*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, September 30, 2013

கழிவறைச் சாட்சி...


மருந்துகள் பலனளிக்காது
அறிந்தபடியேதான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்.

அவசர அழைப்பில்
வைத்தியரும்
சம்பிரதாயம் சொல்கிறார்.

அப்போதும்
உதடுகள் குவிந்து
விரிகிறது சொல்ல.

விடிந்த பொழுதில்
வைத்தியருக்காகக்
காத்திருக்கமுடியவில்லை
காப்பாற்ற
வரவில்லை அவரும்.

கழிவறை மூலையில் சேமித்த
உண்மைகள்
வறண்டு ஆவியாகின்றன!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 25, 2013

காதல் யானை...


சாயரட்சை மணியோசை
திசையசைக்க
சுணங்கும் வடவை
வரவறியா
தொண்டலம் தொங்க
சுனை சுற்றும்
கரி மறக்க
மறுக்கா ஞிமிறு
நறை தடவி
பறக்கவிட்ட
தூது எட்டுமுன்
சினத்த வாரணம்
காமுறா மனம் வேண்டி
கராகன் நோக்கிய தவமாய்
விழாலி திணற
கார்கோள் மண்வாரும்
மத்தம் கொண்டு!!!

சுனை - நீர்நிலை
வாரணம் - யானை
விழாலி - யானையின் துதிக்கை உமிழ் நீர்
தொண்டலம் - துதிக்கை
சாயரட்சை - மாலைப்பொழுது
ஞிமிறு - தேனீ
நறை - வாசனை
கார்கோள் - கடல்
கராகன் - படைப்பவன்
மத்தம் - பைத்தியம்

ஒரு தமிழ் ஆர்வம்தான்.திட்டாதேங்கோ.சரி பிழை சொல்லுங்கோ.இதை எழுதத் தூண்டிய நண்பருக்கு(Saminathan Ramakrishnan)நன்றி !

பெண் யானைக்காய் நீர்நிலையருகே நிலையற்றுத் தவிக்கும் ஆண்யானை.மாலைநேரக் கோவில் பூஜைக்காக சுணங்கி வராமலிருக்கும் பெண்யானை ஒரு தேனீயின் இறகில் தன் வாசனை தடவித் தூது விடுகிறது.தூது கிடைக்கமுன் கோபம் கொண்ட ஆண் யானை, காமமில்லா மனம் வேண்டிப் படைத்தவன் முன் நின்று தும்பிக்கை உமிழ்நீர் திணறத் திணற பைத்தியம்போல கடல் மண்ணைத் தனக்குத்தானே வாரிப்போட்டுக்கொள்கிறதாம்.காதல் கிறுக்கனோ இந்த யானை :) :) :)

ஹேமா(சுவிஸ்)

Monday, September 23, 2013

அகதி நாடும் நானும்...


மூச்சு வாங்குது......15 வருஷ அகதி வாழ்க்கையும்.அ,ஆ தெரியாத ஐரோப்பிய நாடுகளில் அவர்களோடு வேலையும்.....அகதியாய் நுழைந்தாலும் தங்களில் ஒரு வராய் ஏற்று எம்மையும் மதிக்கும் என் சுவிஸ் நாட்டுக்கும்,என் வேலைத் தலைமைக்கும் ,தோழர் தோழியருக்கும் என் மனமார்ந்த நன்றி !

ஹேமா(சுவிஸ்)

Friday, September 20, 2013

பச்சோந்தியானவன்...


வார்த்தைகளில்...
மஞ்சள் பொடி தடவியிருந்தான்
அவன் செல்லம் கொஞ்சி
எச்சில் பறக்கையில்
கண்களில் பட்டுத் தெறிக்க
மஞ்சளானேன் நானும்.

இடையில்...
எங்கோ சிவப்பு வார்த்தைகள்
அவனோடு ஒட்டிக்கொள்ள
பிடித்துப்போனது பச்சை.

மஞ்சள்நோய் பிடித்தவளாய்
நான் இப்போ!!!

ஹேமா(சுவிஸ்)

ராம் ராம்....மழை...


ஒரே இரவில் கொண்டும்
அதே.....
ஒற்றை இரவில் கொன்றும்
கழி(ளி)க்குமிந்தப் பெருமழை !

