*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, September 16, 2009

மலையடிவாரத்துத் தோழியே...2


மூத்திரக்காய் மரத்தடியில்
பொன்னையா மாஸ்டர்
அதுதானடி மூக்குப்பொடி மாஸ்டரின்
முதலாம் மூன்றாம் வகுப்பு மிரட்டல்கள்.
பாடநடுவில் அவரின் யாழ்ப்பாணச் சமையல்
மணமும் மூக்கைத் துளைத்து
பசியையும் தூண்டும்.

அடுத்த வகுப்பை மறைக்க பிரம்புத் தட்டி ஒன்று.
என் அப்பாவின் வகுப்பு நடக்கும் அங்கே.
அவரின் சத்தம் ஊரையே கூட்டும்.
வீட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் இடையே
ஒரு தேயிலை மடுவம் ,ஒரு கோயில்
ஒரு ஆறு,ஒரு வயல் வெளி,பாலம்,சிறுகுளம்
படிக்கட்டுக்கள் வைத்த சரிவாய் தேயிலைத் திட்டுகள்.
மீண்டும் சலசலக்கும் பெரிய ஆறு,பாலம்
கடக்கப் பள்ளி வரும்.
மூச்சு விட்டுக்கொள் கொஞ்சம்.
அப்பாவின் "டேய் பிள்ளைகளா"அதட்டும் சத்தம்
இத்தனையையும் தாண்டி
என் வீட்டுச் சுவரில் எதிரொலித்து
சமைக்கும் அம்மாவின் காதில் பட்டுப் போகும்.
இன்னும் அப்படியே அனைத்தையும்
அள்ளிக் காண்கிறாயா.
அத்தனை காட்சிகளும்
எத்தனை வருடங்கள் கடந்த பின்னும்
தூரத்துத் தோழியின் நினைவோடு
நிழலாடுகிறது மீண்டும்.

தேயிலை மலைமுகடுகள் தாண்டி
காலைச் சூரியன் சுள் என்று மேல் எழும்ப
மெல்லப் பனியும் சில்லென்று சேர
சொல்ல முடியா அழகுக் கோலங்கள்.
அப்பப்பா...
அனுபவித்த சுகங்கள்
நெஞ்சக்குழிக்குள் சோகங்களாய்.
விடியலின் வனப்பில்
தேயிலை மடுவத்தில் சங்கு ஊத
ஐந்து மணிக்கே ஊர்ந்து வரும் தொழிலாளர்கள்.
இடுப்பில் கைக்குழந்தைளோடும்
முதுகில் கூடைகளோடும் கூடும்
பெண்களும் ஆண்களுமாய்.
மேல்கணக்கு கீழ்க்கணக்கு
என்று டிவிஷன் பிரித்து பெயரும் வாசிக்க
இடையில் சாக்குக் கட்டி
வரிசையாய் பிரிந்து போய்
கொழுந்து பறிக்கும் அழகே அழகு.

இரப்பர் மரங்களில் பொருத்திய சிரட்டைகளை
பிய்த்துக்கொண்டு குடல் தெறிக்க ஓட்டம்.
தேயிலைக் கன்றுகள் நடுவில்
ஒளித்துப் பிடித்து விளையாட்டு.
மர அசைவு கண்டு அதட்டல் ஒன்று
"யாரடா அது"அது உன் அப்பா.
உன் அப்பாவை
பாப்பாவின் ஐயா"பாப்பையா"என்றே அறிமுகம் எனக்கு.
பெயர் நான் அறிந்திருக்கவில்லை இன்றுவரை.
சரியான பயமும் மரியாதையும் அவரில் எனக்கு.
ரதி என்று கூப்பிட்டால்
எட்டடி தூர நின்று"என்னாங்க ஐயா"என்பேன்.
நீயும் நானும் நடத்தும் நாடகங்களை
அப்பாவிடமும் போட்டுக் கொடுத்தும் விடுவார்.
வாங்கிக் கட்டியும் கொள்வோம்.
எத்தனை நாட்கள்.
அன்று வலியாய் இன்று வடுவாய்
நினைவுப் புண்கள் !!!

ஹேமா(சுவிஸ்)
[நாளை முடியும் ஞாபகங்கள்]

20 comments:

அ.மு.செய்யது said...

இலங்கையின் தேயிலை தோட்டங்களினூடே நானும் கொஞ்சம் தொலைந்து போனது
போல் சில நிமிடங்கள் உணர்ந்தேன்.

அழ‌கான‌ நினைவுக‌ள்.அந்த‌ தோழியுட‌ன் இன்னும் தொட‌ர்பு இருக்கிற‌தா ??

S.A. நவாஸுதீன் said...

எங்களையும் கொஞ்ச நேரம் உங்களுடன் உலாவ அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி ஹேமா. பொக்கிஷமாய் பாதுக்காக்க வேண்டிய நினைவுகளின் தொகுப்பு இது.

செம்மொழி said...

