*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, March 11, 2009

அவளுக்கு ஈழவனின் பதில்...

எதற்காக இந்த இலக்கு...?
வீட்டு விளக்கை
எரிய வைக்க
கட்டு உடலைக்
காட்டலாமா சிட்டு!

பச்சைக்கிளியாம்
ம்ம்ம்,
பச்சையாக் காட்டுவதால்
பசுமையானாயோ!

வயிற்றுப்பசிக்கு
உண்டி தேட
உடலை விற்றுப்
வாழலாமா!

கூலி வேலை செய்தாலே
இன்பமாய்க் கூடியிருந்து
குடும்பமாய்க்
குடிக்கலாமே கூழ்!

நீயும் அழிந்து
உன்னை முகர்ந்தோரையும் அழித்து
நாகரீக வாழ்வுக்குப்
பணம் தேடும் பாவையே
எதற்காக இந்த இலக்கு!

உன்னைத் தொட்டானே
அவனும் கெட்டான்
அவஸ்த்தைப் பட்டான்
நோயை உண்டான்
வாழ்வை இழந்தான்!

அவளின் சில நிமிட சுகம்
அள்ளித் தந்த பரிசாய்
ஊரார் தூற்ற உறவினர் சிரிக்க
குடும்பத்தால் தனிமைப்பட்ட
எயிற்ஸைச் சுமந்த வாழ்வு!


"வானம் வெளித்த பின்னும்"வலைப்பதிவின்
'அவள்' கவிதைக்கு பதில்
எழுதியவர்: ஈழவன்-இலக்கியமேடு

என் இணைய நண்பர்களின் பதில்...?

39 comments:

Syed Ahamed Navasudeen said...

அவளின் சோகம் இங்கேயும் தொடர்கிறது

ஹேமா said...

ஈழவன் தப்புன்னு சொல்லிக் கவிதையைத் தொடர்கிறார்.எனக்கு என் நண்பர்களின் நிறைந்த சர்ச்சை-வாதாட்டம் தேவை.

நட்புடன் ஜமால் said...

ஈழவன் தப்புன்னு சொல்லிக் கவிதையைத் தொடர்கிறார்\\

எது தவறாம்!

இருங்க படிச்சிட்டு வாறேன்

நட்புடன் ஜமால் said...

வீட்டு விளக்கை
எரிய வைக்க
கட்டு உடலைக்
காட்டலாமா சிட்டு!\\

மிக(ச்)சரியான கேள்வி ...

அந்த விளைக்கை அணைத்தே
இந்த விளக்கு தன்னை எறித்து கொள்(ல்)கிறது

அணைப்பவன் வருவதே
இரு விளக்குகளையும் அணைக்கதானே!

ஹேமா said...

ஜமால்,ஈழவன்,அவர் சொன்னது ஒரு பார்வையில் ,நான் சொன்னது வேறொரு பார்வை.என்றாலும் பதில் கவிதை தந்திருக்கிறார்.அதற்கு நண்பர்கள் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

நட்புடன் ஜமால் said...

பச்சைக்கிளியாம்
ம்ம்ம்,
பச்சையாக் காட்டுவதால்
பசுமையானாயோ!\\

உண்மைதான்

கருத்த இதயங்கள் பச்சை பார்க்க ஆசைப்பட்டு

பட்டாம்பூச்சிகளை அழிப்பதால் ...

நட்புடன் ஜமால் said...

\\அதற்கு நண்பர்கள் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?\\

சரியாக விளங்கயில்லையே!

நட்புடன் ஜமால் said...

தாசி(அவள்)

சரியா

தவறா

என்ற விவாதமா!

கார்த்திகைப் பாண்டியன் said...

பணம் பண்ணுவதே குறியாக இருக்கும் பெண்களும் உண்டு.. பிறரால் இதில் கொடுமையான முறையில் ஈடுபடுத்தப்படும் பெண்களும் உண்டு... நடைமுறைகள், சூழ்நிலைகள் எல்லாம் பொறுத்தே சரி தவறு என்று சொல்ல முடியும்.. எங்கோ படித்ததாக ஞாபகம்.. வேசிகள் இல்லை என்றால் மனித மிருகங்களால் தினம் தினம் கற்பழிப்புகள் நடக்கும்.. உண்மையில் அவர்கள் செய்வது சமுதாய சேவை என்று.. இது என் கருத்து... மற்றவர்கள் என்ன சொல்வார்களோ..

