*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 31, 2012

2012 ன் இறுதித் தேநீர்...

அதன் பின்னான
உரையாடல்களை
திசை திருப்ப
முயன்றுகொண்டிருந்தேன்.

அவனோ...
பேசிப்பேசி
உலகின் மொத்த
வார்த்தைகளையும்
முடித்திருந்தான்
இடையில்
பேசும் கிளிகளின்
பேச்சுக்களையும்
கடன் வாங்கியிருந்தான்.

அவனுக்கான
மௌன மொழிகளை
நான்.....
மொழி பெயர்க்கையில்
கோபமாய் இருப்பதாக
ஊகித்துக்கொண்டான் போலும்.

உதடு சுழிக்கும் தோரணையில்
என் விருப்பங்களை
புரிந்துகொண்டிருந்தான்
தாம்பத்யத்தின் அத்துப்படிகளை
என் நுனிவிரல் தொடலில்
அறிவதில் அசகாயசூரன்.

காத்திருப்பும் ஊடலும்
அதிகபட்ச ஆசையாய்
என் உடலிலும் உள்ளத்திலும்
ஒரு சிறுதீயை உதறிவிட்டிருந்தது
நானும் காட்டிக்கொள்வதாயில்லை
நான் என்பதை...

நெருங்கி
குழைந்து
இடைவெளி குறைத்து
சாரலாய்
காதலைக் குடைந்து
ஊற்றும் மந்திரப்
பூக்களை தூவி
சூழலை
விறுவிறுப்பாக்கியவன்....

மௌன மொழிகளடங்கிய
இசைக்கோர்வை
இனிதே நிறைவுற
இரு மலைகள்
மெல்ல நகரத்தொடங்கின
பிரம்ம முகூர்த்தத்தில்.

காலையில் வெட்கி
முகம் மூடியவனை
காது திருகி
தலையில் குட்டி
முத்தம் கொடுத்து
தேநீர் கொடுக்க
மீண்டும் குடிக்கத்தொடங்கினான்
என்னை...!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 24, 2012

இன்னுமொரு புலம்பல்...

வாழ்வைக் கேள்விகளோடு ரசிப்பவள் நான்.இப்படித்தான் என ஏற்றுக்கொள்வதுமில்லை. எப்படியும் இருந்துவிடட்டும் என்று விட்டுப் போவதுமில்லை.வாழ்வின் அனுபவம் கேள்விகளைத் தந்துவிட்டுக் காவலிருக்கிறது.பதில்கள் தாமதமாகலாம்.வாழ்வின் அவசர நாட்காட்டியும்,கடிகாரமும் அப்படித்தான்.வாழ்வைச் செலவழிக்க பணத்தேவைகளும் கூடி மொய்க்கிறது.

தமிழ் தடுமாறும் சில வல்லின மெல்லினங்களாய் எத்தனை மனிதர்களைச் சந்திக்கிறோம்.ஒற்றைச் சொல்லில் தடுமாறிச் சாய்வது எந்தப்பக்கம்.ஆசையால் அல்லாடும் மனம் இதுதான் என நிரந்தரமாகாத ஏதோ ஒன்றை நினைத்து.இதைவிட இதைவிட இன்னும் இதைவிட என்று அதிக ஆசையோடு நடிப்பையும் உண்மையையும் அறியாமல் மயங்கிப்போகிறது....கிலுகிலுப்பைப் பக்கம் சரிந்து பார்த்துச் சிரிக்கும் குழந்தையாய்.நடிப்பெனத் தெரிந்தாலும் சலிக்காமல் தொடரும் மாயை நோக்கி.உண்மையோ குந்தியிருந்து அலறும் தன்னை ஒரு முறை விசாரிக்கச்சொல்லியும் மீள் பரிசோதனை செய்யச்சொல்லியும்.

திறக்காத கதவுகளோடு இருள் சிநேகிதம் கொள்ளும்.இருளோடு இருந்துகொள்(ல்)வது கொடுமை.திறக்காத கதவுகள் காத்திருக்கும் திறக்கும் கைகளுக்காக....வெளிச்சத்தைப் பொத்தி வைத்துக்கொண்டு....!

நூறு இல்லை ஆயிரம் இல்லையில்லை அதற்குமேலும் எனக்கு இறகுகள்.வேண்டாம் விபச்சாரியாய் ஒரு உரசல்........மூளை சொன்னாலும் மனம்.......!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 19, 2012

உதிரும் ‘நான்’கள்…

இருக்கையில் நான்
நான்காவதாக
எத்தனை கிசுகிசுக்கள்
முடிகளோடு சேர்த்து
முடிச்சவிழ்க்கப்படுகிறது.

யாரோவாய் இருந்த
‘நான்’களை வெட்டித் திருத்தி
இன்னும் முடியாமல்
பாதியில் நிற்கும்
கிசு கிசுக்களோடு
வெளியேற்றியபடி.

அத்தனை கிசு கிசுக்கும்
அலட்டிக்கொள்ளாத
புன்சிரிப்போடு
சலூன் சுவரில்
அந்த அழகு நடிகை.

இங்குதான்
உண்மையான ‘நான்’கள்
மனிதனை மனிதன் நம்பித்
தலைகளைக் கொடுக்கிறது
வாழ்வின் பிடிப்போடு.

சிலசமயம் இங்கு
“வித விதத் தலைகள் விற்பனைக்கு”
என்கிற விளம்பரம்
பார்க்கலாமோ
இனி வருங்காலங்களில்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, December 13, 2012

காதல் துளிகள் (4)...

சிறுதுளி
அன்பு தந்து
மறை(ற)ந்து
போனாய் ஏன் ?
சிறுகற்கள் போட்டு
நிரப்புகிறேன்
மனக்குடத்தை
காதல் காக்கையென !

கனவுக்குள்
வராதேயென்று
எத்தனை தடவை
சொல்லியும்
என்....
விழிவாசலில்
அங்கேதான்
சுவடழித்தபடி
நீ....!

உன்னைப் புரிந்துகொள்வதற்காகவே
அகராதி ஒன்று
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
பண்டிதர்களும்
புலவர்களும்
முழி விழிக்க
உன் மொழியை
விளக்கிக்கொண்டிருக்கிறேன்
நான் !

இப்படியென்று
தெரிந்திருந்தால்
உன் காலடி மண்ணை
எடுத்து வைத்திருந்திருப்பேன்
அப்போதே
ஒரு குட்டி வீரனை
சமைத்திருக்கலாம்
உன்னைப்போல !

காற்றுவழி தூவ
கைக்குத் தந்த
காந்தள்ப்பூவை
தவறவிட்டாயோ
திசையறியாமல்
தவிக்கிறேன்
இங்கு நான் !

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 05, 2012

மழை நனைக்கும் ஒரு சொல்...

என்...
இரவுகளைக் காவலிருக்கிறது
உன் பூனை
முடியும்
இதோடு முடியுமென
முடியாமல் நீளும்
மாடிப்படிகளில்.

நீ...
சொன்னதால்
கதவுகள் திறந்து கிடக்க
பூனையின் அலறல்
காது சிதம்புகிறது.