நெஞ்சு கனக்க வைத்தாய் தோழி ..நெஞ்சம் நிறைந்திருக்கும் நினைவு கொண்டு ...
கொஞ்சம் கலங்க வைத்தாய் ...கொஞ்சு மொழி வார்த்தை கண்டு ...

அன்புடன்,
செம்மொழி

நட்புடன் ஜமால் said...

தொடர் இடுக்கைகளாக போட துவங்கியாச்சா

நல்லாயிருக்கு ஹேமா

பார்க்காத இடங்களை வரிகள் பார்க்க வைக்கின்றன ...

uthira said...

கவிதையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நேரடியாகப் பார்த்ததுபோன்ற பிரமிப்பு ஏற்பட்டது. சிறுவயது நினைவுகளை பசுமரத்தாணிபோல நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறீர்கள் தோழி. மீண்டும் ஒருமுறை அந்த பால்யவயதுக்குள் சென்று வரும் வரம் வாய்த்தால்.............ஹ்ம்ம்....பாக்கியந்தான்.

வடிவமான கவிதை தோழி.

சந்ரு said...

ஞாபகங்கள் அருமை இளமைக்கால ஞாபகங்களை மீட்க வைத்தது.

சந்ரு said...

உங்கள் வலைப்பதிவுகள் புலம்பெயர்ந்த இலங்கை வலைப்பதிவர்களைத் திரட்டும் சொந்தங்கள் வலைப்பதிவிலே இணைக்கப்பட்டுள்ளது.


www.sonthankal.blogspot.com

பிரியமுடன்...வசந்த் said...

தேயிலை தோட்ட வாசனை போல் கவிதையும் மணக்கிறது....

நேசமித்ரன் said...

நினைவின் தாழ்வாரங்களில் அடை அடையாய் சேமித்திருக்கும் தேனில் கொஞ்சம் உப்புச்சுவை

நிலா முகிலன் said...

சிறுவயது ஞாபங்கள் மகிழ்வை கொடுக்கும். இது போல சில...கண்ணீரை அழைக்கும் . வழமை போல நல்ல கவிதை ஹேமா.

செம்மொழி said...

என்னுடைய வலைப்பக்கம் கடந்த ஒரு வார காலமாகவே இயங்கி வருகிறது. இந்த வலைத்தளத்தை எவ்வாறு விளம்பரப்படுத்துவது என்பதில் எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை. இதே போன்ற மடலை இன்னும் சில நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளேன். இந்த மடல் உங்களுக்குத் தொந்தரவு தரவில்லை எனும் பட்சத்தில் , அதோடு நீங்கள் ஏதும் விளம்பரப்படுத்துவது பற்றிய வழிகளை அறிந்திருப்பீர்களானால், தயவு செய்து என்னோடு பகிர்ந்து கொள்ள இயலுமா ? அதோடு உங்களுது வலைப்பக்க நண்பர்களிடம் எனது வலைப்பக்கத்தைப் பற்றி பகிர்ந்துகொள்வீர்களா?

Muniappan Pakkangal said...

Anubavitha suhangal nenju kulikkul sohangalaai-you have had a nice nature btwn your house and school.

துபாய் ராஜா said...

//அன்று வலியாய் இன்று வடுவாய்
நினைவுப் புண்கள் !!!//

அருமை ஹேமா.

பா.ராஜாராம் said...

எல்லா இடங்களிலும்,நான் சொல்ல வந்ததை செய்யது சொல்லிட்டு போயிருராறு,ஹேமா.அவரை கொஞ்சம் கதைச்சு வை(ஐ!உன் மொழி வந்தாச்சு!)செய்யது சொன்னால் என்ன.அண்ணா சொன்னால் என்ன.எல்லாம் ஒண்ணுதான்,இல்லையா ஹேமாம்மா?

கவிக்கிழவன் said...

நீங்க கவிதை எழுதும் பொது கொஞ்சம் எங்களையும் நினைத்து பாருங்க.

அவள்தான் இன்னமும்
இலங்கைத்தேயிலை பெட்டிகளின்
அட்டைகளில்
இலங்கையென்றால்
தேயிலை பறிக்கும் பெண்தான்
உலகின் கண்முன்
அவளுக்கு இன்னமும்
அடையாளஅட்டை எடுக்கமுடியிவில்லை
மலைஅட்டைகள் இரத்தம்எடுத்துள்ளன
அவளுக்கு இன்னமும்
வதிவிடஅட்டை கொடுக்கப்படவில்லை
தேயிலைகட்டைகள் அடிகொடுத்துள்ளன
அவளுக்கு இன்னமும்
ஒழுங்காக சம்பளம் கொடுக்கவில்லை
அரசுக்கு தேயிலை வருமானம்
மில்லியனை தாண்டுகின்றது
அவளுக்கு இன்னமும்
ரொட்டிதான் சுடுகிறரல் சாப்பிட
தேயிலை வித்தவன் பீசா சாப்பிடுகிறான்
அவளுக்கு உரிமைதராத நாடு
தேயிலைப்பெட்டியில் படத்தைப்போட்டு
வியாபாரம்பண்ணுகிறது

ஹேமா said...

