*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, July 08, 2015

அப்பா...அப்பா...

கவியாய்
எனைப் பிரசவித்த
என் குழந்தை...

தன் பெயரையே
என் கவிக்குப் பெயராக்கிய
என் அப்பாக் குழந்தை...

பறையோசையின்
அதிர்விலும் உறங்குகிறது
இறுதிக் கவிதைக்கான
வார்த்தைகளை
என் கண்ணீரில்
நனைத்துவிட்டு.

எனக்கான குறிப்பேதும்
விட்டுச் சென்றதாய்
எந்தத் தடயமுமில்லை
என்னைத்தவிர.

அடிவயிற்றில்
கயிறிறுக்கி
காலன் உயிர் பிடுங்கையில்
அவர் எழுதி ஒடிந்த
பேனா முனையென
மூன்று சொட்டுக் கண்ணீர்
மூடிய விழியில்.

எழுத்தறிவித்த
என் இறைக் குழந்தை
என்'அப்பா'
'குழந்தை நிலா' வின்
இக்குழந்தை...

இனியொருபோதும்
திறக்கா அவ்விழி
இனியொருபோதும்
'அம்மா' வென அழைக்கா
அப் பாசமொழி.

எரிந்த சிதையிலிருந்தும்
புரண்டு விழுந்திருக்கும்
ஒற்றை விறகு
எனக்கே எனக்காய்!!!

குழந்தை நிலாவின் குழந்தை குழந்தைவேலு என் அப்பா யூலை 1 ல் என்னை விட்டு இறைவனடி சேர்ந்தார்.

Tuesday, June 02, 2015

என்னூர் இளவரசி...

"கொஞ்சம் கழனித்தண்ணி தாங்கோ
என்ர குஞ்சுகளுக்கு."

ஒரு போதும்
இரங்கியதில்லை தனக்காய்
நாமாய்ப் போர்த்திவிடும்
ஒருபாதிச் சேலை தவிர.

தெருவோரம் உருட்டிவிட்ட
சாராயப் போத்தலென
வெறித்தபடி லட்சியமாயொரு
ஆயாச நடை.

பெருமூச்சோடு
தெருக்கடக்கும் ஒருவன்
தீய்ந்த தேகத்தோடு ஒருவன்
எச்சில் வழிகிறான்
இன்னொருவன்
அவள் பெருமுலைகள்
மூட மறுத்த முந்தானை
முனையிலொருவன்.

உணராப் பிறழ்வோடு
உறைகிறது
உள்மனத் தீக்காடு
கருக்கொண்ட
அவள் தீக்குள்ளேயே.

இருத்தலும் தொலைதலும்
பிரியமென்றால்
ஏக்கங்களின் நிறங்களே
அவளின் நாய்க்குட்டிகள்.

ஒன்று இடுப்பில்
ஒன்று கையில்
இன்னொன்று
வயிற்றுச் சேலைக்குள்ளுமாய்
காவி...

தன் உயிருக்கும்
வாழ்வுக்குமிடையிலான
கருணையற்ற
கடவுளின் மௌனமாய்
நிராகரித்த மனிதருக்குள்
'மனுஷி' என்கிற ஒழுங்கறுத்து
'நாய்க்குட்டி விசரி'யாகி
நடக்கிறாள்
நேற்றின் தடத்திலும்
நாளையின் நவீனத்திலும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, May 21, 2015

ஒரு யுகமழித்த வழி...

இதே.....
இரவாய்த்தான் இருக்கவேண்டும்
குரைத்தலின் ஓசை
கூடியும் குறைந்தும்
பாதச்சுவட்டை அழித்தழித்தே
கடக்க வேண்டியிருக்கிறது.

அடர்ந்த கிளைகள் அடவெடுக்க
முகிலின் திணவெடுத்த உரசல்கள்
காம்புகளில் உருண்டு
நர்த்தனமிட
மாறிய உருவகத்து
கவிதை வார்த்தைகளாய்.

எம்பிய காற்றுச் சருகுகள்
குவளையாக்கிய
வல்லினக் கனவுகளை
சல்லடையாக்குகின்றன
அமானுஷ்யங்கள்.

வெறுமனே சிக்குண்டு கிடக்கும்
சிலந்திகளுக்கு
ஆறுதல் இப்பொழுது.

கூடுதங்கும் பறவைகள்
மரங்களின் வேரறுத்தல்
பகல்களில் தானென
வேரூன்றும் கன்றுகளின் நிழல்களில்
பசியாறத் தொடங்கியிருக்கின்றன.

நம்புங்கள்
கணநேரத்தில் விடிந்துவிடும்
பயணங்களில் சந்திக்கலாம் நாம்
நீயும் நானும் கூட.

விடிகாலை மணியோசை
பகலைச் சமைக்கத் தொடங்குகிறது
சூரிய வெக்கையில்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Monday, May 18, 2015

அடங்காதவதர்கள் மாதமிது...

நீறாக்கப்பட்டது நிமிடத்தில்
தமிழனின் நிம்மதி
முள்ளிவாய்க்கால்
நீங்கா நினைவு நாளின்று.

கடக்கிறது காலம்
காவுகொடுத்த அக்கணம்
கடப்பதில்லை இம்மியளவும்
தமிழர் மனங்களில்.