உன்...
ஒற்றைச் சொல்
அகப்படுமென
உலகத்து ஓசைகளைத்
தன்னோடு இசைக்கிறதென்
வளையல்கள்.

மண்ணும்
காகிதக் கப்பல் சிறுமியும்
பிசிநாறி மழைக்காக
காத்திருக்க
அதே மழையை சபிக்கிறாள்
தெருக் கிழவி.

சொல்...
உன் பூனை என்பதால்
நனையாமல் காவலிருக்கிறேன்
இன்னும்
விட்டு வைக்கிறேன்
ஒரு மழை
காப்பாற்றட்டும் இரு உயிரை!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 30, 2012

காதல் வலி...

இறக்கைகளை ஒவ்வொன்றாகப்
பிய்த்து ரசிக்கிறாய்
ஒருமுறை
ஒரே ஒருமுறை
நாம் வைத்த அன்புக்காக்
இரக்கம் காட்டு
களிம்பு தடவு
ஒற்றை முத்தம் தா
சிறகு முளைக்க
பறக்கும் எல்லைக்கல்லாக
உன் வெப்பக் கரம் தா
போகிறேன்
தூர இருந்து ரசிக்கிறேன்
என்னைச் சுற்றி
உன் ஒளிவட்டம்தான்
மீண்டும்....
கண்ணுக்குள் காட்டிய
கடவுளுக்கு நன்றி
என் இறக்கைகளை
பிய்க்கிறாயே
உண்மை சொல்
வலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 27, 2012

ஊழியக்காரர்கள்...

வெட்டவெளியில்
காற்றசையும் மொழியில் பிறக்கிறது
உமக்கும் எனக்குமான உரையாடல்
தலைதடவிப் போகிறது
ஒரு கிளை
சூரியக்கதிரின் ஸ்பரிசத்தோடு.

கண்கள் இருளுடைக்க
கேட்கின்றீர் ஆயிரம் கேள்விகளை
கனவுகளில் தேடிக் கிடைத்த
உமக்கான
வசியச்சொற்களின் அலங்காரத்தோடு.

மடித்த வானத்துள் மனசை மறைத்து
தலை குனிந்தே
மண் பார்த்துக் கவிழ்கிறேன்.

நீரைப்போல் சுழித்தோடியவர்களிடம்
கரையாத உணர்வோடு
பெருமூச்சொன்றை
வெப்பமாய் வெளித்தள்ளி
பலஜென்மத்து மீதமென
விரட்டும் விந்தையோடு
உயிர் குடிக்கும் விஷப்பாம்பின்
கதை சொல்கிறேன்.

சப்பாத்திக் கள்ளி காலில் குத்த
திரை விலக்கிய காற்றில்
நீட்டும் ஒரு கையில்
என் குருதி.

சுவறேறும் எறும்புகளின்
கனவுக்கான வேண்டுகோளோடு
ஈரக்காற்றில்
முகம் புதைந்திருக்கும் என்னிடம்
பிரிந்து போவதற்கான
வார்த்தைகளை அவிழ்க்கிறீர்கள்.

தோழர்களே....
மீண்டும் வருவீர்களோ
காத்திருக்கிறோம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 26, 2012

அண்ணாவுக்கு வாழ்த்து...

பிரபஞ்சம் பெரிது
அதைவிடப்
பெரியவன்
நம் சூரியன்
இறைந்தெங்கும்
நிறைகின்றான்
தமிழர்கள்
நெஞ்சமெங்கும்.

வெளிச்சத்தைவிட
அதை....
உமிழ்ந்தெடுத்து
வெளிவிடும்
விளக்கின்
மதிப்பானவன்...

எம் அன்பான
அண்ணனுக்கு
மனம் நிறைந்த
பிறந்த நாள் வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 25, 2012

கார்த்திகைத் தீபங்களே...

கந்தகத் திணறலில்
ஈழத்தாய்
என் தாய்
ஒரு யுகத்தின் தாய்
கருச்சிதைவுற்றிருக்கிறாள்.

நரிகளின் ஊளைகளை
தன் காதில்
அடைத்துக்கொண்டாள்
குழந்தைகளின்
தூக்கம் கலைக்க விரும்பாதவள்.

வீடு கனத்து
பூமி அசைந்து
வானம் பிழக்க
காணாமல் போன
குழந்தைகளுக்களுக்காய்
வேண்டிக்கொள்கிறாள்
கல்லான கடவுளிடம்.

வன்மங்களை வன்மங்களாலும்
சூழ்ச்சிகளை சூழ்ச்சிகளாலும்
கிழித்தெறிய முடியும் அவளால்
ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்
பாலுறுப்புக் கிழித்த விரல்களை
எதிர்பாரா தருணத்தில்
சில திருவிழாக் காலங்கள்
தொடங்கலாம்.

எம் மக்கள்
அகதியாய்...
அநாதைகளாய்...
அரற்ற சாபம் குடுத்தவன் எவன்
எந்தக் கள்ளச் சாமியவன்.

சிவப்புச் சால்வைக்காரன்
அள்ளிப்போனதுபோக
மிச்சக் குழந்தைகள்
பயந்து மிரண்டபடி
வயிற்றுக்கும்
அறிவுக்கும்
பெரும் பசியோடு.

மாவீரர்களே
மண் சுமந்த
எம் சிவபெருமான்களே
உங்கள் மண்ணும் மக்களும்
வாய்பேசா மௌனிகளாய்
உயிர் சுமந்த பிணங்களாய்.

காத்திருக்கிறோம்
உங்களுக்காகத்தான்
வந்துவிடுங்கள்
இல்லை எமக்கான
வழி சொல்லுங்கள்.

நமக்கான தீர்வை
பறித்தெடுக்க
இன்னொரு யுகத்தை
ஏன் தந்து போனீர்
துயர்தான்
தமிழன் காலமென
பரிதாபப்படும்
துயர் துடைக்க
இன்னுமொரு சூரியன் தேவையோ
அதற்காவது.......
வரமொன்று தாங்களேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 23, 2012

காவலில்லா என் தேசம்...

தலைவனில்லா தேசத்தில்
யாரும் திரும்பா பூமியில்
நாங்கள் வசிக்கிறோம்
மண்ணையும்
உங்களையும் நேசித்தபடி
காவலே விழுங்கும்
காவல்கள் காக்க இங்கு.

யாரோ ஆள்வதாய்
உணர்கிறோம் எங்களை
ஒற்றைப் பருக்கையை
தாங்களே
பிச்சையிடுவதாயும்
சொல்கிறார்கள்
எங்கள் சமையலறைக்குள்
அவர்களின் சப்பாத்துக்கள்
துப்பாக்கி முனைகளில்
சந்தோஷங்கள் உறைய
உறிஞ்சும் எங்கள் நிம்மதி
அவர்கள் கைகளில்.

கார்த்திகையில்
நாய்களுக்குக்கூட சுதந்திரம்
அதுகூட....
எங்கள் சனங்களுக்கு
ஈழத்தமிழனுக்கு
இல்லாமல் போனது.

