*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, October 31, 2008

தீபாவளி...

எமக்கென்று ஒரு தேசம்.
எமக்கென்றே அதில்
நிறைந்த கனவுகள்.
கனவுகள் கனவுகளாகவே
இன்னும்....

இருட்டில் நாம்.
பற்ற வைத்த
நெருப்பு மாத்திரம்
இன்னும்
அணையாமல் உள்ளத்துள்.
தீபத்தை விட வீராப்புடன்
விளாசி எரியும் வெளிச்சமாய்.

மூன்றாம் நாள் பால் வார்ப்பு
இன்று எம் தமிழ்செல்வனுக்கு.
செல்லுமிடமெல்லாம்
தன் செல்லப் புன்னகையால்
பேசிப்பேசி புவியையே
வலம் வந்தான்.
இன்று...... ஆறாத்துயரில்
எம்மை ஆழ்த்திவிட்டு
ஆறித் தூங்குகின்றான்.
பேச்சுவார்த்தைக்கு
ஆலோசனை போதாமல்
பறந்தே போய்விட்டானோ
பாலா அண்ணாவிடம்.

வெள்ளியன்று
வெளியேறியது எம் ஒளி.
பிறகு எமக்கெதற்கு
தீப ஒளி.
வயிறு எரிகிறது...
மனங்கள் எரிகிறது...
நாம் பறி கொடுத்த
தியாகத் தீபங்களின்
நம்பிக்கைத் தீப்பந்தங்களின்
ஒளி இன்னும் பிரகாசமாய்.
தீபாவளி எம் தேசத்தில்
இப்போ அல்ல.

காத்திருப்போம்
இருள் களைந்து
சுதந்திர வெளிச்சம்
ஏற்றுவார்கள்
எம் தோழர்கள்.
அன்றே எம்
தமிழ் ஈழத்தில்
தீபத் திருநாள்!!!


ஹேமா(சுவிஸ்)06.11.2007

Tuesday, October 28, 2008

அவசரம்...

சிந்தனைகள் நொண்டியடிக்க
யோசிக்கக்கூட
நொடிகள் இல்லாமல்
இன்று வாழ்வு வேகமாய்
விருவிருவென்று.

புதிய புதிய யுக்திகளுடனும்
கண்டுபிடிப்புகளுடனும்
அழிக்க ஒரு கும்பலும்
ஆக்க ஒரு கும்பலுமாய்.
கடவுளை வேண்டித்
தேடிய பயணம்
மிக விரைவாய்
விஞ்ஞானம் தேடியபடி.

சூரியனை வணங்கிப்
பணிந்த மானிடன்
விஞ்ஞானம் அறிந்தவனாய்.
நிலவில் காண்கின்றான்
நீர்க் குன்றாம்
அழகிய குமரிப்பெண்ணாம்.

எதிர்காலத்தில்
அகதிப் பதிவும் கூட
வரலாம் அங்கு.
கைத்தொலை பேசியிலும்
கணணியிலும்
வைரஸ்...கரப்பான் பூச்சியாம்.

நெடுவானிலும் ஆழ்கடலிலும்
துளை போட்டு
அவசர அவசரமாய்
விஞ்ஞான விருத்தி.
மூளை விருத்தியடைய அடைய
மனிதம் செத்தபடி.

என்றோ...
அஞ்ஞானம் சொன்னதையே
சொல்கிறது விஞ்ஞானம்
புதுமையல்ல எதுவும்.
ஞானிகளும்... தெய்வங்களும்
சித்தர்களும்... சரித்திரங்களும்
சொல்லாததையா இப்போ.

அவசர உலகில்
ஆழ்தளம் அறிவது
அழிவை நோக்கியா?
மனிதமும் சத்தியமும்
அழிந்து மெலிந்து
மருந்துக்கும் மறந்த
துர்ப்பாக்கிய உலகம்
இன்னும் இன்னும்
ஏன் அவசர அவசரமாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 23, 2008

உன் நினைவோடு...

வேலைப்பளு
தலையை அழுத்த
கடமை என்கிற
பூங்கொத்தோடு
எப்போதாவது
தொலைபேசியில் நீ.

