*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, September 27, 2009

தூங்க விடு கொஞ்சம்...

அன்புச் சுனாமியில்
அரவணைப்புச் சுழிக்குள்
இடறி விழுந்து
நொறுங்கிப் போனது
என் பிடிவாதங்கள்.

ஆறுதல் வார்த்தைகளில்
அடிமையாய்ப் போனது
என் இதயம்.

எழுப்பி எழுப்பி
அலுத்துப்போனது
எனது ஆயுள்.

இன்பமும் துன்பமும்
சிறைப்பட்டுப் போனது
உன் நினைவுகளுக்குள்.

உன் நினைவால் நிறைந்து
மேகத்தை மூடும் முகிலாய்
மூடிக்கிடக்கிறது
என் அன்றாட அலுவல்கள்.

இதயத் துடிப்போடு
கூடியிருப்பதால்
மூட மறுக்கிறது விழிகள்.

உன் ஞாபகத் தூசுகளை
துடைத்துத் துடைத்தே
தேய்ந்து போனது
என் மூளைக் குவளை.

அன்பே காது கொடு
சொல்கிறேன் ஒன்று
கேட்பாயா கொஞ்சம்.
உன்னால் முடியுமா !

எனக்குள் உன் நினைவுகளை
நீயே முடக்கிப் போடு.
இன்றாவது உனை மறந்து நான்
நின்மதியாய்
கண் துயில !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 25, 2009

ஒண்டும் விளங்கேல்ல...

செத்துப் போகலாம் போல இருக்கு.
சாகக் கூட உரிமையற்ற
பிறப்புக்களா நாங்கள்.
விசாரணையின் பெயரால்
ரத்தமும் சிதழும்
கலந்து கசிந்து நாற
பிறந்த மேனியாய்
மூத்திரம் சொட்டச் சொட்ட.
கால்கள் ஏவாமல்
மனம் சொல்ல நடக்கிறது கால்கள்.

பச்சை மிளகாய் வாங்கப் போக
குச்சொழுங்கையில் சங்கவியும் வர
பேசிச் சிரிக்கேக்க
வந்தாங்கள் ஐயா ஆமிக்காரன்.
இப்போ என்னண்டா
என்னவோ
உண்மை ஒண்டு சொல்லட்டாம்.
என்ன இருக்கு என்னட்ட உண்மை ?

உடுப்பையும் கழட்டி
உரிஞ்சான் குண்டியாய்
உதைக்கிறாங்கள் போட்டு.
தொங்க விட்டாங்கள் தலைகீழாய் நேற்று
மிளகாய் சாம்பிராணியும் போட்டு.
கம்பியாம் நாளைக்கு ஆணுடம்புக்குள்ள.
என்னவோ...
ஒரு உண்மை சொல்லட்டாம் என்னை.

ஈரெட்டு வயதின் எல்லைக்குள் நான்.
எனக்கென்ன தெரியும்.
அறியவில்லை அரசியல்.
அப்பா சொல்வார் கொஞ்சம் விளங்கும்.
மிச்சம் விளங்காது.
எம் தலை கிள்ளி முளை கிள்ளுவது
விளங்கியும் விளங்காமலும்.(புரிந்தும் புரியாமலும்)
எம்மை அழிக்கும் கருடர்கள் கையில் நாம்.
தெளிவாய் மிக மிகத் தெளிவாய்.


மற்றும்படி குண்டு வெடிக்கும்
ஹெலி பறக்கும்
பங்கருக்குள்(பதுங்குகுழி)பதுங்குவோம்.
ஓடுவோம் கோயிலுக்குள்.
தலையணையோ பாயோ
ஏன் சிலசமயம்
உடம்பில உடுப்புக் கூட இருக்காது.
என்ன வேண்டிக் கிடக்கு
உடுப்பும் சாப்பாடும்.
மனம் அலுத்துப் போகும்.
ஆனால் பயமில்லை.

வருவாங்கள் ஆமிக்காரங்கள்.
சன்னதம் ஆடுவாங்கள்.
இழுத்துப் போவான்கள் அடிப்பாங்கள்.
அப்பாவுக்கும் கால்முறிச்சவங்கள்.
பக்கத்து வீட்டு அல்லி அக்காவை
அசிங்கப் படுத்தினவங்கள்.
விசர் அக்கா இப்ப அவ.

உண்மை ஏதோ கேக்கிறாங்கள்.
என்ன சொல்ல இருக்கு என்னட்ட.
பயமாயும் கிடக்கு எனக்கு.
பொய் எண்டாலும் சொல்லலாம்.
அடிப்பாங்கள் சொன்னாலும்.
சொல்லாட்டிலும்
கம்பிதான் மூலத்துக்குள்ள
.