புதியவன் said...

ஹேமா...என்ன இது அவள் ஒரு தொடர் கதையா...?...உங்களின் சென்ற பதிவிற்கு என்னால் சரியான பதில் சொல்ல முடியாமல் போனது ஏனெனில் அதில் கீழ்க்காணும் வரிகள் என்னால் ஜீரணிக்கக் கூடியதாயில்லை...

//எப்படியோ...
வாங்குவதும் விற்பதும்
அவள் விருப்பம்
அவள் உரிமை.
அடுத்தவன் பொருளையா
அவள் விற்றாள்.//

சூழ்நிலையால் ஒரு பெண்ணின் வாழ்வு இப்படி சிதறடிக்கப் பட்டிருந்தால் அது ஒரு விபத்து...ஆடம்பரத்திற்காகவோ மற்றவற்றிற்காகவோ விலை போயிருந்தால் அதை ஏற்றுக்கொள்வது கடினமே...அதை நியாயப் படுத்துவது தவறு...

அபுஅஃப்ஸர் said...

//ஹேமா said...
ஈழவன் தப்புன்னு சொல்லிக் கவிதையைத் தொடர்கிறார்
//

தவறு என்பதுதான் ஊரரிஞ்சதாச்சே அப்புறம் வேறுஎன்னா வேண்டும்

அபுஅஃப்ஸர் said...

எதற்காகவோ ஏமாற்றப்பட்டவள் அதைவிடமுடியாமல் தொடர்வது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது

ஆதவா said...

தானாக விழுந்தவர்களுக்கு இக்கவிதை பொருந்தும்... விரும்பாமல் திணிக்கப்பட்டவர்களுக்கு???

வீட்டு விளக்கு எரிய உடல் விற்கவேண்டிய அவசியம் எந்த இந்தியப் பெண்ணுக்கும் இல்லை. தானாக சென்று விபச்சாரம் செய்யும் பெண்கள் (ஆண்கள்?) அதை ஒரு தொழிலாக செய்கிறார்கள்.

ஆண்களுடையை சிருங்கார இச்சைகளை அப்படி முன்வருபவர்கள் மூலம் கொட்டிவிடுகிறார்கள். அதற்கு விபச்சாரம் தேவைப்படுகிறது... ஆனால், இதை தவறென்று சொல்லவியலாது.

உடல் விற்பதைக் காட்டிலும் மனம் விற்பதே கேவலமானது!!!!

RAD MADHAV said...

நன்று. கவிதையில் அனல் பறக்கிறது.
வேசி என்ற வார்த்தையின் 'ஆண்பால்' யாராலும் சொல்ல முடியுமா?
பிறக்கும்போது வேசிகளாய் பிறப்பவர்கள் அரிது.
வேசியாக்கப்பட்டவர்களே ஏராளம்!!!
'ஆண் ஆதிக்கத்தின்' நாகரீக சின்னங்கள்தான் இவர்.
விரும்பி யாரும் இதை ஏற்பதில்லை, திணிக்கப்படுவது.

RAD MADHAV said...

இயேசு நாதர் சொன்னது போல் நல்லவர்கள் முதலில் கல்லெடுத்து எறியட்டும் என்று சொன்னால் யார் முன்னில் நிற்பார்கள்???

RAD MADHAV said...

வளைகுடாவில் நாங்கள் கண்கூடாக பார்ப்பது. நல்ல நாடுகள் தகரும்போது, பிழைக்க வழியின்றி வறுமை காரணமாக இங்கு படையெடுக்கும் இள வயது பெண்களின் அவல நிலை.

உதாரணம், ரஷ்யா, இராக், இரான், பாலஸ்தீன் போன்ற நாடுகளில் இருந்து...
இது யார் குற்றம் ? அவர்கள் குற்றமா?

Syed Ahamed Navasudeen said...

RAD MADHAV said...

வளைகுடாவில் நாங்கள் கண்கூடாக பார்ப்பது. நல்ல நாடுகள் தகரும்போது, பிழைக்க வழியின்றி வறுமை காரணமாக இங்கு படையெடுக்கும் இள வயது பெண்களின் அவல நிலை.

உதாரணம், ரஷ்யா, இராக், இரான், பாலஸ்தீன் போன்ற நாடுகளில் இருந்து...
இது யார் குற்றம் ? அவர்கள் குற்றமா?

On some days you just can't do anything, except live with it. என்று வாழ்கையை தொடருபவர்கள் இதில் பலபேர்.