ஆர்ப்பாட்டங்களும் ஆயுதங்களும்
எம்மை ஆள்வதாயும்
அடங்காவிடில்
கிடங்குகள் காத்திருப்பதாயும்
நம் பலவீனங்கள்
பேய்களுக்குப் பிறந்தவர்களுக்கு
பேராயுதங்களாயும்.

கொல்லப்பட்ட என் பூமியில்
மிச்சம் இருக்கும்
எல்லாமே கொல்லப்படுகின்றன
போர் தின்று
விட்ட எச்சங்களுக்காய்கூட
காக்கைக்கூட்டம்போல அவர்கள்.

ஒன்றுமில்லாப் பரதேசிகளிடம்
எஞ்சியிருக்கும் கொஞ்ச
சுதந்திர உணர்வும்
பறிபோகிறது
தலைவன் இல்லா நிலத்தில்
அவர்களின் நாய் நரிகூட
எமக்கான தலைவர்களாம்
வாய்பூட்டுக்கள் இலவசமாய்
கேட்டுக்கேள்வியில்லா
மரணங்களும் இலவசமாய்.

கேட்கத் துணிந்த மனிதர்கள்
எம்மைக் காவல் காத்த
காவல் தெய்வங்கள்
இல்லா பூமியில்
எங்கள் சனங்களின் கதி....?!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 18, 2012

தூபம்...

நான் தெரியாதுபோல
நடிப்பதைக்
கண்டுபிடித்துவிடுவாயோ 
ம்ம்ம்...
உன் ஆலாபனையை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
மகிழ்ச்சியில் நீ.

நீயோ...
விடுகதைகள்போல
பலவற்றைச்
சொல்லிச் சொல்லி 
விடுவிக்கிறாய்
அந்த நேரத்தின்
உன் முகபாவமே
அலாதிதான்
சொல்லத் தெரியவில்லை.

இல்லை இல்லை...
அதுவும் இதுவும் 
ஒன்றில்லையென்று 
சொல்ல நினைத்தும்
ஆகாதது பற்றிச்
சொல்லி ஆகாதென்று 
பேசாமலிருக்கிறேன்.

நீயோ...
உறுதியாக்கிக்கொள்ள
படாத பாடு படுகிறாய்
உன் அவஸ்தையும்
ரசனையாகவே இருக்கிறது.

இடைக்கிடை 
தவறு...தப்பு
எனச் சொல்ல 
விழைகிறேன்
விடுவதாயில்லை 
உன் அவசரம்.

நான்...
நீ...
இருள்...
சம்பந்தப்பட்டது என்றாலும்
இயல்புதான் என்கிறாய்
அலாதியான
உன் இயல்போடு.

சொல்லிக்...கொ...ண்...டே
கேட்டுக் கேள்வியில்லாமலே
அந்தி நட்சத்திர இருளில்
என் உணர்வுகளைத்
தின்னத் தொடங்குகிறாய்
சிவப்பு நிற மதுவின்
உதவியோடு
மிகமிகக் கவனமாக!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 14, 2012

என் காதல் மிருகம்...

காதல் தின்று
பின் கொல்லும்
கூர்விழி வாளோடு
உலவும்
ராட்சஷியோ நீ.

கண்ணும்
வார்த்தையும்
குவளை மதுவாய்
போதையாய்
அதைவிட
இன்னும் தேவையாய்.

அன்று சந்தித்த
இரவில்
என்ன பேசினாய்
உன் பக்கமாய்
என்னை...
எப்படிச் சரித்தாய்
இன்றுவரை
சுயமற்று நான்.

மிரட்டும் அன்பில்
வியர்க்கும் மெய்
உன் வெப்ப
ரேகைகளுக்குள்தான்
அடங்கி இயங்கும்.

அடியேய் கிராதகி...
வெளிவரமுடியாக் காட்டில்
அலையவிட்டு
வேடிக்கையா பார்க்கிறாய்
காதல் மிருகமாய்
அறிகிறேன் உன்னை
கொல்லாமல் கொல்லும்
காட்டேரி.

காடும் மலையும் தாண்டி
பூவொன்று கண்டேன்
பறித்து வாவென
புன்னகைப் பூவொன்றைப்
பிய்ந்தெறிந்துவிட்டு
பேசாமலிருக்கிறாய்.

ஒற்றையடிப்பாதையடி
என் காதல்
காடும் மலையும்
காட்டித் தந்தவளே
நீதானே.

தொலைதூரச் சிரிப்பில்
‘காதலும் நீதான் காடும் நீதான்'
எனச் சொன்னவள்....

மௌனித்த மென்னிருளில்

உறைந்து கிடக்கிறேன்
பக்கத்தில்........
வானத்து வெள்ளிகளை
போர்த்திக்கொண்டு
என்....
போக்கிரிக் காதலி!!!


தம்பி 'தாமரைக்குட்டி'யின் அன்புப் பிறந்தநாள் பரிசாக...அவர் தன் காதலுக்காகக் கேட்டு நான் எழுதிக் கொடுத்தது!

Friday, November 09, 2012

பெருந்தவம்...


அவனைத் தேடிப் புறப்பட்டு
காற்றில்லாத் தனித் தீவுக்குள்
வெளிவரத் தெரியவில்லை
ஒரு துளி காற்று வரம்
தேவை எனக்கிப்போ.

இரவும் பகலுமில்லா
மம்மல் பொழுதது
அவன் நிறம்
அதுவாக இருப்பதால்
விட்டு வர விருப்பமில்லை
நிறைக்கிறேன்
எனக்குள் முட்ட முட்ட.

எப்படியிருப்பான்
எங்கிருப்பான்
மீசை இருக்குமா
ஏன் முகம் மறைக்கிறான்
பூச்சாண்டியாய்.

நாம் சுகித்திருந்த தருணங்களில்
மழையாய் நனைத்திருந்தான்
குரல் கேட்டுச் சிரித்த நேரத்தில்
ஒரு வசீகரம்
தீராத விம்ப மயக்கம்
தீரவேண்டாம் எனக்கிப்போ.

காற்று வரட்டும்
மயக்கம் தெளிய தென்றலாய்
அவன் எனக்கு
காத்திருப்பேன் தனித்தீவில்
பெருந்தவம் செய்துகொண்டு
வரவே மாட்டான்
எனத் தெரிந்துகொண்டே!!!
 
ஹேமா(சுவிஸ்)

Friday, October 05, 2012

நான்...பெண்ணடிமை
பெண் நவீனத்துவம்
கவிதைகள் கதைகள்
புலம் பெயர்வு
அந்நிய மனிதரின் நெருக்கம்
தனித்த துணிந்த
நம்பிக்கை வாழ்வு
மாறித்தானிருக்கிறேன் நான்.

"அடங்கியிரு
ஒடுங்கியிரு
பொம்பிளப்பிள்ளையாயிரு
வாய் காட்டாதே"
அம்மாவின் வாதம் மறுத்த
விதண்டாவாதம்.

பெண்ணென்றால்
வெட்கம் வேணுமாம்
வைத்துக்கொண்டா
வஞ்சகம் செய்கிறேன்.

