்மா,தமிழ் உதயம்,ரிஷபன்,சமுத்ரா,தவறு,ஆர்.வி.எஸ்,நேசன், சங்கவி,நசரேயன்,சி.பி.செந்தில்குமார்,வேடந்தாங்கல் கருன்,வந்தியத்தேவன், விடிவெள்ளி செண்பகம்,ரியாஸ்,அத்திரி,அம்பிகா,புலவர் ராமாநுசம்,சிநேகிதன் அக்பர், ராஜநடராஜன்,கலா,பாலாஜி,ஜமால்,ஆயில்யன்,உழவன்,கவிதை சௌந்தர்,நிரூபன், மாலதி,திகழ்,ஓட்டைவடை நாராயணன்,கானா பிரபா,ஏஞ்சல்,அன்புடன் அருணா,ஷர்புதீன், சந்ரு,கந்தசாமி,தூயவன்,தமிழன் கறுப்பி,சத்ரியன்,சுந்தரா,மாதேவி,பிரியமுடன் வசந்த், இரா எட்வின்,மீனு,நாஞ்சில் மனோ,விக்கியுலகம்,நிலாமகள்,தினேஸ்குமார்,அரசன், சுந்தர்ஜி,போளூர் தயாநிதி,இராஜேஸ்வரி,செ.சரவணகுமார்,
ஜெரி ஈசானந்தா,தமிழ்ப்பறவை,மதுரை சரவணன்,அம்மாபொண்ணு,நடராசா குணபாலன், தாராபுரத்தான் ஐயா,சே.குமார்,வேலு ஜீ,துஷ்யந்தன்,சிப்பிக்குள் முத்து,அஷோக்,ரத்னவேல் ஐயா,கௌசல்யா,நெடுங்கேணியூர் குமரனார்,முனைவர் இரா குணசீலன்,கவி அழகன், பாரா அண்ணா,மல்லிக்கா,தேனக்கா,இக்பால் செல்வன்,அமைதிச்சாரல்,சிவகுமாரன்,ஜீ, கருணாகரசு,,கார்த்திக் சிதம்பரம்,பிரபு,மோகண்ணா,நேசமித்ரன்,கூடல்பாலா,மகன் தமேஷ், எல்.கே கார்த்திக்,குணசேகரன்,ஜெயம்.......

இன்னும் இன்னும் எல்லாருக்கும் காற்றலையில் கை கோர்த்த என் உறவின் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியும் சந்தோஷமும் !

அன்போடும் நட்போடும் அன்பின் ஹேமா.

இருட்டான சூரியன்...

 

நடுநிசி இரவிலும்
பச்சை மஞ்சள் சிவப்பு விளக்குகளின்
சமிக்ஞைக்காகக் காத்திருக்கும்
வாகனமாய் நான்.
உனக்காக
நிற்கிறேன்
கவனிக்கிறேன்
தொடர்ந்தும்
காதலித்துக்கொண்டே
இறப்பேன்!


எந்த மாதிரியும்
என்னை அலட்சியப்படுத்த
நீ...
துணிந்தே இருக்கிறாய்
பரவாயில்லை விடு
உன்...
முத்த ஒப்பந்தத்திற்காகவே
காத்திருக்கும்
காலம் முழுதும்
என் கன்னம் !


எம் கையில் எதுவுமில்லையென்றேன்
"கையில் ரேகைகூடவா இல்லை"
கிண்டலாய்
சொன்னாய் சிரித்தபடி
நீ பிரிந்தபோதுதான் புரிந்தது
அதிஷ்டமில்லா
வெற்றுரேகையென !


எத்தனை பேசியிருந்தாலும்
காற்றில் கலந்த முத்தங்கள்
இன்னும்...
சில வேறு தவிர
தேடிப்பார்
மிஞ்சியிருப்பது
நான்...நீ
மிச்சம் மிகுதியாய்
நினைவுகள்
போதாதா
சாகும்வரை இது !


செத்துக்கொண்டே இருக்கிறேன்
பேச்சுக்களற்ற பூமியில்
உன்னைச் சந்திக்கிறேன்
இடைவெளி நிரப்பு
மிச்சமிருக்கும் சுவாசமெடு
பிச்சையாய்
ஒற்றை ஈரமுத்தமிடு
இனாமாய் என் உயிரெடு
உயிர்ப்பிக்க அல்ல
இப்போதெல்லாம்
உன்...
உதட்டில் விஷம்!


'கல்லுளி மங்கன்' என்றாய்
இல்லையென்றேன்
நம்பவுமில்லை
கல்லுக்கு
பால் வார்த்திருந்தாலாவது
குடித்து மிஞ்சியதும்
கக்கியிருக்குமோ
அன்பின் மிகுதியை!


தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!


செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 25, 2011

பெண்ணாய் நான்...

தலைமுறை தலைமுறையாய்
தாழ்வாரத்திலும்
வீட்டு முகட்டிலும்
கட்டித்
தொங்கும் மூட்டைகளை
ஒற்றை இரவில்
அவிழ்த்தெறிவது
முடியுமான காரியமில்லை எனக்கு.

முட்டிகளை உடைத்தும்
தலைமுடிகளை அறுத்தும்
நிர்வாணங்களை
அம்பலப்படுத்தியுமான வலிகள்
எங்கள் வளவுகளில்
(காணி)
நிறையவே.

காலத்தின் விந்துகள்
கடல் கடந்து
கலய அடுக்குகள் மாறியபோதும்
உட்சுவர்கள் மாறாமலேயே.

ஒவ்வொன்றும் இறுக்கமாய்
சிலவற்றைத் தளர்த்தியபோதும்
தளர்த்த முயலும் விரல்களுக்குள்
இன்னும் இன்னும்
இறுக்கமாய் இருக்கும்
கோட்பாடுகளும் கலாசாரங்களும்.

தலைமுறை தலைமுறையாய்
கட்டி வைத்த மூட்டை முடிச்சுகளை
அவிழ்க்கவே முடியாமல்
சமூக விலங்குகளோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 24, 2011

கள்ளக் கோழி...

இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு.

ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து
போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.
ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே.

என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...!

சும்மாயிருங்கோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்.

அடி விசரி நீயும் உன்ர கோழிக்கனவும்....!

நீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே.

என்னவாலும் செய்து துலை. இங்க ஆராச்சும் படலை திறந்து வம்பு சண்டைக்கு வராம இருந்தாச் சரி.எப்பதான் நான் சொன்னதைக் கேட்டிருக்கிற நீ.நான் உன்னைக் கட்டி...உன்ர கொப்பருக்கு உதைக்கவேணும்.பாவம் வயசு போட்டுது எண்டுதான் பேசாமலிருக்கிறன்.இல்லாட்டி....

இல்லாட்டி இல்லாட்டி....கோழி பிடிக்கிறதுக்கும் அப்பருக்கும் ஏன் முடி போடுறியள் இப்ப...

அடி போடி கொப்பரை உதச்சு எதுக்கு.கள்ளக்கோழி அமத்திற
ஆக்கள்தானே நீங்கள்.....சரி சரி விடு !


இரண்டு மாசம் போனபிறகு....


ஏனப்பா ஆரெண்டாலும் தேடினவையே அந்தச் சிவப்பியை.சரியப்பா இண்டைக்குப் போய் அவள் சிவப்பியைக் கொண்டு வந்து விடுவமே.எதுக்கும் வேற கலர் பெயிண்ட் அடிச்சுக் கொண்டு வந்து விடுவமேப்பா.

நாசமாப் போக நீ.ஏன் அதைச் சாகடிக்கச் சொல்றியே.அதுக்குத்தானே அண்டைக்கே
சொன்னனான் சட்டிக்க வைப்பமெண்டு.

ஏனப்பா பெயிண்ட் அடிச்சா என்ன.எங்கட புதுக்கோழியெண்டு
சொல்லலாமெல்லோ.உங்களுக்கு அறிவே இல்லையப்பா....

ஓமடி....ஓமடி உனக்கு நிறைஞ்சு வழியுது அறிவு.சும்மா கலர் அடிச்சா மழையில கழுவுப்பட்டுப் போகாதே.சரி கழுப்படாத பெயிண்ட் எண்டா கோழியிண்ட றெக்கை (இறகு) ஒட்டிக்கொள்ளுமெல்லே.

ஓம் எனக்கு விசர்தான்.எனக்கு யோசிக்க வரேல்லத்தானப்பா.சரி பின்னப் போய் கொண்டு வாங்கோ.அதை இப்ப அடையாளம் கண்டு பிடிக்க மாட்டினம்.அது வளந்திட்டுதப்பா.


கோழி கொண்டு வந்துவிட்ட கொஞ்ச நாளான பிறகு பிறகு....


இஞ்சாருங்கோப்பா....எங்கட சிவப்பியக் கவனிச்சீங்களே.உந்த வெள்ளடியன் சிவப்பிட்ட இங்க வருமெண்டு பாத்தா சிவப்பிய மெல்ல மெல்ல தன்ர வீட்டையெல்லே கொண்டு போய்ச் சேர்க்குது.ஒருக்கா அவையளிட்ட சொல்லி இஞ்சால கலைச்சுக்கொண்டு வாங்கோப்பா.நல்ல வடிவா வந்திட்டுது.நான் போய்க்கலைக்க என்னை உச்சுக் காட்டுது.இப்பிடியே அங்க பழகிட்டுது எண்டா அங்கயெல்லே முட்டை போடப்போகுது.நானும்
அடை வைக்கவெண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறன்.

ஓமடியப்பா நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்.இப்பெல்லாம் அங்கதான் மினக்கெடுது எடுபட்டுப் போகப்போகுது.எவ்வளவு கஸ்டப்பட்டு சாப்பாடும் போட்டு
வளத்துக்கொண்டு வாறம்.ஆனா ஒண்டு இந்தச் சாட்டில உன்ர கொம்மாவும் கொப்பரும் ஒரு கணக்கு ஒதுக்கிப் போட்டினம் இருக்கட்டும் அவையள்.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.என்னையும் கள்ளக்கோழி மாதிரியெல்லே அமுக்கிப் பிடிச்சனியள்.

ஓஓ...பெடிக்கும் கல்யாணம் செய்து குடுக்கப் போறம்.இப்பத்தான் உங்கட செருக்குக் கதை.வாயை மூடிக்கொண்டு கோழியைக்கலைச்சுக்கொண்டு வாருங்கோ முதல்ல.தம்பி அடுத்தமாசமளவில வாறனெண்டு சொன்னவனப்பா போன்ல.நான் சொல்ல மறந்திட்டன்.வந்தா இனி கொழும்புப் பக்கத்துக்கு விடாம இஞ்சனைக்க ஒரு வேலையப் பாத்துக்கொண்டு இருக்கச் சொல்லவேணும்.

எப்ப எடுத்தவன் தம்பி.எப்ப வாறானாம்.உது சரிவராது.இரு பிடிச்சுக்கொண்டு வாறன்.ஆக மிஞ்சிப்போச்சுதெண்டா தம்பி வந்து நிக்கேக்க கையைக் காலை முறிச்சுச் சட்டிக்கதான் வைக்கவேணும்.

இஞ்சப்பா கொதி வரப்பண்ணாதேங்கோ.சும்மா கறி...சட்டி எண்டுகொண்டிருக்காம போய்த் துரத்திக்கொண்டு வாங்கோ.

போய்க் கொஞ்ச நேரத்தில திரும்பி வாறார்....


இஞ்சாரப்பா....அங்க எங்க காணேல்ல சிவப்பியை.வெள்ளடி மட்டும்தான் நிக்குது.
வெங்காயமடி நீ...சொல்லச் சொல்லக் கேக்கேல்ல.அவளவை சட்டிக்க வச்சுப்போட்டாளவைபோல.இப்ப எனக்கும் இல்ல உனக்கும் இல்ல.....

