*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 29, 2013

எனக்கான காடு...


உனக்கும் எனக்குமான
இந்தப் பெரும் காட்டில்
இல்லாதிருக்கிறது
என் சந்ததிக்கான இடம்.

பாறைகளில் மோதி வீழும்
பறவையல்ல நான்
வல்லமையற்ற மனதோடு
திசைகளை
மாறிக் கீறிக்கொள்ள
முட்டாள்களின்
வழித்தோன்றலும் அல்ல.

புகைப்படங்களிலும்
பொருட்காட்சிச்சாலையிலும்
தொங்கும் காட்சிப்பொருளல்ல
எங்கள் அவல வாழ்வு.

முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....

இது எனக்கான காடு
இளங்கன்றுகள் பயமறியாது
எச்சரிக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 28, 2013

ஞாலத்துளி...


கடக்காது கரை
ஆர்கலி (கடல்)
மீள்கூடும் கூழாங்கல்.

சிதைந்துலர்ந்த வர்க்கபேதம்
உருமேறு தெருநாயின்
நச்சுப்பல் புண் புணர்வு
இரவுக்குறியோசை.

கல்லும் உதவும் ஒருக்கால்
எள்ளின் புல்லும்
சூடாற்ற புவிபரவ
மனிதம்
மதியாக் காளான்
கோட்டமாய்
மண்சாடிக் காலிறங்கும்.

குருதி குடித்த சாத்தானின்
சூன்யச் சீரழிவு
கடைவாய் வழி
நாகரீக அலங்காரமென
நிர்வாண காதம்
பேச்சு உடை.

கொட்டாவி ஊழியன்
தட்டும் தகரம்
ஊர்வெளியில்
நிர்மாலியச் சடங்காய்
 
நிருத்தம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 24, 2013

சொல்லித் தொலைந்தவர்...


கூப்பிய கரங்களுக்குள்
அகப்படாத ஒரு கடவுள்
தோரண நூல்களைப் பிரித்து
வெளிநடப்புச் செய்திருந்தார்
இன்று காலை.

நேற்றுப் பேசிக்கொண்டிருக்கையில்
பறந்தடித்த
புழுதிக் கடதாசியில்
தன் இருப்பிட விலாசத்தை
தந்தும் போயிருந்தார்.

அர்ச்சனைப் பூக்களோடு
ஒரு குழந்தை
தானும் தேடிக்கொண்டிருப்பாதாய்
தெருவழி என் கை பற்றி
வரைந்தும் காட்டியது
கன்னக்குழி ஒட்டிய
அந்தக் கடவுள் முகத்தை.

இரவெல்லாம்
இருவரும் பாடித் தீர்க்கிறோம்
தேவாரம் தவிர்த்து
தாலாட்டுப் பாடல்களை
சொல்லித் தொலைந்தவருக்காக.

அக்கடவுளின்
ஒரு நிமிடச் சலசலப்பு
நீள்கிறது
வெறுமை விலக்கி
காலையும் மாலையும்
தொடரும் இரவும்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, June 19, 2013

எழுதா வரிகளில்...


உருவம் உலர்ந்து
மரித்துக்கொண்டிருக்கும்
பறக்கவியலா
எண்ணெய் தோய்ந்த சிறகொன்றை
பெயரில்லாப் பூச்சியென
புல்லிடுக்கில்
முண்டி வளரும் புல்லென
கண்டிருந்தேன்
புறநகர் வீதியொன்றில்.

பெரியாரையும்
ஓஷோவையும்
சேகுவராவையும்
தனக்கான அடையாளங்களோடு
தன் அலமாரியின்
இரண்டாவது அடுக்கில்
சேமித்து
வம்சம் வளர்க்க
நானென்ன இயந்திரமாவெனக்
கேட்டவளை....

எழுதப்படா
என் கவிதை வரிகளில்
நீண்ட வகிடெடுத்து
இரட்டைப்பின்னலோடு
சில கம்பீர வரிகளில்
பொருத்தியுமிருந்தேன்.

அலட்சியங்களுக்குள்
அர்த்தமற்ற சுலோகமென
புதைகிறது
சில இலட்சியங்கள்!!!

ஹேமா (சுவிஸ்)

Sunday, June 16, 2013

அப்பா...


