*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 30, 2013

கோடு...


சின்னக் கோடு
அருகில்
பெரிய கோடென
கோடுகளின் தத்துவத்தைக்
கீறிக் காட்டிக்கொண்டிருந்தாய்
நீயே...வியப்புக்குறியாக.

முன்னமே திட்டமிட்டிருப்பாய்
கோடுகளின் அளவை
அல்லது இருத்தலை
நிர்ணயிப்பது நீயென.

இப்போ....
சின்னக் கோடு
புள்ளியென
ஒழிந்து கொண்டிருப்பதின்
அதிசயத்தையும்  மகிழ்வோடு
வரையத் தொடங்கியிருப்பாய்.

நறும்புகை மூச்சு முட்ட
ஆனந்தக் கண்ணீரோடு
அன்பின் கடவுள்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 18, 2013

வரட்டும் வரட்டும்...


எனக்கான நேரமிது....

வேலி நுழையும்
நரியும் கழுகும்
தனலேந்தி நிற்கிறேன்
என் தாய் கொஞ்சம்
கண் அசரட்டும் .

மின்மினி விளக்கோடும்
துப்பாக்கியோடும்
காத்திருக்கிறது எனக்கான சாவு
இறக்காத உணர்வோடு
மீட்சி பிறக்கிறது உறுதி.

வரட்டும்.....
இன்னொருமுறை வரட்டும்
எங்கள் பெண்புரசுகள் ஒதுங்கிய
வேலி பிச்சு
கதவுடைச்சு அடுப்பெரிச்ச
சப்பாத்து நாய்கள் வரட்டும்.

வளவு நிறைச்ச மரங்கள் வெட்டி
வானளாவி வண்ணம் தந்த
பனை தென்னை கழுத்துடைச்சு
தெருவுக்குக் குறுக்க போட்ட
பிசாசுகள் வரட்டும்.

புதைகுழிக்குள்
பதுங்கி அடங்கப் பிறக்கவில்லை
போதைதரும் பெண்களல்ல நாங்கள்
போதையைப் போக்காட்டும்
அண்ணனின் பெண்புலிகள்.

வயிறுடைத்த குருதியோடு
மாற்றுடை மாற்ற நேரமின்றி
தூக்கத்தை தூக்கிலிட்டு
காத்திருக்கிறேன்
எனைத்தாண்டும் கழுகுக்காய்.

வரட்டும் வரட்டும்
உக்கிய மண்டை ஓடுகளோடு
உக்காது உண்மைகளும்
வரட்டும் வட்டும்
எமக்கான காலம் வரட்டும்!!!

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில்.....ஒரு நினைவுப்பதிவு.

ஹேமா(சுவிஸ்)

Friday, August 16, 2013

வாழ்வு (2)


பிரபஞ்ச எல்லையில்
மீண்டெழமுடியா மனதோடு
சில வன்மங்கள்
எதையும் சாசித்துவிடலாமென்கிற
நம்பிக்கையோடு தம் குவளைகளை
நிரம்பிக்கொண்டிருக்கிறது.

சுயமிழந்து பழுத்துவிழும்
இலையின் நரம்புகளில் இறக்கும்வரை
பச்சையம் இல்லாமல்
போகாதென்றாலும்
வன்மங்கள் நசித்தால்
நானென்ன அவர்களென்ன.

வானம் நுழைந்து மறைந்த பருந்தென
பாதைகள் குழம்பினாலும்
சில அனுமானப் பாதச்சுவடுகள்
காட்டுகின்றன
சரியான வாழ்வின் அஸ்திவாரங்களை!!!
விதிகளைக் கவிதையாக்க
முயற்சித்துத் தோற்றவள் நான்
எத்தனை முயன்றும்
இடைநடுவில்
சிறகு முளைக்கத் தொடங்கிவிடும்
என் விதிக்கு.