மழை முத்தமிட்ட
பூமியில்
இருள் கவிய
என் படலை ஒதுங்கும்
உன் நினைவுகள்
என்னை
பிறாண்டுதலிலேயே
குறியாயிருக்கிறது !

மழைக்கவிதை கேட்டவன்
ப்ரிய மண்வாசனை காட்டி
மௌனமாய்
தானே....
தமிழ்ச்சாரலான
விந்தையிங்கு !

சாரல்...
துளி...
பெருமழை...

இதில்
எது நீ ?

அடித்துப் பொழி
உனக்காய் மட்டும்
முளைக்கும்
குடைக்காளானாய் நான் !

மழையாய்
நனைத்தவன் அங்கிருக்க
நடுங்குபவள் நான்
வைத்தியர் விசாரிப்பில்
ஊசி எனக்குத்தானாம் !

மழை கேட்டவன் மழையாகி...
பின் மழையாக்கி....

ஒத்தி வைக்கப்படுகிறது
இப்போதைக்கு
சில மழைக்கவிதைகள்!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 17, 2013

நான் அவன் மழை...


தமிழாய்...
சோவெனப் பெய்தவன்
சொல்கிறான் வாயாடியாம்
மழைத்தேவனும் மாறுகிறான்
சாதாரண மனிதனென
அடித்துப்பெய்த மழையில்
கரையொதுங்கும் பட்டுப்பூச்சியென
அவன் மனதில்
ஒட்டிக்கிடப்பதறியானோ.

உள்நுழைந்து
அதே பாதையில் வெளியேற
எளிதாயிருக்கிறதுனக்கு
ஒரு நாளும்
அறிந்திருக்கப்போவதில்லை
உயிர்ப்பறவைச் சிறகொன்றை
பிய்ப்பதில் வலியையும்
அதன் ஓலத்தையும்.

இதில் வேறு
அதே சிறகால் கண்மூடி
காதும் குடையும் காட்சி
ஆகா.....கிராதகா.

உருண்டோடும் மழைச்சகதியில்
ஒட்டிக்கொண்ட சேறாய்
உன்பாட்டுக்கு உருட்டுகிறாய்
என் தேகம்
உதிர்ப்பது உதிரமல்ல
தேவனே
ஆராய்ச்சியும் அறிவியலும் தேடும்
உனக்கெங்கே தெரியப்போகிறது
மனமும் மண் உருட்டலும்.

காலச்சகதியில்
நனைந்தும்
உருண்டுகொண்டும்தான் நான்
ஒவ்வாமைகளே உடையாய்.

இப்போதைக்கு
கொஞ்சம் அணைத்துக்கொள்ளேன்
குளிர்கிறது!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 13, 2013

கவிக்காதல்...


விண் நுழைந்த
சாகா விண்மீன்கள்
உதிரா நூலில்
நழுவா அந்தரத்தில்
தொங்குமென் முந்தானையில்.

எனை
சித்திரமெனக் கீறி மறந்த
உன் இதயம்
எண்ணிக்கை அறியாது
அந்தாதி முத்தங்களை.

செவ்விதழ் கௌவி
தேன் நீ
தேனீயென
போதையில்
புலன் தொலைத்து
எழுதுகோல் முனையில்
காதலுரசும் கவிஞனை
முகிழ்த்து மூடிக்கொள்வதெங்கனம்?

சேதனமில்லாச் சொல்லெடுத்து
உதட்டருகில் வெட்கித்து
யாக்கை நடுங்கியிறுக
உயிர் உருகி
கவி சொல்லி....

பாடடி பல்லவியை
தொடர்வேன் சரணமென
காதுக்குள் காதலுரைத்து
காது கடித்து
மீசை நீவி
கொல்லவும்
பின் கொள்ளவும்
துடிக்கும் உன்னை.....

உன் பாரி நானெனக் கூவி
கவியுன்னை
காவிக்கொண்டிருக்கிறேன்
இலக்கியப் பல்லக்கில் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 12, 2013

கண்டுகொண்டேன்...


கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
நடுவில் எங்கேயோ
சரிந்த கோடொன்றில்
முழுப் பாகையில்
இல்லாச் சூரியனை.

கடவுள்கள் பிறக்கமுன்
மதங்கள் பிறந்து பரவ முன்
பிறந்த ஒரு மனுஷியின்
சந்தோஷம் எனக்கிப்போ.