RAD MADHAV said...

//On some days you just can't do anything, except live with it. என்று வாழ்கையை தொடருபவர்கள் இதில் பலபேர்.//

oru murai indha kulikkul vilunthaal meelvathu kadinam. meendum oru gandhi pirakka vendum

ஆதவா said...

கார்த்திகைப் பாண்டியன் said...

எங்கோ படித்ததாக ஞாபகம்.. வேசிகள் இல்லை என்றால் மனித மிருகங்களால் தினம் தினம் கற்பழிப்புகள் நடக்கும்.. உண்மையில் அவர்கள் செய்வது சமுதாய சேவை என்று.. இது என் கருத்து... மற்றவர்கள் என்ன சொல்வார்களோ..

அது நாந்தாங்க சொன்னேன்...

கலை - இராகலை said...

ஆஹா ஆஹா இப்படி வம்புல மாட்டிவிட்டா எப்படி

நசரேயன் said...

உள்ளேன்.. உள்ளேன்

நிலாவும் அம்மாவும் said...

ஹேமா, நீங்க இதுக்கு பதில் எழுத போறேங்களா?

ஈழவன் சொன்னது எல்லாருக்கும் பொருந்துமா?

இதெல்லாம் தெரியாமலா வாழ்கிறார்கள் இந்த பெண்கள்....

நம் வாழ்க்கை நம்மால் தான் தீர்மானிக்கப்படுகிறது

உழைத்து குடித்தால் ஒரு வேலைக்கு கஞ்சி தான் கிடைக்கு...இவர்கள் கேட்பதோ சிக்கன் பிரியாணி ஆயிற்றே ...

Ravee (இரவீ ) said...

வெங்காயத்த உரிச்சு பார்க்க ஆசை படுறீங்க...
கண்கலங்க உரித்தாலும் காணப்போவது ஒன்றும் இல்லை.

ஹேமா said...

நன்றி என் இனிய நண்பர் குழாமுக்குமிக்க நன்றி.
சந்தோஷமும் கூட.

முழுமையாக இந்தப் பிரச்சனையை யாருமே எடுத்து விவாதிக்க விரும்பவில்லை.விவாதித்தாலும் பிரயோசமும் இல்லை.இது ஒரு பெண்ணின் சூழ்நிலை-விருப்பம் பொறுத்தது.

எனவே நான் நிலா அம்மா சொன்னது
போல யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன்.ஒரு பெண் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதை நாங்கள் அவளை எந்தக் கோணத்தில் பார்கிறோம் என்பதையும் பொறுத்தது.அவள் பாவமா-இல்லை பாவியா?

எனவே முடிந்தால் ஈழவன் நன்றியோ தன் கருத்தையோ தெரியத்தாருங்கள்.
ஆரோக்யமான விவாதங்கள் நல்ல ஒரு விழிப்பைத் தரும்.

ஹேமா said...

///புதியவன் said...
ஹேமா...என்ன இது அவள் ஒரு தொடர் கதையா...?...உங்களின் சென்ற பதிவிற்கு என்னால் சரியான பதில் சொல்ல முடியாமல் போனது ஏனெனில் அதில் கீழ்க்காணும் வரிகள் என்னால் ஜீரணிக்கக் கூடியதாயில்லை...

//எப்படியோ...
வாங்குவதும் விற்பதும்
அவள் விருப்பம்
அவள் உரிமை.
அடுத்தவன் பொருளையா
அவள் விற்றாள்.//

சூழ்நிலையால் ஒரு பெண்ணின் வாழ்வு இப்படி சிதறடிக்கப் பட்டிருந்தால் அது ஒரு விபத்து...ஆடம்பரத்திற்காகவோ மற்றவற்றிற்காகவோ விலை போயிருந்தால் அதை ஏற்றுக்கொள்வது கடினமே...அதை நியாயப் படுத்துவது தவறு...//

புதியவனுக்கு மாத்திரம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.றாங்கியான ஒரு பந்தி எழுதியதற்குக் காரணம்.

சமூகம் குறிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலி தெரியாமல் திரும்பத் திரும்ப அவள் மேல் கல் எறிந்தபடி இருந்தால் அவள் சொல்லக்
கூடிய அல்லது எடுக்கக் கூடிய ஒரு ஆயுதம் மட்டுமே அந்த வரிகள்.

கவின் said...

கவிதைல்லையா பதில் வேனும்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு கவிதை தெரியாதே!