//அ.மு.செய்யது... அழ‌கான‌ நினைவுக‌ள்.அந்த‌ தோழியுட‌ன் இன்னும் தொட‌ர்பு இருக்கிற‌தா ??//

இல்லை என்றே சொல்லலாம் செய்யது.நான் 2006 ல் போனபோது அவர்கள் இலங்கையில் இல்லை இப்போது.அவர்கள் தாயகமான இந்தியா சென்றுவிட்டார்களாம்.
பாப்பையா இறந்து விட்டதாகவும் அதனால் அம்மா மனமுடைந்து நோயாளியாகவும் என் தோழியின் சின்னத் தங்கை மனநோயாளியாகவும் சுகயீனம் அடைந்துவிட்டார்களாம்.
அதற்கு முன்னரும் எனக்குத் தொடர்பு குறைவுதான்.நான் ஊருக்குப் போகும் சம்யங்களிலும் மலைநாடுகளுக்கு அதுவும் நான் இருந்த இடத்திற்குப் போவதானால் பெரும் கஸ்டமான பயணம்.அதனால் போவதில்லை.
போன சமயத்திலும் கேள்விப்பட்டது இதுவே.என்றாலும் அவர்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் தெரிந்தவர்கள் இருந்தபடியால் 2 நாட்கள் தங்கி அந்த இடம் முழுதும் இருந்து எங்கள் காலடித் தடங்கள் தேடி வந்தேன்.

ஹேமா said...

//கவிக்கிழவன்... நீங்க கவிதை எழுதும் பொது கொஞ்சம் எங்களையும் நினைத்து பாருங்க.

அவள்தான் இன்னமும்
இலங்கைத்தேயிலை பெட்டிகளின்
அட்டைகளில் இலங்கையென்றால்
தேயிலை பறிக்கும் பெண்தான்
உலகின் கண்முன் அவளுக்கு இன்னமும் அடையாளஅட்டை எடுக்கமுடியிவில்லை
மலைஅட்டைகள் இரத்தம்எடுத்துள்ளன
அவளுக்கு இன்னமும் வதிவிட
அட்டை கொடுக்கப்படவில்லை
தேயிலைகட்டைகள் அடிகொடுத்துள்ளன
அவளுக்கு இன்னமும்
ஒழுங்காக சம்பளம் கொடுக்கவில்லை
அரசுக்கு தேயிலை வருமானம்
மில்லியனை தாண்டுகின்றது
அவளுக்கு இன்னமும்
ரொட்டிதான் சுடுகிறரல் சாப்பிட
தேயிலை வித்தவன் பீசா சாப்பிடுகிறான் அவளுக்கு உரிமை
தராத நாடு தேயிலைப்பெட்டியில் படத்தைப் போட்டு
வியாபாரம்பண்ணுகிறது,//

யாதவன்,நீங்க சொன்ன அத்தனையும் உண்மையான வேதனை.
உங்களைவிட இந்த வேதனை எனக்கு எப்பவுமே.இன்று நடந்தொண்டிருக்கும் சம்பளப் பிரச்சனையொட்டி சந்ரு ஒரு பதிவு இட்டபோதுகூட நான் பின்னூட்டம் தந்திருந்தேன்.கலை இராகலை பதிவிலும் சொல்லியிருந்தேன்.என்னைப் பாதிக்கும் எனக்குப் பிடித்த மனிதர்கள் அவர்கள்.என் இந்தப் பதிவைப் பாருங்கள் ஒரு தரம்.

http://kuzhanthainila.blogspot.com/2009/03/blog-post_24.html

" உழவன் " " Uzhavan " said...

ஒவ்வொரு எழுத்தும் ஞாபகங்களைச் சிந்திக்கொண்டே செல்கிறது.
 
இறப்பர் அல்ல தோழி. ர என்று மாற்றிடுங்கள்.
 
அன்புடன்
உழவன்

சி. கருணாகரசு said...

உங்களின் சேமிப்பு கிடங்கில் இன்னும் எத்தனை ஞாபக சுவடுகளோ!
பதிவு ந‌ல்லா இருக்குங்க.

ஜெகநாதன் said...

பால்யம் சேமிக்கப்பட்ட கவிதை!
ஆரவாரமான பள்ளி அறிமுகம், இடங்கள், சம்பவங்கள், முகங்கள்... இன்னொருவர் அனுபவம் இது என்பதை மறந்து நம் அனுபவமாக மனம் பார்க்கிறது.

இத்தனையும் தொலைத்து ​வெறுமையாய் நிற்பது ​பெருஞ்சோகம்!

வேதனை சுமந்த ரயில் பெட்டிகளை
இழுத்துச் செல்லும் இன்ஜினின் இயலாமை பெருமூச்சு எழுகிறது!

Post a Comment