என்னப்பா சொல்றியள்.நானும் 2-3 நாளாக் கவனிக்கேல்லத்தான் நானும்.கோதாரி போக அவளவை.வயிறு அவிஞ்சு கொள்ளையில போக.பாப்பம் இண்டைக்கு பொழுதுபட அடைய வருதோவெண்டு.


கோழி இரவாகியும் வரேல்ல மரத்தில அடைய. .....


அடுத்த நாள்...உந்தக் கோடாலி எங்கயப்பா.உந்த முருங்கை மரத்தை வெட்டிச் சரிக்கிறன்.பாவங்களெண்டுதான் விட்டு வச்சனான்.முழுக்கொப்பும் இஞ்சாலதான் சரிஞ்சு கிடக்கு.அவ்வளவு குப்பையும் நாங்கள் நித்தமும் கூட்டி அள்ளுறம்.அங்கனேக்க ஒண்டிரண்டு முருங்கக்காயைத் தானே நாங்கள் பிடுங்கிறம்.கீரையும் எப்பாலும் ஒடிச்சு எடுக்கிறம்.அவளவை எங்கட முழுக்கோழியையே திண்டு போட்டாளவையே.

சும்மா இரடி லூசி.....என்ன என்ன எங்கட கோழியோ....நல்ல பகிடிதான்.உந்த முருங்கை மரம் மாமரத்தால எங்களுக்கு எவ்வளவு லாபம்.இரவில கோழிகள் 2 அதிலதான் அடையுது.இரவோடஇரவா எவ்வளவு மாங்காயை பிடுங்கி வித்தனி.உதுகளை விட்டு
வச்சிருக்கிறபடியால்தான் எங்கட 2 தென்னைமரத்தை விட்டு வச்சிருக்கிறாள் சுமதி.தேங்காய் அவைன்ர கிணத்துக்கையெல்லே அடிக்கடி விழுது.எத்தனை தரம் சொல்லிப்போட்டு விட்டு வச்சிருக்கிறாள்.கோழியைக் காணேல்லயெண்ட கவலை எனக்கு மட்டும் இல்லையே.


பொறுங்கோ பொறுங்கோ நான் கண்டு பிடிக்கிறன் கள்ளரை.நாசம் விழ அவையளின்ர தலையில.நாளைக்கே போய் சாத்திரம் கேக்கிறன்.

மண்டைக்க சரக்கேதாலும் கிடக்கே உனக்கு.நல்லாப் போய்க் கேளு.எங்கப்பன் கொல்லைல இல்லயெண்டு சொல்ற மாதிரி கள்ளி நீதான் எண்டு சாத்திரி சொல்லும்.
ஏனெண்டா கோழி எங்கடையில்லை.சும்மா கிடவடி.

இல்லையப்பா உவையளை விடப்படாது.கள்ளர்கூட்டம்.பாருங்கோவன் சரியாக் கண்டுபிடிச்சணெண்டா செய்வினை செய்து கையை அழுகப்பண்ணாட்டி நான் ...நான் இல்லை.சொல்லிப்போட்டன்.

எடி விசரி...எப்பிடியடி கண்டு பிடிப்ப.சும்மா புலம்பாதை.எங்களிட்ட தானா வந்த கோழிதானே.விடு.அவளவை கோழி இறக்கையைக்கூட குப்பையோட குப்பையா எரிச்சுக் கொளுத்தியிருப்பாளவை.அவையளை நான் வேற வழியால சரிப்படுத்துறன்.

உந்தக் கோழியின்ர யோசனைல வந்த கடிதத்தையும் மறந்திட்டன்.இந்தாப்பா தம்பியின்ர எழுத்துப்போல கிடக்கு.ஏன் போன் எடுக்காம கடிதம் போட்டிருக்கிறான்.

அதப்பா நான் அண்டைக்க்குக் கதைக்கேக்க இப்ப கிட்டடியில எடுத்த
போட்டோவொண்டு அனுப்பச் சொல்லிக் கேட்டனான்.அதாத்தான் இருக்கும்.இஞ்ச தாங்கோ.

அன்புள்ள அம்மாவுக்கு சுகம் சுகம்தானே.இன்னும் இரண்டு கிழமைல வாறன் உங்க.அம்மா அப்பா கொழும்பில இருந்து என்ன வாங்கிக்கொண்டு வரவேணும் நான்.சொல்லுங்கோ.கொண்டு வாறன். நானும் சாமான்கள் வாங்கி வச்சிருக்கிறன்.
அப்பாவுக்கு ஒரு போனும்கூட.அம்மாவுக்கு கிரண்டரும் புது மொடல்ல.

அம்மா உங்களிட்ட நான் ஒண்டு சொல்லவேணும்.அம்மா நீங்கள் எனக்குக் கல்யாணம் பேசவெண்டு சொன்னியள்.நான் சொல்லப்போறதைக் கேட்டு கொஞ்சம் மனவருத்தம் உங்களுக்கு வரலாம்.அம்மா நான் இங்க ஒரு பிள்ளையக் காதலிக்கிறன் கொஞ்சக் காலமா.அவளைத்தான் கல்யாணம் செய்யவெண்டு சத்தியம் பண்ணிப்போட்டன்.நான் வரேக்க கூட்டிக்கொண்டு வாறன்.நல்ல வடிவாயிருப்பளம்மா.பழகிப் பாத்திங்களெண்டா உங்களுக்கும் பிடிக்கும் அவளை.திடீரெண்டு கூட்டிக்கொண்டு வந்தா உங்களுக்கு அதிர்ச்சியாப்போடும் எண்டுதான் இப்பவே சொல்றன்.ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.

சரியாப்போச்சு....தலையில இடி விழுகிறமாதிரி உவன் என்ன எழுதிருக்கிறான் எண்டு பாருங்கோப்பா.வீடு வாசல் நகை நட்டெண்டு நான் நல்ல சீதனத்தோட இஞ்ச கல்யாணம் பேசிக்கோண்டு தரகர்மாருக்கும் அள்ளிக்குடுத்துக்கொண்டு திரியிறன்.
நாசமா போறன் எண்டு உந்தப் பெடி என்ன சொல்லுதெண்டு.

