*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, January 29, 2009

தகர்க்கப்பட்ட நம்பிக்கைகள்...

நம்பிக்கைகள் நிலைகுலைந்து
முழி பிதுங்க
சங்கடப்பட்டபடி.

எந்த ஒரு தேவைக்கான
அடிப்படையில்
சத்தியங்களையும்
வாக்குறுதிகளையும்
தன் பெயரில் அள்ளிக் கொடுப்பது.

கொடுக்கப்பட்ட
நம்பிக்கைகள் தீர்க்கப்பட்டதா
இல்லை உதாசீனம் செய்யப்பட்டதா!
நிறைவேறும் என்ற நம்பிக்கையில்
காத்திருப்புக்கள்
நீண்ட வரிசையில் ஏராளம்.

புலம்பும் குரல்கள் கேட்பதற்காகவே
நம்பிக்கை ஒலிவாங்கிகள்
கட்டப்பட்டிருந்தது.
ஏமாற்றங்களால்
எங்களை இடிக்கிறீர்கள்
என்றல்லவா ஓலங்கள்.

யார் எப்படிப் போனாலும்
சுயநலக் கூட்டத்தின்
புத்தி சாதுர்யமும்
பல் இளிப்பும் பசப்பல்களும்
மிகமிக இயல்பாய்.

மாற்றங்களும் மாறுதல்களும்
இயற்கை என்றாலும்
சில மானுடங்கள் தெய்வமாவதும்,
சில மனிதர்கள்
இதயங்களே இல்லா
ரோபோக்கள் ஆவதும் எப்படி?
மனிதநேயம் என்கிற
இரத்த நரம்பே இல்லாமல்.

உயிர் குடிக்கும் அரசியலின்
சத்தியங்களும் நம்பிக்கைகளும்
வாக்குறுதிகளும்
சாக்கடைத் தீர்த்தமாய்
யாருக்குமே உதவாமல்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, January 24, 2009

குழந்தைநிலாவுக்குப் பிறந்தநாள்...

http://orkutluv.com/ graphic comments-Sweet Birthday
அடியெடுத்த ஓராண்டின் பூர்த்தி
குழந்தைநிலாவுக்கு.
இனியவள் அவளுக்கு நான்தான் முதலில்
நிறைந்த நன்றி சொல்வேன்.
எத்தனை ஆறுதல் எனக்கு அவள்.

பெற்றெடுத்தவள் நானாய் ஆனாலும்
தந்தையாய் உயிர் கொடுத்த
என் பெற்றோருக்கு முதல் நன்றி.
உயிர் கொடுத்த கவிதைக் கடதாசிகளுக்கு
பக்குவம் சொல்லி வர்ணங்கள் கொண்டு
"வானம் வெளித்த பின்னும்" என்று
பாதை போட்டு வானிலே குழந்தைநிலாவை
உலவ விட்ட
தீபசுதனுக்கும்

அரவிந் ஆறுமுகத்திற்கும்(Lee)
மனம் நிறைந்த நன்றி பல.

இன்னும் சொல்ல இணையத்து நண்பர்கள்
கைகொடுத்து ஊக்கம் தெளித்து
வளர்த்துவிட்ட
பெயர் சொல்லி என் அன்பை
நன்றியை மழுங்கவிடா
அத்தனை என் உள்ளங்களுக்கும்
நிறைந்த நன்றி.
உள்ளம் நெகிழ்ந்த நன்றி பல.

என்றும் அன்போடு ஹேமா.
என் கவிதைகள்...
தூவானச் சாரல் கோலமிட
நெஞ்சு நொந்து
கிழிந்த பக்கங்களின்
கீறல்கள் கவிதைகளாய்.
உண்டாக்கப் படாமல்
உள்ளம் கருக்கொண்டு
பிரசவிக்கும் எண்ணக் குழந்தை
கவிதைகளாய்.

கற்பனையாய் சும்மாவாய்
நினைத்து முனைந்து முக்காமல்
மனம் களைத்து
முளைவிட்டுப் பூத்தவையே
கவிதைகளாய்.
அழகு வசனம் எடுத்து
வார்த்தைகள் கோர்த்தெடுத்து
தொடுக்காமல்
நெஞ்சில் வலி எடுத்து
வலிந்து வலிக்கும் குருதித் தெறிப்பே
கவிதைகளாய்

கருச்சொந்தம் காததூரம் இருக்கையிலும்
அருவமாய் உருவமாய்
அருகிருந்து சந்தம் தருவது
கவிதைகளாய்.
இன்பம் துன்பம் எதுவோ
கோல்கொண்டு கீறும்
என் இதயத்தை
மயில் இறகால் மெல்ல வருடி
இதம் தருவதும் கவிதைகளாய்.