கிடைக்கின்ற
உன்
ஒரு நிமிடத் துளிகளுக்குள்
சிதறும்
சில சில வார்த்தைகள்
சிரிப்புக்கள்
சின்னச் சின்ன
விசாரிப்புக்களை மாத்திரமே
சேர்த்து அள்ளியபடி நான்.

மெல்ல மெல்ல
என்னை விட்டுத்
தூரமாகிறாயோ
என்கிற நினைவிலேயே
அழுதுவிடுகிறேன்.

வருடம் முழுதும்
வரும் ஏதாவது
நினைவு நாட்கள்
தீபாவளி...பொங்கல்
வருடப்பிறப்பு...பிறந்தநாள் என்று
நாட்களை எண்ணி எண்ணி
உற்சாகமாய்
நீ கொண்டாடிய தினங்கள்
நினைவுக்குள் இனிமையாக.

இன்று..
லண்டன்
பிக்பென் கடிகாரத்தோடு
கூட நீயும்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
பசியாறக்கூட நேரம் அற்று.

நானோ
தனிமைகளோடும்
உன் நினைவுகளோடும்
கவிதைகள் என்கிற பெயரில்
எதையாவது கிறுக்கியபடி.

ம்ம்ம்....
கூட ஒரு மணி நேரம்
வேலை செய்தால்
கைச்செலவுக்குத்
தாராளமாய்தான்.

வாழ்வின் கனவுகளோடு
நீ அலுவலகத்திலும்
நான் கனவே வராத
விழிப்போடுமாய்.

கனிகின்ற காலத்தில்
நீயும் நானும் கை சேர
அன்று சேரும்
அத்தனை நாட்களையும்
சந்தோஷ ஊஞ்சலாக்கி
அருகிருந்து
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய்
வாழ்த்திக் கொள்வோம்.

அதுவரை...
எப்போதாவது
தொலைபேசியில்
உன்
ஒரு நிமிடத் துளிகளுக்குள்
சிதறுகின்ற
சில சில வார்த்தைகள்
சிரிப்புக்கள்
சின்ன சின்ன
அந்த விசாரிப்புக்களோடு
மாத்திரம் தொடரட்டும்
அழகான
நம் காதல்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 20, 2008

இரும்புப் பறவை...


ஞாபகத்திற்குக் கூட
எதையும்
விட்டு வைக்கவில்லை அது.

யதார்த்த இயக்கங்கள்
அத்தனையுமே தாக்கி
அழித்து மூடிய
இயந்திரப் பறவையாய்
அது வானில்.

பனை மரத்தின் உச்சியையும்
பச்சைக் குழந்தையின் பேச்சையும்
இரக்கமில்லாமல்
நறுக்கி நிறுத்தி நிப்பாட்டிய
ராட்சத இரும்பு அசுரனாய்.

வியர்வையில் நனைந்த
மனிதனையும்
வீறாய் குரைக்கும்
நாயையும் கூட
விட்டு வைக்கவில்லை
அந்தப் பிசாசு.

வான் அழுதாலும்
என்றுமே சிரித்திருக்கும்
விண்மீன்கள் கூட
அழுவதாய் ஒரு கணிப்பீடு.

காக்கை குருவி அழுதால்
அலட்சியம்.
ஆடும் மாடும் அலறினால்
போகட்டும்...
அற்ப உயிர்.

புல்லும் பூண்டும் கணக்கில் இல்லை.
மரங்களுக்கும் பூக்களுக்கும்
கேள்வியே இல்லை.
இதற்குள்...
மனிதனின் கூக்குரல் மட்டும்!

குற்றம் சொல்ல
யோக்கியம் இல்லா
மனங்களை விற்று இயக்கும்
கரங்களின் வீரப் பிரதாபம்.

எய்தவன் எங்கோ இருக்க
அம்பை நொந்து ஏன் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 18, 2008

வாரங்கள் மூன்றில்...

