*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label மாவீரர் தினம் 2014. Show all posts
Showing posts with label மாவீரர் தினம் 2014. Show all posts

Thursday, November 27, 2014

இளைப்பாறலின் விமர்சனம்...

மஞ்சாடி விதைகளை
சேமித்து
மூடி வைத்திருக்கிறது
அடி வேர்களில்
என் மண்
முகட்டு வளையில்
நகங்கள் கிள்ளிய வடுக்களோடு.

குருதி உலர்ந்த வெடிப்பின்
மூலை மடிப்புக்களில்
பொறுக்கியெடுத்த
ஆயிரமாயிரம் கதைகளை
வியாபாரத்துக்கென
திருடிக்கொண்டிருக்கிறது
சினிமாக்களும் இணையங்களும்
நிறை கொள்கலன்களில்
தப்புத்தப்பாய்.

வான்மேகம்
என் தேசப்படத்தின்
முகவரியழித்துத்
திருகிக்கொண்டிருக்க
காத்திராக் காலங்கள்
நழுவி அதிரும்
தந்திக் கம்பிகளில்.

வாழ்ந்த வீடு
சிதறிய சொந்தம்
கருக்குமட்டைப் படலை
குடல் சிதறிச் செத்த நாய்
என் பாப்பாத்திச் சேவல்
கைசயைத்த காவலரண் போராளி
அனாதரவற்ற உப்புமடச்சந்தி
அலைக்கழிக்கப்பட்டவர்களின் இரவு
வலமும் இடமுமாய்
சப்பித் துப்பி எஞ்சிக் கிடக்கும் குரல்கள்
உவத்தலற்ற காலத்தின்மீது
காய்ந்த விமர்சனங்கள்.

இன்னும் சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை.

புழு நெளிய
மலம் மேல் மலமிருக்கும்
என் மக்களின்
விடுதலைத் தகப்பனே
யுத்தத்தின் பிதாக்களே
உங்களைத் தேடுகிறேன்.

தலையில்லாமல் வாழ்வதும்
ஒரு வாழ்க்கைதான்
உயிரும் குருதியும்
வேண்டுமெனில்
இதோ என் தலை.
இழந்த உறவுகளை
அழிக்கப்படும் வரலாற்றை
நினைவூட்டுகிறேனே தவிர
வேறொன்றுமில்லை.

முழந்தாழிடுகிறேன் புத்தனே
குமுத மலரோடு
உனக்காய் ஒருமுறை
அகதி தேசத்து
பனிக்காட்டுப் பெண் நான்!!!

மனதிற்கும் உடம்பிற்கும் தைரியம் கேட்டபடி...
நமக்காய் விதையாய்ப்போன அத்தனை உயிர்களுக்கும்
என் தலை சாய்த்த வணக்கம் !

வரைதல் - சுரேஷ் குமார் Suresh Kumar

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 26, 2014

சில உதிரி வார்த்தைகள்...

சூரியச் சாம்பலை
கண்டதாக
சொல்கிறார்கள் சிலர்
தீச்சுடாக் கதிர்களில்
நான்கு மணிகொண்ட
கிரீடங்களோடு.

வல்வை வெளிக்காற்று
வாங்கி வைத்திருக்கும்
அந்தரத்து வார்த்தைகளில்
தொங்கியிருக்கும் அந்த ஒளி.

முட்டையிட்டுக் கொண்டிருக்குபோதே
உயிர்விடும் ஓணான்
சேடமிழுக்கும் வதைகுரலில்
சொல்கிறது
அச்சூரியனைத் தானே
கடைசியாய்க் கண்டதாய்.

அவர்களும் நாமும்
கை கோர்த்து நடக்கமுடியா
கைவண்டிகளையே
செதுக்கி வைத்திருந்தான் காலச்சிற்பி
ஒருக்களித்த சில்லுகளோடு.

ஓணானின் வேலியில்
பட்டுத் தெறிக்கும் தீச்சுவாலை
முட்டையில் பட்டு வெடிக்கிறது.