உணர்வோடு ஒன்றி
ஓரிரண்டு வார்த்தைகள் உள் நுழைந்து
ஓராயிரம் கதைகள் சொல்லி
திணறச் செய்வதும் கவிதைகளாய்.
ஐயோ என்று அரட்டிடாமல்
அழுது புரண்டு ஊர் கூட்டிடாமல்
மனதோடு விம்மியழுது
மனப்பாரம் குறைத்துவிட
கசிகின்ற இரத்தம் கொண்டு
கிறுக்குவதும் கவிதைகளாய்.

வாய் எதிர்த்துப் பேசிடாமல்
வாக்குவாதம் பண்ணிடாமல்
பேனாவின் மை கொண்டு
வையத்தை வியக்க வைப்பதும்
கவிதைகளாய்.
வாரம் ஒரு கவிதை கருவாக
காற்றில் கலக்கும்
கவிதை என்கிற பெயரில்.
உணர்வுக்குள் மை எடுத்து
சிதறிய ஊற்றே கவிதைகளாய்.
நொந்த மனம் நோ மறக்க
மருந்தானது கவிதைகளாய்.

"வானம் வெளித்த பின்னும்"
நானும் நாமமிட்டேன்.
என்றாலும்
ஈழம் விழிக்க வெளிக்க
வழிகள் இல்லை.
நீதியின் கோல் எடுத்து
எம் துயரம்
தீர்த்துவிடு தமிழ்த்தாயே.
தமிழின் தாயே நன்றியோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 20, 2009

கொலை வெறியோடு ஒரு காதல்...

கூரான ஆயுதத்தோடு
அலைந்துகொண்டிருந்தது அது
காலை மாலை
கண் குவியும்
சமயங்கள் முழுதும்.


காதலின் ஏக்கம்
கனவுகளின் தேவதை
கண்ணீர் விட்ட
சமயம் ஒன்றில்,
ஒரு மாலையில்
விரும்பிய பாடல் கேட்டபோது
நடந்த அதிசயம் அது
வறண்ட நிலத்தில்
வானம் பொழிந்தாற்போல்
ஒரு பாடல்
அதிசயப் பூ ஒன்று வழிமாறி
என் கைக்குள் விழுந்ததாய்.


எதிர்பார்ப்புக்களுக்கும்
ஏமாற்றங்களுக்கும் இடையில்
தூங்குபவள் நான்
எப்படி அந்தப் பூ?
சந்தோஷத்தின்
பிறப்பு நிகழ்ந்த நிமிஷம் அது
இருளின் ஒரு சிறு
துவார வெளிச்சத்தில்
கண்டேன் அந்த ஆயுதத்தை
நாள் ஒன்று கை அசைத்து
விடைபெறும் நொடி அது.


மெலிந்த மனதில்
ஈட்டியாய் ஏறி
இறுக்கி நெரித்து முறுக்கி
மூச்சின் குறுக்குவழியில் அது
யாரிடமும் சொல்லமுடியா அவதி
இரத்தம் வழிய
அசைக்க வலி எடுத்தது
என் தேகம்
இயற்கை வைத்தியம் தந்து
சரீரம் குடைந்தது அப்பாடல்
நோய் மாற்றினாலும்
வடு மறையாமல் இன்றும்.


பின்பு ஒரு நாளில்
காற்றின் கரம் தொட்டு
மழை தடவி வந்தது
மீண்டும் அது
சிலுவை சுமந்து
கற்களால்
காயப்பட்ட காலம் அது.
நிதர்சனங்கள் நீத்துப்போய்
மரணச் சிநேகிதியின்
சிக்கெடுக்கும்
விளையாட்டில் நான்.


பூக்களும் பாடல்களும்
தத்துவப் புத்தகங்களும்
கலையம்சமாய்
என் இருப்பிடம்
மாற்றியது அது
அக்கறை தவிர்த்து
அக்கரையில் நான்.