எழுத்தில் வடிகாலாய் கீறினாலும்
தாளில் விரிக்கத்தொடங்கும்
தன் சிறகை.

எனக்கான தலையெழுத்தை அழகாக்க
என்னுடன் இருத்தல் நலமென்றேன்
பறத்தலே தன் விதியென்று
உச்சந்தலை உழக்கிப் போனது
மாறாத சில கிறுக்கல்களை
மட்டும் விட்டுவிட்டு !!!


கீறிட்ட இடங்களை நிரப்பிச்செல்கிறது
வானில் முகில்கள்.

எனக்கான வார்த்தைகளுக்கு
இடம்விட்டுப் போக
கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
நிரப்பும் முடிவோடு.

என் பார்வையில் வானை ரசிப்பதா
அவன் பார்வையில் நீலத்தை ரசிப்பதா
இரவு நாம் விட்டுவைத்த
மௌனங்களையும் கோர்த்து
கோடிட்ட இடங்களை நிரப்புவதா ?

நீங்களும்.....
அண்ணாந்து வானம் பாருங்கள்
அவரவர் ரசனைகளுக்கான
கற்பனைகள் எட்டலாம்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 11, 2013

நாசமாப்போன சாமி...(கணவன் மனைவி பேசிக்கொள்கிறார்கள்.)

மனைவி....

சின்னவனுக்கு கால்சிரங்கு
மூத்தவளுக்கு மூண்டு மாசம்
முக்கி முன்னால மூண்டடி(மூன்றடி)போனால்
பின்னுக்குத்தள்ள முப்பது
(கஸ்டங்கள்)ஆக்கினையள்.

பெரியவனுக்கு முத்தம்மை போட்டிருக்கேக்க
நேத்தி (நேர்த்தி) வச்சன்
நூற்றெட்டு வடை சுடவெண்டு
மூண்டு கழுதை வயசுமாச்சு அவனுக்கு.

நாசமாப்போன மனுசன்
நாலு காசு தரேக்கையே கிள்ளுக்கீரை வாழ்க்கை
இந்த கிளிசலில
காலையுமெல்லோ உடைச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கு
கொள்ளி வைக்கவெண்டே என்ர தலையில கட்டினவை
சொல்லாமக் கொள்ளாம கொல்லையால(பின்பக்கத்தால்)போட்டினம்.

கணவன்...


ஏனப்பா சும்மா கிடக்கிற முந்தானையை உதறி
முள்ளுக்கு மாட்டுற
விளங்கித்தான் கதைக்கிறியோ
கழுத அலுவலைப் பார்
(அலுவல் =வேலை)
குந்தும் தேயுது நீ குந்திக் குந்தி.

கிடவடி முணகாமலுக்கு
(கிட= பேசாமலிரு)
கேட்டனானே கொப்பனிட்ட
(கொப்பன் =அப்பா)
நீ வேணுமெண்டு
துலாவடியில முழுசி முழுசி
முழங்கால்ச் சீலை தூக்கி
காலில உழக்கின கோழிப்பீ கழுவேக்க
‘நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ...’வெண்டு பாடி
என்னைக் கோழிபோலக் கவுத்துப்போட்டு
போடி....போடி செல்லக்கிழவி.

புலம்பாத செல்லம் என்ர பூஞ்சக் கண்ணி
கனவில வந்தவ முடக்கொழுங்கை அம்மாளாச்சி
அள்ளித் தருவா பாரன் பிச்சுக்கொண்டு கூரையை.

செத்தே போனன் நான் சிங்கமெல்லோ
சினக்காமல் கொண்டு வா பீடியொண்டு
இஞ்சாரப்பா செல்லமெல்லே
தேத்தண்ணி ஒண்டும் சீனி போடாமல்
அப்பிடியே ஓலைப்பாயும்.

மனைவி...