"காலம் மாறியிருக்கம்மா
உங்கட காலம் வேற
எங்கட காலம் இதம்மா"
என்றால்...

உன்னைத் தனிய விட்டதே
பிழையாப்போச்சு
உழைக்கிற திமிர்
போரோ புயலோ
அவலமோ அவதியோ
கஞ்சியோ கூழோ
உன்னை
வெளில அனுப்பினது
என்ர பிழைதான்
அடங்காப்பிடாரி....

அம்மாவுக்குத் தெரியவில்லை
இப்போவெல்லாம்
நான் நிறையவே
வெட்கப்படுகிறேனென்று
நீயே சொல்லிவிடேன்!!!

ஹேமா(சுவிஸ்)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.2-3 மாதமாகவே வேலை அதிகம்.வீடு மாற்றமென ஒரே பதட்டம்.அதோடு இந்த வருடத்தின் பெரும் சுற்றுலா விடுமுறை.மீண்டும் 30-40ன் பின் பதிவுகளோடு சந்திக்கிறேன்.எல்லாரும் சுகாமா இருந்துகொள்ளுங்கோ.......சந்திப்போம் !

Friday, September 28, 2012

நிலாவின் கடவுள்...


வண்ணத் திரவங்களை
குழைத்து வீடெங்கும்
வீசிக்கொண்டிருந்தாள் நிலா.

பூனைக்கு இறகு
வண்ணத்துப்பூச்சிகள்
தமிழில் பேசி
தன்னோடு விளையாடுகிறதாம்
மனிதன் மிருகம் போல
நாலு காலில்
கடல் அலையின் நுனியில்
சூரியன் உதிக்கிறானாம்.

அப்பா நாலு காலோடு
பறக்கிறாரென வரைந்தவள்
என்னை
சாமியறையில் படங்களுக்கு
நடுவில் வரைந்துவிட்டு
"யார் சமைக்கிறது" என்றும்
கேட்டுக்கொண்டாள்.

கடவுள் கீறி
வாகனாமாய்க் குந்தியிருந்த
மிருகங்களை
"ஓடு காட்டுக்கு" கலைத்தாள்
வேல்,வில்,கத்தி,கடாயுதம்
மாலை மகுடங்களைக் களைந்து...

ஒவ்வொரு சாமிக்கும்
நான்கு நான்காகக் கைகள் கீறி
ஒவ்வொரு கையிலும்
பொட்டல உணவு
பால்புட்டி சூப்பி
புத்தகம்,பென்சில்
பூ,குடை
இனிப்புப் பொட்டலம்
போர்வை,தலையணையென
வரையத் தொடங்கினாள்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 26, 2012

திலீபனின் நினைவோடு...


உன் கண்ணின் ஒளி
நல்லூர்க் கந்தனின் கண்ணில்
ஈமச்சுடராய்
இறுதி ஈழப்பாடலோடு
எமைப்பிரிந்தாய்...

கல்லறை தேசத்திலும்
அழுகுரல்கள்
உப்பில்லாக் கண்ணீரோடு
அந்தரங்க ஆகாயத்தில்
சில பறவைகளின்
மொழி பேசியபடி...

இலட்சியக் கனவுகளை
கை மாறக்கொடுத்துவிட்ட
சந்தோஷமானாலும்
சதைகள் எரியும்
மணத்தை சுவாசத்துள்
சுமந்துகொண்டு...

தாயை,தாரத்தை,தங்கையை
புணர்ந்த நரியொன்று்
எக்காளமிடுகிறது
காகிதப்புலிகளென...

பெண்ணின் பிணவாடையென
காட்டுகிறது தொலைக்காட்சி
பிசுபிசுக்கும் சிவப்பொளியில்
புண்ணான சிதையொன்றை...

மீண்டும் உயிர்க்கிறாய்
உணர்வுள்ள
ஒரு வீரத்தமிழச்சியின் கருவில்
காகங்கள் கரைந்து
சாபங்கள் ஆனதில்லை வரலாறு!!!

நமக்காக உயிர்நீத்த அத்தனை உயிர்களுக்கும் என் வீரவணக்கம்.

ஹேமா(சுவிஸ்)

Monday, September 24, 2012

காதல் துளிகள் (3)...

என் மார்புக்குள்ளிருந்து வரும்
மூச்சுக்காற்றை
இசைக்குறிப்பாக்கியிருந்தான்
அவன்...
தன் ஸ்வரங்களில்
அற்புதமான பொழுது அது
இப்போதைக்கு
எதுவும் பேசவேண்டாம்.
அவனும் நானும்
ஒருவரையொருவர்
பார்த்தபடி இருக்கிறோம்!!!
நிறைகுடமென்பாள்
என் தோழி என்னை
தளம்பச் செய்தவன் அவன்...

என்னைக் கொஞ்சம் அசைத்த
அவன் குரலை
அவன் ஒற்றை எழுத்தை
அவன் மௌனத்தை
அவன் பெயரை
என் இதயக்கோப்பை
நிரப்பிக்கொண்டே இருக்கிறது.

பிடிக்காத விஷயங்களைக்கூட
மிக மிகப் பிடித்ததாய்
இன்றைய நிகழ்வுகள்
நாளைய கதைகள்
அதுபோலத்தான்
எனக்கு அவன் .....!!!
நான் தள்ளப்படுகிறேன்
உன்னால்....
காற்றில் மிதக்கும்
ஒரு சடப்பொருளாய்
ஒரு நேரம் ஆக்ரோஷமாய்
பின் ஒருமுறை
மிக மிக அமைதியாய்
இருந்தும்....

அலையால் தள்ளப்படும்
சிறு வள்ளம் போல் நானும்
நீராய் நீயும்
உன் கட்டுக்குள்தான்
நான்....
இப்போதாவது சொல்
என்னை நீ....
நேசித்தாயா உண்மையாகவே ?!

ஹேமா(சுவிஸ்)

Saturday, September 22, 2012

ஏதோ...


பொத்தி.....பொத்தி
வைத்திருக்கிறேன் 
இதயப் பொத்திக்குள் 
உன் அன்பு வார்த்தைகளை 
உன் குரலை 
வானலைகளில் மட்டுமே 
அலைய விட்டிருக்கிறார்கள் 
எதுவும் புதிதாய் கிடைக்கவில்லை 
இப்போதைக்கு எனக்கு !

 ஹேமா(சுவிஸ்)

Friday, September 21, 2012

படுபள்ளம்...

சிலர்.... நேற்றைய இரவில்
விழுந்திருக்கலாமென்றும்
சிலர்....
கால் தடுக்கி
காலையில்
விழுந்திருக்கலாமென்றும்
சிலர்....
தற்கொலையாக
இருக்கலாமென்றும்...

சந்தேகப் பெயர்களை
சிலரும்...
ஏனையோர்
என் குடும்பம் குறித்தும்
பரிதாபப்படுகிறார்கள் !

ஹேமா(சுவிஸ்)

(படம் கவிஞர் மகுடேஸ்வரன் தந்தது)

Monday, September 17, 2012

பறக்கும் ரகசியங்கள்...

