*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, November 30, 2010

உடைக்கப்பட்ட கனவுகள்...


இன்னும் என் மனம் மாவீரர் நினவுகளுடனேயே.இந்தக் கவிதை
இந்த இடத்தில் பொருந்தும்.அதோடு சில பாடல்கள்
பதிவில் தேவைப்படுக்கிறது ஆவணங்களாக !
உணர்வுகளும் கனவுகளும்
நிறைந்திருந்த தேசம் அது.
செருப்பிட்ட கால்களோடுகூட
நுழையாமல் பத்திரப்படுத்தப்பட்ட
தூங்கும் தெய்வங்களின் தாழ்வாரம் அது.

உறவுகளுக்காய் காத்திருக்கும்
ஆன்மாக்களின்
நினைவுச் சந்நிதி அது.
குவிக்கப்பட்ட
கனவுத் தடாகம் அது.

வணக்கத்துக்குரிய
மாவீரர்களின் கோவில் அது.
செம்மல்களின்
மூச்சுக்காற்று அது.
பசிகொண்ட வேங்கைகள்
படுத்துறங்கும்
அமைதிச் சோலை அது.
தமக்கான வாழ்வை
தாய்க்காய்த் தியாகித்த வள்ளல்கள்
ஓய்வெடுக்கும் பிருந்தாவனம் அது.

பிள்ளைபிடிகாரராய்
இரவோடு இரவாக நுழைந்த பிசாசுகள்
இன்று அதிகாரத்தோடு
தூங்கும் எங்கள் மன்னர்களை
பகலிலேயே எழுப்பிக் கலைத்துவிட்டது.

கனவுகளைத்
தூபிகளுக்குள் வைத்திருந்தோம்.
கனவுகளைச் சிதைப்பதென்பது
அவர்களுக்கு புதிதல்ல.
கருவில்...தெருவில்
குழந்தைகள் நசிக்கும்
ராட்சதப் பிசாசுகள் அவர்கள்.

தொடர்ந்தும் கல்லெறியப்படுகிறோம்
சிதம்பிய இருதயங்களுக்குள்
கல்லறைப் புழுதியும் படிய
தமிழையே மூச்சாய் வாழும்
ஒற்றைத் தமிழன்
திருப்பி எறியாமல் இருக்கமாட்டான்
சேமிக்கும் கற்களில் ஒன்றையாவது!!!


"காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.
இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.
தமிழரின் தாயகம் .... தமிழீழத் தாயகம் !

தாயகக் கனவுடன்...

கல்லறை மேனிகள்...

மண்ணில் விளைந்த...

விழி மடல் மூடி...


ஹேமா(சுவிஸ்)

Saturday, November 27, 2010

வரலாற்றுக் கோள்...


சாத்தியமேயில்லை
சூரியன் இறப்பது.
நிழலோடும் இருட்டோடும்
ஊழியம் செய்யும் பெரு நெருப்பாய்
இருளை நிரந்தமாக்காத
வரவாய் வரலாறாய் அவன்!

கசிந்த சூட்டில்
இதமாய் வளர்ந்த பயிர்களை
ஆடு மேய்ந்ததாய் ஒரு கதை.
பேய்கள் கொளுத்திய தீயில்
சூரியன் கருகிவிட்டதாயும் ஒன்று.
புயல் பிய்த்ததால் கதிர்கள் கிழிந்ததாம்.
அலை அடித்த வேகத்தில்
ஆழக் கடலுக்குள் சிதைந்தாய்
சரித்திரத் தாளிலும் மாற்றம்.

கடலும் தின்னாது
அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்!

சிறுபயிர்களுக்கும்
சீராய் நிழல் வெப்பம் செருகி
செங்குழலில்
சிற்றுருண்டைகளாய் சோறு சமைத்தூட்டி
மேயும் ஆடுகளை
மேய்ப்பரிடம் ஒப்படைக்கவும் செய்தவன்
அந்த ஊழிக்காரன்.

மழை இருள் மண்டிக்கிடக்கிறதே
தவிர....
மாற்றமில்லை அவனில்.
சிதறித்தான் கிடக்கிறோம்
சீரழியவில்லை.
பதறித் துவள்கிறோம்
பதராகவில்லை.

பெற்றவள் சூல் வலிவாள்
கருச்சிதைந்து போகாக் காளியவள்
மீண்டும் கருவுருவாள்
கருப்புகுந்து மீண்டும்
கொற்றவனோடு வெளிவருவோம்.
ஏரிகள் குளங்கள் குளிர்ந்து களிக்க
வான் பூத்தூவ
என் தாயவளுக்கு மீண்டுமொரு
உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!

பொங்கிடும் கடற்கரை...

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!

(ஹேமா(சுவிஸ்)

Monday, November 22, 2010

குடியிருப்புக்கள்...

சிறு உக்கிய மரக்குற்றி (மரக்கட்டை)
பகலில்
சிறுவர் உருட்ட
இரவில்
குடிகாரன் காலால் மிதிக்க
இரைச்சலும் எச்சிலும்
கூட்டுச்சேர்ந்து கூட்டித்தள்ள
எங்கள் குடியிருப்பு.