இஞ்சாருங்கோ.......பேச்சு வாங்காதேங்கோ
கல்லாக்கிடக்கிற கண்டறியாச் சாமிக்கொரு
நம்பாமல் வச்சிட்டன் நேத்தியை
உவன் மூக்குப்பொடியன் அப்பவே சொன்னவன்
நம்பாதை உந்தச் சாமியை
நாக்குழிப்புழுப்போல கண்கெட்ட கடவுளிது
கண்ட பக்கமெல்லாம் திரும்பிக்கொள்ளுமெண்டு’.

ஒண்டு சொல்லட்டே......
இப்பவும் விட்டுப்போடுவன்
உந்தக் கடன்வழி நேத்தியை பயமாக் கிடக்கு
பூச்சாண்டிச் சாமி
பூண்டோட கிடங்குங்க வச்சிடுமோவெண்டு.


கணவன்...
பாராப்பா கரப்படியில ஆரெண்டு
(கரப்பு= கோழிக்கூடை)
அங்காரப்பா.....பாரப்பா விழுந்து கிடக்கிறார் கடவுள்
அடக்கடவுளே.....
கூப்பிடு பெடியளைத் தூக்கிவிட.....

மனைவி...

இப்பிடி ஆரப்பா தீனி தீத்தி (ஊட்டி) விட்டவை இந்தாளுக்கு
குண்டப்பர் ஆயிட்டார் நாங்கள்தான் மெலிஞ்சுபோனம்.

கணவன்...

இஞ்சவிடு ஒருக்கா.......அந்தச் சால்வையெடு
அந்தாளிட்ட நாலு கேள்வி கேட்டுப்போட்டுத்தான்
தூக்கிவிடுறது இண்டைக்கு.

கல்லாய் நிண்ட கடவுள்
ஷெல் அடிச்சு
செத்துப்போச்செண்டு நினைச்சிருந்தன்
சாதி சனத்தோட சண்டையில போகாம
மிஞ்சிக்கிடறமெண்டு
இஞ்சயென்ன விடுப்புப் பாத்திட்டு
பாடையில கொண்டுபோகவே வந்தது பாவிச்சாமி.

நீ நல்லாயிருப்பியோ சாமி
நாசமாய் போக நீ
நாலு வீடுபோய் நாப்பது வேலை செய்து நான்
குடிச்ச கஞ்சி பொறுக்காமல்
போரெண்டு நடத்தி வச்சாய்
அறுந்த அரசியலும் ஆர்ப்பாட்டமும்
ஆர் கண்டா என்ர படிப்பில.

கொடுப்புக்க போயிலை புதைச்சுக்கொக்கொண்டு
பொன்னம்பல வாத்தி சொன்ன
பொன்னார்மேனியனே பாடாமாக்காம விட்டதால
பள்ளிக்கூடம் போச்செனக்கு.

அப்பாச்சிக்குக் கொள்ளி வைக்கப் பேரன் வேணுமெண்டு
இயக்கத்துக்கும் போகாம வயலுக்கு இறங்கினன்
அங்கதானே பெரிசா பிழைவிட்டன்.

மயக்கவெண்டே வந்தவள் மண்வெட்டியோட
அப்ப வெட்டிச் சரிச்சவள்தான் உவள்
இப்பவும் எழும்ப விடுறாளில்ல
என்ர காவோலை வாய்க்காரி.

வட்டிக்கெடுத்தன் காசு மலைநாட்டுப்பக்கம் போய்
போயிலை வியாபாரம் செய்யலாமெண்டு
உவள் (அவள்)பாவி மேய்ஞ்சிட்டாள்
அதில கொஞ்சம் களவெடுத்து கூரையையும்
குண்டுபோட்டுப் பிய்ச்சிட்டான்கள் அதையும்
குறுக்கால போனவங்கள்.

தப்பினம் பிழைச்சமெண்டு
தாவடி,புன்னாலை கொடிகாமமெண்டு
குண்டடிக்க அடிக்க கட்டின துணியோட
புதைஞ்சவைக்கும் எரிஞ்சவைக்கும்
ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டும் விட்டுப்போட்டு.....