நான் சுகம் கேட்டவர்களும்
என்னைச் சுகம் கேட்டவர்களும்
சுகமாயிருந்தார்கள்
என் சுகங்களை
பக்கத்து வீட்டு முற்றங்களில்
பரப்பிவிட்டு.

புழுதிக்காற்றின் பேரிரைச்சலோடு
என் இரகசியங்கள்
என்னையே வந்து உரசிக்கொண்டன
வெப்பக்குழல் சூடேற்றினாலும்
குளிரில் அவதிப்படுவதாய்
சிலிர்த்துக்கொண்டிருந்தன.

இரவில் மட்டுமே
பாடும் பறவை குளிரிலும்
நவீனத்துவ மொழியில்
கேட்டுக்கொண்ட சுகதுக்கங்களை
பகிர்ந்துகொண்டிருந்தது
பிரபஞ்சத்தின் அடி இருளில்.

சுதந்திரச் சிறகு முளைத்து
கிளைக்குக் கிளை
தாவிய அவைகளுக்குள்
விஷப் பூச்சிகள் முட்டையிட
கிசுகிசுக் குஞ்சுகள்
என் தோளில்
அதி பாரத்தோடு!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 14, 2012

நல்லூரில் நீதானா...

பாவமன்னிப்புக்களை
புறக்கணிக்கும்
சிலுவையில்லா
புதிய
சாமி ஒன்று வேண்டும்
எமக்கிப்போ
ஒரு.....
கொலை செய்ய
மன்னிப்போடு.

எம்மைக்
கூண்டோடு அழித்தவன்
நல்லூர்க் கந்தன்
வீதி மண்ணில்
கால் புதைய.

கண்ணிருந்தால்
எம்மையும் அகதியாய்
அலைக்கழித்து அநாதையாய்
அழித்திருக்கமாட்டான்
திலீபனையும்
தின்றிருக்கமாட்டான்
தெய்வமா...
அவன் கந்தனவன் ?

நல்லூர்க் கந்தனே
இன்று உன் வீதி சுற்ற
அவனுக்கும்
கால்
கொடுத்திருக்கமாட்டாய்
இன்னுமா நாம் நம்ப
நீ......
நம் நல்லூரில்
உண்மையென ?!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 13, 2012

பார்வைப் போர்...

குளம் தொடும்
மழைக் குமிழ்க் கண்களுக்குள்
விடுதலைக் கனவுகளை
சேகரித்த வன்னியன் அவன்
போதாதோ அது
அவனோடு
நான் போர் தொடுக்க.

வார்த்தைப் போர் தொடுத்தால்
மடித்திழுக்கிறான்
கண்களால் மடிமீது
வாள் எடுத்து வாவென்று
ஆணையிட்டேன்
இமைக்க மறந்தவனாய்
என்....
இடைவாளை எடுக்கின்றான்.

இரங்குவேனோ என்றவளை
ஓர்மம் கலைத்து
காதல்....
கன்னத்து
பருக்களை நிரப்ப
விரல்வழிக் கவிதை கேட்டு
கொஞ்சம்
ஒத்தி வைக்க
கெஞ்சுகிறான் வீரனவன்
போரையும் போரையும் !

ஹேமா(சுவிஸ்)

Monday, September 10, 2012

சிக்குபுக்குக் காதல்...

தண்டவாளைங்களை
அணு அணுவாக
ரசிப்பவனிடம்தான்
காதல் கொண்டிருந்தேன்.

கனவுகள்
ஆசைகள்
பாசம் மற்றும்
அன்பு பற்றியும்
கதைத்தபடி
கைகளை இறுகப்
பற்றியிருந்தா(தே)ன்.

திசைமாறும்
பயணங்களையும்
நிமிடங்கள் மட்டும்
பட்டு மறையும்
பார்வைகளையும் பகிர்ந்தவன்
புகையிரதச் சில்லுடன்தான்
சிநேகம் வைத்திருந்தான்.

தொட்டுவிடா உறவானாலும்
ஈருடல் சிலிர்க்க
அதிர்ந்து ஓடி மறைகிறது
புகையிரதம் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, September 07, 2012

இயல்பு மாறாதவைகள்...

நிபந்தனைகளற்று
மூடித் திறக்கும் எண்ணங்கள் சில
நிரந்தர நெருப்பின் நிறமாய்
சிவப்பும் மஞ்சளும் கலந்து.

உருமாறும் இரும்பை
உருக்கும்போதும் சரி
கொழுந்து விட்டெரியும்
கூரையிலும் சரி
நிராகரிக்கும் வார்த்தைகள்
துரத்தியடிக்கும் துரோகம்
துருத்தி எரிக்கும்போதும் சரி
நெருப்பு நிறம் மாற்றாது.

தன்னை பொசுக்கும்
உலோக நெருப்பின் நிறமறியாது
முகம் மூடப்பட்ட பிரேதம்
நிறமறியாமலும்
நிறமற்றிருப்பதும் நல்லது
வெண்ணிற ஆன்மாபோல்
பொதுவாக!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, September 03, 2012

அழைப்...பூ !


தள்ளிக்கொண்டேயிருக்கிற
மனதையும்
நெருங்கிக்கொண்டேயிருக்கிற
என்னையும்
அதட்டிக்கொண்டே
இதை எழுதுகிறேன்.

நான் ஆறிய
ஆடிய மகிழமரம் நீ...
வார்த்தைப் பூக்களைப்
பரப்பிவிட்டு
பிடித்தவற்றைப்
பொறுக்கியெடுவெனச்
சாபமிடுகிறாய்.

குழந்தைகளாய்
அள்ளியெடுக்கிறேன்
நீ தந்தது
நான் தந்தது
இதில்...
எதை விட
எதை அணைக்க.

நம் எண்ணங்கள் கருவுற
பெற்ற குழந்தைகளை
வளர்க்க
என்னிடமே தந்திருக்கிறாய்.

நீ தந்த
வார்த்தை வாரிசுகளை
என்னோடு கட்டியணைக்க
ஒருமுறை...
ஒரே ஒருமுறை வா
வந்துவிடு
இன்னும்....
கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
அந்த வாய்ப்பும் உனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 30, 2012

வித்தை கற்றவளின் கனவு...

கனவுகள் போர்த்திய பகல்
குறைந்த வெளிச்ச இரவு
வகிடெடுத்து
வளைந்த தேவதையாய்
என்றும்
வாயில் சின்னப்புன்னகை கீறி
பூக்களையே பாரமென்று
சுமக்கும் பாவைச்சித்திரம்.

நாடு வீடு
நகரும் நகரம்
நரகமாகும் கனவு
சுற்றுச் சுழல் காற்றில்
நாற்றமடிக்கும் சமூகம்
உடைந்த மனத் துகள்களில்
எண்ணங்களை கிறுக்கும் அவளுக்கு
வெற்றுச் சோற்றுக் கோப்பையாய்
அச்சித்திரம்
பாவங்களை கண்ணோடு நிறுத்தியபடி.