சிற்பியென
பாறை செதுக்கி
மொழியறிவித்து
வலிதாங்கும் வேராய்
இன்றும் அப்பா.

இளைத்தவிரல்
ஆதுரமாய் பற்றி
இறைந்துகொண்டிருக்கும்
என் இருப்புக்களை
எப்போதும்
'அம்மாக்குட்டி'யென.

தன்வழி
உதிர்த்துப் போகுமென்
குஞ்சுக்கால சிறகுகளை சேமித்து
தன் நிழலில் இளைப்பாற்றி....

பெருவெளியோடு
அடர்ந்த நீல
விளிம்புகளை
நான் வரைய அனுமதி தந்து....

ஒப்பீடென விரல் நீட்டி
சொல்லமுடியா
இரையும் அக்கடல்
அகதிதேசம்வரை
சரியாய் செதுக்கும்
தச்சனென இப்போதும்
என்னை.

தூரதேசதிலிருந்தபடி
உப்புக் கண்ணீர் வரைகிறது
ஒரு வரி அப்பா!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, June 13, 2013

அன்பான செல்ல ஹிட்லருக்கு...

என் தோள் தொட்டணைத்த என் வீரனுக்கு.....

சுகம் சுகம்தானே.சுகமாய்த்தானிருப்பாய் என்றாலும்...... கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது !

உன் வியர்வை வாசனையோடு உன் நீண்ட பல கடிதங்களைச் சேமித்து வைத்திருக்கிறேன் மினுங்கும் மஞ்சள் பை ஒன்றில்.சில சமயங்களில் உன்னோடு கோவப்பட்டு உன் முன்னாலேயே சில கடிதங்களை எரித்துமிருக்கிறேன்.சாம்பலாகிய கடிதங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை தெரியுமா !

காதலில் சில நியாயங்கள் உறுதிப்பாடானது.உலகின் எந்த நியதிகளுக்குள்ளும் அடங்காதது.தனக்காகச் சில விதிகளை எழுதிக்கொள்ள காதலால் மட்டுமே முடிகிறது.காதலின் தீர்மானங்கள் முடிச்சாகும் இடங்கள் அதிசயமாயும் அதிர்ச்சியாயும் நம்பமுடியாமலும் இருக்கும்.காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது தன்னைத்தானே.இதில் நானும் நீயும் விதிவிலக்கா என்ன !

எமக்கான சந்திப்புக்களும் பேச்சுக்களுக்கும் சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கிறது.நான் என் வேலியோரத்து பூவரசோடுதான் அதிக நேரம் செலவழிக்கிறேன்.சந்திக்கும் நேரங்களிலும் நாம் கதைத்துக்கொண்ட நேரங்கள் மிக மிகக்குறைவே.சில சமயம் வார்த்தைகள் தீர்ந்துபோயிருக்கலாமோ !

இருந்தும்.....

உன்னை நினைத்துக்கொண்டே உன அருகாமையை அணைத்துக்கொண்டே உன் ஆயுதம் கொஞ்சம் தள்ளி வைத்து என்னில் பொய்க்கோபம் கொள்ளும் உன் கண்களைச் சரிப்படுத்தவோ,உன் புன்சிரிப்பை இலகுவாக்கவோ,எம் ரகசியங்களை தவிர்க்கவோ, பக்க இருக்கைகளை உறுதி செய்யவோ இந்தக் கடிதம் இப்போ உனக்கும் எனக்கும் தேவைப்படுகிறது !

இது நம் இடைவெளிக்கான ஒரு நேசிப்புமடல் மட்டுமே.நாம் சந்தித்துக் கனநாளாயிற்று.காணும் நிகழ்வொன்றுக்கான காலத்தை அனுமதி கொடுத்து அனுப்பிவிடு செல்லா.ஏங்கி இடைமெலிகிறேன் என்பதைச் சொல்ல வெட்கமாவும் இருக்கிறது !

பிரியங்களைக் கடந்து போதல் கடினம்தான் என்றாலும் அது கைவிடுபவர்களை விட்டு நீங்குவதில்லை.நினைவுகளைக் கரைக்கமுடியாக் கண்ணீரும் தோற்றுப்போய் இறுகிவிட்டது என்னோடு !