ஒற்றைக் கவளைச் சோத்துக்கு
ஒருநாள் முழுக்க வெயில் முழுகித்(அலைச்சல்)திரியிறன் நான்
அப்பவெல்லாம் காவந்து பண்ணேலாத பரதேசிச்சாமி
ஏன் இப்ப என்ர முத்தத்தில(வீட்டு வாசல்)விழுந்துகிடக்கு.

மனைவி...

நீ பறையமாட்டாய் (பேசமாட்டாய்)
மெய்யாலும் (உண்மையாக)
வாய்க்குள்ள கொழுக்கட்டையோ
நல்ல பேய்க்காய் (நல்ல கெட்டிக்காரன்) நீ
எல்லாரையும் பேய்க்காட்டி (ஏமாத்தி)
நீயும்தானே பேயாய்த் திரியிற
நீ கண்கெட்டு நிண்டதால
உன்னைக் கலைச்சுப்போட்டு
புத்தரெல்லோ
குந்திக்கொண்டார் உன்ர கோயிலுக்க.

நல்ல பம்பல்தான் இது
(பம்பல் = சந்தோஷம்,வேடிக்கை)
கையைக் காலை முறிஞ்சுக்கொண்டு
என்ர வீட்டு வாசலில பிரண்டுபோகாம
கெதியா (சீக்கிரமா)ஒருகை குடப்பா தூக்கிகொண்டுபோய்
வைரவரின்ர வாசலில இருத்திவிடுவம்.

கட்டையில போற கடவுள்
எக்கேடும் கெட்டுத் துலையட்டும்
எங்களைக் காக்காத கடவுள்
தன்னையாச்சும் காபந்து பண்ணுதோ
(காப்பாற்றிக் கொள்ளுதோ) பாப்பம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 08, 2013

காதல் துளிகள் (8)


எத்தனை போர்களைக் கண்டது
இந்த உயிர்
காப்பாற்றிய உயிர்களும் எத்தனை
காலில் விழுந்த உயிர்கள் எத்தனை
என் உயிர் பற்றிய கவலை
எப்போதுமில்லை
வா...வா.....
தொடை தட்டும்
தைரியத்தோடு வா
என் தோள் தொடு
பாவமும் புண்ணியமும்
எதுவும் யோசிக்க நேரமில்லை
சிந்திக்கும் நேரங்கள் சிறகடிக்க
வாள் எடு
எதிர் கொள் என்னை
உன் உயிரை
எடுத்தே ஆகவேண்டும்
இப்போ நான்!!!


போர்க்காலங்களில்
முகடு கடக்கும்
சில வகிடு பிரிக்காத
பெரும் பறவைகளில்
உன் முகம்
கண்டிருக்கிறேன்
பின்நாளில்
ஒரு வீரனாய்
மறைத்த முகிலுக்குள்.

அதே கற்பனை முகம்
இப்போதும்.....
இனியும் காணவேண்டாம்
போதும்
அப்படியே இருந்துகொள் !!!


இடைவெளி குறைந்த
கவிதை இது
வயதின் எல்லை
தாண்டியவர்களுக்கு மட்டுமே...

இரும்புப் பிடியில்
மந்திரித்த ஏதோ ஒன்றாய்
இருட்டுச் சிலைகள் நகர
வெப்பம் தாளாமல்
யன்னல் சீலைகளும் உருக
நழுவிய சேலை தேடாமல்
தேக்கு மரக் கட்டில்
தவிர்த்த அவள்
மார்பணைத்த
அவன் தோள்களில்!!!


நினைவுகளின்
ஒவ்வொரு அடுக்கிலும்
ஒளித்துக்கொண்டே
கண்டு பிடிக்கும் விரல்களை
ஏய்த்தபடியே கேட்கிறாய்

என்னை நினைவிருக்கா
நான் யாரென்று
சொல் நான் யாரென்று.....

