*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, September 30, 2010

ப்ரியமானவனே...

புரிதலில் பூக்கிறது வாழ்வு !

பிரிந்து போகிறது
பகிர்ந்துகொண்ட உறவு !

சொல்லவில்லை
என்னைப்
புரியவில்லையென்று...
புரியவைத்திருப்பேன் !

திருகிக் கொல்வதும் சரி
சொல்லாமல் பிரிந்ததும் சரி !

சொல்லிப் பிரிந்திருந்தால்
புரிந்திருப்பேன்...
சரி செய்திருப்பேன் !

என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !

புரிதல்...
அவ்வளவுதானா !
பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 26, 2010

தியாகிகளில் ஒருவனாய்...

விழித்தே இருக்கிறேன்
கொடூரமான
கறுப்பு எழுத்துக்கள்
சிலுவைகளாய் கழுத்தை நெரிக்க
அடிமை வாழ்வென கையெழுத்திட
தீராத் தர்க்கம்
கைகள் வலுவற்றதாய் !

ஓ...
இத்தனை கனமாய் இருந்திருக்குமா
இயேசுவின் சிலுவைகூட !

தீர்வாக்கப்பட்ட
ஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !

கசாப்புக்கடைக்காகவே
பிறப்பெடுக்கும் தமிழன் கையில்
திணிக்கப்பட்ட ஆயுதங்கள்
பயங்கரவாதிகளென பகிரங்கப்படுத்த
இல்லையென்றான் திலீபன்.
மாற்றுவழி அகிம்சைக்கும்
சரியெனச் சரிந்தான் !

ஆனது என்ன ?
பார்வைகளைப் பரீட்சிக்காத உலகம்
எல்லாமே ஒன்றுதானென
உயிரை
தலை மயிராய் ஊதியதே !

இன்று....
தின்ற உயிர்களை
அசைபோட்டு
ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது
சிங்களம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 23, 2010

குதிரையும் கனவும்...

நித்தமும்....
சிவப்புக் குதிரையொன்றின் துரத்தல்
கனவில்கூட
திரும்பிப்பார்த்தல் இயலாமல்.

உடல் எங்கும் இரத்தப் பிசுபிசுப்பு.
தூரத்தே எட்டி அணைக்கும் கையொன்று
நீண்டு நீண்டு
வந்து வந்து மறைவதாய்.

புழுதி கிளப்பி
குதிரை எகிறிக் கனைக்க
என் நகங்கள் என்னையே
பிறாண்டிக் காயப்படுத்த...

இடையிடை விழுத்த எத்தனிக்கும்
கொடிகளும் காட்டு மரங்களும்
பூச்செடிகளும்கூட உடல் கிழிக்க
சிதைவுற்ற போதும்
எதிர்க்கும் உறுதியோடு
ஓடிக்கொண்டிருந்த நாளில்...

சூரியன் உதித்த
காலையின் பொழுதில்
கடவுள் என்கிற பெயரில்
ஓர் உருவம் கை அணைக்க
கல்லாய் நான்.

குதிரைக்கும் நிறம் மாற்றி
உருவம் மாற்றிய அது
தானும்
நிலையற்ற உருவமாய்.

ம்ம்ம்....

இப்போதைக்கு கனவுகளின்
தொன்மங்களுக்குள் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 14, 2010

ஏன்...எதுக்கு ?

அள்ளிக் கொட்டும் அரிசி
புறாக்களுக்காம் !

பயந்து பறந்த புறா
பத்தடி தூரமாய் !

கள்ளமில்லா மனதில்
கூட்டி அள்ளும் கேள்விகள் !

ஏன் பயம்...
பசிக்காதோ அதுக்கு...
யார் சமைச்சுக் குடுப்பா...
ஏன் சாப்பிடணும்
பூச்சி புளுவெல்லாம் !

நான் குடுக்கிறேன்
என்னோடயும்
சாப்பிட்டு
விளையாடலாம்தானே !

கடவுள் சொல்லியிருக்கிறார்
அதுக்கு....
மனுஷரைக் கண்டால்
தள்ளியிருக்கச் சொல்லி !

பைத்தியம் கடவுளுக்கு...
யோசிக்க முடியாத
சின்னமூளை வைத்த
கடவுள்தான் முட்டாள் !

இன்னும்....
மனுஷனாய் ஆகாத
சின்னக் குழந்தை தானே
நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 07, 2010

தனித்தில்லை...

நீண்ட நாட்கள்
அல்ல அல்ல
நீண்ட காலங்களுக்கு பின்
உன் ஸ்பரிசம்.

அலுவலாய் இருந்த என்னை
அணைத்து
முடி தள்ளி....
முத்தம் தந்து
எப்படி முடிகிறது உன்னால்
தனிமை தைரியம் ?

முகம் பார்த்துச்
சிரித்த கண்ணில்
மீண்டும் ஒன்று.

திரும்பவும்....
பயந்தாங்கோழிக்கு
எப்படி இத்தனை
தைரியம் தனியாக ?

யார் சொன்னார்
நான் தனித்தேனென்று.
முன்பைவிட எப்போதும்
நீ...
என்றும் பிரியாமல்.

அலுவல்...அம்மாவீடு
என்றுகூட அகலாமல்
என் மூச்சின் முகவரியே
உன்னோடு.

என்ன கேள்வி இது
போடா தள்ளி
காலையிலேயே கலாட்டா
செய்தபடி நீ இங்கு.

காற்றோடு நீ
கண்மணிக்குள் நீ
தனிமையாய் நான் இல்லை.
நீ இல்லை என்று
என் ஞாபகத்தில்
எப்போதுமே இருந்ததில்லை

என் மரணம் வரை
உனக்கும் இல்லை அது!!!

ஹேமா(சுவிஸ்)