எதிர்பாரா நாளொன்றில்
ஒற்றைக் கால் உந்தித் தள்ள
ஓடி விழுந்தோம் பெரு நெருப்பில்.

எரிந்தோம் கருகினோம்
தடுமாறித் தகித்துப் பயம் தெளிந்தோம்.
என்றாலும்....
எம் இருப்பிடம் விடாமல்
பிடித்திருந்தோம்.
கனவுகள் கரைய
ஆக்ரோசமாய் வலிமை பெற்றோம்.

தள்ளியவன் தள்ளி நிற்க
கரையேற்றச் சில கைகள்.

சூடு ஆறாத மரக்குற்றியையே
மீண்டும் மீண்டும்
சுற்றினோம்...
தொற்றித் தொங்கி விழுந்தோம்
செத்தோம்.

குடியிருப்புக்கள்...
மரக்குற்றியோ
மண்திடலோ
மாளிகைதான்
வாழும் மனங்களுக்குள்!!!

எமக்காகத் தியாகத் தீயில் ஆகுதியாகிய அத்தனை உயிர்களையும் நினைவு கொண்டு,2010 கார்த்திகையின் ஆத்ம தீபங்கள் ஏற்றுவோம் இந்த வாரம் முழுதும் !


ஹேமா(சுவிஸ்) படம் - நன்றி எங்கள் புளொக்.

Saturday, November 13, 2010

தடுமாற்றம்...

கடமைகள்
என்னை வழி நடத்தினாலும்
எச்சரிப்பு மணியடிக்க
இதயம் துடித்து
விழித்துக்கொள்ளும்.

உன் நினைவுடனேயே
பொழுது
விடிந்து இருண்டாலும்
உன்னிடம் என் மனதை
காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
ஒளிந்து கொள்கிறேன்.

முகம் மாத்திரம்
உன்னை
வெறுத்து ஒதுக்குவதாய் நடிப்போடு
வெறுப்பை உமிழ்ந்தாலும்...
மறு பக்கமாய்
உன்னை
முழுதும் நிறைவாய்
மனதுக்குள் நிறைத்தபடி.

மனதுக்குள் உண்மையா என்று
என்னை
நானே கேட்டபடி
என் திசையோடு
என் இயல்பின் வேகத்தோடு
உன்னையும்
சேர்த்துக்கொண்டுதான்
அலைகிறேன்.

சொல்லிக் கொள்ளாமலேயே
மெளனமாய்
தூரம்...மிகமிக தூரமாய்
உன்னைச் சுமந்த படி
வந்துவிட்டேன்.

உன் பேச்சுத்துணையோடு
காலம் கடந்த போதும்
முடியாமைகளுக்குள்
முண்டியடித்துக்கொண்டு
அன்பையும் ஆசையையும்
அடக்கிக்கொண்டு
சிலசமயங்களில்...

*எப்படி இருக்கிறாய்*
என்று கேட்க வர
உன் சிறு புன்னகையே
என்னைக் கிண்டல் செய்து
உன் முன்னால்
மண்டியிட வைக்கிறது!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 11, 2010

பாசத்தின் நிறம்சொல்லும் வறுமை...

பரம்பரைத் தொழில் அல்ல
விரும்பி வேண்டியதுமல்ல.

வறுமை வாசலில் காவலிருக்க
பஞ்சம் கூரைமேல் குந்தியிருக்க
வயிறு காத்திருக்கும்
ஒற்றைப் பருக்கைக்காய்.

கண்களுக்குள் ஏக்கம் நிறைத்து
கையேந்தும்
இளம் தளிரொன்று
ஏதோ ஒரு பாட்டு
பசி கண்ணுக்குள்
சுதியும் விலகியபடி.

பரிதாபம் தாளாமல்
"வருவாயா என்னோடு
பாலும் பட்டும்
காரும் கணணியுமாய்
போகலாம்
பள்ளிக்கூடத்துக்கும்".

"வருகிறேன்...வர விருப்பம்
என்கூட அம்மாவின் சேலை
அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
அண்ணாவின் ஒரு தலைமுடி
தங்கையின் பிச்சைப் பாத்திரம்
எடுத்து வருவேன்
நினைவாக.

இருக்குமா இடம்
உங்கள் வீட்டில்"!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 07, 2010

தென்றல் சொன்ன தூது...

ஆர்ப்பாட்டமில்லாத
உன் அன்பை
சொல்லிப் பாடிக்கொண்டிருக்கிறது
உன்னிடமிருந்து வந்த
அந்தத் தென்றல்

இன்னும் உன் கனவுகள்
ஆழ்மனதின் அபிலாசைகள்
அனுபவங்கள் பற்றியும்
வாய் ஓயாமல் சொல்லி
உன்னைப் பற்றிய
என் கனவுகளை
நீட்டி வைக்கிறது.

கனவுகளுக்குள்
நித்தம் வரும் கனவு நீதான்
என்பதைச் சொல்லாமலே
அகலத் திறந்த கண்களுக்குள்
உன் கனவுகளை
இன்னும் சேமிக்கிறேன்.

வாய் வலித்த தென்றல்
பறந்த பின் தான்
புரிந்துகொண்டேன்...

சொல்லாமலே
ஊர் போன உன்னை!!!

ஹேமா(சுவிஸ்)