MayVee said...

எந்த பெண்ணும் விரும்பி இந்த நிலைக்கு வருவது இல்லை ....
சமுதாயமே இதற்க்கு காரணம்......
நான் ஒரு முறை AIDS awareness கேம்ப்க்காக பாலியல் தொழில் செய்யும் பெண்களிடும் பேசிய போது தான் தெரிந்தது அவர்கள் வாழ்க்கை அவர்களிடம் இல்லை என்று....
பணத்திற்க்காக விலை பேசப்படும் பொருள்களாக இருக்கிறார்கள் ......
வீட்டில் மணைவி இருக்க வேற்று பெண்களிடம் சுகம் தேடும் மனிதர்களை தான் குற்றம் சொல்ல வேண்டும் .....
இவர்கள் இருக்கும் வரை பெண்களை இந்த நிலைக்கு சிலர் கொண்டு வருவார்கள் ........
இப்படி சொல்லுபர்கள் எல்லாம் பாலியல் தொழில் செயபார்களிடம் அவர்களின் நிலை அறிந்த பின் கவிதை எழுத வருமாறு கேட்டு கொள்ளகிறேன்

MayVee said...

அவர்களுக்கு நாம் தான் நல்ல வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும்

கணினி தேசம் said...

உள்ளேன்...

உள்ளேன்!

Anonymous said...

ஒரு தெருவில் நுர்று பாலியல் தொழிலாளர்கள் இருந்தால் அவர்கள் பிழைக்க 1000 யிரம் ஆண்கள் இருப்பார்கள். இத் தொழில் என்பது தனியே ஒரு நபரின் முனைப்பு இல்லை. இயற்கை சமூகம் பொருளாதரம் என பல்வேறு பிரச்சனைகளை கொண்டது. ஆனால் பெண்ணை நோக்கியே குற்றச்சாட்டும் விமர்சனமும் தொடர்கின்றது.

உதராணமாக நமீதா போன்றவர்களை கொண்டு குலுக்கி உருட்டிவிடும் தாயங்கள் பாலியல் தொழிலாளர்களிடத்தில் விழையாட்டை முடிக்கின்றது. இது தவறா என்பது முதல் சந்தேகத்துக்குரியது அடுத்தது தவறெனில் தவறு எங்கே தொடங்குகின்றது? அது நமீதாவில் தொடக்க புள்ளியை கொண்டிருக்கலாம் அல்லது வெங்காயம் முருங்கக்காயில் கொண்டிருக்கலாம். கோயில் சிற்பங்களில் கொண்டிருக்கலாம், புராணக் கதைகளில் கொண்டிருக்கலாம், கடந்த வருடம் கூட இந்திய வடமாநிலத்தில் சரஸ்வதி படத்தை பார்த்து சுய இன்பம் கண்டதாக எழுதிய ஒருவர் மீது மதத்தை அவமதித்தகாக வழக்கு தொடரப்பட்ட செய்திகள் வந்தது.

மனைவி பள்ளியறையில் பாலியல் தொழிலாளி போல் இருக்கவேண்டும் என்று வள்ளுவர் சொல்கின்றார். பள்ளியறையில் அவ்வாறு இருந்தால் இவளுக்கு விதவிதமான ஆட்களுடன் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கெண்டு சந்தேகம் வரும். பிரச்சனைகள் வரும். குடும்ப அமைப்பும் கற்பு வலியுறுத்தலும் இயல்பான சுகங்களை அனுபவிப்பதை மறுதலிக்கும் சமூகம் இது. இதே எதிர்முனையில் மனைவி என்ன மரக்கட்டை போல் என்று என்னொரு தேடல் தொடர்கின்றது.(வைப்பாட்டி) இயல்பான ஒரு சுகத்துக்காக மனைவிகளின் வேறு தேடல்களும் தொடர்கின்றது.(ஆன்டிகலாச்சாரம்- இது வயது குறைந்த வாலிபர்களை இரகசிய சுகத்துக்காக வைத்திருக்கும் குடும்ப பெண்கள் முறையை குறித்தது)