உதுக்குத்தான் சொன்னனான் கொழும்புப் பக்கம் அனுப்பாதயெண்டு.உனக்கு எல்லாத்திலயும் பேராசை.நல்ல சம்பளம் நல்ல வேலையெண்டு ஒற்றைக்காலில அவனோட ஒத்துப்பாடிக்கொண்டு அனுப்பின.அனுபவி.உதுக்கு நான் என்ன சொல்லக் கிடக்கு. எவளைக் கூட்டிக்கொண்டு வாறானோ.பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ.சரி கோழி துலைஞ்சமாதிரி திரும்பி எங்களிட்டயாவது வாறானே.அதுவே போதும் சந்தோஷம்.விடு.


அடுத்த பதினைஞ்சு நாள் போக...


தம்பி இண்டைகெல்லேப்பா வாறனெண்டவன்.சரி அவனுக்குப் பிடிச்சதாச் சமை.இப்ப என்ன அவன் அவளாரோ ஒருத்தியையும் கூட்டிக்கொண்டுவாறான்.கதைச்சுப் பாப்பம்.புலம்பாமச் சமை அவன் வந்திடுவான்.மெல்ல மெல்ல மாத்திப்போடலாம் அவனை.


சமையல் நடந்துகொண்டிக்கும்போதே ஒரு ஆட்டோ வந்து நிக்குது.....


இஞ்சப்பா தம்பி வந்திட்டான் போல.இந்த அடுப்பை பாத்துக்கொளுங்கோ.சீலையச் சுத்துக்கொண்டு ஓடி வாறன்.சொன்னதைவிட நேரத்துக்கு வந்திடான்போல.வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு வாங்கோ.உங்க பக்கமெல்லாம் விடுப்புப் பாக்கும் சனம்.

ஆட்டோவிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் மகன் தன் ஒன்றரை வயதுக் குழந்தையோடு வந்து இறங்குகிறான்.வந்த மகனோடு பேசிச் சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கேக்க சிவப்பியும் 6 குஞ்சுகளோட வேலி நுழைஞ்சு வளவுக்குள்ள வந்துகொண்டிருக்குது.

ஏதோ என்னால.....இவ்வளவுதான் நகைச்சுவை முடியுது !

கதையின் சுருக்கம்....

புதுசாய் ஒரு கோழி எப்பவும் எங்கள் வீட்டில உலவுது.ஒரு கிழமைக்குப் பிறகு வீட்டுக்காரம்மா சொல்றா கோழியொன்று புதுசா எங்கள் கோழிகளோடு உலவுது.இடம் பெயர்ந்தவர்களின் கோழியாக இருக்கலாம்.இன்னும் 2-3 நாள் பார்த்துவிட்டு எங்கள் அம்மா வீட்டில் கொண்டு போய்விட்டு வருவோம். வளர்ந்தபிறகு கொண்டுவரலாம்.பக்கத்துவீட்ல நல்ல இனச் சேவல் ஒன்று நிற்குது.அதன் பரம்பரை எங்கள் வீட்லயும் வேணும்.பக்கத்துவீட்டுக்காரம்மா அவங்க வீட்ல ஒரு முட்டை அடை வைக்கக் கேட்டுக் குடுக்கல.அதனால இந்தக் கோழியோடு இணைந்தால்....கற்பனை.வீட்டுக்காரர் அடிச்சுச் சமைக்க நினைக்கிறார்.அவ இல்லைன்னு அவங்க அம்மா வீட்ல கொண்டு விட்டு 2 மாசம் கழிச்சு கொண்டு வந்து விடறா.

சேவல் இங்க வரும்ன்னு பாத்தா சிவப்பிதான் அங்க போய் எப்பவும் நிக்குது.திடீர்ன்னு ஒருநாள் சிவப்பியைக் காணோம்.ஊர்ல எங்க வீட்டு மரம் அடுத்தவீட்ல தலை நீட்டினா....சண்டைதானே.கோழி தொலஞ்சதில சின்னதா அதிலயும் குழப்பம்.முருங்கை மரம் மாமரம் இவங்கவீட்ல தலை நீட்டுது.இவங்க அதில களவாயும் தெரிஞ்சும் பயன் எடுத்துக்கிறாங்க.இவங்க தென்னை மரம் அவங்க கிணத்தை அசுத்தப்படுத்துது.

கோழியை அவங்கதான் பிடிச்சு சமைச்சிருப்பாங்கன்னு சந்தேகப்பட்டு இந்தப் பக்கம் வரும் கொப்புகளை வெட்ட வெளிக்கிட்டு அப்புறம் தென்னை மரத்தை நினைச்சிட்டு விட்டு வைக்கிறாங்க.சாத்திரம் கேட்க நினைச்சிட்டுப் போகல.காரணம் சாத்திரி இவங்க்ளையே கள்ளர்ன்னு சொல்லிடுவார்ன்னு பயம்.

இப்பிடியிருக்கும்போது கொழும்பிலிருக்கும் மகன் தான் ஒரு பெண்னைக் காதலிப்பதயும் கூட்டிக்கொண்டு வந்து காட்டிப் பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்கப்போவதாயும் திடீரென்று வந்தால் அதிர்ந்துபோவார்கள் என்று போனிலயும் சொல்லமுடியாமல் கடிதம் போட்டிருக்கார்.

திட்டிக்கொண்டாலும் மகனின் வரவை எதிர்பார்த்திருக்கார்கள்.மகனும் வந்தார்.ஒரு வெள்ளைக்காரப்பெண் ஒரு குழந்தையுடனும்.அதே நேரம் சிவப்பியும் 6 குஞ்சுகளோடு வளவுக்குள் நுழைகிறது.கிராமப் பக்கங்களில் பற்றைகளுக்குள் கோழிகள் அடை காத்துக் குஞ்சுகளோடு வருவதுண்டு.அந்த 21 நாட்களும் சில வீடுகளில் சந்தேகத்தால் பக்கது வீட்டிக் காரர்களோடு பெரிய சண்டையே நடக்கும்.கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.சரியோ.......யோயோயோயோயோ !