கொல்ல மனமின்றி
பொறுமையின் எல்லையில்
துரத்திய ஆயுதம்
அந்தக் கூரான ஆயுதம்
மெல்ல மீண்டும் ஒரு நாளில்
என் திசை அறிந்து
வந்தே விட்டது
என் வாசல் தேடி
தன் காதல் என்னும்
கூரான அந்த
அன்பு ஆயுதம் தாங்கி!!!


ஹேமா(சுவிஸ்)

Sunday, January 18, 2009

இரத்தம் சிந்தும் சித்தார்த்தன்...

நலிவுற்றுக் கிடக்கிறது என்நாடு
மெலிந்து கிடக்கிறது என் தேசம்.
தரைப்பாதை தடை.
வான்பாதை வழியடைப்பு.

குருதிக் கிடங்குகளுக்குள்ளும்
குண்டுக் குளங்களுக்குள்ளும்
நீந்தியபடியே எங்கள் பிரயாணங்கள்.
தேசம் வெளுத்து சலவை செய்யும்
புத்தன்கூட அசுத்தமாய்.

பிணம் தின்னும் கழுகும் நரியும் உலவும்
கவலைக்குரிய நாடாய் என் தேசம்.
ஊட்டச்சத்தில்லா ஊர்கள்.
கல்விச்சாலைகளோ காவலரண்களாய்.

எங்கள் உதிர்ந்த தெருக்களில்
படிந்த
எம் காலடித் தடங்கள் மாத்திரம்.
கொல்லையிலும்
காணாமல் போனவரின்
எச்சப் பருக்கைகள்.
வடகிழக்குத் திசைகாட்டியில்
"சுடுகாடு இங்கே".
புன்னகை இழந்த
புழுக்கள் வாழும் இலங்கை.

கல்வியறிவில்லா காட்டுவாசிகளாய்
எம் குழந்தைகள்.
காலாசாரம் வளர்ந்த இடமெங்கும்
அநாகரீகக் குப்பைக் கூடங்கள்.
புத்தனோ அழுதபடி.

போதி மரத்துக்குக் கீழும்
புதைகுழியாம்
அழுகுரலும் கேட்கிறதாம்.
சித்தார்த்தனும் சிந்தித்தபடி
சந்தேகத்தோடு!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, January 14, 2009

பொங்கல் திருநாள் 2009...

பொங்கல் பொருட்களும்
பானைகளும்
பிசாசுகளிடம்
அகப்பட்டுக் கிடக்கிறது
கொஞ்ச நாட்களாக.

பறிப்பிற்கான போராட்டம்
இரத்தம் சொட்டச் சொட்ட.
பொங்கல் பானைகள் முழுதும்
தமிழனின் இரத்தம் நிரப்பப்பட்டு.
பொங்கும் கைகள்கூட
அறுக்கப்பட்டு.

எங்கள் சுவாசங்களை
பறித்த பிசாசுகளிடமிருந்து
எங்களை மீட்கவே
எங்கள் மூச்சுத் திணறுகிறது.
பிறகு எங்கே
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்.

எங்கள் கரங்கள் நிரந்தரமாய்
உணர்விழக்காது.
வேறு எந்த உதவியோ
ஊன்றுகோலோ அற்று
பிரபஞ்சத்தின்
வேர்களை அறுத்தல்லவா
ஆயுதமாக்கி
எதிரியை வழிமறித்துப்
போராடியபடி நாம்.

பிரளயமும் பூகம்பமும்
பூக்களைத் தறித்து மறிக்கும்
இலையுதிர்காலமும்
நீண்டு நிலைப்பதில்லை.

சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்
அடிபட்டுத் தின்ற
காலங்கள் மட்டும்
மணம் மாறாமல் மனதோடு.

பொங்கிய முற்றமும்
அந்த மூன்று கற்களும்
ஞாபகக் குறிப்புக்களில் இருந்தாலும்
காணாமல் போன பட்டியலில்.

கறையான் புற்றுக்களும்
பாம்புப் புற்றுக்களும்
மூடிக் காத்து வைத்திருக்கும்
சிலசமயம்
எங்கள் எச்சங்களை.

புராதனமான
நகரம் ஒன்றை உருவாக்குவோம்
புதிய எம் தேசத்தில்.
நீண்ட நெடிய தேடலின்பின்
பொங்கலின் வாசம்
மீண்டும்
முற்றத்துக் கோலம்
மாவிலை தோரணத்தோடு.

அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, January 10, 2009

போரும் ஒரு காதலும்...

விலங்குகளோடு விலங்காய்
விலங்கு அவிழ்க்க,
விடுதலைக்காய்
விடு தலையை என
ஆயுதம் ஏந்தியபடி
நெடுந்தூரப் பயணத்தில் நான்.

பேய் பிசாசுகளின்
அசுத்த எச்சங்களைச்
சுத்தம் செய்யப் புறப்பட்டுவிட்ட
துப்பரவுத் தொழிலாளியாய் நான்.

அவலங்களின் ஓலங்களுக்குள்
குண்டுகளையே பசிக்கு உணவாய்
தின்று வாழும் எனக்கு
காதலின் சத்தங்கள்
சந்தங்கள் இல்லா சங்கீதமாய்.

கொலுசோ வளையலோ அணியாமல்
ஆயுதங்களையே தலையணையாக்கி
தேசத்தையே
தோழியாய் அணைத்திருக்கும்
நான் எப்படி?
ம்ம்ம்ம்....
உங்கள் மனதை வழி மறித்தேன்.
என்றாலும்
மன்னித்துக் கொள்ளுங்கள் தோழரே.
இன்று நீங்கள் வழிமறித்து வினவிய
வார்த்தையின் எதிரொலியே
என் குரலாய் இப்போ.

ஈழத்தாய் கண்ணீர் துடைக்க
எம் தேச வரைபடத்தின்
தூசைத் துடைக்க
இழந்திட்ட அத்தனைக்கும்
ஈடு கொடுக்க
பாசம் விட்டு...வீடு விட்டு
புறப்பட்டு விட்ட புயலாய் நான்.
என் நண்பன்
பாதியில் நிறுத்திய கனவைத்
தொடர
என் தோளில் கனமாய் கனவுகளோடு.

நிமிடமும் நொடியும்
என் நிலை எனக்கே தெரியாமல்
குப்பியின் துணையோடு
உலவும் என்னை
என் உலகம் தாண்டி!

ம்ம்ம்...
ஆசைதான்
உங்களோடு வேற்றுலகில் பிரவேசிக்க
அங்கும் நாம் அடிமைகள்தானே!
உடன்பாடு கொஞ்சமும்
இல்லை எனக்கு அதில்.
சிந்திக்கிறேன்
எம் சின்னக் குருத்துகளை.

காதல் கடவுள்போல
எனக்குள்ளும் காதலுண்டு.
என் மண்ணில்...மரத்தில்...என்னில்
உங்களில்...என் இனத்தில்.
நண்பரே
மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
பாரமாய் உங்கள் மனதில் நானிருந்தால்
கொஞ்சம் இறக்கி
எனக்கும் வழி விட்டுச் செல்லுங்கள்.

வசந்தம் தேடும் வாழ்வு உங்களது கனவாய்
சுதந்திரம் தேடும் வாழ்வு எனதாய்.
தேடுவது என்னவோ
சந்தோஷம்தான் இருவரும்
என்றாலும்
இயல்பில் இலக்குகளில்
மாறுபட்டதாய்தானே.

என் வாழ்வு நிரந்தரமற்றதாய்.
இன்று மடியலாம் மண்ணில்
அல்லது நாளை நாளை மறுநாள்.
இனித் தொடரும் நாட்களில்
மாவீரர் துயிலும் இல்லத்தில்கூட ஒருசமயம்
சந்திக்கக் கூடும் நீங்கள் என்னை.

ஒன்று மட்டும்
மண்ணுக்குள் வித்தாகமுன்
மனதிற்குள் வித்தான பெருமை எனக்குள்.

உங்களுக்கும்
உங்கள் வருங்காலச் சந்ததிக்கும்
சுதந்திரக் காற்றைச் சுத்தம் செய்ய
ஆயுதம் ஏந்தி நடக்கிறேன் தோழர்களோடு
தயவு செய்து வழி விட்டு
வாழ்த்திச் செல்லுங்கள்.
சந்திப்போம் முடிந்தால்
மீண்டும் நாம்.
விலங்கு அவிழ்த்த
எம் தாயின் குழந்தைகளாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, January 08, 2009

நீ...நான்!

நான்
குளிர்ச்சி தரும்
நிலவாக
இருட்டில்
மட்டும் வந்து
போகிறேன்.