வளர்ந்த நாடுகளில் அதிகம் வெளிப்படையான பாலியல் வெளிப்பாடுகள் உள்ளது. அது நீலப்படங்களாக, பாலியல் தொழிலாளர் எண்ணிக்கைகளாக, சுதந்திரமாக வெளிப்படுகின்றது. ஆனால் எயிட்ஸ் தொற்று இந்தியா ஆபிரிக்க போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு. பாதுகாப்பான உறவு முறைக்கான கல்வியறிவு இருக்கின்றது. எயிட்சை கட்டுப்படுத்த வேணுமெண்டால் பாதுகாப்பான முறைகளை முன்வையுங்கள். வேசி என்று திட்டி விமர்சித்து உங்களை நீங்களே ஏன் எமாற்றுகின்றீர்கள்? ஆயிரம் பெண்களை புணர்நத இந்திரன் கிருஸ்ணனை விமர்சித்தீர்களா? கோயில்களுக்குள் நூற்றாண்டுகளாக தொடரும் தேவதாசிகள் முறைகள் என்னவாயிற்று?

கவரை ஒழுங்க போட பழகு
காசை ஒழுங்க கொடுக்க பழகு
பண்பாடு கலாச்சாரம் என்ற கேடுகெட்ட குப்பைகளுக்குள் பாலியல் தொழிலாளர்களை இழுத்து அவர்கள் தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்.

Tamilish Team said...

Hi kuzhanthainila,

Congrats!
Your story titled 'அவளுக்கு ஈழவனின் பதில்....ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 12th March 2009 05:30:01 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/39844

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

கமல் said...

ஹேமா முதலில் ஒரு பெண்ணுக்கு ஏன் இந்த நிலை வந்தது என்று சிந்திக்க வேண்டும்? அவள் தேர்ந்தெடுத்த பாதை சரியா என்று கவிஞர் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதன் வாதப் பிரதி வாதங்களை நாம் உற்று நோக்கலாம்.

எந்தவொரு பெண்ணும் தாமாக விரும்பி இப்படியொரு வாழ்வை ஏற்பதில்லை என்பதி எனது கருத்து. பெண் செய்வது தப்பு என்று கூறுவதிலும் பார்க்க அவளின் தப்பைத் திருத்த முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சமூகம் தான் இன்றைய கால கட்டத்தில் தப்பானவர்கள்.

கமல் said...

ஈழவன் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். அதே பழைய மரபு ரீதியான கலாச்சார முறையில் இருந்து அவர் ஒரு பெண்ணை உற்று நோக்குகிறார்...

மகா said...

very nice blog hema. i like verymuch fm songs

VIKNESHWARAN said...

அழகான வரிகள் ஹேமா...

ஹேமா said...

இத்தனை பின்னூட்டங்களுக்கும் ஈழவன் வந்து தன மனதில் பட்டதைச் சொல்லலாம்.
அவர் வரவே இல்லையே !

மது said...

நெடுநாள் கழித்து குழந்தைநிலாவை கண்டு ரசிக்க வந்தேன்...வந்த இடத்தில் மிக காரமான விவாதம் கண்டு நானும் என் சிறு கருத்தை சொல்ல ஆசை வந்தது...

ஈழவன் ஆண் என்பதல் " அவள் " செய்கை தவறு என்கிறாரா??
ஹேமாவின் கவிதையில் "அவள்" என்ன காரணத்தால் இந்நிலைக்கு தள்ளப்பட்டாள் என்பது கேள்வியாகவே நிற்கிறது...நம் நண்பர்கள் பலர் சொல்லி இருப்பது போல எந்த பெண்ணும் விரும்பி இவ்வாழ்வை ஏற்ப்பது இல்லை...
ஆண் ஒருவன் "அவள்" இடம் செல்லாவிட்டால் சிவப்பு விளக்கு என்பது இல்லாமல் போய்விடும்...
ஈழவன் முதலில் ஆண்களை திருத்தட்டும்...மனைவியை தவிர பிற பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் பார்க்கும் மனம் ஆண்களுக்கு வந்துவிட்டால் "அவள்" ஏன் சிவப்பு விளக்காக போகிறாள்..??
குடும்ப விளக்காய் ஒளிர மாட்டாளா??

ஈழவன் பதில் சொல்லிப்போங்கள்...

thevanmayam said...

வீட்டு விளக்கை
எரிய வைக்க
கட்டு உடலைக்
காட்டலாமா சிட்டு!///

சந்தர்ப்பம் , சூழ்நிலை, சுதந்திரமின்மை ,படிப்பறிவு இன்மை,குடும்பத்தில் ஆண் ஆதிக்கம் ஆகியவையே பெண் இப்படி மாறுவதன் முக்கிய காரணம் என்பது என் கருத்து!!