ஹேமா(சுவிஸ்)

Thursday, June 23, 2011

மனப்பிறழ்வு...

பிடிப்பில்லை
பொறுப்பில்லை
வெறுப்பைக்
குத்தகைக்கு எடுத்திருப்பதாய்
குற்றச்சாட்டுகள் நீட்டமாய் !

சிலுவை இரத்தம்
தேடும் மனிதர்களாய்
ஒற்றைக் கன்னத்துக் கண்டலோடு
நேர்மையாய்
மறுகன்னம் காட்டினாலும்
கை நீட்டி
அடிக்க முனையும் இவர்கள் !

பொய் சொல்லி
கழுத்தறுத்து
சூதின் நாக்குகளைச் சுழற்றியபடியே
வெள்ளாடுகளை
வெட்டியும் தின்றும்
குருதிக் குளியளில்
ஆவி பிடித்தும்
ஒன்றை இரண்டாக்கியும்
நாலைத் துண்டாக்கியும் தின்னும்
மானிட மிருகங்களாய் இவர்கள் !

கவனியுங்கள்.....
கரு நுழைந்து
கொஞ்சும் குழந்தையின்
பிஞ்சு விரல் பிடித்து விளையாடும்
கடவுளாய் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, June 22, 2011

மரத்த மனிதன்...

கட்டை வண்டி
கட்டையால் காலணி
மனிதர்கள் காலமிருந்தே
நானறிவேன் உலகை
பேச வையுங்களேன் என்னை
பழங்கதைகள் சொல்வேன்.

முளை கட்டினேன்
எச்சத்தில்தான்
ஒதுங்கிய பறவைகளும்
மனிதர்களும்
எனக்குள் எண்ணில் இல்லை
இப்போ மண்ணிலும் இல்லை.

வயது ஏறி
வைரமாய் இறுகினாலும்
பயத்தால் வெறுத்து
வேர்களின் கேள்விகளும்
இறுக்கிய விழுதுகளுமாய்
வயதை எண்ணியே
நாட்கள் கழிந்தபடி.

மரத்த மனிதன்
இற்று இறந்த மனிதம்
கட்டிடக் காட்டுக்குள்ளேயே
கழிவிறக்கும் வேடுவன்
வானைத் தோண்டி
மண்ணைத் துளைத்து
மருந்தில் உயிர் வாழ்பவன்.
காற்றெங்கும் நஞ்சு
பயமாயிருக்கிறது
சுவாசிக்ககூட.

தற்காலிகமாவோ
நிரந்தரமாகவோ
என்னை நகர்த்தி
இடம் பெயரப் பார்க்கிறேன்
முடியவில்லை.

திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றானாலும்
நான் வாழமுடியாத தேசமாலும்
தங்கப்போகிறேன்
வரலாம் அங்கும் என்னைத் தகர்க்க.

மனிதனின் அக்கிரமத்தால்
பாரமாயிருக்கின்றன
இலைகள் கூட இப்போ!!!ஹேமா(சுவிஸ்)

Tuesday, June 21, 2011

காதலின் கருப்பிக்கு...அன்பின் கருப்பிக்கு....

"வெறும் நட்பல்ல இந்த உறவெல்லாம் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்...!"

நினைவிருக்கிறதா இந்த சொற்றொடர் ?கொஞ்ச வருடத்திற்கு முன்னால் நீ எனக்கு அனுப்பியிருந்த முதல் மின்னஞ்சலில் இப்படி எழுதியிருந்தாய்.

இத்தனை காலத்தில் தோழியாய் காதலியாய் மனைவியாய்.... எத்தனை பதவிகளை அடைந்து விட்டாய்!நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.நாம் எப்படி அறிமுகமானோம் என்பது நினைவில் இல்லை.உனக்கு நினைவிருக்கிறதா? இருந்தால் பகிர்ந்துக்கொள்.

31.05.00 அன்று எனக்கு முதல் மின்னஞ்சல் அனுப்பியிருந்தாய்.நாம் பழகிய ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில் 31.05.00 அன்று அத்தனை நிகழ்வுகளையும் நினைவு படுத்தி காதோரம் பேசி மகிழ வேண்டுமென்று கடந்த பல நாட்களாய் திட்டமிட்டிருந்தேன்....ஆனால் அன்றைய தினம் வேலை மிகுதியால் முடியாமல் போய்விட்டது.

31.05.00 அன்றைய தினத்தைப் பற்றி என்றாவது நீ சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? இருக்காது.அன்றிலிந்து உனக்கு எவ்வளவு அறிவுரைச் சொல்லியிருப்பேன்.உனக்கு ஈழமக்களைப் பற்றி எண்ணியே நேரமும் வாழ்வும் கரைந்துப் போய்க்கொண்டிருக்கிறது. தனக்கான வாழ்வும் வேண்டும் என்பதில் அக்கறையே சிறிதுமில்லை உனக்கு. ஒருவேளை இப்போதே ஈழம் சுதந்திரம் அடைந்துவிட்டால் அதை அனுபவிக்க "ஈழமண்ணில்" உன் வாரிசு ஒன்று வேண்டாமா? அல்லது ஈழச்சுதந்திரம் நாள் தள்ளிப் போவதென்றால் ஈழத்துக்காகப் போராட உன் வாரிசு ஒன்று வேண்டாமா ?

ஒரு விடயத்தை உனக்குத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.உன் தனிப்பட்ட விருப்பங்களை உலகில் எந்த ஆணாலும் நிவர்த்திக்க முடியாது.இதுவரை உலகில் அப்படி ஒருவன் தோன்றவேயில்லை.இனிமேலும் தோன்றப்போவதுமில்லை.

உண்மையில் ஈழத்தை நீ நேசிப்பவள் என்றால் மழலைகளைப் பெற்றெடு.எனக்கும் கொடு.அப்போதுதான் ஈழத்துக்காக நீ செய்ய விரும்பும் தியாகம் நிறைவேறும்.