கண்கள் காண
உடலுக்கு வெளியில் கருக்கொண்டு
உருவான புது உடலோடு
ஜென்மம் புதிதாய்.
மூன்று வாரங்கள்தான்
முழுதான குழந்தையாய்.
முந்தைய பிறப்பில் உணரமுடியா
அன்பின் மைதானத்துள்
போட்டியே இல்லாமல்
நான் மட்டுமே.
அம்மாவோடு
முரண்பட்டுக் கொண்டாலும்
இன்னும் ஒரு ஜென்மம்
வேண்டும் என்று
ததும்பிய கண்ணீருக்குள்
வரமாய் வேண்டி
இறைவனிடமும் இறைஞ்சியபடி.

பகிர்ந்த பாசத்தில்
பங்கு கொண்டவன் அவன்.
பதினைந்து நாட்கள்
தவறவிட்ட அவன் குரல்.
பொழுதின் விடிதலும் படுதலும்
அவன் குரலிலேயே.
தேவாரமும் தாலாட்டும் அவனாய்.
என் மௌனங்களும்
அவசரங்களும் ஆத்திரங்களும்
அறியும் ஞானியாய் இனியவன்.
தலைமேல் குந்தியிருக்கும் மந்தியாய்
விந்தைக் குழந்தையாய் அவன்.
பிரச்சனையும் அவன்.
தீர்வும் அவன்.
இரகசியச் சிநேகிதனாய்
எனக்குள் உயிராய்.
கண்களுக்குள் விழுந்த தூசாய்
இருந்தாலும் எடுத்தாலும் வலிப்பவனாய்.
பக்கத்தே உணராத காதல்
பதினைந்து நாட்களில்
பால் தேடும் பச்சைக் குழந்தையாய்.

மூன்று வாரத்துள்
மாற்றம் தரும் அரசியல் சந்தோசம்.
சூரியனின் பார்வை
கனிவோடு ஈழம் நோக்கி.
கசக்கிய கண்களோடு
தூக்கம் விட்டுத் தமிழகம்
தவிக்கும் தமிழருக்குத்
தாகம் தீர்க்கும் தண்ணீராய்.
சுடுகாட்டுத் தேசத்தை
பூக்காடாய் ஆக்க
பேரம் பேசும் சூரியத் தேவன்.
இலங்கயின் ஹிட்லர்
ராஜபக்சவின்
அராஜகம் அடக்க
இறக்கைகள் விரித்த
தொப்புள் கொடி உறவுகளாய்.
தமிழின் தாயகத்திற்கு
நன்றியோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 16, 2008

நட்போடு நலம் கேட்டு...

மனம் மண்டிக் கிடக்கிறது பாரமாய்.
கையிலும் பாரத்தோடு
நுழைவாயில் நலம் கேட்க,
நுழைகிறேன்
சூழ்நிலைக் கைதியாய்
அலுப்பின் துணையோடு.

தனிமையின் இருட்டுக்குள்
தள்ளிவிட்டுக்
கதவடைத்துப் போகிறது
கரையும் கால அட்டவணை.
என் நிழலே
என்னை அழுத்தி அழவைக்கிறது.

நகரவிடாதபடி
நூல்கட்டி இழுக்கிறது
பெற்றோரின் இனிய அணைப்பு.
மீண்டும் மீண்டும்
பிரிகிற அந்த விநாடிப் பொழுதை
வெறுக்கிறது மனம்.

ஐரோப்பியக் குளிரும்
இருண்ட வான்நிலையும்
விரட்டுகிறது
வேண்டாம் போய்விடலாம்
இப்பொழுதே என்பதாய்.
நிழலுக்காய்
மரத்தடி ஒதுங்க,
மரநிழலே என் மேல் பரவி
அழுத்தி அமுக்குவதாய்.

கடமைகளுக்குள் கட்டி அழ
காலம் கலைத்துக்
காவல் காக்க,
ஓய்ந்த மனதில்
வெறுப்பின்
சுவாலைக் கனல்
அனலாய் அடிக்க,
கணணியை அழுத்த...
வலை தந்த நட்புக்களின்
நல்ல வார்த்தைகள்
மருந்தாக...
மீண்டும்
நலம் கேட்டுத் தொடர்கிறாள்
குழந்தைநிலா!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, October 03, 2008

வரம்...