எந்த எதிர்பார்ப்புகளுமற்ற ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசாக அனுப்பிவிடு நீ சுவாசிக்கும் கந்தகக் காற்றுவழி.என்னை நிராகரித்து சட்டைசெய்யாது தாய் தேசத்தின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் உன்னிடம் காலம் முழுதும் தன்னையும் தன் மொத்த அன்பையும் கொட்டிக்கொண்டிருக்கிறாள் இங்கொருத்தி காதல் கிளியென !

ஒரு மனிதனின் அந்தரங்கம் என்பது ஒரு இருண்ட குகைவெளி மட்டுமல்ல அது மலர்வனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை ஈவா கண்டுபிடித்தாள் ஹிட்லரிடம்.நானும் கண்டிருக்கிறேன் அதே ஹிட்லரான உன்னிடம்.காதலின் புன்னகை ஒன்று உனக்காக மட்டுமே உன் வானில் நிலவாக வாழ்ந்துகொண்டிருப்பதை என்றும் நினைவில் கொள் !

என் உடலுறவுக்கும் ,உண்மைக் காதலுக்கும் உரிமையானவனல்ல நீ.உயிரைத் தாய்நாட்டுக்காய் அர்ப்பணித்த செல்லப்போராளி.அன்பை ஒரு பூவுக்குள் ஒளித்து என் தலையணைப் பூவாய் வரைந்து அதில் உறங்கிக்கொண்டிருக்கும் உனக்கேயானவளின் அன்பு மடலிது.விரைவில் ஒரு முறை உன் கண்களைச் சந்திக்க விடுவாயென்கிற நம்பிக்கையில் உன் நினைவுகளோடு உறங்கிக்கொள்கிறேன் !

சந்திப்போமடா....என் செல்ல ஹிட்லரே !

ஹேமா(சுவிஸ்)

அன்பின் நெளிகுரல்...


கோடுகள் வெட்டிய சதுரத்துள்
நிறைந்த மழைநீர்
காத்திருக்கிறது
ஒற்றை மழைப்பூச்சிக்காய்.

எங்கிருந்தோ ஓருருவம்
உள்ளங்கைக்குள் அணைக்கும்
பொழுதுகளைச் சேகரிக்கிறது
மனம் வஞ்சனையற்று
இரவை நீளமாக்கியும்
பகலைக் கனவுகளாக்கியும்
தனலெறிந்த அவலத்தோடு.

ஒன்றிழந்து ஒன்று பெற்ற
குழந்தையென
சடுகுடு விளையாட்டு
அப்பாவின் சாயல்
சமாதானத்தோடு.

கரையாப் பொழுதை
செரித்திக்கொண்டிருக்கும்
நினைவுகளுக்கு
திரையிட்டு சாதுர்யமாய்
நவீனச் சித்திரத்தின் கோடுகளை
நெளித்தும் வளைத்தும் வரைந்து
தன் வல்லமை
காட்டிக்கொண்டிருக்கிறது
அந்தப் பேரன்புப் பேனா.

அன்பின் பேரிரைச்சலுக்குள்
அனாவசியாமாய்
கேலிச் சிரிப்பின்
வன்மமொன்று
தவளை விழுங்கிய
பாம்பின் அவஸ்தையோடு.

கண்ணில் நீர் நிறைய
சாதுர்யமாய்
அப்பாவின் மார்பில்
படுத்தபடி பாடிய தேவாரம்
நினைவுகளில் நெளிய
கிடத்துகிறேன் என்னை
இன்னும் நான்
தூங்கவில்லை!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 10, 2013

இசையும் காதல்...


எதையும்
தெரிந்து வைத்திருக்கவில்லை.

பூக்களைத் தெரிகிறது
பெயர் சொன்னால்
புரியவில்லை.

கையிலிருப்பது
ஆயுதமெனத் தெரிகிறது
பெயர் தெரியவில்லை.
ஸ்வரங்கள் தெரிகிறது
வாசிக்கும் ராகம்
தெரியவில்லை.

தெரியவில்லைகள் பல...

கும்மிருட்டிலும்
என் தெரியவில்லைகளை
ரசித்தவன்
நிரப்பிக்கொண்டிருக்கிறான்
முன்னர் ஒருபோதும்
நானறியா ஸ்வரங்களால்
தெரியாதவைகளை!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 08, 2013

கையாலாகாத்தனம்...