எப்பொழுது உனக்கு ஓய்வு (விடுப்பு) நாள் என தெரியப்படுத்து.இன்னும் பேசலாம் காதோரம் நிறைய.

உன் அன்பு வீரன்.
என் தோள் தொட்டணைத்த என் வீரனுக்கு.....
சுகம் சுகம்தானே.நித்தமும் காதோரம் சுகம் கேட்டாலும் கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது !

ஈழம் என் முதல் காதலன்.நீங்கள் என் கணவர்.உங்களை வணங்குகிறேன்.ஈழத்தைப் பூஜிக்கிறேன்.உயிர் உங்களிடம்.மூச்சு தாய்மண்ணிடம்.உங்களின் ஆசைகள் பற்றிக் கதைத்தால் வாதங்கள் பிடிவாதங்களுக்குள் திணறும்.வேண்டாம்.சில நினைவுகளை மீட்டெடுத்து உங்கள் காதில் மீட்டவா இன்று !

அன்றைய தீபத் திருநாள் ஞாபகமிருக்கிறதா.அகல்விளக்கு நிரைகளில் ஒற்றை விளக்கின் திரிதூண்ட நான் குனிய என் முகத்தடியில் திரண்டு கருத்த வைரமென உங்கள் பாதம் பூமி நிரப்ப நிமிர்ந்த என் கண்ணுக்குள் தந்தம் கடைந்த அற்புத உருவம் மயக்கமாய்.அன்றைக்குப் பிறகு இன்னும் சுயமாய் நானில்லை !

பின்னொருநாளில் சொல்லியிருந்தேன்.மங்கிய மாலையில் முகர்ந்து பார்க்க மஞ்சள் பூக்களை நிறையவே பிடிக்குமென்று.மறக்காத நீங்கள் கைகள் அள்ளிய சிவப்பும் மஞ்சளுமாய் கொட்டாத மகரந்தத்தோடு முந்தானை விலக்கி மூச்சு முட்ட முட்ட முழுவதுமாய் தலை தொட்டுப் பாதம்வரை மகரந்தப் பொடி தடவி...முங்கி எழ வைத்து இன்னும் தரவா என்றீர்கள் இருபொருள்பட.இல்லை....இன்றிலிருந்து மஞ்சள் மாதுளம் பூக்களை விரும்பப்போவதில்லை.என் உடல் நனைக்குமளவிற்கு பூக்களைப் பறித்தால் பழங்களை அழித்த பாவியாகிவிடுவேன் என்றேன்.அடி போடி மஞ்சள் இதழ்கள் மரத்திலிருப்பதைவிட உன் மார்பிலிருப்பதே அழகென்றீர்கள்.உதடு பிதுக்கி அழகு காட்ட அங்குமொரு ஒற்றை இதழ் செருகி முள்ளில்லா மாதுளை மரமொன்றில் மூவிதழ் பூவொன்று... பாட்டும்பாட... முழித்தேன்.....சிரித்தீர்கள் !

இன்னுமொன்று.....

கைகாட்டி வேம்பும் ஞான வைரவரும் ஒளித்திருந்து பார்க்க இறுக்கிய முத்தத்தில் காற்றடிக்க வேம்பின் கிளையும் ஒடிந்து பக்கம் விழ வேப்பம்பூவின் வாசனையோடு உங்கள் தோள் சரிந்திருந்தேன்.மெலிதாய்க் கேட்டீர்கள் பிடிக்கிறதாவென்று.ம்.... என்றேன்...சரிதான் மற்றுமொரு இரவில் பரப்பிய வேப்பம்பூப் படுக்கையில் பூக்களோடு என்னையும் சேர்த்துக்கொண்டே இப்போதும் பிடிக்கிறதாவெனக் கேட்க...அப்போதும் முழித்தேன் அள்ளியெடுத்து அணைத்தபடி "கள்ளி என்னையும்தான் கேட்டேனடி..." என்றீர்கள்.பூக்களோடு உங்களையும் பிடிக்குமென்று இன்றுவரை சொல்லவேயில்லை நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 20, 2011

நட்சத்திர வாரம்...

வணக்கம் வணக்கம் தமிழ்மணத்திற்கும் சுற்றி வரும் நட்பின் வட்டங்களுக்கும்.
இன்றுமுதல் தமிழ்மண நட்சத்திரமென்றார்கள்.என்னைப்பற்றியும் சொல்லச் சொன்னார்கள்.நான் யார்.உண்மையில் தடுமாறித்தான் நிற்கிறேன்.ஈழம் என் தேசமென்றார்கள்.நானோ சுவிஸ்ல் அகதித் தமிழிச்சியாய் அடிமைப்படாமல் சுதந்திரமாய் ஆனால் எல்லாம் இருப்பவளாயும் அதேசமயம் எதுவுமே இல்லாதவளாயும்.

அறிமுகமென்று ஒருமுகம் எனக்கில்லை.நான் ஹேமவதி.ஈழத்தமிழச்சி.சுவிஸ்ல் 13 வருடகாலமாக அகதியாய் வாழ்கிறேன்.உயிர்காக்க என்னை மாற்றி.......வாழ்கையையே மாற்றிவிட்டார்கள் பெற்றவர்கள்.ஆரம்பகாலத்தில் இலண்டன் ஐபிசி வானொலிக்காக ஹேமா(சுவிஸ்) என்று எழுதத் தொடங்கி மனதில் பட்டதை இன்றுவரை மனச்சுத்தியுடன் பொய்யற்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.என் மனம் அமைதியடைகிறது.அல்லது எவரையோ அமைதிப்படுத்துகிறது.நேர்மையான விமர்சனங்களால் ஊக்கப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர்களால் இன்னும் கைபிடித்து அழைத்துச் செல்லும் குழந்தை நிலா.உப்புமடச்சந்தி என் தளங்கள்.

