*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, January 29, 2011

கொட்டியாவா கோத்தாவா...

ஒவ்வொருமுறையும்
சொன்னார்கள்
"நாங்கள் இல்லை அதுதான்"என
"அது என்றால்"
தம் மொழியில்.
"கொட்டியா கொட்டியா(புலி)"என்றார்கள்.

"அட இவர்கள் நல்லவர்கள்"
கொடுத்தார்கள் ஆயுதம்
அவர்களிடமே
"கொட்டியாவைப் பிடியுங்கள்
தாருங்கள் எங்களுக்கும்"என்றார்கள்.

"நாங்கள் போதி மரத்தடியில் பிறந்து
புத்தனின் அன்புப் பால் குடித்தோம்".
கணக்குப் போடுகிறோம்...
"கணக்கெழுத
தாளும் கோலும்கூட தாருங்கள்"
என்றார்கள்.

ஒன்று...இரண்டாக
எண்ணிக்கையின் போக்கோடு
கேட்டபோது
கணக்கும் சொன்னார்கள்
அப்போது
"மோடையா(மடையா)"
என்றார்கள் இவர்கள்.

"மடப்புலி"என்றே சொல்லி
இல்லாமல் ஆக்க
இன்னும் கொடுத்தார்கள் அவர்கள்.

இன்னும் கொஞ்ச நாள் போக
"கொட்டம் அடக்கினோம்
கொட்டியாவை அடியோடு
கொன்றேவிட்டோம்"என்றார்கள்.

ஆனாலும்...
மாறா நிலைமை
கேள்விகள் கேட்க
கையைமட்டும் காட்டுகிறார்கள்
யாரையோ...
"மடையர்கள்"என்றபடி!!!


ஈழத் தமிழருக்காய் தன்னுயிர் தந்த முத்துக்குமார் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தோடு இன்றைய கொடுமைகளையும் சுமந்தபடி....

ஹேமா(சுவிஸ்)

Monday, January 24, 2011

தேவைப்படும் அவகாசங்கள்...

வெடிகள் தீர்க்கப்பட்ட பின்னும்
இரத்த வடிகால்களில்
பேய்கள் குடியிருந்த பின்னும்
பதிவுகள் அழித்து
மறைக்கப்பட்ட பின்னும்
வெளியில் தெரியா
வலியில்லா வதைகள்.

உரிமை மீறல் என்றால்
என்ன என்றபடி
நல்லவராய்ச் சொல்ல
சாட்சியங்கள் தேடும்
முகம் சிதம்பிய
சொத்தைச் சிங்களம்.

மௌனங்கள் தொடரும்...
உடையாமல் ஓடும்...
நீர்க்குமிழியின் மேல்
இன்னொரு மழைத்துளி விழும் வரை
இல்லை...
இறந்த ஈசலின்
சிறகொன்று கொடுக்கும்வரை.

எமக்கேயான பொழுதொன்று
ஒளிந்திருக்கிறது
இருளுக்குள் மறைந்திருக்கும்
வெளிச்சம் போல
அவகாசங்களின் காத்திருப்போடு!!!

ஹேமா(சுவிஸ்)


இந்தப் பதிவைக் கவனியுங்கள் கொஞ்சம்...

Thursday, January 13, 2011

சொல்லப்படாத மரணம்...

அலங்கரிக்கப்பட்ட
சிரித்த முகம்
வாள்...வேல்
சரிகை உடை.
உள்ளிருந்தபடியே
உலகத்தைக் காக்கும்
கடவுளாம் அவர் !

இன்னும்...
படைத்தலும்
அழித்தலும் கூட அறிபவராம் !

பஞ்சம்...பிணி
போர்...பிரிவினை...வன்முறை
மனிதம் மறந்த உயிரினங்கள்
உயிரோடு போராட....
பாலும் தேனும் பஞ்சாமிர்தமும்
தலைவழி வழிய
குளிரக் குளிர ஒரு கல் !

ஆடம்பர ரோபோக்களின்
அரோகரா சத்தத்துள்
கரகரத்த ஒரு குரல் !

மனிதன்....
நான் முதல் மனிதன்
நானே முதல் மனிதன் !

பிறந்த நாள் முதல்
தேடித் திரிகிறேன்
நரை வாரா
இளைஞர் இவரை !

கல்லுக்கு பால் வார்க்கும்
அறியவில்லா மடையர்களே
நான் பிறந்த அன்றே
அவர் இறந்ததாய் செய்தி !