அப்பவும் சொன்னனான்...
அப்பா ஆமிக்காரன்ர அட்டகாசத்தை
எழுதிப் போடுங்கோ ரேடியோவுக்கு எண்டு.
எழுதின ஆக்கள்
காணாம போய்விடுவினமாம்.
கரம் நறுக்கி
காக்காய்க்கு போடுவாங்களாம்.
கவனம் தம்பி எண்டவர் அப்பா.
எழுதேல்லையே நானும்.
அப்ப என்ன உண்மை நான் சொல்ல?

ம்ம்ம்ம்...
துயரங்கள் சுமப்போம் முடியும் வரை.
அதே பாரம் கனமாய் மாறி
முடியாமல் போகும் ஒரு நாள்.
பார்க்கலாம் அதுவரை பொறுப்போம்.
சொன்னாலும் அடி விழும்.
சொல்லாட்டிலும்
அடிதான் விடிய விடிய.
விடிய வேண்டாம் இந்த இரவு மட்டும்.
நானும் சொல்ல வேண்டாம் ஒண்டும்.
செத்த இரவுக்குள்
சாகாமல் இருக்க நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 23, 2009

பேசு - பேசவிடு...

பெண்ணே பேசு...
கொஞ்சம் பேசு
பத்துத் தலைமுறை தாண்டியாச்சு.
அடுப்படி தாண்டி படலை கடந்து
பறக்கும் தட்டில் நீ இப்போ.
அகராதியில் பேதை என்றதாலோ
பேச்சின் உரிமையை
உனக்குள்ளேயே புதைக்கிறாய் - ஏன் ?
பெட்டைபுலம்பல் என்றான் யாரோ.
மனம் சலித்தால்
உன்னையே சலித்து
ஒழித்துவிடும் உலகில் உன் யாத்திரை.
எண்ணங்களின் உணர்வுகளை
உன் உரிமைகளை
கொஞ்சம் பேசேன்.

அடி கோழையே...
உன்னைப் பேசா மடந்தை என்றவன் ஓர் ஆண்தானே.
உடன் கட்டை ஏறச்சொன்னவனும் அவனே.
பெண்ணைப் பாதி சுட்டு மீதி தின்றவனும் அவன்.
அவன் காலத்தில் சொன்னதை இன்னும் !
ஏன் இன்றும் ஏகாந்தத்துள் நீ !
பேசடி பேசு.
பெட்டைப் புலம்பலாய் இல்லாமல்
பேனா முனையால் பேசு.
பகிரண்டம் கேட்கப் பேசு.
உள்ளத்து உணர்வுகளைப் பேசு.

ஆக மிஞ்சி...
உன் கண்களையாவது பேசவிடு.
சிரிக்கும்போது ஆனந்தக்கண்ணீராய்
நீ துவழும்போது
விம்மி வெடிக்கும் வேதனையாய்
கோபத்தில் காளியின் கூரிய வாளோடு
கண்களாவது பேசட்டும் விடு.
கண்களில் கூட
உன் உணர்ச்சிகளைக் கொன்றுவிட்டால்
வாயிருந்தும் ஊமைதானே நீ !!!

(தயவு செய்து என் ஆண் நண்பர்கள் கோபிக்கவேண்டாம்)

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 20, 2009

காதல் கிசுகிசு...

மழையில் நனைகிறாய்.
அட ...
நான் குடையாய்ப் பிறந்திருக்கவில்லையே
பரவாயில்லை வா
என் முந்தானைக் குடைக்குள் !

என்னைச் சரியாக்க
உன்னால் மட்டுமே முடிகிறது. பார்...
என்னைத் துவைத்து
மனக் கொடியில் காயவிட்டிருக்கிறாய்
கசங்காமலே !

என் கவிதைகளைக் கண்ணில் ஒற்றி எடுத்து
எதையாவது வந்து
சொல்லிக்கொண்டேயிருக்கிறாய்.
சீ...போடா வெட்கமாயிருக்கிறது.
உன் சின்னச் சின்ன
சில்மிஷங்களயெல்லாம் சேமிக்கிறேன்.
பிற்காலத்திற்கு உதவுமே என்று !

உன்னைப் பிடிக்கவில்லை
வேணாம் போ என்று
சொல்லிச் சொல்லியே
உன் நினைவுக் கயிற்றிலேயே
தொங்கித் தொடங்குகிறது
என் பயணம் !

இப்போ எல்லாம்
காற்றுக்கும் காவல் கிடக்கிறேன்.
எனக்காக நீ தந்துவிட்ட
கெஞ்சல் கொஞ்சல்களையெல்லாம்
அபகரித்துக்கொள்கிறது அது !

நீ காற்றில் உளறிய
ஒவ்வொரு சொற்களையும்
சிடுக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.
நீ திரும்பி வரும்வரை
என்ன செய்வது நான் !

