*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, November 27, 2008

நினைவின் நாள் 2008

ஈழமதில்...
மண்ணுக்காய் மரணித்தீர்
மறவோம் உங்களை நாம்.

மிருகங்கள் முதல்
பறவைகள் வரை
பூச்சிகள் முதல்
புளுக்கள் வரை
விடுதலைக்காய்
விட்ட சுவாசத்தில்தான்
விட்டு எடுக்கும்
எங்கள் சுவாசம்.

மறந்துவிட்டால்
மனிதரல்ல நாம்.
தெய்வங்களாய்
துணையிருந்து
பெற்றுத்தாரும்
எம் விடுதலையை!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 26, 2008

ஞாயமா?

விதியாம்...வேளையாம்
என்ன ஐயா வேடிக்கை!
விண்ணர்களின் வன்முறையால்
விளையாடிய வாழ்க்கை
விதியின் விளையட்டா?
வேளையின் பொழுதுபோக்கா?

குடிசை மேல் குண்டு மழை
தஞ்சமென்று குடிபுகுந்த
கோயில் வீதியெங்கும்
கண்ணி வெடி
படிக்கும் பள்ளியை
அழிக்கும் புக்காரா.
பறக்குது இலவசமாய்
ஈழத்தில்
பல உயிர்கள்.

பிய்க்கும் பசிக்கொடுமை
கொய்யாபழம் பறிக்க என்று
கையை நீட்டிய
பாலகன் கால் பறக்கிறது
கண்ணி வெடியில்.

பாலுக்காய்
பச்சைக் குழந்தையொன்று
கதறித் துடிக்க
பக்கத்துப் படலை தாண்டி
வேண்டப்போன தந்தையோ
பாடையிலே பயணமானார்.

வருங்கால எம் பூ ஒன்று
பள்ளிக்குப் போகையிலே
பாதை நடுவினிலே
அரக்கர்களின் கரம் பட்டு
பட்டுபோகிறது புதைகுழிக்குள்
ஆனால்....
காணாமல் போகிறவர் பட்டியலில்.

வயது போகவில்லை
வருத்தம் வாதையில்லை
மலர்ந்தும் மலராத
மொட்டுக்கள் எல்லாம்
இரத்தக் காட்டேரிகளால்
கொத்திக் குதறும் அவலம்
விதியாம்...
இது வேளையாம்.

காலநேரம் இல்லாமல்
அரைகுறையில் பறித்துப்போக
அப்படியென்ன
ஈழத்தில்...
தமிழன் உயிர் மட்டும்
காலனுக்குக்
காலின் தூசோ!

பழிமட்டும்
விதிக்கும் மேலும்
வேளையின் மேலுமோ!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 23, 2008

மடி கொஞ்சம் தருவாயா...

மகளே மகளே...என் செல்வமே
கொஞ்சம் நீ...
அருகே வருவாயா
நான் உன் குழந்தையாகி
உன் மடியில் தவழ்ந்திருக்க!

உன்னை நான்
கருச்சுமந்த நாட்களை
கண்ணீர் ஊறிய
கடந்துவிட்ட கனவான நினைவுகளை
தனித்து விடப்பட்ட
வெறுமையான நாட்களை
கதை கதையாய் சொல்லி அழுவேன்
என் தலை தடவி ஆறுதல் தருவாயா!

ஆண்டவன் எல்லாம்
நிறைவாய் தந்திருந்தும்
நீ...உன் தம்பி...உன் அப்பா
என்ற அழகிய கூடு இருந்தும்
எதுவுமே இல்லாமல்
யாருமே இல்லாமல்
உலகத்து உரிமைகள் எல்லாம்
எனக்கு மட்டும்
இல்லையென்றானது போல்
இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!

நம் நாட்டுக் கலவரத்தைக்
காரணம் காட்டி
ஈரேழு வருடங்களுக்கு முன்
உன் அப்பாவை
என் வாழ்க்கையை
ஆர்ப்பரித்த என் ஆசைகளை
எனக்கேயான அந்த இனிய நாட்களை
வீசிய வசந்தத்தை
காலன் கவர்ந்து கொண்டதை
வகை வகையாய் பிரித்து
படம் பார்க்கும் உணர்வோடு காட்டுகிறேன்.
குழந்தை சொல்லும் கதையாக
கொஞ்சம் நீ...கேட்பாயா!