ஓ...
மரண அறிவித்தல்
கொடுக்கப்படும்வரை
நம்பப்போவதில்லையோ
இவர்கள்!!!

தமிழ்மண விருதில்...வாக்களிக்க என் பதிவுகள்

படைப்பிலக்கியம் (கவிதை,கட்டுரை)...

ஈழ மக்களின் வாழ்வியல்...

பெண் பதிவர்கள் மட்டும்...



ஹேமா(சுவிஸ்)

Wednesday, January 05, 2011

உடைந்த சூரியனும் நானும்...

உடலின் தேவைகளோ
உணர்வின் தேவைகளோ அற்ற
சூன்ய வெளியில்
என்னை முழுதாக்க
உடைந்து கிடக்கும் தன் துண்டங்களாலேயே
பொருத்தியபடி சூரியக் கைகள்.

சுவாசம் சிதறி ஒடுங்கிய குடுவைக்குள்
ஒத்துழைக்காத ஆன்மாவைத்
திணிக்க முயல்கையில்
இசைந்து தராத போராட்டம்
உடைந்த சூரியனுக்கும்
எனக்குமானதாய்.

துருவங்களின் இடைவெளியை
நிரப்ப முயல்கிறேன் நான்.
உணர்வாகிச் சூரியனும்
உடலாகி நானும்
ஒன்றைவிட்டு ஒன்று பிய்தல் குறித்து
சத்தம் போட்டு கதறுகிறேன்
சார்ந்திருத்தலைக் குறித்தே சொல்கிறேன்.

புரிதல் இல்லாததால்
உடல் வேறா உணர்வு வேறா
ஒன்றுக்குள் ஒன்றில்லையா
முதுகில் கொழுவிய கேள்விகள்.

உடல்,உணர்வு,உள்ளம்,உயிர்
அனைத்தின் தேவைகளையும்
வைத்துக்கொண்ட அது
நிகழ்கால உணர்வை
எதிர்கால உள்ளத்துக்குள் ஒளித்தபடி
அநித்தியமாய்
ஒரு துளி
ஞாபக ஒளியை மட்டும் பொசிந்துவிட்டு
வெறுமையாய் மௌனித்தபடி!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, January 01, 2011

காதல்...காதல் !


காக்கையாய் மனம் கரைய
காத்திருக்கிறேன்
விருந்தாய் வந்துவிடு சீக்கிரம் நீ !

தினமும்...
பார்த்த உன் புகைப்படம்தான்.
இப்போதெல்லாம் பார்க்கையில்
வெட்கமாயிருக்கிறது !

எது எதுக்கோ
இருக்கும் வரம்புச் சட்டம்போல
மீசைக்கும் வரம்புச்சட்டம் போட்டிருந்தால்...
அந்த இடுக்கில்...பிடித்துக்கொள்வேன்
உன் ஆண்மையின் குரலை !

தூர இருந்தபடி
ஒளிப்பதும் வெளிவருவதுமாய்
கண்ணாமூச்சியா
இரு இரு...
வலையோடுதான்
காத்திருக்கிறேன் கனவுகளில்கூட
சிக்கும்போது பேசிக்கொள்கிறேன் !


ஒரு புழுவாய்...
தனிமைக் கூடு கட்டிக்கொண்டு
இறக்கை முளைத்தபின்னும்
முடங்கிக்கிடந்தவள் நான்.
வலை விரித்தவன் நீ.
இன்று நான் தங்கும் கூடாய் நீ.
நீ வீசிய வலையில்
சிக்கிக்கொண்டவனும் நீயேதான்!

அதிசயக் கடவுளோ நீ
பட்ட மரம்
தளிர்க்க வைத்துப் போகிறாயே
உதிர்க்க மட்டும் வைக்காதே !

கீறு விழுந்த
இசைத்தட்டாய் என் இதயம்
பைத்தியம்...
உன் பெயரையே பாடிக்கொண்டிருக்கிறது !

என் உயிர் நீ
என் உறவுகள் நீ
என் வாழ்க்கை நீ
என் அறிவு நீ
எல்லாம் எல்லாம் எல்லாமே
உலகில் எல்லாமே நீயானால்
உன்னில் அத்தனையும் நானாவேன்!!!


உறவுகள் எல்லோருக்கும் 2011 இனிதாய் மலரட்டும் !

ஹேமா(சுவிஸ்)