ஈழவன் said...

என்னுடைய படைப்பினையும் ஒரு பொருட்டாகக் கருதி தன்னுடைய வலையில் பதிவாக்கிக் கொண்ட சோதரி ஹேமாவுக்கு முதற்கண் நன்றி.

"அவள்" கவிதை நாயகி விலைமாதுவின் இன்னொரு பார்வையே "எதற்காக இந்த இலக்கு" ஆகும்.

இது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அறிகின்றேன், ஈழத்து வாழ்வியலில் எமது கலாசாரத்தைப் பேண வேண்டுமெனக் கங்கணங்கட்டி போர் உக்கிரமடைந்துள்ள இந்நிலையில் இதனை அங்கீகரிக்கும் இணைய வலைப்பதிவாளர்கள் ஈழத் தேசத்தின் கலாசாரத்துக்கு முரணான விலைமாதுவினரை நியாயப்படுத்திப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

எமது கலாசாரப் பண்புகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஈழத்தில் நீண்ட காலமாக போராட்டம் தொடர்கின்றது, இவ் ஆயுதப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் எத்தனை விலைமாதர்கள் எம் ஈழ மண்ணில் ஈழப் போராளிகளால் சுட்டுச் சரிக்கப்பட்டார்கள் என்பதனை எமது சமூகம் மறந்து விட்டதா,
யாழ்ப்பாணத்தில் 'சோடாமூடி'யென அடைமொழியுடன் கூறப்படும் இம் மாதர்கள் மக்களால் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டது காற்றிலே போய் விட்டதா? ஏன் இந்த இணைய வலைப்பதிவர்கள் அதனை மறுதலித்து கருத்துக் கூறவில்லை. இதனை உரத்துக் கூறினால் அரைத்த மாவையே அரைப்பது என்று அர்த்தம் கற்பிப்பதா?

ஒரு பெண் விலைமாதாக உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, எனது பார்வை ஈழத்தை மையமாக வைத்து நோக்கப்பட்டதே, ஐரோப்பிய கலாசார நாகரீக மோகம் எமக்கு பயன் தராது.

சமூகத்திற்கு கேடான இத் தொழிலுக்கு தவிர்க்கமுடியாமல் தள்ளப்பட்டோம் என்பதற்காக அந்தப் பாதையிலே தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாகாது. இதனைத் தொடரக் கூடாது என்பதனால் தான்
"கூலி வேலை செய்தாலே
இன்பமாய்க் கூடியிருந்து
குடும்பமாய்க்
குடிக்கலாமே கூழ்!"
என குடும்பத்தின் ஒற்றுமையை பதிவு செய்திருந்தேன்.

இந்த பாவைகளை விரும்பிச் செல்லும் ஆடவர்களில் பலர் பின்னாளில் படும் அவஸ்தைகள் ஏராளம்.

படைப்பாளி ஷோபாசக்தி தனது சிறுகதையொன்றில் ".....மறுநாள் காலையில் என் மேலுதட்டில் ஒரு கொப்புளம் காணப் பட்டது. மதியம் என் ஆண்குறியின் தலைப்பில் சில கொப்புளங்கள் தோன்றின. மாலையில் ஆண்குறியின் துவாரத்திலிருந்து நூல் போல சீழ் கொட்டத் தொடங்கியது. என் பிடரியிலும் முகத்திலும் மார்பிலும் வயிற்றிலும் பாதங்களிலும் தொடைகளிலும் ஊசி வலி கிளம்பி அலைந்து அது என் ஆண் குறியில் திரண்டது. நான் ஆண்குறியின் துவாரத்தை விரலால் அமுக்கிய போதெல்லாம் செம்மஞ்சள் நிறத்தில் சீழ் குமிழியிட்டு வந்தது." எனக் பதிவு செய்துள்ளார், இது அந்தப் பாதையில் பயணித்தவர்களில் சிலர் படும் வேதனையின் பதிவு என்று ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?

இவ் விலைமாதுக்களினால் எத்தனை இளைஞர்கள், எத்தனை பாடசாலை மாணவர்கள் சீரழிக்கப்பட்டுள்ளார்கள், சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது
எமக்குத் தெரியாமல் இருப்பதேன்?

ஆடவருக்கும் பெண்டிருக்கும் இத் துறை ஏற்படையதல்ல, இதனால் சமூகம் சீரழியும் என்பது கண்கூடு.

கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.

Post a Comment