சுழற்சிக்காய் குறி சொல்லி
அதிஷ்டமென
நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது
நாட்காட்டி.

கவிழ்த்து வைத்த
கரப்பை
பூனை தட்டிவிட
குஞ்சுகள் கௌவும்
பருந்தெனக் காலம்
கை மாற
கழுத்தில் கட்டியாய்
அசிங்கப்படுத்தும் கழலையென
நாளொன்று வீங்கி வலித்து....

நாளொன்று
அதிஷ்டமானால்
ஆறு நாட்களும்
சங்கடத்தில் தடுமாறி
காலை தவறவிடும்
புகையிரதம் முதல்
இரவு விளக்கின் குமிழ்
பழுதாகியதுவரை.

மகர ராசிக்கு
முகராசியென
ராசிப்பலன் நம்பி
கருத்த நாளொன்றுக்குள் புகுந்து
முழித்த முகம்
யாரென்று யோசித்தால்
அப்பா அம்மா சமேதராய்
ஆனைமுகப் பிள்ளையார்
முருகன் ஆறுமுகன்.

ஒரு நாள்போல இல்லை
பல நாட்கள்
விடியாத நாட்களுக்குள் போராடி
விடிந்ததாய் நம்பித்தானே
பதுங்கு குழிகளை மூடினோம்.

விடியாத நம் நேரம்
வேளையா விதியா
காரணங்கள் காரியங்கள் எங்கோ
விடியா மூஞ்சியென்ற
காரணப்பெயர் எங்கோ.

வெள்ளியிலும்
மாதவிடாய் விலக்கிலும்
அழகாய் விடியும் சிலசமயம்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, June 04, 2013

அழகுத் தேடல்...


கதவைத் திற
காற்றால் நிரப்பிக்கொள்
உண்மைகள் நிரம்பிய
நிர்வாணமாய்
மனதை திறந்து வை
ஈரம் கசிய
வறட்சி குறையும்.

ஏதேன் தோட்டத்துக் கனி
உண்ணும்வரை
ஆதாமும் அழகு
ஏவாளும் அழகு
உண்மை நிர்வாணத்தில்
அழகாய்.....
மிக அழகாய்.

போர்த்திப் பூசிய
ஆடைகளைக் களைந்தெறி
சாத்தான் தந்த
அத்தி இலையது.

அந்நியமாய் இல்லாத
உன் நிர்வாணம் அழகு
உனக்குள் உணர்வு
உனக்குள் உண்மை
உனக்குள் தேடல்
உனக்குள் ஒளி
உனக்குள்தான் எல்லாமே
உன்னைத் தவிர
உனக்குள் எதுவுமில்லை
அது அசிங்கமுமில்லை.

நிர்வாணமா
சீ...
என்ன இது அசிங்கமாய்
என்பதும் கேட்கிறது
ஆனாலும்
தோழனே
நிர்வாணமே நிஜம்
பேரழகு
நிர்வாணத்தில் நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 03, 2013

இதற்குப் பின்னும்...


நீயில்லா வாழ்க்கையிது....

காதலோ
கர்ப்பமோ இல்லை.

எனக்கான குறிப்புக்களை
கொண்டுபோயிருந்தாய்
அடையாளத்துக்கான
உணர்வுகளை
புறக்கணிக்கப் பழகியுமிருக்கிறாய்
இனி ஏதுமில்லை
நூதனமாய் நான் சொல்ல.

காடுகளில் பறவைகள்
கூடு தொலைத்த கதைகள்
சொல்லிக்கொண்டிருந்தபோதே
சருகுகளோடு சருகாய்
சேர்ந்து கிடந்த
ஒற்றைச் சிறகொன்றை
உயிரூட்டி
பரிசாய் தருவதாக
சொல்லியே
கதவடைத்தாய்.

அதன்பின்.......

பிரபஞ்சம் தாண்டியபோது
நீ சாட்சியாய்
அனுப்பிய
செய்திகள் ஏதும்
எனக்குச் சரிவர
எவரும் கொண்டுவரவில்லை.

பொய்யாகிப்போனது நீயா
இல்லை என் வாழ்வா
உயிர் கொண்டு வருமா
அந்த ஒற்றை இறகு!!!

ஹேமா(சுவிஸ்)