எல்லாம் சரிதான்... 
கிழித்தெறியமாட்டாய்
என்கிற நம்பிக்கையில்தான்
மனு ஒன்று சமர்ப்பித்தேன்.
சொல்லாமலே கிழித்தது ஏன் ?

மௌனம்போல ஒரு சுமை இல்லை.
நம் கைகள் இறுக்கிய நிமிடம்தான்
மௌனம் என நினைத்தது தப்பானது.
இன்று...
இன்றைய உன் மௌனம் ?

உன்னை எழுத நினைக்கிறேன்
என் கவிதையில்கூட
நிறைய எழுத்துப் பிழைகள் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 18, 2009

எரிக்கப்படவேண்டிய கோட்பாடுகள்...

என்றோ கலைந்த
கனவுகள் மீண்டுமாய்
இன்றைய கனவின் தொடராக.
பழைய காயங்கள்
சிறிதுதான் ஆறியபடி.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

வாழ்க்கையில் படித்த பாடங்கள்
ஞாபகமாய்
எதையோ எடுத்துச் சொல்கிறது.
கேட்டுத்தான் ஆகவேண்டும்.
காற்றைப் பிடிக்கவும்
விற்கவும் நான் யார் ?
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

நசிக்கப்படுகிறது என் குரல்வளை.
சில கனவுகள் இரண்டு முறைகள்
ஆனால் ஒற்றைக் கோபுரத்தோடு.
நோன்பிருப்பவன் முன்னால்
தண்ணீர் விற்பவளாய்.
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !

அறிவு கெட்டவளே...
ஏன் திரும்பவும் திரும்பவும்
வாலாட்டிக்கொண்டு.
நாயிலும் கேவலமாய்
துரத்தப்படுகிறாய்.
கவனம்
உன சுயமரியாதை கவனம்.
கோட்பாடுகள் அத்தனையும் ஒருநாள்
தீயில் எரிக்கப்படும்.

இதயம் தேய்த்து வெளிப்படும்
இன்னொரு
பூதமொன்று இனியும் வேண்டாம்.
காணாமல் போனவர் பட்டியலிலோ
இல்லை ...
இறந்தவர் பட்டியலிலோ
சேர்த்துவிடு.

இதென்ன
ஏன் இப்போ மீண்டும் புதிதாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 17, 2009

மலையடிவாரத்துத் தோழியே...3

உன் அப்பாதான் தோட்டக் கங்காணி.
பறங்கி வெள்ளைக்காரத் துரையோடு
கையில் ஒரு தடியோடும்
வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்
தேயிலை மலைகள் நடுவில்
தூரமாய் உயர மலையில் தெரிவார்.
உன் அப்பாவும் அம்மாவும்
இப்பவும் சுகம்தானே தோழி.

உன் அம்மா சுடும் ரொட்டியும்
சம்பலும் அது ஒரு அலாதி ருசியடி.
ஒற்றை ரொட்டிக்கு எத்தனை கைகள் நீளும்.
ம்ம்ம்...மாங்காய்க் குழம்பு.சேமக்கிழங்குக் கறி.
கடைந்தெடுக்கும் வெண்ணையில்
பொரித்தெடுக்கும் முருங்கையிலைக்கு எத்தனை சண்டை.
சுடுநீர்க் குளியல்.
எண்ணை சளிக்க வைத்து வலிக்க வலிக்க
இழுத்துப் தலை பின்னிவிடும் உன் அம்மா.
போடி போ...மனம் களைத்துச் சோர்கிறது.
முடியவில்லை எனக்கு உன்னை நினைக்க.

ஒரு நாள் பகல் பொழுதில் கண்ணை மூடிக்கொண்டு
இரு கைகளை ஒரு கையாக்கி சுடுகாடு தாண்ட
வேணுமென்றே யாரோ பயமுறுத்த
காய்ச்சல் பீச்சலோடு படுத்துக் கிடந்தோமே
இருவரும் வாரம் இரண்டு.
இன்னும் நான் அப்படியேதான். நீ ?

அந்த இந்தியத் தமிழ் மக்கள் பேசும் தமிழின்
இழுவையும் ஒரு சங்கீதம்தான்.
உன்னோடு திரிந்த
அந்த இளமைக் காலத்தில்
பன்னிரண்டு வயதுவரை
அந்தத் தமிழைத்தானே நானும் உச்சரித்தேன்.
பின்னர்தான் அணைத்தது
யாழ்ப்பாணத் தமிழ் என்னை.
காலம் பிரித்தது கல்வி என்கிற பெயரில்
உன்னையும் என்னையும்.