பிசுபிசுப்பாய்
அருவருக்கும் நாற்றமென
மெல்ல நகர்கிறதொரு கூட்டம்
நான் மட்டும்
நடுத்தெருவில் நிர்வாணமாய்.

இப்போதும் புரியவில்லை
சூரியனை எரிக்கலாமா
எரித்தாலும் சாம்பலாகுமா?

தலை தடவிப்போகிறது
இன்றைய வெயிலென்னை!!!

இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் ‘அண்ணா’

குழந்தைநிலா ஹேமா

Tuesday, November 25, 2014

உறுதி மொழி...

நிலாக்குட்டி சுகமா நீ ?
கதைச்சுக் கன நாளாச்சு.

இருட்டிவிட்டதா உன் நாட்டில் ?

இது கார்த்திகை மாசம் நிலா
இருண்ட நம் ஈழதேசம்
பார்த்திருக்கிறாயா
பதுங்குழிகளோடு ?

உனக்கென்னடி
கனடிய பிரஜை நீ.

மூன்று மணிக்கே
இருளாகிறது ஐரோப்பாவில்
இருளானவர்கள் நிழலாக
பொப்பிப் பூப்போல்
நிமிர்ந்தே நிற்கிறார்கள்
வணங்கிக்கொள்
இது கார்த்திகை மாதம்.

நமக்காய் வீறுகொண்ட
வேங்கைக் குட்டிகள்
நமக்காகவே நாமம் மாற்றி
நமைந்து போனவர்கள்.

யாரும் அழவேண்டாம்
நெய்யூற்று நிலா தீபங்களுக்கு.

மாவீரர் அவர்கள்
நினைவுக் கல்லறை அற்றவர்கள்
ஆணிகளேயில்லாமல்
நமக்குள் அறையப்பட்டவர்கள்.

அவர்கள் நம்மோடு இருந்தபோது
பதுங்குழியாவது இருந்தது
சொந்தமாய் நமக்கு.

இப்போ நம் குழிக்குள்
புத்தனும் அவன் சேவகர்களும்.

யாரோ ஒருவர் நிறுத்திய சைக்கிளை
நான் உழக்கிக்கொண்டிருக்கிறேன்
துப்பாக்கிகள் அடுக்கிய தெருவில்
தற்செயலாக
அவை வெடிக்கலாம் இப்போதும்
எப்போதும்.

இதுதான் ஈழத்தின்
இயல் வாழ்க்கை இப்போது.

யாரும் விஞ்சமுடியா வாளை
உறைக்குள் வைத்தார்களே தவிர
உறங்க(கி) விடவில்லை.

கள்ளருந்திய செல்லப்பூனைகளாய்
எங்களைச் சுற்றியவர்கள்
எங்கள் இல்லங்களில்.

அவர்கள் தீட்சண்யக் கண்களை
கண்டிருக்கிறாயா நிலா
கனவுகள் எரிந்துகொண்டிருக்கும்
எந்நேரமும் தகதகக்க.

வீரமரங்கள்
நம் அண்ணாக்களும் அக்காக்களும்
அணில் அரிக்க வாய்ப்பில்லை.

அண்ணாக்களின் பாதுகாப்பில்லாத
பூக்கள் இப்போது சிரிப்பதில்லை
பொம்மைகள் எல்லாம் ஊனமாய்
நூதனமான கிராமங்களில்.

நள்ளிரவில்
தனித்துக் கரையும் காகங்களை
முடிந்தவரை ஒற்றுமையோடு
துரத்திக்கொண்டேயிருப்போம்.

நீ கனடா தமிழச்சியல்ல
நானும் சுவிஸ் தமிழச்சியல்ல
நாம் ஈழத்தவர்கள்
எமது தேசம் ஈழம்.

வெல்வோம்
விண் அதிரச் சொல்வோம் நிலா
வெல்வோம் வெல்வோம்
விடுதலைக் காற்றைச் சுவாசிப்போம்.

இன்றல்லாவிட்டாலும்
இழந்த அத்தனைக்கும் ஈடாய்
இன்னொரு சூரிய உதிப்பின்
தலைமுறை மாற்றத்தில்.

கை கோர்த்து
உறுதி கொள்வோம் இன்று.

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம் !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)