கல்வி மறுத்து
தனிமை வெறுத்து
காதலித்த காதலையே கொன்று
தனக்குத்தானே
சிம்னி விளக்கில்
சவப்பெட்டி செய்து
படுத்துக்கொள்ளும் அவளை
இழுத்து வைத்து மூடி
ஆணியடிக்கும் பல கைகள்.

அதே குறைந்த வெளிச்ச இரவு
வகிடு வளைந்த புன்னகையோடு
இன்னும் சித்திரம் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 26, 2012

காதல் துளிகள் (2)...

பார்வையால்
பசிக்க வைப்பவன்
காதலைத் தருகிறான்
'தின்' னென்று !

உன் சபித்தல்கூட
வரமாய்த்தான்
வந்தணைக்கிறது என்னை
எதற்காகவோ
யாருக்காகவோ
நீ...சிரித்த சிரிப்பை
எனக்கென்று ஏற்றுக்கொண்டு
இன்றைய நாளை
நிறைத்துக்கொள்கிறேன் !

ஏன்....
என்னை விலக்கினாயென்று
புரியவில்லை
இன்று விலகியிருக்கும்
இந்த
மூன்று நாட்களில்தான்
உன்னைக் கூடுதலாக
நினைக்க வைக்கிறது
நீ சொன்ன...
பாட்டி வைத்தியம் !

பூமியாய் குளிர்ந்து
உறைந்து கிடக்கிறேன்
காரணத்தோடு
செயற்கைச் சூரியன்கள்
உருக்கமுடியா
சூரியகாந்தி நான் !

பூட்டியிருக்கும்
வீட்டின் பூட்டை
யாரோ
இழுத்தசைக்கிறார்கள்
நாசித்துவார இடுக்கில்
என்னவனின் வாசனை
அவன்...
இப்போ...
இங்குதான்...!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 23, 2012

இற்ற சருகிலும் நீ...


பச்சையம் தொலைக்கும்
மஞ்சள் இலைகளுக்குள்
கூடொன்று கட்டி
தந்துவிட்டு
போயிருக்கலாம்
நீ....
சருகாகினாலும்
கூட்டுப்புழுவாய்
ஒட்டியிருந்திருப்பேன்
இறகு தர
வருவாய் என்கிற
நப்பாசையோடு.

இப்போதும்
அங்கொன்றுமான
இங்கொன்றுமான
உன் நினைவுகளை
சேர்த்தெடுத்து
இற்றுத் தளர்ந்து மடியும்
அதே சருகின்
நரம்புகளில்
ஒட்டிக்கொண்டுதான்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 20, 2012

அப்பாவின் அழகு பொம்மை...

அப்பா...
நிறைய அழகு பொம்மைகளைச்
சேர்த்து வைத்திருப்பதாக
சொன்னார்.

ஒரு பொம்மையை மட்டும்
கொஞ்சம் துப்புரவாக்கி
கொஞ்சம் அழகாக்கி
அடுக்களையில்
வைத்திருப்பதாகவும் சொன்னார்.

அம்மாவைத்தவிர
எதையும் எவரையும்
கண்டதில்லை நான்
அடுப்படியில்.

சும்மாதான் கேட்டுப் பார்த்தேன்
ஒரு பொம்மை
விளையாட வேண்டுமென
கை காட்டினார்
அம்மாவின் பக்கம்.

இப்போ...

அப்பாவும்
அவர் பொம்மைகளும்
இல்லாமல் போயிருந்தன.

அப்பாவின் அறையில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்
அம்மா புறுபுறுத்தபடி.
வேறும் சில பொம்மைகள்
இருக்குமோ
அப்பாவின் அறையில்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 17, 2012

வா...வா !

எதிர்பார்ப்புக்கள்
இன்றைய தருணங்களை
பூச்சியத்தில் நிறுத்தினாலும்
ஏதோ....எங்கோ
யாரோ ஒருவரிடம்
கைகுலுக்கிக்
காதல் சொல்லும்
ஏமாற்றம் வேண்டாம்
என்பதற்காகவே
கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு !

அப்பப்போ
நாம் பரிமாறிக்கொண்ட
சொற்களைச் சேர்த்தொரு
அன்புக் கோட்டை
தகர்த்தெரியாத
உன் அன்பு மழைக்காக
உன் செல்லப் பூனையோடு
இனி நானும்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 13, 2012

புலம்ப விடுங்களேன்...

குற்றங்களைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறவன்தான் நியாயப் புத்தகங்களை சுமந்து திரிவான்.நான் சுமையற்ற சிறு மரமாய் எனக்குப் பிடித்த காற்றில் தலை கோதிக் கொள்கிறேன்.அதே காற்று உன் வீட்டுக்கும் வரும்.உன் அறையின் திரைச்சீலையையும் தென்றலாய் அசைக்கும்.வலது உள்ளங்கையில் தானாக வந்து அமர்ந்துகொண்ட காற்றைப் பறிகொடுத்தாலும்....எத்தனை கல்வீசினாலும் கலங்காத குளத்தில் பூவொன்று விழுந்து கலங்கிப்போனது...!

......க்காரன் என்றே பெயர் வைத்திருந்தேன்......பெயர் தெரியவில்லை.தெரிந்தாலும் சொல்லப் பிடிக்கவில்லை.முதலில் அவன்தான் ”தாமதாய் வந்த பல்கலைக் கழகம்! ஆசையோடு படிக்கிறேன்!பாஸ் பண்ணுவேனா???” என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.மகிழ்ச்சிகளை அள்ளிக்கொடுத்தே பழக்கபட்ட நான் என......இன்னும் ஏதோ ஏதோ...கவிதையாய்ச் சொல்லிச் சிரித்தான் !

குற்றமென்று எந்த வரைமுறையும் எனக்குக் கிடையாது.....ஆக அதற்குண்டான நியாயத்தைப் பற்றி சிந்திக்கிறவளும் நானில்லை.ஆனால் எதற்காகவோ தண்டிக்கப்படுகிறேன்.அன்பே கிடைக்காத காட்டில் திரிந்த வேளை தெரிந்த குட்டி மின்னலென வெளிச்சம் தந்து என்னைத் தன் கைக்குள் பொத்திய அந்த நிமிடங்கள்....!

நிச்சயம் இது ஆயுள் தண்டனை.இந்தத் தண்டனை....தன்னை மறந்துவிட்டேனா என என்னைப் பரீட்சித்த அந்த ஒற்றை உயிருக்கு மட்டுமே வெளிச்சம்!


முன்னும் பின்னுமாய்
முரண்பட்டுக்கொண்டே
நகர்கிறது வாழ்க்கை
இரவின் சலனம்
கனவுகளை நிறைத்தாலும்
விடிகையில்
முகத்தில் ஒட்டிக்கொண்டுதான்.
பனிக்காற்றில்
முகம் கழுவினாலும்
அருவப்பேருருவாய்
காட்டுகிறது என்னை
என் வீட்டுக் கண்ணாடி!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, August 07, 2012

பெரிதாய் சிறிதாய்...

நீண்டிருக்கும் அது
சிலசமயம்
பெரிதாயும் சிறிதாயும்.

