*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, April 23, 2015

கருப்பு வெள்ளைகள்...

மழித்த சொற்களின்
கண்களில் முளைக்கிறது
புது முடிகள் வீரியமாய்
கோணிக் கோணி.

எத்தனை துரோகங்கள்
எத்தனை நம்பிக்கைகள்
கடவுள் மீதும்கூட
யாருமறியவில்லை.

'ஆசை விட்டெறி'
அறிவித்தவன் புத்தனல்ல
வறுமை துரத்தும்
போதிமரத்தடி
பிச்சைக்காரனும்தான்.

புன்னகைத்து முகம் நிமிர்த்தி
வெட்டப்பட்ட விரல்கள்
வடிவான செம்பூக்களாய்.

அறுக்கத் தொடங்கியாயிற்று
வெட்கம் முதல்
வீண் கர்வம் வரை.

கடும் மௌன விரதத்தோடு
உயிர் உறுப்பின் முதல் போணியை
வாரி அள்ளி வீசின
பனி மேடுகளில்
அகல விரிந்த பனி வாரியல்கள்.

பிளந்த
கடைசிச் சொற்களைத் தவிர்த்திருக்கலாம்
கறள் பிடித்த
வீறாப்பின் வாரியைப் போலவும்
கோணிய சில எண்ணங்கள் போலவும்.

தீராப்பிரியங்களால் அழிவது
எப்படியென்பது பற்றியும்
மெல்லத் தீவாவது
எப்படியென்பது பற்றியும்
ஆராயத் தொடங்கலாம் இனி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, April 17, 2015

மன்மத வருடம்...

கடிக்கும்
தின்னும்
மிருகம்
நீ
நான்.

பழங்குடிகளின்
தென்னங் கள்
வாசனை.

வெடித்துப் பிளந்த
இதழ்கள்
வலிக்க வலிக்க
ஆடிமாத வெயிலில்
தீ மிதிப்பு.

வெள்ளை மயில்
பட்ட மரம்
ஒற்றைத் தாமரை
சாரை அரக்கிய நிலம்.

கொஞ்சம் விட்டு
ஆறியபின் இதழூற்று
காய்ந்த நிலத்தின்
பொருமலிப்போ.

உள்காய்ச்சலில்
துளையிட்ட புண்களில்
மழையீரம் தடவ
மயிலெனத்
தவமிருக்கிறேன்
ஒரு மாதிரியான
அகவலுடன்.

பஞ்சாங்கம்
வந்தபாடில்லை.

உலர்த்தித் தளிர்த்த
உன் உதடுகள்
தேவைப்படலாம்
காயமில்லா இரவுகளில்.

மன்மத வருடமாமே இது!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 15, 2015

சாயும் சாயல்...

பிறவிச்சுழல் தொலைக்க
என் காலைச் சுற்றியே
மீண்டும் மீண்டும்
முளைத்தெழா ஆழக்குழி.

அதிதியொன்றின்
அநாகரிக வரவு.

கோளகையாய்
கோழையாய்
எரிச்சலாய்
என்னைப்போலவே
எனைச்சுற்றி
முன்னும் பின்னுமாய்...

தோற்றல் விதி
இழப்பும் விதி
வெறியாடும் வேக்காடு விதி
கதியின் விரைவும் விதியென
விருந்தும் பசியுமாய்
தன் நிழலே தன் கழுத்திறுக்க...

தொலைப்பது தோல்வி
தவிர
புதைக்க முடிகிறது
அது சாய்ந்த என் நிழலை
என் காலின் கீழ்.

என் குருதிக்கு
நீயே பொறுப்பெனக் கை நீட்டுமுன்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, April 10, 2015

தொடரும் விதி...

திகட்டத் திகட்ட
போதும் போதுமென
இழப்புக்களை
இரத்த வாசனையோடு
குடித்தவள் நான்.

இழப்புக்களும்
மரணங்களும்
ஒன்றும் செய்யாதிப்போ
மரத்த என் மனம் தாண்டி.

தறித்தது
வீழ்ந்தது
வீழ்த்தியது
மரமா
மனிதனா
மனமா ???

கடல்
தாண்டியும்
உயிரை
உரிமையை
மயிராய் மதிக்கும்
மாக்கள் மத்தியில்
இவன்
பிழைத்தென்ன பயன்.

நினைவின் நாசியில்
நைந்து நாறிய
ஈழத் தமிழனின்
வாசம் குறையாமலே.

அமிழ்தென
நெஞ்சை
நனைக்குமொரு
மழைத்துளி
தமிழை
தமிழனைத்
தாங்கும் வரை...

உலகம் மாறாது
தொடரும்
நஞ்சின் வீச்சம்
நமக்கே நமக்காய்!!!

தமிழகக் கூலித் தமிழ்த் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல்...

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 07, 2015

அனுகரணவோசை...

அவிழ்த்த
நூல் பிரித்து
கயிறாக்கியிழுத்த
போட்டியின் வெற்றியில்
இரத்ததானப் பெருவிழா.

இத்தனை ஏக்கமா
இருந்திருக்கிறது
யாக்கைக் குடுவைக்குள்
காதலும் காமமுமாய்.

தோய்த்தெடுத்த
ஈரங்கள் காயப் போதுமாயிருந்தது
இருபது விரல்கள் பிணைத்த
நிமிட மென்வெப்பம்.

வியர்வையில் முளைத்து
மௌனித்த நாணம்
இதழ் இதழாய்
அவிழ்ந்த மணம் மடியில்.

ஒற்றை நிலைக்கண்ணாடி காண
கொழுக்கி விலகிய சங்கிலியில்
சம்பிரதாயச் சடங்கு.

இனி
ஊரும்
எறும்புகளும்
பிரிக்கா இடைவெளியற்ற
ஆடைகள்
தேடி உடுத்துவதே அழகு.

உதட்டு முத்தங்கள்
ஒட்டிய இடங்களில்
சுவாச வாசங்களாய்
அன்பின் தியானம்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Saturday, April 04, 2015

கனவும் கடனும்...

கண் மூடினால்
கனவுகளில்
கனவுகளைத் துரத்தும்
பிரமாண்டப் பாம்பு
இடிந்து விழும் வானம்
புயல்
போர்
வன்முறை
வறுமை.

இன்றைய புதுக்கனவில்
என்றோ
தாத்தா சொன்ன
ஒற்றைக் கண்ணன்
துரத்த....

ஓடிய திசையில்
ஆழக் குழியொன்றில்
குப்பறத் தள்ளிய
நடு இரவில்
பிஞ்சுக் குழந்தையின்
கரங்களில் தஞ்சமாய்
தூங்கும் கனவில் நான்.

இனிப்புக்கள்
தேவதைகள்
நட்சத்திரங்கள்
பனிப்பாறைகள்
பளிங்கு மாளிகைகள்
மூக்கு முட்டும் வாசனையோடு.
வேண்டாக் கனவுகளை
அடித்து விரட்ட ....

பச்சைத் தவளை
டோராக்குதிரை
சிவப்புச் சிங்கம்
மஞ்சள் நாய்
சிவப்புப் பாம்பு
ஓடும் ஊர்தி
பறக்கும் விமானம்
குட்டிக் குட்டியாய்.

போர் நிறைந்த உலகில்
சிசுக்கள் நசுக்கும் பூமியில்
கை உயர்த்தி
அடிமைப் படா
ஓர் குழந்தை.

சிரிக்கும் கனவை
சிதைக்காமல் இணைகிறேன்
குட்டிப் புன்னகைக்குள்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)