*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, April 03, 2008

வாழ்வின் வரைபடம்...


மானுட வாழ்வை
வரைய நினைக்கிறேன்.
எழுதுகோலில் எண்ணக் கருக்கள்
கவிழ்ந்து கொட்டிக் கனக்கிறது.
அவலங்கள்...ஏக்கங்கள்
சந்தோசங்கள்...சந்தேகங்கள்
வேதனைகள்...இழப்புக்கள்
ஏமாற்றங்கள்...
இன்னும்...இன்னும்.
வந்தவை போனவை போக
நிரந்தரங்கள் எத்தனை
தரம் பிரிக்க முயல்கிறேன்.
உள்ளம் கொதித்துத் தவிக்கத்
தொடராய் வரும் காலச் சிந்தனைகள்.

ஒரு துளி நீர் கலந்து
கருவுக்குள் உருவெடுத்து
காற்றை நிரப்பி
உயிராக்கி...
சிரிக்கவும் பேசவும் முடிந்த
மனிதனாகி...
ஒரு சிறு தீயில் சாம்பலாகும்
அதிசயப் பிறவி.

இதனிடை அவன்படும் பாடு.
பிறப்பு பெண் ஆனதால்
தாய் மடி தவழும்போதே
திணிப்புக்களின் திணிப்புக்களில்.
சாப்பிடுவது தொடக்கம்
சாலையோரம் நடப்பது வரை.
ஆடை அணிய...படிக்க
கதைக்க...சிரிக்க
எல்லாம்...எல்லாமேதான்.
விரும்பியதை விட்டு
திணிப்பின் விருப்பத்தில்.
அதன்பின் வாலிபம் வளர
கூடவே வளரும் சந்தேகச் சங்கதி.

முற்றத்தில் நின்று வாய் விட்டுச் சிரித்தேன்..
மாலையில் மல்லிகை தலையில் சூடினேன்...
மனம் குதூகலிக்க
இருவரிக் காதல் கவிதைகள் எழுதினேன்.
எனக்குள் காதல் நுழைந்ததாய்
புலனாய்வு அம்மா செய்ய,
அப்பா அங்கீகரிக்க
வலிகள் ஏராளம்.
அடிபட்ட வலியை விட
வாய் சுட்ட வலிகள்
சொற்களாய் குத்தும் ரணங்களாய்
மாறாமல் என்றும் என்னுடன்.

தொடரும் பாதையில்
முளை கொள்ளும்
காதலின் கனவுக் கோட்டை.
அது முதன் முதலாய் தலை சாய்த்து
ஒரு தடவை எனைத் தடவிச் சென்றபோது
முள்ளாய் சிறு நெருடல்.
முள்ளை எடுக்காமலே
வலியோடு காத்திருந்த
காதலின் கனவுலகத்து
சுக அனுபவம்.

வாழ்வியல் அரங்கில்
எத்தனை நாடக நகர்வுகள்
நெஞ்சத்தில் நிழலாய் கதை பேசும்.
பக்கம் வந்தமரும் சொந்தங்கள்
இரயில் பயணங்களாய்.
பயணத்தில் இழந்தவைகள் எத்தனை?
எதிர்பார்த்து ஏமாந்தவைகள் எத்தனை?
குழந்தை...வாலிபம்....வயோதிபமாய்
வாழ்வு கட்டாய நிதர்சனங்களாய்.
வாழ்வின்
சூழல் கைதிகளாகி
வாழ்வை எம்மோடு பூட்டி
அழகு பொம்மைகளாய் நாம்.

யதார்த்தக் குமுறல்களைக்
கொட்டித் தொட்டெழுத
நேற்றைய நாட்களை
இன்றைய நாட்களில்
மறக்காமல்
நினைவுகளை நிரப்பும்
வந்து போன வரவுகள்.
இதைத் தாண்டி
போர்... வறுமை...
அகதி வாழ்வு...தனிமை
ஒவ்வொன்றும்
அணு அணுவாய் எரிகையில்
அமைதி கொள்ள முடியாமல்
மூட மறுக்கிறது மனக்கதவு!!!

ஹேமா (சுவிஸ்)2004

1 comment:

விச்சு said...

அப்போது மனதில் நிறைய குழப்பம் என்று மட்டும் புரிகிறது.

Post a Comment