தவறுகள்
தேவைகளுக்கேற்ப
கனவுகளை இழுத்துத் தகர்த்துவிடும்.
முன்னால் நிற்பவன்
அலுகோசா அன்பானவனா
நீதியானவனா நெறிகெட்டவனா
அதற்குத் தேவையற்றதாய்.

"உனக்கு நீயே கடவுள்"
தத்துவம் இங்கே பொய்யாகி
உயிரின் தீர்மானம்கூட
இன்னொரு கையிலாகிறது.

விஞ்ஞான யுகம் தந்த
வரங்களில் இதுவுமொன்று.
உயிருள்ளவை
உயிரற்றவை
விஞ்ஞானம்
பகுப்பாய்வு முடிவுகள்
சிரிப்பாயிருக்கிறது நினைக்க.

பிரபஞ்சத்தை
நிர்ணயிக்கிறதாம் செயற்பாடுகள்
ஹிரோஷிமா நாகசாகி
உலக யுத்த
அழிவிலும் ஆரம்பம்
இன்றைய யப்பான்.

பேச்சுள்ளவனை ஊமையாக்கி
அந்த ஊமையுடன்
பேச....
நட்புடன் சிரிக்க
நினைத்ததைச் சாதிக்க
சிலசமயம்
நீட்டிய முகத்துடன்
சிறிதாயும் பெரிதாயும்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, August 04, 2012

காதல் துளிகள் (1)...

வாசனை தெரிந்திருக்கும்
வடிவம் அறிந்திருக்காது
அதுபோல
பெயெரில்லாப் பூ
நீ...

தலை கோதும் விரலும்
தாலாட்டும் உன் குரலும்
இன்றெனக்கு
இல்லையென்றால்
இயற்கையில் ஏதோ
இன்னலே தவிர
உன்னாலாயிருக்காது.

என் கண் மையை
உன் கையிலிடுகிறேன்
தேடிப்பார்
எனக்குள் நீயா
உனக்குள் நானா
என்று !

மேகம் விட்டிறங்கிய
பூவொன்று
நேற்று
காற்றின் வரவுக்காய்
திறந்தே கிடந்த
என் வீடு புகுந்து
மௌனம் உடைத்த
மொழி திரட்டி
என் பெயரை
உரசிப்போனதால்
இன்றுமுழுதும்
புதுகாற்றைச் சுவாசித்ததாய்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது
என் உள்ளுயிர் !

ஒரு பிரிவின்
சுவடென்றறியாமல்
அவன் பார்வை வரித்திழுக்க
மேலிருந்து கீழாக நகர்ந்தேன்
அழுத்தப்பரப்பில்
அவன் நீராய்
அவன் கண்ணில்
மிதக்கும் மீனாய் நான் !

'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்'

ஹேமா(சுவிஸ்)

Monday, July 30, 2012

கோழியும் கழுகும்...வறுத்தெடுக்க மனிதன்
கொத்திக் குடிக்கப் பாம்பு
இயற்கையும் சிதைக்க....
உறக்கம் விற்று
திசையோடு தவமிருக்கிறது
காக்கும் அடைக்காய்.

ஆகாயக் காவலன்
கண்களில்
மிஞ்சிப் பொரித்த
ஒற்றைக் குஞ்சை
உறிஞ்சும் மரணம்.
 
அருக்கனையே மறைக்கும்
அதிகாரம் வானில்
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு.
இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை!!!

அருக்கன் - சூரியன்.

அரிகண்டம் - தன்னைத்தானே சித்திரவதை செய்துகொள்வதற்காக மாட்டிக்கொள்ளும்
இரும்புச் சட்டம் இல்லை வளையம்.

இத்தினி - கடுகிலும் சிறிதளவு.

எம்பி - உந்தி எழும்புதல்.

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 25, 2012

இலவச மன்னிப்பு...

ஒவ்வொருமுறையும்
கைபிசைந்து நிற்கிறேன்
செய்த தவறுகளுக்காய்
என்னை முறைத்து
பின் ரசித்து
ரட்சிக்கும் தேவனாய்
உதறி விடுகிறாய்
மன்னிப்புக்களை.

இலவசவமாய்
கிடைக்கும் மன்னிப்பை
அலட்சியமாய்
எடுத்துக்கொண்ட நான்
மீண்டுமொரு
தவறுக்கு ஆயத்தம்
செய்துகொண்டிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 23, 2012

கறுப்பு ஆடி 2012...

காலக்கொடுமைகள்
நிரம்பி வழிய வழிய
எல்லாவற்றையும்
ஏந்திக்கொண்டிருக்கிறது
அகதித் தேசம்
கரையாப் பனிமலைக்குள்
போர்வையோடு புதைந்தவள்
திட்டித் தீர்க்கிறாள்
தன்னையும்
தன் மண்ணுக்கான போரையும்
அகதி தேசத்தையும்.

எங்கேயோ பார்த்த ஒரு முகம்....
சிங்களச் சிப்பாய் ஒருவன்
என்னைச் சிதைத்துத்
கழிவறைக்குள் தள்ளுகையில்
அங்கு.....
பெண்சதை தின்று
புணரத் தாவும்
இன்னொரு மிருகத்தோடு
போராடிக்கொண்டிருந்த
அதே அம்மா.

தொடையிலும் மாரிலும்
வேறு வேறு இடங்களிலும்
இரும்பு ஒட்டும் இயந்திரத்தால்
சுட்டுச் சிதைத்த வடுக்கள்
இன்னும்....இன்றும்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 09, 2012

காதல் குரல்...

நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...
வசப்பட்டு வளைகிறேன்
ஓரிழையாய் உனக்காக
உன்னோடு என்னை!

மண்டியிட்டு மறுத்த
மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது!!!

உப்புமடச் சந்தியில்..."ஒரு தந்தையின் பிரசவம்!"

ஹேமா(சுவிஸ்)

Sunday, June 03, 2012

அவள் அப்படித்தான்...

விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை
விழுங்கியிருந்தாள் அவள்.
வேம்புக் குயில்
மூங்கிலுக்குள் சாரம் அனுப்ப
சுவைத்தவன் நாக்கில்
ஒட்டிக்கொள்கிறது கசப்பு.

மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...

சகாயங்களேதும் செவிநுழையா
சஞ்சாரப் பொழுதுகளில்
வெள்ளைச்சுருட்டு
சுட்டுப் புகைக்கிறாள்
சூரியக் கண்களில்.

மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாய்த் தேவையென
முறைப்பாடு வைக்கிறாள்
மாத்திரைக்கும்
பின் அவனுக்குமாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 27, 2012

ரசிகனின் நினைவில்...

கொஞ்சம் முன்வரை நினைத்திருக்கவில்லை
எனக்கும் உனக்குமான உறவுக்குள்
இப்படி....

நம்...நம் இயல்பிலேயே
கவிதையையும்...பிடித்த பாடல்களையும் சொல்லி
மலையும்...மழைமண்மணமும்
தாயும்.....தன்நாடும் அழகெனச் சொல்லி
நீ....தந்த ஒற்றைச் சிறகுகளுக்குள் பொத்தி வைத்து
ஒரு ஆயுத அமைதி ஒப்பந்தக் காலத்தில்
வைத்திருக்க முடிந்தது
இரவின் யன்னல்களுளினூடே
என்னை மட்டுமே அனுமதித்திருந்தாய் தென்றலாய்.