மறந்தே விட்டேனடி இன்னொன்றை.
உன்னோடு உங்கள் பண்டிகைகள்.
ரதி மனமதன் கூத்து,மாவிளக்குப் பூஜை
மஞ்சத்தண்ணி நீராட்டு என்று.
முழுதாக இல்லை என்றாலும்
நீறாக நினைவு தெளிந்து மறைகிறது.
இதைவிடப் பௌத்த மக்களின்
பன்சல (புத்தவிகாரை) புத்தனின் பெரிய உருவம்.
இருவரும் இறுக்கிக் கைகளைப் பிடித்தபடி
முட்டுக்காலில் தாமரைப் பூ வைத்து
ஊதுவர்த்தியும் ஏற்றிக் கும்பிட்டதும்
நினைவலையாய்.

இத்தனை வயது கடந்த பின்னும்
கடந்த தடங்களைத் தூசு தட்டி
உன்னையும் தேடுகிறேன்.
என் அம்மா கோழிக்கு அடை வைப்பா
பத்து முட்டை என்றால்,
அதில் எங்கள் அத்தனை பெயர்களையும்
பொறித்துக்கொண்டு காத்திருப்போம்.
எப்போ என் முட்டை குஞ்சாய்ப்
பொரிக்குமென்று.
அந்தக் குஞ்சுகளும்
எங்கள் பெயரிலே உலவி வரும்.

இன்றைய நாகரீகச் சூழலில்
அன்பும் அமைதியும் தெய்வமும் தூய்மையும்
தொலைந்த தேசத்தில் நாம்.
சொர்க்கமாய் இருந்த அத்தனையும்
இற்றுப்போனதாய்.
நோக்கமில்லாமல் நகரும் உலகம்.
அதனால்தான் அழிவுகளும் ஏராளம்.
இத்தனை அழிவுக்குள்ளும்
இயலுமானவரை காத்துவைப்போம்
விழிகளுக்குள் எம் அழியா நினைவுகளை.
என்ன இன்பம் என்ன சுகம்.

கண்கள் திரைகிறதடி
முழுதாகச் சொல்லாவிடினும்
எழுதியதில் முழுதாய் இருக்கிறாய் என்னோடு நீ.
அப்போது இருந்த நான்
இப்போ எனக்குள்ளும் இல்லை.
மலையடிவாரத்து என் தூரத்துத் தோழியே
என் இனிய நண்பியே
கூடப்பிறவா சோதரியே...சகியே
வளைத்துப் போடமுடியா
அந்த இன்பப் பொழுதுகளை
மீண்டும் கண்டுகொள்வோமா ?
நானும் நீயும்...
எப்போ சொல்லடி !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் போதும்]

Wednesday, September 16, 2009

மலையடிவாரத்துத் தோழியே...2


மூத்திரக்காய் மரத்தடியில்
பொன்னையா மாஸ்டர்
அதுதானடி மூக்குப்பொடி மாஸ்டரின்
முதலாம் மூன்றாம் வகுப்பு மிரட்டல்கள்.
பாடநடுவில் அவரின் யாழ்ப்பாணச் சமையல்
மணமும் மூக்கைத் துளைத்து
பசியையும் தூண்டும்.

அடுத்த வகுப்பை மறைக்க பிரம்புத் தட்டி ஒன்று.
என் அப்பாவின் வகுப்பு நடக்கும் அங்கே.
அவரின் சத்தம் ஊரையே கூட்டும்.
வீட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் இடையே
ஒரு தேயிலை மடுவம் ,ஒரு கோயில்
ஒரு ஆறு,ஒரு வயல் வெளி,பாலம்,சிறுகுளம்
படிக்கட்டுக்கள் வைத்த சரிவாய் தேயிலைத் திட்டுகள்.
மீண்டும் சலசலக்கும் பெரிய ஆறு,பாலம்
கடக்கப் பள்ளி வரும்.
மூச்சு விட்டுக்கொள் கொஞ்சம்.
அப்பாவின் "டேய் பிள்ளைகளா"அதட்டும் சத்தம்
இத்தனையையும் தாண்டி
என் வீட்டுச் சுவரில் எதிரொலித்து
சமைக்கும் அம்மாவின் காதில் பட்டுப் போகும்.
இன்னும் அப்படியே அனைத்தையும்
அள்ளிக் காண்கிறாயா.
அத்தனை காட்சிகளும்
எத்தனை வருடங்கள் கடந்த பின்னும்
தூரத்துத் தோழியின் நினைவோடு
நிழலாடுகிறது மீண்டும்.

