*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, June 16, 2008

வேண்டும் ஒரு கனவு...

இன்னும்...இன்னும்
இறுக அவனை
அணைத்துக் கொள்கிறேன்.

புலம் பெயரும் முன்
எங்கள் கோவில்
திருவிழா உற்சவம்
தொடங்கியிருக்க,
வீட்டிலும் திருவிழாக் கோலம்
களைகட்டியிருக்க,
கடவுளுக்கு மாலை
கட்டிக்கொண்டிருக்கிறேன்.

பல வண்ணப் பூக்களையே
ஆடையாய் அணிந்துகொண்டு
வசந்தகால ஆனந்தமாய்
பறவைகளோடு பறவையாய்
கூவுகின்ற...
குயில்களின் இடையே
உன் இரு கைகளையும்
கோர்த்தபடி பறக்கிறேன்.

வெண்மேகப் பஞ்சுக்குள்
நீந்துகின்ற...
நட்சத்திரங்கள் நடுவில்
நானும் நடுவிருந்து
நட்போடு நகைக்கிறேன்.

என் அபிமானக் கவிஞருக்காய்
விமான நிலையம் காத்திருந்து
என் ஒரு கவிதையின்
கீழ் கையெழுத்து
வாங்கிக்கொள்கிறேன்.

காரைக்குறிச்சியார்
நாதஸ்வரத்தில்
தோடி ராகத்தைத் தேடி
மழையாய் பொழிந்துகொண்டிருக்க
அதில் நானும்
நனைந்து கொண்டிருக்கிறேன்.

வெளியில் பனியில்லை...
ஆடிமாதக் கோடை காலம்...
ஆனாலும் உடம்பு
நடுங்கிக் குளிர்கிறது.
விழித்துக் கொள்கிறேன்.
ஓ.......
என் மகன்
என்னையும்
நனைத்துவிட்டான்.

திரும்பவும் அவனை இறுக்கமாய்
அணைத்துக்கொள்கிறேன்.
மீண்டும் வரும் இன்பமான
ஒரு கனவிற்காய்!!!

ஹேமா(சுவிஸ்)

No comments:

Post a Comment