இரத்தவாடைப் பூக்களை
தலையிலும் சூடாமால்
இறைவனுக்கும் படைக்காமல்
மண்கிளறி
மனப்பிறழ்வானவளாய்
தீ வார்த்துக்கொண்டிருக்கும்
என் குழிக்கு நான்.

தொலைத்த அவர்களின் குறிப்புக்கள்
வானுக்கும் மண்ணுக்குமாய் தொங்க
வழியேதுமின்றி
வாய் சளசளக்கும் விமர்சகர்கள்.

குடியிருக்கும் இடத்தில்
கோவில் வைப்பவர்கள் நாங்கள்.

இருப்பைக் கலைத்து
எல்லைகளை நகர்த்தி
கைகளில் எரிகற்களோடு
குற்றங்கள் ஏதுமற்ற மனிதர்களென
பலியிடும் விலங்குகளுக்காய்
வழக்காடும் அவர்கள்
கோயிலை வைத்துவிட்டு
குடிகளை இருத்துபவர்கள்.

நினைவு விளக்கில்
நிழல் காட்டும்
என் மக்களின் முகங்களை
உரக்க விசாரித்து
எழுதிக்கொண்டிருக்கிறேன்
பெயர்களை.

எவராலும்
எதுவும் செய்யமுடியாது
என்னை இப்போ!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

மே 18 2015 !

பூக்களை
பூக்களே கொன்றதாய்
பூக்களே குற்றம் சாட்ட
இடைநிறுத்தி
முடிவடையா வாசனைகளை
அடைத்துக்கொண்டது காற்று.

துவக்கைத் தூக்கினாலும்
பொத்திப் பொத்திப் பக்குவமாய்
தன் கதிருக்குள் அடைகாக்கும்
நம் சூரியன் பூக்களை.

சூரியகாந்திகளாய்
கார்த்திகைப் பூக்களாய்
வாடா மல்லிகைகளாய்
மண் மணக்கும்
வான்காவின் காவியமாய்.

கடவுள்கள்
நம்மோடு வாழ்தல் வரம்
வாழ்ந்தோம்
வாழ்கிறோம்.

துவக்கில் பூத்த இப்பூக்கள்
வானிலும்
வரப்பிலும்
தரையிலும்
தண்ணீரிலும்.

அக்காக்களாய்
அண்ணாக்களாய்
தம்பிகளாய்
தமிழச்சிகளாய்
கண்ணம்மாக்களாய்
இசைப்பிரியாக்களாய்
பிரசாந்திகளாய்
விபூசிகாக்களாய்
இப் பூசணிப்பூக்கள்
நம் வீட்டுக் கோலங்களில்.

எப்படி...எப்படி...எப்படி அழைக்கலாம்
இப்பூக்களை...

தீயாய் பூ கக்கும்
துவக்குகளை
கூட்டுப் பூக்களை
களை கொல்லும் புழுக்களை
எப்படி அழைக்கலாம் ?

நீந்தலறியாதவன்
வெளியில் நின்று
மீனை அழகென்பான்
தரையின் நீந்துவான்.

நாமோ.....
நீந்தும்
கடல் வேங்கைகளென்போம்.
மிதக்கும் பூக்களை.

தாங்கியே தேங்கியிருக்கிறது
நந்திக்குளம்
நம் தாமரைகளை
அள்ளிக்கொள்வோம்
சுதந்திரப் பூக்களென
ஒருநாள்....ஒருநாள்.

அதுவரை
ரசிக்கப்போவதில்லை
மகரந்தம் தின்னும்
பட்டாம்பூச்சிகளையும்
பிரயோசனமில்லா
எந்தக்
காட்டுப் பூக்களையும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Sunday, May 17, 2015

காற்றாகி அவன்...

மீண்டும்....
பிரபஞ்சம் நிறைக்கிறான்
வானொலிக்காரன்
தோட்டமெங்கும்
வெண் பூக்கள்
அவன் குரலாய்.

மரவண்டுகள் துளையிட்ட
துவாரங்களுக்குள்
தந்துபோன
ஒற்றைச் சிறகு
முதுகு
தாங்கா நேரங்களில்.

அந்தரத்தில் தொங்கும்
அவன் குரலை
வானலைக் காகங்கள்
பறக்கும் சுதந்திரம் சொல்லி
அரம்பையாகிய
தூக்கணாங்குருவியின்
கதை சொல்லி
எச்சில் படுத்துமோ...

அவன் குரல் தாண்டி
அதிரச் சப்தம் போடும்
மரவண்டுகள்
இறக்கைகளை
தூர்ந்த சொற்களால் தின்னுமோ
ஒருவேளை ...

கன்னிப் பேடைப் பிரசவமாய்
ஒரு முத்தம் பெறும் வலி
கொடுக்கும் வலி
முடிவிலியாய் தொடரும்
இவ்வாதை வலி
மரவண்டுகளறியா.

புன்னகைத்து
என் கையறு கண
பேரிழப்பைச் சமாளித்து
என் மார்பை
சப்பித் துப்பட்டும்
மரவண்டுகள்.

அவன் சிறு உலகத்தில்
அவனுக்கான
என் முத்தங்களை
தொங்கவிடுகிறேன்
தூக்கணாங்குருவியாய்.

தேவனே இதோ
இதோ....

மு
     த்
        த
            ம்.

ஈரமுத்தம்...

இன்னொன்று
இன்னொன்று...!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)