தேயிலை மலைமுகடுகள் தாண்டி
காலைச் சூரியன் சுள் என்று மேல் எழும்ப
மெல்லப் பனியும் சில்லென்று சேர
சொல்ல முடியா அழகுக் கோலங்கள்.
அப்பப்பா...
அனுபவித்த சுகங்கள்
நெஞ்சக்குழிக்குள் சோகங்களாய்.
விடியலின் வனப்பில்
தேயிலை மடுவத்தில் சங்கு ஊத
ஐந்து மணிக்கே ஊர்ந்து வரும் தொழிலாளர்கள்.
இடுப்பில் கைக்குழந்தைளோடும்
முதுகில் கூடைகளோடும் கூடும்
பெண்களும் ஆண்களுமாய்.
மேல்கணக்கு கீழ்க்கணக்கு
என்று டிவிஷன் பிரித்து பெயரும் வாசிக்க
இடையில் சாக்குக் கட்டி
வரிசையாய் பிரிந்து போய்
கொழுந்து பறிக்கும் அழகே அழகு.

இரப்பர் மரங்களில் பொருத்திய சிரட்டைகளை
பிய்த்துக்கொண்டு குடல் தெறிக்க ஓட்டம்.
தேயிலைக் கன்றுகள் நடுவில்
ஒளித்துப் பிடித்து விளையாட்டு.
மர அசைவு கண்டு அதட்டல் ஒன்று
"யாரடா அது"அது உன் அப்பா.
உன் அப்பாவை
பாப்பாவின் ஐயா"பாப்பையா"என்றே அறிமுகம் எனக்கு.
பெயர் நான் அறிந்திருக்கவில்லை இன்றுவரை.
சரியான பயமும் மரியாதையும் அவரில் எனக்கு.
ரதி என்று கூப்பிட்டால்
எட்டடி தூர நின்று"என்னாங்க ஐயா"என்பேன்.
நீயும் நானும் நடத்தும் நாடகங்களை
அப்பாவிடமும் போட்டுக் கொடுத்தும் விடுவார்.
வாங்கிக் கட்டியும் கொள்வோம்.
எத்தனை நாட்கள்.
அன்று வலியாய் இன்று வடுவாய்
நினைவுப் புண்கள் !!!

ஹேமா(சுவிஸ்)
[நாளை முடியும் ஞாபகங்கள்]

Tuesday, September 15, 2009

மலையடிவாரத்துத் தோழியே...1

மலையடிவாரத்து
என் தூரத்துத் தோழியே...
உன்னைக் கண்டு எவ்வளவு காலமடி.
கனவில்கூட வரமாட்டாயாமே.
என்னைப்போலவே
நீயும் அதே மலையடிவாரத்தில்
சுகமாய் இருப்பாய் என்கிற
நம்பிக்கையோடு நான் இங்கு.
காற்று வாக்கில் கூட
உன்னைப் பற்றிய செய்திகள்
கேட்டு நாளாயிற்று.
நான் இங்கு அகதித் தமிழ்க் கிளியாய்
வெளிநாட்டுக் கூண்டில்.

மலையடிவாரத்து
தூரத்து என் நண்பியாய்
இளமைக காலங்களை
நினைக்க வரும்போதெல்லாம்
சடாரென்று உன் உருவம்தான்
ஓடி முன் வரும்.
என் இளமைக்காலத்தை
முழுதாய் பங்கிட்டவள் நீதானே.
சின்னப்பாப்பாவைக் காணாவிட்டால்
ரதியும் தொலைந்திருப்பாள்.

உன் அக்கா,நீ,உன் தங்கை
நான்,என் தம்பி,தங்கைகள் இரண்டு.
பார்ப்பவர் சொல்வது
ஒரு தாயின் பிள்ளைகளாய்.
அதுவும் உன் அக்காவும் நானும்
நிறத்தில் உருவத்தில் ஒன்றாய்.
குணத்தில் ஒன்றாய்.
இளமை தொலைந்துகொண்டிருக்க
முதுமை முதுகில் ஏற
அன்றைய நாட்களை மீண்டும் மீட்கையில்
கண்களில் சொல்லொணாச் சோகம்.

முதுமை நரைகளுக்கு
இளமை மை பூசி மீட்டிப் பார்க்கிறேன்.
நீயும் வேணுமடி அதற்கு.
சிட்டாய் சிறகடித்த கணங்களை
மனக்குழிக்குள் இருந்து
தோண்டி எடுக்கிறேன் நீயும் வா.

நாம் நடந்த விளையாடிய அதே இடங்கள்
இன்னும் இருக்கிறதா?
தேயிலை மலைகள்,ரப்பர் காடுகள்,
பறித்த பழ மரங்கள் இன்னும் எவ்வளவு.
எம் தடங்களாவது தெரிகிறதா தோழி.
வான் தொடும் மலைகள் எங்கும்
விதவிதமாய் எத்தனை வர்ணப் பூக்கள்.
உங்கள் வீட்டில் வளர்ந்த
சண்டை போடும் கொண்டைச் சேவல்.
உன்னைக் கண்டாலே
கலைத்துக் கொத்த வரும் தீக்கோழி.
கட்டை வாழையில் குலை பழுத்திருக்க
முன் பக்கப் பழங்கள் இருக்க
உள்ளால் கோதிவிடும் அணில்கள் நாம்.

