*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, October 18, 2008

வாரங்கள் மூன்றில்...

கண்கள் காண
உடலுக்கு வெளியில் கருக்கொண்டு
உருவான புது உடலோடு
ஜென்மம் புதிதாய்.
மூன்று வாரங்கள்தான்
முழுதான குழந்தையாய்.
முந்தைய பிறப்பில் உணரமுடியா
அன்பின் மைதானத்துள்
போட்டியே இல்லாமல்
நான் மட்டுமே.
அம்மாவோடு
முரண்பட்டுக் கொண்டாலும்
இன்னும் ஒரு ஜென்மம்
வேண்டும் என்று
ததும்பிய கண்ணீருக்குள்
வரமாய் வேண்டி
இறைவனிடமும் இறைஞ்சியபடி.

பகிர்ந்த பாசத்தில்
பங்கு கொண்டவன் அவன்.
பதினைந்து நாட்கள்
தவறவிட்ட அவன் குரல்.
பொழுதின் விடிதலும் படுதலும்
அவன் குரலிலேயே.
தேவாரமும் தாலாட்டும் அவனாய்.
என் மௌனங்களும்
அவசரங்களும் ஆத்திரங்களும்
அறியும் ஞானியாய் இனியவன்.
தலைமேல் குந்தியிருக்கும் மந்தியாய்
விந்தைக் குழந்தையாய் அவன்.
பிரச்சனையும் அவன்.
தீர்வும் அவன்.
இரகசியச் சிநேகிதனாய்
எனக்குள் உயிராய்.
கண்களுக்குள் விழுந்த தூசாய்
இருந்தாலும் எடுத்தாலும் வலிப்பவனாய்.
பக்கத்தே உணராத காதல்
பதினைந்து நாட்களில்
பால் தேடும் பச்சைக் குழந்தையாய்.

மூன்று வாரத்துள்
மாற்றம் தரும் அரசியல் சந்தோசம்.
சூரியனின் பார்வை
கனிவோடு ஈழம் நோக்கி.
கசக்கிய கண்களோடு
தூக்கம் விட்டுத் தமிழகம்
தவிக்கும் தமிழருக்குத்
தாகம் தீர்க்கும் தண்ணீராய்.
சுடுகாட்டுத் தேசத்தை
பூக்காடாய் ஆக்க
பேரம் பேசும் சூரியத் தேவன்.
இலங்கயின் ஹிட்லர்
ராஜபக்சவின்
அராஜகம் அடக்க
இறக்கைகள் விரித்த
தொப்புள் கொடி உறவுகளாய்.
தமிழின் தாயகத்திற்கு
நன்றியோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

தீலிபன் said...

உண்மையில் எனக்கே இது ஆச்சரியமாக இருக்கிறது ஹேமா, மீண்டும் மீண்டும் என்னுடைய பயம் எல்லாம் தமிழகத்தில் உள்ள தமிழின துரோகிகள் இந்த ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். நினைத்து பாருங்கள் உங்கள் தாய் மற்றும் தந்தை ஆகியோரை பார்த்த மகிழ்ச்சி ஒருபுறம் ஈழம் நோக்கி தமிழக பார்வை திரும்பி உள்ள மகிழ்ச்சி மறுபுறம், என்ன உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தானே.

ஹேமா said...

தமிழகத்தின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியிருப்பது நிறையவே இரட்டிப்புச் சந்தோஷம் திலீபன்.
உங்கள் சந்தேகம் எனக்குள்ளும் இருக்கு.பலமான கைகள் இணையட்டும்.நம்பிக்கையோடு
காத்திருப்போம்.ஒன்று மட்டும் உண்மை.என்றும் இல்லாதவாறு தமிழகம் உள்மனதோடு குமுறுகிறது.
ஒரு மனநிலையோடு போர்க்களம் இறங்குகிறது.மனம் மாறாமல் இருக்க வேண்டிக்கொள்வோம்.

யார் இவன்?? said...

''நன்றி அக்கா! உள்ளத்து உண்மையின் உணர்வுகளை எப்போதும் அளிக்க முடியாது. நாங்கள் பட்ட வேதனைகளும் ரணங்களும் எவ்வளவு தான் எழுதினாலும் மனதை விட்டு அகல மாட்டது.

ஹேமா said...

வாங்கோ கமல்.உங்கள் பதிவுகள் எல்லாம் கேட்டேன்.உணர்வு
கொட்டிச் சிதறும் குரல்.அருமை.
உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.உங்கள் உணர்வலைகளைத் தொடர்ந்தும் பதிவுகளாக்குங்கள்.

தமிழ்ப்பறவை said...

ஒரே கவிதையில் மூன்று பார்வைகள்.விட்டதுக்கெல்லாம் சேர்த்துக் கவிப் படையல் போடுகிறீர்கள்.நன்றாக இருக்கிறது ஹேமா.
தமிழக நிலை மகிழ்ச்சி அளிக்கும் அதே வேளையில்,பிற(வி) அரசியல் வாதிகளின் சாக்கடைவாய்கள் கேவலமாகத் திறக்காதபடிக்கு இருக்குமாறு கடவுளை வேண்டுவோம்.
சகோதரி எனது பதிவில் கவிதைப் பாடம் படிக்க எண்ணி ,ஒரு நண்பர் உதவியுடன் 'அ' போட்டுள்ளேன்.. கருத்து வேண்டி,...

ஹேமா said...

தமிழ்பறவை அண்ணா,ஒரே கவிதையில் மூன்று பார்வைகள்.
முயற்சி அழகாய் இருக்கிற மாதிரி இருக்கு.கருத்துக்கு நன்றி.உங்கள் கவிதையும் பார்த்தேன்.முதல் பிரசவமே அழகான குழந்தை.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நிலா முகிலன் said...

தமிழர்களுக்கு ஒன்று என்றால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல..உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களும் துடிப்போம். தமிழர்களை ஏன் எங்கு பார்த்தாலும் அடிக்கிறார்கள்? இலங்கையில், மலேசியாவில் கர்நாடகத்தில்.. தமிழன் திருப்பி அடிப்பது..இலங்கையில் மட்டுமே...

Post a Comment