என் ஊரின் சந்தி பெயர்தான் உப்புமடச்சந்தி.இன்றும் நான் அளைந்த புழுதி எனக்காகக் காத்திருப்பதாக அப்பா சொல்கிறார்.புழுதிக்கும் போருக்கும் பயந்து ஓடி வந்த கோழை நான்.என் தேசத்து உண்மைகள் போல அநாதை நான் இப்போ.ஆதரவற்றதெல்லாம் அநாதைதான்.அந்த வகையில் என் தேசத்து உண்மைகளும் நானும்.

4 வருடங்களாக கொஞ்சம் ஏதோ எழுதுகிறேன்.ஆரம்ப எழுத்துக்களை விட இன்றைய எழுத்துக்கள் வளர்ந்து ஓரளவு நிறைவைத் தருவது போலவும் உணர்கிறேன்.என் வீட்டில் யாரும் எழுத்தாளர்கள் இல்லை.அப்பா ஒரு பாடசாலை அதிபர்.நிறையவே வாசிப்பின் பக்கம் இருப்பவர்.அவரின் பழக்கம் மட்டும் என்னிடமிருக்கிறது.பெரிதாக என்னை ஊக்கப்படுத்த யாருமில்லை.அப்பா கொஞ்சம் ரசித்து விமர்சிப்பார்.மற்றவர்கள் பார்ப்பார்கள்.
ம்ம்...நல்லாயிருக்கு என்பார்கள்.அவ்வளவுதான்.

சுற்றியிருக்கும் நண்பர்கள்தான் என்னை வளர்ப்பவர்கள்.மனதின் உணர்வுகளை வெளியில் கொட்ட நினைக்கிறேன்.இதில் புதுக்கவிதை மரபுக்கவிதை இலக்கியம் எதுகை மோனை தாண்டி கண்ணில் பேச்சில் தெறிக்கும் என் ஆவேசத்தை எழுத நினைக்கிறேன்.சில கவிதைகளுக்கு என் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு என் ஆத்மாவைச் சந்தோஷப்பட வைக்கும்.அதேபோல அவர்கள் காட்டும் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் என்னிடமுண்டு.

என் கவிதைகளின் கருவும் பொருளும் நானேதான்.என் மண்ணும் அங்கு கை விட்டுப்போன வாழ்வுமே என்னை எழுத வைக்கும் கருவிகள்.என் சில எழுத்துக்களை ஆவணப் பதிப்புக்களாகவே நான் நினைக்கிறேன்.நாம் ஏன் துரத்தப்பட்டோம்.ஏன் அகதித் தமிழரானோம்.என்ன கேட்டோம்.எதைக் கேட்கிறோம்.ஏன் உயிரோடு கொல்லப்பட்டோம் ஏன் மூச்சோடு புதைக்கப்பட்டோம்.இது போன்ற சின்னச் சின்னக் கேள்விகளால் நிறைந்த கேள்விகள் நிறைந்த ஈழத்தமிழன் வாழ்வை நம் எதிர்காலமும் தெரிந்துகொள்ள ஒரு சின்னத் தளம்.என் மண்ணில்தான் என் சுவாசம்.மண்ணைத்தான் காதலிக்கிறேன்.நேசிக்கிறேன்.

மண்ணோடு வாழ்வும் வானோடு அகதிவாழ்வும்தான் வாத்தியார் எனக்கு !தாய் மண்...

கவிகள் காவி வரும் காற்றே
கனத்த மனங்களையும் சுமந்து செல்
ஒரு கணம் என் தாய் தேசம்
என் தாய் கண்டு பதில் கொண்டு வா.

என்னை அகதியாய்
தொலைத்துவிட்டு கலைத்துவிட்டு
கவலையோடு தனிமையாய்
என் தாயவள் ஈழத்தில்
அம்மா...அம்மா
உன்னையும் என் மண்ணையும் பிரிந்து
ஏதிலியாய் நான் இங்கு.
உன் மடி தாங்குமா
இன்னும் ஒரு முறை என்னை.

சுட்ட பிணம் பாதியில்
விட்டெழும்பித் திரிவதாய் ஒரு வாழ்வு.
அளைந்து விளையாடிய மண்
அலசித் தலை கழுவி விடுவாயா
சுவாசித்த தாய் மண்ணும்
சுவாசம் தந்த உன்னையும்
தவறவிட்ட குழந்தையாய் நான்.

நிலவின் வெளிச்சத்தில்
மணல் கும்பலில் விளையாடியிருக்க
மொட்டவிழ்ந்த மல்லிகை மாலை சூட்டி
அழகு பார்த்த காலங்களை
கவர்ந்த கள்வர் யார் அம்மா.
பள்ளியால் திரும்பும் என்னை
அள்ளியெடுத்துக்
காக்கைக்கும் குருவிக்கும்
அணிலுக்கும் எனக்குமாய்
பாட்டிக் கதையோடு பராக்குக் காட்டி
உணவு ஊட்டிய
கணத்தைப் பறித்தவர் யார் அம்மா.

நித்தமும் சுற்றியெரியும்
நெருப்பும் கொலையும் கூக்குரலும்
ஞாபகப் படுத்துகிறது
நீ சொன்ன பழைய ராஜாக்கள் கதையை.
இசையும் இன்பமுமாய்
எப்படித்தான் வாழ்ந்தாலும்
அம்மா உன் பாத(ச)ம் தேடியே
மனம் அலைந்த படி
களைத்த கண்களுக்குள்
அகதித் தூக்கம் வரும் வரை.

என்றோ ஒரு நாள் மீண்டும் உன் மடி மீது
என் மண்ணின் புது மணத்தோடு புரண்டு எழும்பி
பனங்கிழங்கும் பனாட்டு ரொட்டியும் பங்கிட்டு
கிணற்றுக் கட்டுக்குள் கால் தொங்க
தங்கமணி அக்காவோடு
கதை பேச வேணும் அம்மா.

ஏதோ ஒரு தேசத்தில் என் உயிர் பிரியுமுன்
ஒரே ஒரு முறை உன்னையும்
என் மண்ணையும்
எனக்குள் நிறைவாய் நிறைத்துக் கொள்ள
எப்போது...எப்போது...அம்மா எப்போது !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 18, 2011

நிலாக் கவிதைகள்...