கொட்டும் மழையில்
ரெயின் கோட் மறந்ததாய் பொய் சொல்லி
சேறு விளையாடி
தொப்பையாய் நனைந்து வர
தலை துடைத்து உலர்த்துமுன்
அழுதபடி முட்டுக்காலில் இருவரும்.
பின் சேற்றுப்புண்
இரண்டு காலையும் பற்றிக்கொள்ள
குண்டியால் நடந்ததும் ஞாபகம் இருக்கா.

ஒட்டி ஒட்டி உறவாடி
உள்ளிருந்து இரத்தம் உறிஞ்சும்
ரப்பர் அட்டை கௌவிக் கடித்திருக்க
நான் கத்திக்குளறி ஆர்ப்பாட்டம் போட
தேயிலை கொய்யும் அம்மா
போயிலை எச்சில் துப்பி மருந்திட
இரத்தமும் கக்கி
பந்துபோல அட்டையும் உருண்டு விழ
இரத்தம் கண்ட அதிர்ச்சியில் நீயும் மயங்கி விழ...
உயிருக்குள் உணர்வுக்குள்
உறைந்து கிடக்கும் நினைவுத் துகள்கள் அது.

இன்னும் ஒன்று சகியே...
பாவம் என்று நினையாத பருவம் அது.
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
உங்கள் வீட்டுத் தோட்டத்தில்
போஞ்சி,கீரை,புடலை என்று
காய்கறிகளின் நுனி கிள்ளிப் போகும்
நத்தையின் மேல் கோவம்.
நத்தை அழிப்பு.நாம்தான் ஆமிக்காரனாய்.
ஒரு நத்தைக்கு இரண்டு சதம்.
நிலா வெளிச்சத்தில் நத்தை வீட்டு விலாசம் தேடி
வெற்று மீன்டின்னுக்குள் சமாதி கட்டுவோம்.
சேரும் நாளொன்றுக்குக் குறைந்தது
இருபது முப்பது நத்தைகள்.
நத்தை பிடித்த பணம்
பல்லி முட்டை மிட்டாயாய்
எம் வாயில் இனிக்கும்.
இன்று நினைகையிலும்
இனிக்கின்ற நாட்களாய் அது.

பெரும் கரும்பாறைகளில் பொறித்த
நம் பெயர்கள் கரிக்கட்டைக் கோலங்களாய்.
நாம் உரக்கக் கத்துவதை
அப்படியே திருப்பிக் கூறும் அதிசய மலைகள்.
மரங்கள் நடுவில் உரக்கக் கீதம் பாடும் புள்ளினங்கள்.
அடை வைத்து
இறக்கிவிட்ட கோழிக்குசுகளுக்காய்
சிறகடித்துத் திரியும் பருந்துகளுக்கும்
கீரிப்பிள்ளைகளுக்கும் கூட
நாம்தானே காவல்காரர் கம்போடு !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் தொடரும் நாளை]

Saturday, September 12, 2009

வேணும் பத்து வரங்கள்...வரமென்று கேட்டதில்லை.
வந்ததும் நிலைப்பதில்லை.
வேணுமென்று கேட்டதில்லை.
வேண்டுமென்று எதுவுமில்லை.

பிரியமுடன் வசந்த்
பிரியமாய்க் கேட்கிறார்.
பத்து வரங்கள்...
கேட்கணுமாம்
ஏஞ்சல் தேவதை வாசல் வந்தால்.


ம்ம்ம்....
என் மனதில் முன்னுக்கு
முளைப்பதெல்லாம்
என் வீட்டு முற்றம்தானே !

ரத்தமில்லா - யுத்தமில்லா என் பூமி.
பாரபட்சம் இல்லா அரசியல்.

சுத்தமான காற்று.
சுதந்திர தேசம்.

கனவுகள் வற்றிய கல்லறைகள்.
கனவால் நிரம்பா வீடுகள்.

கடவுள் இல்லா உலகம்.
மதங்கள் இல்லா இறைவன்.

சாதியில்லா மனிதன்.
பசியில்லாப் பிஞ்சுகள்.
nice

பேதம் காட்டாப் பெற்றோர்.
பெருத்த கனவோடு வளரும் தலைமுறை.

சரிநிகராய் நாங்கள்.[பெண்கள்]
அன்பாய் ஆணகள் குறை சொல்லாமல்.

கரம் தவறாத மக்கள்.
கல்வியோடு மனிதம்.

எனக்கென்றும் ஒரு வாழ்வு.
இறப்பிலாவது என் மண்.

நோயில்லா மெய்.
நட்பு தரும் ஒரு பூ.