கேள்வியா இல்லை
கேலியா இது.

நினைவுகளுக்கு நீரிடும்
என் தோட்டக்காரா
உயிர் வேர்
இழுத்தொரு பரீட்சை
ஏனுனக்கு !?


பச்சையும்
மஞ்சளும்
சிவப்புமாக
சமிக்ஞை
காட்டிக்கொண்டிருக்கிறது
உன் இருப்பு.

எப்படியிருக்கிறாய்
இரவிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நீ சூரியன் என்பதையும்
மறந்து.

சொல்லிப்போன
வாசங்களின் வீரியம்
குறைந்துகொண்டே வருகிறது
ஒரு சூரிய மோதிரம்
தந்து போயிருக்கலாம் நீ!

Tuesday, August 06, 2013

நேற்றைய கனவு...


இல்லைகளை இருப்பதாய்
நிரப்பிக்கொண்டிருக்கிறான்
யாரோ ஒருவன்.

நீரைச் சலனப்படுத்தா
நதி நீந்தும் சருகில்
புன்னகைக்கும் அவன் முகம்.

புவி வரைந்த வான்பறவை
அடைக்கலமாக்கிக்கொள்கிறது
அவன் சிரிப்பை.

அவன் நட்ட சிறு விதை
ஆழ்ந்து அகன்று
பெருவிருட்சமென
ஊன்றுகிறது வேர்களை
எனக்குள்.

கிளைதொட்ட வண்டொன்று
ஒரு வரிப்பாடலோடு
தூது வருகிறது.

புலனில் அகப்படா அவனுருவம்
போர்த்திய கம்பளிக்குள்
மூச்சுக்காற்றாய்
நான்தானென நகையாட....

சணத்தில்
தூர தேசத்துப்பறவையாய்
தாவிக் கடல் விழுங்கி
கரைந்துகிடக்கிறேன்
அவனருகில்
நேற்றைய கனவில்
நான்....!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 02, 2013

துரோக அறிவிப்பொன்று...


மிகச்சிறந்த போராளியின்
கைகளைகளைக்
கட்டிக் கொன்றவர்களின்
அரசியலில் எழுதி
அழிக்கப்படுகிறது
ஆயுதமற்ற காதல்.

சாதியற்ற பிரியங்களைத்
தாரை வார்க்கும்
ஆகாசவாணிகள்
வியர்க்கும்
உவர்ப்புநீரில்
இரு உயிர்களின் மிதப்பு.

இணைந்த மனங்கள்
இச்சைகள் பிழிய
ஆட்டு(ம்)ப்பலகை
அவிழ்த்தெடுக்கும்
வன்மங்கள் சில.

அன்பெனப் பொய்சொல்லி
குவளை நிரப்பும்
போலிக்கடவுள்
புழுக்கொல்லிப்
பூண்டுகளையும் கலந்து
கொடுத்துக் காத்திருக்கும்
வார்த்தைகளினூடே
வழிந்துவிடாமல்.

மூளைச் சலவை செய்தவளிடம்
தோற்ற ஆத்மா
குப்புற விழுந்து
விழிகளால் மண் தோண்டி
விசாரித்துக்கொண்டிருக்கிறது
நியாயங்களை.

முதுகில் பதுங்கும் ஆயுதம்
சாதியக் குருதிகளில்
பிரியங்களைப் பிரித்து
சேமித்துக்கொண்டிருக்கும்
பரம்பரைக் கலயங்களில்.

காதல் வாழ்வதும் இறப்பதும்
சமூகக் கொடிகளிலென
ஆதாரங்களை
ஏந்திக்கொண்டிருக்கிறது
அப்போரளியின் அழகு முகம்!!!

ஹேமா(சுவிஸ்)

ஆட்டுப்பலகை - செக்கின் கீழ்ப்பக்கத்தில் மாடுகள் இணைக்கப்பட்டுச் சுற்றி வரும் மரம்.