நீ.....
உயிர் வாழ
வெப்பம் தரும்
சூரியனாக
இருந்துவிட்டால்.
உன் நிழல்தானே
என் ஒளி!!!


ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 06, 2009

நான் கறுப்பு...

காலக்கிறுக்கனின்
வார்த்தைகளில் தடுமாற்றம்.
குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி
திருப்திகள் அற்ற மரணங்கள்போல
அர்த்தமற்றதாய் அந்தச் சொல்.


கறுப்பு நீ....
அருவருக்கும்
அட்டைக்கறுப்பு...நீ.


கறுப்பின் கை பிடித்து
லாகவகமாய் புல்லாங்குழல் வாசித்து
கறுப்புக் காற்றில் கலந்துவரும்
கறுப்பு இசை.


ஏழைகள் எவருமில்லா
நகரத்தை உருவாக்க
அங்கும்
கடவுளும் கறுப்பாய்.
மழை பிரசவிக்க
கருக்கொள்ளும் மேகம் கறுப்பு.


நான் புதைத்துவிட்ட
கறுப்பு இரகசியம் அது.
தேடிப்பிடித்து
அதைத் தோண்டி எடுத்தாலும்
கறுப்பாய்தான்
கருவைரமாய் அதுவும்.


கறுப்புப் புள்ளியில் வாழ்க்கை
ஆரம்பம் எங்கே
முடிவும் எங்கே.
சுற்றி வரும் சனிப்பார்வை கறுப்பாம்.
கருவறை கறுப்பாம்.
காறித்துப்பும் கயவரின்
எண்ணங்கள் கறுப்பாலேயே
வரையப்பட்டதாய்.


ஒரு சிறு விம்பம்
என் பின்னாலேயே
குரூரமாய்...
சிலசமயம் குழந்தையாய்
கறுப்பு நிழலோடு காத்திருப்பதாய்.
இறப்பிலும்கூட
கறுப்புச் சவக்குழிக்குள்ளும் கூட
வருவதாய் உறுதிமொழியோடு.


திட்டமிட முடியாத
கறுப்பு உலகில்
நேற்றும் நாளையும்
இன்றுபோல
கறுப்பு வண்ணமாய் எனக்கு.
கனவாய் மிதக்கும்
நம்பிக்கைகளும் கறுப்பு.


முடிந்த முடிவுகளோ
முடிக்க முடியாத முடிவுகளோ
எதுவுமற்று
பயங்கரமான
கறுப்பு உலகத்தில்
வாழும்
கறுப்பு மனிதனாய் நான்!!!


ஹேமா(சுவிஸ்)

Sunday, January 04, 2009

தெளிவு...

நட்சத்திர ஒளி விரட்டும்
மின்கம்பத்துக் குமிழ்விளக்கு.
சந்தோஷ மழை முறிக்கும்
சடுதி மின்னல்.
மனமுடைத்து
முட்டி வரும் எண்ணங்களை,
பூச்சிகளின் வீரியங்களை
நசுக்கும் விரல்களாய்
சம்பவங்கள் சில.

தகிப்புக்களின் வெக்கைகளை
அடக்கும் வெட்டவெளி இசை.
சொல் உடைத்து
மூலை பார்த்துக் குந்தியிருந்து
அழும் குழந்தை.
ஓடு உடைத்து
உலகம் பார்த்து வியக்கும் ஓர் உயிர்.
காரணம் மறந்து
எழுந்து உலவும் சமாதானம்.

முறித்தலின்...உடைத்தலின்
வலியை உணர்ந்தபடியே
உணர்வுகளின் கனத்தோடு
இரையின் பொருள் நெருங்கி
என்றாலும்...
வெறுப்புக் கிளையில் காத்திருந்து
பசிவிரட்டி
கணங்கள் ஒவ்வொன்றும்
சிறகு விரித்துப் பறந்து
பசிக்கும்
உணர்வைத் தவிர்த்து,

தன் எண்ணங்களை
நொடிக்குள் உடைத்த
மின்னல் முன் முணுமுணுத்தபடி
மீண்டும்...
படபடக்கும் சிறகுக்குள்
எண்ணங்களை எழுதியபடி
தன் திசை துரத்தித் தொலைகிறது
முகிலுக்குள் முகம் புதைக்கும்
ஓர் பறவை
பசி மறந்ததாய் !!!

ஹேமா(சுவிஸ்)