கனவில்தான் காண்கின்றேன்
கண்மணியே உன்னை
கருச்சுமந்து பெற்றெடுத்த
நினைவு மாத்திரமே எனக்குள்.
தாங்கிய வயிற்றைத்
தொட்டுத் தடவிப்பார்த்தே
உண்மையென்று உணர்ந்துகொள்கிறேன்.
பால் குடித்து என் மடி தவழ்ந்த பருவத்திலே
உன்னை விட்டு வந்தேன்
வெளிநாடு ஒன்று தேடி!

நாட்களோடு நீயும் ஓடி
தாவணிப் பருவம் தாண்டி
இன்று நீ புகுந்த வீடும்
போகத் தயாராகிவிட்டாய்.
நடுக்ககடலின் தத்தளிப்பில்
தாவிப்பிடித்த துடுப்படி நீ எனக்கு.
ஜீவனே...என் உயிரே...என் மகளே
உன் துணையின் கைகளுக்குள்
சொந்தமாகிப் போகுமுன்!

நீ...கொஞ்சம்
உன் மடியைத் தருவாயா
ஒரு குழந்தையாய் உன் மடியில்
நான் அணைந்திருக்க!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 17, 2008

போர் முகம்...

தூக்கம் தொலந்த
இரவுக் கோடிகளில்
எங்கள் பிரயாணங்கள்.
பசியும் தூக்கமும் பாரமாகி
தூக்கி எறியப்பட்ட பிசாசுகளாய்.
இலட்சியங்களுக்கு நடுவில்
சாத்தான்களாய் அவைகள்.

சிலசமயம்...
இதோ அருகிலேயே என்பதாயும்
சிலசமயம்...
கொஞ்சம் பொறு என்பதாயும்
நம்பிக்கை
நடைகள் தளராமல்.

கல்லறைச் சிநேகிதரோடு
பேசியபடியே
சின்ன உறக்கம்.
வெற்றிப் பூக்கள்
கொண்டுவரத் தட்டி எழுப்பிவிட்டு
மீண்டும் உறங்குவான் அவன்.

சின்னதாய் பெரிதாய்
எமக்குத் தேவையான
காலவரயறை அற்ற
காவியங்களை
இழந்து நிற்கிறோம்.
பள்ளிப் பாடம் சொல்லித்
தராத...தரமுடியாத
சரித்திரங்களாய் நாங்களே
சரித்திர ஜாம்பவான்களாய்.

பாலடையில் மருந்து பருக்க
அருவருத்த நாங்கள்
விருப்பத்தோடு விரல் நுனியில்
குப்பி மருந்தோடு.
நீலகண்டன் விழுங்கிய நஞ்சு
கழுத்தோடு மட்டும்தான்.
நாங்களோ நஞ்சு மாலையை
நெஞ்சோடு சுந்தபடி.
சில பொழுதுகள்
நாங்களே நஞ்சாகி.

யார் கொடுத்த சாபமோ
அகதிகளாய் அநாதைகளாய்
எம் மக்கள்.
மானத்தின்
மானத்தைக் கூட இழந்தவர்களாய்.
நாடு கடந்தாலும் உள்ளம் மட்டும்
தன் மண்ணோடு.
விண்ணோடு கலந்தாலும்
வீரியத் தமிழனாய் என்றும்!!!

(ஹேமா சுவிஸ்)

Friday, November 14, 2008

ஞாபகச் சின்னம்...

ஞாபகச் சித்திரங்களை
காலக் கருடன்
மெல்ல மெல்லக் காவி
குதறித் தின்றபடி.

சின்னச் சின்னக்
கீறல்கள் கோடுகள்
இன்னும் இதயத்துள்
சன்னங்களாய்
கந்தலாகி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அழிந்தும் அழியாமலும்.

பங்கருக்குள்ளும்
விமானப் பரிசோதனைக்குள்ளும்
பாதுகாத்துக் கொண்டுவந்த
ஆறு புளியங்கொட்டையும்
ஒரு சிரட்டையும்
காதலின் நினைவோடு
கட்டிய பழைய சாமான்களோடு
தூசு படிந்த
என் மனமாய்.

அதையும் கண்டு
அடம் பிடிக்கிறாள்
என் குழந்தை
விளையாடக் கேட்டு.
இந்த நாட்டில்
புளியங்கொட்டையும்
சிரட்டையும்
புதுமையாய் அவளுக்கு.

கண்ணுக்குள் நிழல் வலிக்க
மூளை விரும்பாமலே
தலை மட்டும் விருப்பமாய்
ஆடுகிறது மெதுவாய்.