"கார்ட்டூன் பார்த்தது போதும்"
பதுங்கிக்கொண்டாள் சத்தம் கேட்டு
போர்வைக்குள் நிலா.

சுவரில் மாட்டியிருக்கும்
மூன்று குழந்தைகளும்
அவளும் இப்போ தனித்தில்லை
நிரப்புகிறாள் இருட்டறையை
காப்பகத்துச் சினேகிதர்களின்
பெயர்களாலேயே.

அம்மாவாய் அக்காவாய்
தங்கையாய் மாறியவள்
கதை சொல்லி
அழத் தொடங்குகிறாள்
விம்மி விம்மி.

ஓ...
கார்ட்டூனில் இறந்த குஞ்சுப் பறவை
வேறென்ன செய்ய முடியும் அவளால்
ஒரு அம்மாவாய்
ஒரு பெண்ணாய்!!!
நீலச் சிங்கம்
சிவப்பு பூனை
பச்சை நாய்
வெள்ளைப் பாம்பு
குளிக்க வச்சு
உடுப்புப் போட்டு
சாப்பாடு கொடுத்து
களைத்துவிட்டாள் நிலா.

டோரா பொம்மைக்கு
பயம் காட்டிச்
சோறு கொடுப்பதே
பெரும் கலை அவளுக்கு.

அவளுக்குப் பயம் காட்டிச்
சோறு கொடுக்க
காக்காவைக் காணவில்லை
பூச்சாண்டிக்குப் பயமுமில்லை
நிலவில் பாட்டியுமில்லை!!!


ஹேமா(சுவிஸ்)

Tuesday, June 14, 2011

மினுக்கெட்டிக் காதல்

சில சேமிப்புக்கள் உனக்காக...
சாதகப் பறவையின் இசை
அசையும் மேகத்தின்
அழகு
பலகனியின் பூக்கும்
ஊதாநிற ஓர்குட்
எனக்கு மட்டும் புரிகிறமாதிரி
கிளிஞ்சலால் ஒட்டிய
உன் முகம்
சில பாடல்கள்
கார் கண்ணாடியின் பின்புறத்தில்
உன் போட்டோ
உனக்காக மாற்றிய
சில உணவுகள்
பனிப்புகாரில் எழுதிய
உன் பெயர்
உருட்டிய ஐஸ் மனிதனில்
உன் உருவம்
துயிலெழுப்பும்
சூரியக் கதிர்
அத்தனையிலும் சேமித்த
உன்னை...
எனக்குள் சேமிக்க....!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 10, 2011

போதனை...

அவைகளுக்கு அது பெரும்பணி
நுனித் தலையில் சும்மாடு
எதையோ தேடியபடி
வரிசை கலையாமல் லாவகமாய்
ஒன்றையொன்று இடிபடாமல்
ஒற்றுமையாய் இடம்விட்டு
தேவைகளை நிரப்ப
உயர உயர
உச்சியொன்றைப் பிடிப்பதற்காக
ஊர்ந்துகொண்டிருக்கிறன அவைகள்.

ஒன்று கொஞ்சம்
திரும்பிப் பார்த்தாலே போதும்
விழவும்
வரிசை சீர்கலையவும்.

காத்திருக்கிறேன் பிரமிப்புடன்
என் வாசிப்பை ஒத்திவைத்தபடி.
அடையாளத்திற்காக
கவிழ்த்து வைத்த புத்தகச் சரிவில்தான்
அவர்களின் பயணம்.

இது இடப்பெயர்வா
இல்லை
தமக்கான ஏதோ ஒன்றின்
தேடுதலுக்கான ஒன்றிணைவா.

ஓசையே இல்லாமல்
ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!


ஹேமா(சுவிஸ்)

Friday, June 03, 2011

குயிலா...

பிசறிக் களைத்த மனம்
உணர்வுகளைத் தொலைத்த கனம்
சாணைபிடிக்கா நகம்
திணறும் அழகு
உதறி உதறி ஆடை விலக்கி
நடையோ நளினம்
இலந்தமரக்குயிலுக்கு
எதிர்க்குரல் விடும் குயிலா.

தூக்கிய ஒற்றைப்பாவாடை
கிணற்றுக் கட்டில்
உள்தொங்கிய கால்கள்
பறக்கும் முடி
நைந்துவிட்ட றவுக்கை
குளிக்காத தேகம்
அவளே இளவரசி.

பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்
காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 27, 2011

நிகழ்வுகள்...

உடைந்த‌ தாழியின் ஓர‌த்தில்
ஒட்டியிருக்கும்
ஒற்றைப் ப‌ருக்கைக‌ள்
க‌ழுவ‌ப்ப‌டாம‌ல் காத்திருப்போடு.
காக்கைக‌ளும்
கழிவகற்றும் கைகளும்
தம் அவ‌ச‌ர‌த்துள்.

காட்சி மாறும் திசையில்
ப‌சி ம‌ய‌க்க‌த்து
தெருவோரச் சிறுமியை
அள்ளி எடுத்த‌படி சூரியக்க‌திர்.
விடாப்பிடியான‌
ந‌ச்ச‌மில‌ வார்த்தையை
கொட்டியும் வீசியுமாய்
அந்த‌க் கைக‌ள்.

கொல்லைப்புற
ஓட்டை வ‌ழியே வ‌ரும் எலி
மெல்ல‌ நுழைகிறது.
நலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைக‌ள்!!!

ஹேமா(சுவிஸ்) நன்றி - உயிரோசை.

Tuesday, May 24, 2011

ஒரு சொல்...

நீ சொன்னாய்
நீயா சொன்னாய்
நீதான் சொன்னாய்
நீதானா சொன்னாய்
நீயேதான் சொன்னாய்
நீயும் சொன்னாய்.

மாற்றி மாற்றி
நீ....
சொன்னதை மாற்றிட
நினைக்கிறது உள் மனம்
சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்.

சொல்லவில்லை என்றாகும்
இயல்பில்லா
ஒரு பொய்
தேவையில்லை எனக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)