*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, September 09, 2008

இசைக்கு இதய அஞ்சலி...

ஊரும் உறவும் உருண்டு புரள
சொந்தமும் பந்தமும் சோர்ந்து போக
பெற்ற பிள்ளை பிதற்றி அழ
உற்ற நண்பன் உயிர் துடிக்க
தூரத்து நண்பன் துவண்டு விழ
தொலை பேசி அலறி அடிக்க
மின் மடல்கள் நிறைந்திருக்க
உற்றவர்கள் ஓடி வர
பக்க வாத்யங்கள் பரிதவிக்க
ஸ்வரங்கள் ஸ்தம்பிக்க
திருநீறும் குங்குமமும் நெற்றிக்காய் ஏங்க
தாளமும் பாவமும் தடம் புரள
ஊமையாய் மூலையில்
அவர் விரல் தொட்ட
வயலின் மாத்திரம்!!!!

இசைமேதை குன்னக்குடி அவர்கள்
காலத்தோடு என்றும்
இசையாய் வாழ்வார்
எம்மோடு.
கலங்கும் இதயத்தோடு கண்ணீர் அஞ்சலி.

ஹேமா(சுவிஸ்)

12 comments:

களத்துமேட்டின் ஈழவன் said...

மௌனித்துப் போன
அவர்தம் மூச்சும் கூடவே
விரலும் வயலினும்
மூச்சையாயிற்றே!

//ஊமையாய் மூலையில்
அவர் விரல் தொட்ட
வயலின் மாத்திரம்!!!!//

ஹேமா said...

நன்றி களத்துமேடு.மனதால் நினைத்துப் பார்த்தேன்.வாய் பேசக்கூடிய நாங்கள் அவரின் இழப்பைப் புலம்பியே மனதைக் கொஞ்சம் இலேசாக்கிக் கொள்கிறோம்.அவரோடேயே இசையோடு பயணித்து,அவரது இசையில் திறமைகளைக் கண்டு வியப்புற்று,அவரது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொண்ட பேசமுடியா அந்த வயலினின் மனநிலை எப்படியிருக்கும்?குன்னக்குடியின் நினைவோடு அந்த வயலின் இனி ஒரு காட்சிப் பொருள்தானே!

தமிழ்ப்பறவை said...

அவரின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்திக்கிறேன்...
உறவினர்கள் சில நாட்களில்,சில மாதங்களில் தேறி விடுவர்...வயலினை யார் தேற்றுவது?

தீலிபன் said...

ஹேமா தாங்கள் இசை மேதைக்கு தெரிவித்த அஞ்சலி கலங்க வைத்து, ஆனால் தங்கள் தாய் நாட்டிற்கு இன்னுயிர் நீத்த அந்த வீர மறவர்களுக்கு உங்கள் சார்பாக நான் அஞ்சலி செலுத்துகிறேன், ஏன் என்றால் இதையும் உங்களவர்கள் அரசியலாகத்தான் பார்பார்கள்.

கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி

கரும்புலி மேஜர் ஆனந்தி

கரும்புலி கப்டன் கனிமதி

கரும்புலி கப்டன் முத்துநகை

கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்

கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்

கரும்புலி மேஜர் நிலாகரன்

கரும்புலி கப்டன் எழிலகன்

கரும்புலி கப்டன் அகிலன்

கரும்புலி கப்டன் நிமலன்

அப்புச்சி said...

தங்களின் கவிவரிகள் சோகத்தில் கனக்கிறது.
குறிப்பாக;;;
தாளமும் பாவமும் தடம் புரள,
ஊமையாய் மூலையில்
அவர் விரல் தொட்ட
வயலின் மாத்திரம்!!!!

என்ற வரிகள் சோகத்தின் ஆழத்தினை தொட்டு நிற்கிறது .உயிர்களின் பிரிவிற்கு பின்னர் இழப்புக்களை நினைவூட்டுபவை உயிரற்றவை தான். எமது கண்ணீர் நினைவலைகள் உரித்தாகட்டும்.

இப்படிக்கு
என்றும் அன்புடன்
அப்புச்சி‌


மேலும் மாவோ நினைவூட்டலுக்கும் நன்றி

ஹேமா said...

//உறவினர்கள் சில நாட்களில்,சில மாதங்களில் தேறி விடுவர்...
வயலினை யார் தேற்றுவது?//

வாய் பேசாப் பொருட்களின் அவஸ்தை எப்படியிருக்கும்?

ஹேமா said...

திலீபன்,என்னவோ சொல்லி எதையோ குழப்புங்கோ,எங்கள் நாட்டில் செய்திகளில் தெரிந்தும் பாதி...தெரியாமல் பாதியாய் ஒவ்வொரு நாளுமே எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கிறோம்.
அத்தனை பேருக்குமே கண்ணீர் அஞ்சலிதான்.இப்பொழுதெல்லாம் எமக்காக மண்ணில் வித்தாகும் உயிர்களைப் பார்க்கும்போது மனம் மரத்துப் போகிறது திலீபன்.

ஹேமா said...

நன்றி உங்கள் வருகைக்கு அப்புச்சி.
உன்னதமான இசைக்கலைஞரின் இழப்பு என்பது எங்கள் கலாசார பதிவின் இழப்பும் கூட.

//மாவோ நினைவூட்டலுக்கும் நன்றி//
எனக்கு அரசியல் என்பது மேலோட்டமான அறிவே.
"மாவோ"அவர்களைப் பற்றி நீங்கள் ஒரு பதிவு இட்டிருக்கலாமே!

கானா பிரபா said...

இசைமேதைக்கு உங்கள் கவிதாஞ்சலி சிறப்பு சேர்த்தது, மிக்க நன்றிகள் ஹேமா

தீலிபன் said...

தோழி ஹேமா அது சாதாரண மரணம் அல்ல, இந்திய துரோகிகளை உலகுக்கு இனம் காட்டிய வீர மரணம்.

நிலா முகிலன் said...

குன்னக்குடி அவர்கள் வயலின் வாசிக்கும் வேளையில் அவரது முகமும் சேர்ந்தே வாசிக்கும். அவரது முகத்தின் சேஷ்டைகள் கண்டு சிரித்திருக்கிறேன். இன்று அழ வைத்து விட்டு அவரது வயலின் இசையையும் அவரது முக அசைவுகளையும் நிறுத்தி விட்டு பொய் விட்டார். உங்கள் கவிதை மேலும் மனதை கனமாக்கியது.

ஹேமா said...

நன்றி முகிலன்.இனி எப்போ?
என்கிற கேள்வி மட்டுமே மனதில் கவலையோடு தொக்கி நிற்கிறது.

Post a Comment