எல்லோரிடமும் அன்பு வேண்டும்.
எல்லாமே கேட்க வேண்டும் !!!


இன்னும் அனுப்புகிறேன் ஏஞ்சலை

ஜெஸ்வந்தி -
மௌனராகங்கள்

கீழை ராஸா - சாருகேசி

சத்ரியன் - மனவிழி

பாலாஜி - சி @ பாலாசி

கும்மாச்சி - கும்மாச்சி

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 09, 2009

போய் வா...

இனியவனே...
இறக்கை கட்டிக் கொண்டு
போய் வருகிறேன் என்கிறாய்.
எனக்கு இறக்கை முளைக்க வைக்காத
இறைவனைச் சபித்து
போய் வா என்கிறேன்.

எத்தனை சோதனைச் சாவடிகள் கடந்திருப்பேன்.
உன் சாவடி கடக்கையில் மாத்திரம்
இரத்தம் உறைந்து போகிறது.
பரிசாகப் பதக்கமா கேட்டிருந்தேன்.
புரிந்திருந்தும் பயணமாகி விட்டாய்.
எங்கள் ஊரின்
சோதனைச் சாவடிகள் கடக்கையில்
காயங்களாவது மிஞ்சியிருக்கும்.
இங்கே...!

அறிவாயா அன்பே
உன்னைப்போலவே
விழிகளுக்குள் குருதி தேக்கி
காட்டிக் கொள்ளாமலே சிரிக்கிறேன்.
நிர்வாண தேசத்துள்
ஆடை அணிந்தவைனைத்
தேடிக்கொண்டிருக்கிறாய்
உன் கனவுகளுக்குள்ளும்
நான் எழுதும் கவிதைகளுக்குள்ளும்.
இப்போதைக்கு உன் கைக்குள்
அகப்படப் போவதில்லை
அந்த நிழல்க் கனவு.

நேற்றைய இரவு
காத்திருந்து களைத்து
தூங்கப் போகிறேன் என்கிறேன்.
உன் கனவுகளைக் காக்கச்சொல்லி
கதவுகளைச் சாத்தி
சாவியை மாத்திரம் உன்னோடு
வைத்துக் கொண்டாய்.
ம்ம்ம்...
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தையும் காட்டு என்கிற
பதத்தையே காக்க வைத்த
களவானிப் பயலடா நீ.

விடியலின் வெள்ளிக்காய்
முகாம்களில் காத்திருக்கும்
என் இனம் போல
சலிக்காமல் காத்திருப்போம்
நானும் என் கன்னங்களும்.
நலமாய்ப் போய் வா !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, September 07, 2009

அது....

அது.....அது...
அதுதான் அது...
சின்னதாய்...பெரிதாய்
அழகாய்... வித விதமாய்
வடிவங்கள் மாறினாலும்
இயக்கும் கையில் இயங்கும்
இயல்பாய்...
மாறாத மனம் கொண்டதாய்
அதற்கென்றே விதிக்கப்பட்ட
தனிப்பட்ட குணமுள்ளதாய்.

நண்பனோ எதிரியோ
தயவோ தாட்சண்யமோ இன்றி
எதுவுமே... எல்லோருமே
சமமாய்
நீட்டிய திசையில்
தன்பணி நிறைவாய்.

ஆயிரம் காரணங்கள்
ஆயுதங்கள் கையிலேந்த.
தட்டிக்கொடுக்கும் கையையே
தனக்கெதிராய் திசை திருப்பும்.
கணங்கள் நொடிகளுக்குள்
உலகப் பந்தில்
உயிர்.....
ஒரு இதுவாய்.

யார் கையிலும் ஆயுதம் இங்கு.
கொலைவெறி...இரத்த தாகம்.
எல்லோருமே எஜமானர்கள்.
யார் யாரையும் கொல்லலாம்.
வாழ்வு வரம்..சாவு சாபம்.
உயிர்.....
உதிர்ந்து விழும்
மயிரை விட மோசமாய்.

மனிதம் தொலைந்து
மனித உயிர்கள் மலிந்து
மாதங்களாய்... வருடங்களாய்
கடந்து கால காலமாயிற்று.
உயிர் கொடுக்கக் கடவுளும்
உயிர் எடுக்க மனிதனுமாய்.
மிருகங்களில் கூட
ஏதோ எங்கோ ஒன்றுதான்
அதிசயமாய்
தன் இனத்தைத்
தானே தின்னும்.
மிருகங்களை வென்றவனாய்
இங்கு மனிதனும் இப்போ.

வலிக்கிறது...
மனம் ஒரு மாதிரியாய்.
சூழ்ச்சி வலைகளுக்குள் சிக்கி
சச்சரவே வாழ்வாய்.
சரித்திரமும்
சாதனைகளும் படைக்க
மானிடம் தேவை.
மனிதன் இல்லா மண்
ஏன் ??? எதற்கு.
மனிதம் இல்லா மனம்
ஏன் ??? எதற்கு.

