*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 31, 2012

2012 ன் இறுதித் தேநீர்...

அதன் பின்னான
உரையாடல்களை
திசை திருப்ப
முயன்றுகொண்டிருந்தேன்.

அவனோ...
பேசிப்பேசி
உலகின் மொத்த
வார்த்தைகளையும்
முடித்திருந்தான்
இடையில்
பேசும் கிளிகளின்
பேச்சுக்களையும்
கடன் வாங்கியிருந்தான்.

அவனுக்கான
மௌன மொழிகளை
நான்.....
மொழி பெயர்க்கையில்
கோபமாய் இருப்பதாக
ஊகித்துக்கொண்டான் போலும்.

உதடு சுழிக்கும் தோரணையில்
என் விருப்பங்களை
புரிந்துகொண்டிருந்தான்
தாம்பத்யத்தின் அத்துப்படிகளை
என் நுனிவிரல் தொடலில்
அறிவதில் அசகாயசூரன்.

காத்திருப்பும் ஊடலும்
அதிகபட்ச ஆசையாய்
என் உடலிலும் உள்ளத்திலும்
ஒரு சிறுதீயை உதறிவிட்டிருந்தது
நானும் காட்டிக்கொள்வதாயில்லை
நான் என்பதை...

நெருங்கி
குழைந்து
இடைவெளி குறைத்து
சாரலாய்
காதலைக் குடைந்து
ஊற்றும் மந்திரப்
பூக்களை தூவி
சூழலை
விறுவிறுப்பாக்கியவன்....

மௌன மொழிகளடங்கிய
இசைக்கோர்வை
இனிதே நிறைவுற
இரு மலைகள்
மெல்ல நகரத்தொடங்கின
பிரம்ம முகூர்த்தத்தில்.

காலையில் வெட்கி
முகம் மூடியவனை
காது திருகி
தலையில் குட்டி
முத்தம் கொடுத்து
தேநீர் கொடுக்க
மீண்டும் குடிக்கத்தொடங்கினான்
என்னை...!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 24, 2012

இன்னுமொரு புலம்பல்...

வாழ்வைக் கேள்விகளோடு ரசிப்பவள் நான்.இப்படித்தான் என ஏற்றுக்கொள்வதுமில்லை. எப்படியும் இருந்துவிடட்டும் என்று விட்டுப் போவதுமில்லை.வாழ்வின் அனுபவம் கேள்விகளைத் தந்துவிட்டுக் காவலிருக்கிறது.பதில்கள் தாமதமாகலாம்.வாழ்வின் அவசர நாட்காட்டியும்,கடிகாரமும் அப்படித்தான்.வாழ்வைச் செலவழிக்க பணத்தேவைகளும் கூடி மொய்க்கிறது.

தமிழ் தடுமாறும் சில வல்லின மெல்லினங்களாய் எத்தனை மனிதர்களைச் சந்திக்கிறோம்.ஒற்றைச் சொல்லில் தடுமாறிச் சாய்வது எந்தப்பக்கம்.ஆசையால் அல்லாடும் மனம் இதுதான் என நிரந்தரமாகாத ஏதோ ஒன்றை நினைத்து.இதைவிட இதைவிட இன்னும் இதைவிட என்று அதிக ஆசையோடு நடிப்பையும் உண்மையையும் அறியாமல் மயங்கிப்போகிறது....கிலுகிலுப்பைப் பக்கம் சரிந்து பார்த்துச் சிரிக்கும் குழந்தையாய்.நடிப்பெனத் தெரிந்தாலும் சலிக்காமல் தொடரும் மாயை நோக்கி.உண்மையோ குந்தியிருந்து அலறும் தன்னை ஒரு முறை விசாரிக்கச்சொல்லியும் மீள் பரிசோதனை செய்யச்சொல்லியும்.

திறக்காத கதவுகளோடு இருள் சிநேகிதம் கொள்ளும்.இருளோடு இருந்துகொள்(ல்)வது கொடுமை.திறக்காத கதவுகள் காத்திருக்கும் திறக்கும் கைகளுக்காக....வெளிச்சத்தைப் பொத்தி வைத்துக்கொண்டு....!

நூறு இல்லை ஆயிரம் இல்லையில்லை அதற்குமேலும் எனக்கு இறகுகள்.வேண்டாம் விபச்சாரியாய் ஒரு உரசல்........மூளை சொன்னாலும் மனம்.......!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 19, 2012

உதிரும் ‘நான்’கள்…

இருக்கையில் நான்
நான்காவதாக
எத்தனை கிசுகிசுக்கள்
முடிகளோடு சேர்த்து
முடிச்சவிழ்க்கப்படுகிறது.

யாரோவாய் இருந்த
‘நான்’களை வெட்டித் திருத்தி
இன்னும் முடியாமல்
பாதியில் நிற்கும்
கிசு கிசுக்களோடு
வெளியேற்றியபடி.

அத்தனை கிசு கிசுக்கும்
அலட்டிக்கொள்ளாத
புன்சிரிப்போடு
சலூன் சுவரில்
அந்த அழகு நடிகை.

இங்குதான்
உண்மையான ‘நான்’கள்
மனிதனை மனிதன் நம்பித்
தலைகளைக் கொடுக்கிறது
வாழ்வின் பிடிப்போடு.

சிலசமயம் இங்கு
“வித விதத் தலைகள் விற்பனைக்கு”
என்கிற விளம்பரம்
பார்க்கலாமோ
இனி வருங்காலங்களில்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, December 13, 2012

காதல் துளிகள் (4)...

சிறுதுளி
அன்பு தந்து
மறை(ற)ந்து
போனாய் ஏன் ?
சிறுகற்கள் போட்டு
நிரப்புகிறேன்
மனக்குடத்தை
காதல் காக்கையென !

கனவுக்குள்
வராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!

உன்னைப் புரிந்துகொள்வதற்காகவே
அகராதி ஒன்று
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
பண்டிதர்களும்
புலவர்களும்
முழி விழிக்க
உன் மொழியை
விளக்கிக்கொண்டிருக்கிறேன்
நான் !

இப்படியென்று
தெரிந்திருந்தால்
உன் காலடி மண்ணை
எடுத்து வைத்திருந்திருப்பேன்
அப்போதே
ஒரு குட்டி வீரனை
சமைத்திருக்கலாம்
உன்னைப்போல !

காற்றுவழி தூவ
கைக்குத் தந்த
காந்தள்ப்பூவை
தவறவிட்டாயோ
திசையறியாமல்
தவிக்கிறேன்
இங்கு நான் !

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 05, 2012

மழை நனைக்கும் ஒரு சொல்...

என்...
இரவுகளைக் காவலிருக்கிறது
உன் பூனை
முடியும்
இதோடு முடியுமென
முடியாமல் நீளும்
மாடிப்படிகளில்.

நீ...
சொன்னதால்
கதவுகள் திறந்து கிடக்க
பூனையின் அலறல்
காது சிதம்புகிறது.

உன்...
ஒற்றைச் சொல்
அகப்படுமென
உலகத்து ஓசைகளைத்
தன்னோடு இசைக்கிறதென்
வளையல்கள்.

மண்ணும்
காகிதக் கப்பல் சிறுமியும்
பிசிநாறி மழைக்காக
காத்திருக்க
அதே மழையை சபிக்கிறாள்
தெருக் கிழவி.

சொல்...
உன் பூனை என்பதால்
நனையாமல் காவலிருக்கிறேன்
இன்னும்
விட்டு வைக்கிறேன்
ஒரு மழை
காப்பாற்றட்டும் இரு உயிரை!!!

ஹேமா(சுவிஸ்)