கடவுளர்களை
சிறைப்பிடித்து வைக்கப்போகிறேன்
படைப்பில் விடுபட்டுப்போன
மற்றும்...
முன்செய்த பிழைகளை
சரிப்படுத்தலாம் !

சிரிக்கும் முகத்தோடு
தொப்பி போட்ட
பனிமனிதன்
செய்துகொண்டிருக்கிறேன்
இதயம் இல்லாமல் !

ஹேமா(சுவிஸ்)

Saturday, September 07, 2013

காதல் துளிகள் (9)


பிறழ்வுகளைச்
சரிப்படுத்தும் தேவன்
அப்பமும் மீனும்
தந்து தொட்டிலசைக்கிறான்
தூங்கச்சொல்லி.

சிலுவைகளில்
ஏற்றியவர்களையும்
நேசிக்கும் உலகத்தில்
பத்திரமாக்குகிறேன்
அவன் ஆயுள் நீடிக்க.

குரூர விழிப்புடன்
தூங்க மறுக்கிறான்
இருளின் கடைவாயிலில்
உதிரும் உதிரம் பார்த்தவன்!!!


அடிக்கடி சொல்கிறாய்
என்னைத் தெரியுமென்று.

எப்படி என்றால்......

கர்வக்காரி
வாய்க்காரி
கோவக்காரி
கவிதைக்காரி
றாங்கிக்காரி
காளியாச்சி
பேய்,பிசாசு
ஒன்றாய்ச் சேர்ந்த
கல்லுளி மங்கியென்றும் சிரித்து....

இத்தனையும் சேர்ந்தவள்
தோழியாய்
என்னைப் பிடிப்பதாயும்
சொல்கிறாய்.

உண்மையில்
உனக்கு என்னைத் தெரியவில்லை!!!

(எல்லாமாய்ப் புரிந்துகொண்டிருந்திருக்கிறாய்.என்னுள் என்னை ஏன் புரிந்துகொள்ளவில்லை !?)


உன் ஆன்ம
அதிர் நரம்புகளில்
ஏதோவொன்றில்
என் பெயர்
எழுதி வைத்திருப்பாய்
வாழ்த்துகளென்று
ஏதுமில்லை என்னிடம்
மனம்போல்
வாழ்வாயென்கிற
நம்பிக்கையில் நான்
என் கைவிளக்குகள்
உன் திசைநோக்கியபடிதான்
இருள் சூழாதபடிக்கு
என்னிடமும்!!!


நேற்றைய கனவில்
காக்கா கரைய
காதல் காக்கையென
நான் சொல்ல....
சகுனக் காக்கையென
நீ சொல்ல....
அனுமானங்களை சேகரியென
இணக்கமில்லா என்னை
நிராகரித்து மறைகிறாய்
இன்னும் நிப்பாட்டவில்லை
கரைவதைக் காக்கை ...

கரையாக் கல்லொன்று
கதைக்கிறது
என் கதையின்
அத்தியாயத்தில்
அதிசயமென்றேன்
இல்லை இல்லை
உண்மையென்கிறது
காதல் காகம்
சத்தம்போட்டுச் சிரிக்கிறது
சகுனக் காக்கை !

ஹேமா(சுவிஸ்)

Friday, September 06, 2013

ஒரு யுகத்தின் நிழல்...


யாரோ....
என் மூதாதையரின்
ஒரு முகமாய்
மனதில் நிழலொன்று
அப்பப்போ.

கடந்து மறைகையில்
இறக்கைகளால் தலைதடவி
தேவர்களின் சாயலில்.

தேவதைகளுக்கு மட்டும்தானா
இறக்கைகள்
என் நிழல் தேவனுக்கும்தான்.

கரைந்த காலங்களை
மனதில் ஊட்டி
கண்ணிலும் காதலிலும்
உருப்பெற்றுவிடுகிறது
நினைவூட்டலின்
அந்த நிழல்.

வனமொன்றில் தொலைத்ததை
ஒருவழிப்பாதையில்
கடக்கையில்
வயதும் கீழிறங்கி
தும்பி பிடிக்கிறது
மீண்டும்.

புரிபடாத மொழியில்
வாயசைக்கும் நிழல்
நிசப்தமாய் கலக்கிறது
வண்ண
வெளிச்சக்கீற்றுகளின் ஊடே
ஒருதுளிக் கண்ணீர்
வெளியேறிய இந்நாளில்
என்னோடு!!!

ஹேமா)சுவிஸ்)