அரசியலோ... அகிம்சையோ
ஏகாதிபத்தியமோ...
மாட்சிசமோ... மண்ணாங்கட்டியோ
தயவுசெய்து
தன்பாட்டில் வாழவிடுங்கள்
மனிதனை!!!!!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 04, 2009

தொடரும் வாழ்வில்...நண்பன் ஒருவன் இறந்ததாய்ச் செய்தி.
தற்கொலையாம்.
தன்னைத் தானே சுட்டுக்
கொண்டானாம் - கொன்றானாம்.
கோழை என்றாலும் வீரன்.
எதிரியின் குண்டு வாங்கிச் சாகாத வீரன்.

பிரச்சனைகளோடு விளையாட முடியாமல்
தோற்றுப்போனானாம்.
எதிர்க்காற்றில் நீச்சலடிக்கத்தானே
நேசங்கள் நீக்கி
தேசம் கடந்து
சர்வதேசக் கூலிகளாய் நாடு கடத்தப்பட்டோம்.

அழத்தான் முடிந்தது.
அரற்றினேன் நண்பர்களிடம்.
வந்து பேசியது அவனது முகம்.
அவன் மனைவி ,ஐந்தே வயதான மகன்.
ஏனடா....நீ எங்கேயடா.

பொழுது நகரச் சாப்பிட்டேன்.
படுக்கையில் புரண்டேனே தவிர
தூக்கம் புழுவாகி நெளிந்தது.
அவனது புள்ளியில்.

விடிந்தது...தொலைபேசியில் விசாரித்தேன்.
புறப்பட்டேன்.
மாற்றுத் துணிகளோடு புகையிரதத்தில்.
டிக்கட் எடுத்தேன்.
அறிவித்தலுக்காகக் காத்திருக்கிறேன்
கோட்டுக்கு வெளியில்.
யன்னலோர இருக்கையே பிடிக்கிறது.
தேடி இருந்து கொள்கிறேன்.
யாரோ ஓட்டுனர் கதவைத்
திறந்தால் மட்டுமே ஏறவும் இறங்கவும்.
மூன்று மணித்தியாலப் பயணம்.
தூங்கியும் இருக்கலாம்.

இறங்கி நடக்கிறேன்.
பாதையின் இடையில் சிநேகிதர்கள்
குசல விசாரிப்பு.
சந்தோஷமான விடயங்களும் கூட.
அண்ணா வீட்டுக்குப்
பழங்களும் இனிப்புக்களும் பை நிறைய.
இறந்தவர் போக இயல்பு வாழ்வு
கை கோர்த்துக் கொள்கிறது.

போனேன்...
அவளைப் பார்த்ததுமே குழறி அழுதுவிட்டேன்.
குழந்தை சிரித்தான் தூக்கினேன்.
பிடிக்கவில்லை அவனுக்கு என்னை.
இதோ விளையாடிக் கொண்டிருக்கிறான்.

சம்பிரதாயங்கள் நடந்தன.
முடிந்தன.
முடிந்தது எல்லாமே மூன்று நிமிடத்தில்.
அந்தப் பிஞ்சு கேட்கும் கேள்விகள்
மட்டும் முடிவில்லாமல்.
" அம்மா அப்பா எங்கே? " !!!

ஹேமா(சுவிஸ்)

ஊரில் என் அயலவரும் நண்பருமான
பொ.கேதீஸ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.(31.08.09)

Wednesday, September 02, 2009

முற்றுப் பெறாத இனம்...

அன்று...
அரை வயிறுதான்
உறவுகள் வீடு நிரம்பலாய்.
இன்று...
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்.
இன்றும்...இப்போதும்
நான் பசியோடுதான்.

ஆண்ட தமிழனாம்
இன்று
அம்மணமாய்
அடிமையாய்
அகதியாய்
அநாதையாய்!

கொழுத்த சிங்களம் அறிந்ததோ
முற்றுப் பெறாத இனம் தமிழனாய்.
அதுதான்
பொட்டே வைக்காமல்
முற்றுப்பெறாத சொல்லாய்
"தெமிழ"என்கிறதோ?

முட்கம்பி தாண்டி
கண்களில் நீர் ஏந்தியபடி
தூர நின்று அம்மா என்கிறேன்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்.
ம்ம்ம்...
அப்போ அம்மா எங்கே?
கம்பிகளோடு கம்பியாய்
ஒரு கை அசைகிறது.
மகளே...
சுருதிப் பெட்டியோடு
இணந்த குரல்
ஈனஸ்வரத்தில்.
அது அம்மா.

இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!

ஹேமா(சுவிஸ்)