தொலைத்த காட்சிகளை
எதிர்காலச் சாட்சிகளின்
கைகளில் கொடுத்தபடி
"இஞ்சாருங்கோ"
கூப்பிட்ட குரல் கேட்டு
"என்னப்பா"
என்றபடி நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 11, 2008

வானவில்...

மரத்தில்
குரங்காய் குந்தியிருந்து
வானவில் ரசிப்பு.

சிம்னி விளக்கருகே
குப்புறப் படுத்தபடி
குங்குமம் வார இதழ்.

முற்றத்து மணலில்
அம்மா கையால்
நிலாச் சோறு.

தலையில் பேன்.
காலில் சேற்றுப் புண்
தலயணைச் சண்டை.

எதிர்வீட்டு ஓரப்பார்வை.
தூவான நனையல்.
துலாக் குளியல்.
அணிலின் ஸ்பரிசம்.

ம்...அப்போ
எல்லாம்...எல்லாமே
இருந்தது.
அனுபவித்த சுகங்கள்
நினைவோடு.

இப்போ இருப்பது
பணம் மட்டுமே.
சுகங்கள்
வானவில்லாய்!!!
மழை மேகத்து வானம்.
அந்தரத்தில் தொங்கும்
மழை முகிலின்
வர்ணச் சேலை.
வானமங்கை நெற்றியில்
நிற நிறமாய் குங்குமம்.

மேக மங்கையையை
முகம் சிவக்க வைக்காமல்
தூக்கமே வராது
முத்தமிட்டுக் கொள்ளும்
இடிக்கும் மின்னலுக்கும்.

பல வர்ண மாலை கோர்த்து
மழையை வரவேற்கும்
வழக்கத்தை விடாது வானம்!!!

ஹேமா(சுவிஸ்)
கடையம் ஆனந்த் தளத்திற்காக போட்டோக் கவிதை.

Friday, November 07, 2008

வெளிநாடு...

குளிர் கால ஆலாபனைகள்.
மரங்கள் மஞ்சள் ஆடையில்
ஆதவன் ஒளிந்து காணவில்லை.
வானமோ அழுது வழிந்தபடி.
முக்காடு போட்ட
முகமூடி மனிதர்கள்.
இதுதான் வெளிநாடு...

வெளிறிய அவிந்த முகங்கள்.
ஆணா பெண்ணா அறியமுடியா
அறிமுகமற்ற
அரை குறை அளவலாவல்.
காதிருந்தும் கேட்காத
வாயிருந்தும் பேசாத
நாடு இருந்தும்
நாடோடிகளாய் நாம்.

திட்டுகிறானா பேசுகிறானா
அணைக்கிறானா அழைக்கிறனா
புரியாத புதிய பத்துப் பாஷைகள்.
இதுதான் வெளிநாடு...

நாய்க்கு உணவா
நமக்கு உணவா
நாலு பாஷையில் எழுதியிருந்தும்
புரியவில்லை யாருக்கு என்று.
பனியில் உறைகிறோமா
மழையில் குளிக்கிறோமா
மூக்கும் காதும் விறைத்துவிட
பாதத்தில் பாரமாய்
பாதணிகளைச் சுமந்தபடி.

மனம் விம்மினாலும்
பணம் பணம் என்று
பிணமாய் திரிகிறோம்.
மாத முடிவில்
மொத்தமாய் கட்டுகின்ற
வீட்டு வாடகை முதல்
காப்புறுதிகள் வரை.
மிஞ்சுவதோ மொய் எழுத.
இதுதான் வெளிநாடு...

மின்சார மயத்தில்
இரவும் பகலும் கூட
இரவல் பொழுதாகி
மணிக்கூட்டு முட்களோடு
நாமும் முண்டி ஓட
தொலைந்த நேரங்கள்
கலைந்த நின்மதிகள்
வராத வசந்தங்கள்
தேடினாலும் கிடைக்காமல்
தூர நின்று கை காட்டும்.
வெளிநாடாம் இது!
இங்குதான் சொர்க்கமாமே!

சொந்த நாட்டில்
சுகங்களைத் தொலைத்துவிட்ட
பரதேசிகள் நாம்.
ஈழத் தமிழனின் விதியில்
திணித்துவிட்ட
சங்கதியில் இதுவும் ஒன்று.

இதுதான் வெளிநாடு!!!

ஹேமா(சுவிஸ்)(14.11.2000)

Sunday, November 02, 2008

என் தேசம் ரஹ்மான் குரலில்...