இப்போ...........
ஒற்றைச் சிறகைத் தாண்டி
இன்னொரு அன்புலகம் இருப்பதாய் சொல்கிறாய்
என் இயல்பில்லா அந்த உலகத்தில்
தங்க என்னால் முடியவில்லை
அந்த உலகில் வீசும் பாசத் தென்றலில்
பலமணிநேரங்கள் என் துணையில்லாமல்
உன்னியல்போடு
தனித்தியங்க முடிகிறதென்றும் சொல்கிறாய்.

நன்று நண்பனே....

ஒருவேளை முயன்றிருப்பேன்.அந்த உலகைக் கண்டிருக்காவிட்டால் என் உலகில் உன்னைப் பாதுகாத்திருக்க .நீயே வெளிக்கொண்டு வந்துமிருப்பாய் என் ஆழ்மன அன்பைக்கூட.பல பூக்கள் ஒடிக்கும் ஒரு சாவியை நான் கண்டிருக்கிறேன் உன்னிடம்.கேள்விகளும்,கருத்துக்களும்,சிக்கலில்லாப் பேச்சுக்களும்,நவீனத்துவம் இல்லாக் கவிதைகளும் வேண்டாமென உணர்வதாயும் சொல்கிறாய்.உனக்கான இயல்புலகம் அதுவெனக் கண்டிருக்கிறாய்.நீ உன் சிறகுகளோடு இணைத்திருக்கவில்லை உன் தேவைகளை.நீ அறிமுகப்படுத்திய உலகின்....அந்த மொழி சிரமமாயும் இருக்கிறது எனக்கு.

புள்ளியென்கிறாய்......கோலமென்கிறாய்.நானறிந்த ஒரு புள்ளி நீ மட்டுமே.கோடு போடத்தொடங்க நீ.....என்கிற அதே புள்ளியிலேயே முடிகிறது என் வட்டம்.வியர்த்த என் கரங்களுக்குள் நீ தந்த எத்தனை பரிசுப் பொருட்கள் என்னோடு உன்னப்போல் பேசும்.ஆனால்....நீயும் கடந்து போகிறாய்....நான்...?

அன்புப் பட்டம் ஒன்று காதுக்குள் கரையாமல் ......பெண் ஹிட்லர்......!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 26, 2012

பகிரண்ட வெளியில்...

வந்து கரையும்
ஒற்றை அலைகூட
உண்மையில்லை
சந்திப்புக்கான சங்கதிகளை
வெவ்வேறாகச்
சொல்லிப் போயின
பொய்யின் பின்குரலாய்.

அறிவியல் எல்லையில்
மானுட உலகம்
உயிரற்றதும் உயிருள்ளதுமான
கடலுலகில்
பொய்கள் உலவாதென
யாரோ சொன்னதாய் ஞாபகம்.

ஆழக் கடலில்
காற்று காறித் துப்புகிறதாம்
வாசனைத் தைலக் குப்பிக்குள்
புழுக்கள்தான் நெளிகிறதாம்
கொழுவியிருக்கும்
அளகாபுரி மாளிகை ஓவியத்துள்
பேய்கள் குடியிருக்கிறதாம்.

நானும் நம்புவதாய்
பசப்பிப் புன்னகைத்து
தாண்டிக் கடக்க
ஊமையென நடிக்கும்
ஓடு முதிர்ந்த ஆமையொன்று
கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது
சீக்கும் சாக்காடும்
பங்கிட்டுக் கொல்கிறதென
சுவைத்து மென்று
விழுங்கும் நாவில்
மானுட மாமிசம்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, May 23, 2012

உறவுகள்...

அள்ளமுடியா
அமில மழை
தூறித் துமித்து முடிய
அடித்த பேய்க்காற்றில்
மூடிய கதவுகளை
அரித்துக்கொண்டிருக்கிறது
ஆக்ரோஷக் கறையான்கள்
பாறிக்கொண்டிருக்கிறது
நிலைப்படியோடு
கதவும் உறவும்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 18, 2012

மே 18- 2012...

நமக்கான கனவுகள்
எங்களுக்கேயானவை
சதுரங்கச் சுழிகளிலும்
பாம்பு துரத்தி ஏறும்
ஏணிகளின் உச்சியிலும்
அவை காத்திருக்கும்.

எம் கனவுகள்
வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்
நீரைப்போல் ஈரமானவை
பாலைவன நீரைப்போல
மண் உறிஞ்சிக் காய்ந்து
அடையாளம் தொலைக்காது.

என் பிணம் காவி வரும்
என் தாய்
தன் குறியையும்
காக்கவேண்டியிருக்கிறது.

என் தேசத்தின்
ஒவ்வொரு துகள் மண்ணிலும்
என் மக்களின் குருதி
காய்ந்த சருகுகளின் அடியில்
தொலைந்து போன
என் உறவுகள்
எப்போதும் அவர்கள் பற்றிய
எம் கனவு பற்றிய
நினைவுகளை அழிக்க
எவராலும் ஆகாது.

தீயும் போரும்
செல்லப்பூனை எமக்கு
இறப்புப் பற்றிய பயம் அற்று
கனவு நுரைகளை நீர்க்கவைத்து
எமக்கான கனவுகளைத் தொடரும்
காலடித் தடங்களுக்கு
அடையாளம் காட்டும்
நாம்........மிதிப்பட்ட
குருதி வழிகாட்டல்.

நமக்கான தரிசல் காடுகளிலாவது
எம் கனவுகள்
கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும்
கனவுகளைச் சீராக்க வரும்
இளம் காலச் சூரியர்களுக்காக!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 15, 2012

நேர்மையின் காத்திருப்பு...

மூட்டைப்பூச்சியின்
இருப்பிடமென
ஒதுக்கப்பட்டிருந்தாலும்
கண்களுக்குள்
அலார மிரட்டலோடு
பழைய கதிரையொன்று.

சுருங்கிய முக ரேகைக்குள்
நேர்மை நிரம்பிய புன்னகை
அனுபவங்கள் அழுத்திய ஆட்சி
அந்தரத்து ஆரவாரமாய்
தாங்கிய நினைவுகள்.

நேற்றைய முடிவுகளே
நாளைய தீர்மானமாய்
வைக்கோல் நுழைந்து
உறிஞ்சும் புழுவென
வழியும் எச்சில் நேர்மை
வேண்டாம் வேண்டாம்.

நேர்மை பற்றி அறியும்
சுவர்களும்
யன்னல் சீலைகளின்
நுனிகளும்கூட இங்கு
கட்டிய வேட்டிக்குள்
சீழ்பிடித்த மனிதரும்
நுழைவார் இங்கே.

கைகாட்டும்வரை
என்னை...
அகற்றாதிருக்கட்டும்
மூட்டைப்பூச்சிகளோடு
சாட்சியாய் இங்கு நான்!!!

ஹேமா(சுவிஸ்)