*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, August 18, 2008

நீறான காதல்...

முகிலைப் போர்த்திக்கொண்டு
வானிலேயே என் உறக்கம்.
ஆதாரம் ஏதுமற்ற தள்ளாட்டம்.
உணர்வு மரத்த சிந்தனைகள்.
பிடிமானம் தளர்ந்த நடைகூட
அலைபோலத் தள்ளாடி
காற்றடித்த திசையில்
கால்கள் நடைபோட
மனம் எதிர்த்திசையிலேயே
போராடியபடி.

முள் மீது படுக்கை போட்டவன் நீ.
இரத்தம் வருகிறதா என்பது போல்
ஒரு பார்வை.
உருகி ஆவியாகிய எனக்குள்
கண்ணீரின் ஈரமாய் நீ.
எலி பிடித்து
விளையாடும் பூனைக்குத்
தெரியாத வலி எனக்குள்.

ஆழக்கிணற்றின்
அடியில் வாழும்
நீர்ப்பாசிபோல
ஆசைகள்
அமீபாக்களாய் பங்கசுக்களாய்.
உன்னோடு இணைந்து பறக்க
இறக்கைகள் கேட்க
இருந்ததையும் பிய்த்துப்
பிடுங்கி எறிந்துவிட்டு,
இன்னும் எங்காவது ஒட்டிக் கிடக்கிறதா
என்று பரீட்சித்துப் பார்க்கும்
இராட்சதக் காதலனாய்.
இனிமை கொடுமையாய் மாறிய
விந்தைதான் எப்படி!

காலம் எதுவித சைகையுமே
இல்லாமல்
நீயும் எட்டாத் தூரத்திலேயே.
சேர்ந்திருக்கும்
தருணங்கள் கிடைக்காமலேயே
பிரிவின்
தருணங்கள் மிகச் சுலபமாய் அருகில்.
இன்று ஒரு பெருமூச்சின்
நெருப்புச் சுவாசத்திற்குள்
நீர்த்தும் நீறாமல்
நடைப்பிணமாய் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

12 comments:

குரங்கு said...

====
உன்னோடு இணைந்து பறக்க
இறக்கைகள் கேட்க
இருந்ததையும் பிய்த்துப்
பிடுங்கி எறிந்துவிட்டு,
இன்னும் எங்காவது ஒட்டிக் கிடக்கிறதா
என்று பரீட்சித்துப் பார்க்கும்
இராட்சதக் காதலனாய்.
====
அருமை ஹேமா...

காதலில் இதெல்லாம் சகஜம், இதெல்லாம் தெரிந்தே அனைவரும் காதலிக்கின்றனர்.

மொத்ததில காதல் ஒரு வலி.. சாதா வலி அல்ல வாழ்கை முழுக்க நம்மேடு ஒட்டிகொண்டுருக்கும் பெரிய வலி.

Unknown said...

காதலின் தாக்கம் இதயத்திலும் வலிக் கின்றது !

உந்தக் கத சோகக் கத........ !
சிலவேளை நிஜமாக இருக்குமோ?

சூப்பர் ஹேமா.

NILAMUKILAN said...

//காலம் எதுவித சைகையுமே
இல்லாமல்
நீயும் எட்டாத் தூரத்திலேயே.
சேர்ந்திருக்கும்
தருணங்கள் கிடைக்காமலேயே
பிரிவின்
தருணங்கள் மிகச் சுலபமாய் அருகில்.//

அருமையான வரிகள்.

உண்மை காதல் என்றும் நீர்த்து போகாது.. காதலியுங்கள்...புதிதாய் பிறப்பீர்கள்..

ஆடுமாடு said...

நல்லா இருக்கு ஹேமா. உங்க லேஅவுட் கண்ணை உறுத்துது. மாத்துங்களேன்.

நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

அப்பப்பா என்ன ஒரு கவிதை... நல்லா இருக்கு..

வரிகள் நீட்டம் அதிகம்... குட்டியாக எழுதினால் இன்னும் அழகு பெரும்...

கற்பனை அசாத்தியம்...

ஹேமா said...

வாங்க குரங்கு அண்ணாச்சி,காதல் நாங்களாகவே வலிந்து தேடிக்கொள்ளும் வலிதானே!நன்றி.

ஹேமா said...

//உந்தக் கத சோகக் கத........ !
சிலவேளை நிஜமாக இருக்குமோ?//நேரம் வரும் சொல்றேன்.இதுதான் நீங்க சொன்ன அந்த லொள்ளு.

ஹேமா said...

நன்றி முகிலன்.உண்மையான காதல் நீர்த்துபோகாது,ஆனால்...அந்த உண்மையான காதல் எது என்று உணர்ந்துகொள்வதில்தான் பிரச்சனையே!

ஹேமா said...

//நல்லா இருக்கு ஹேமா. உங்க லேஅவுட் கண்ணை உறுத்துது. மாத்துங்களேன்.//

ஆடுமாடு வாங்க.என் தளம் ஒழுங்கு படுத்துபவரிடம் உங்கள் கருத்து விடப்பட்டிருக்கிறது.நன்றி.

ஹேமா said...

வாங்க விக்கி.கவிதைகளைச் சிலசமயங்களில் சுருக்கி எழுதிப் பார்க்கிறேன்.அது மனதிற்கு நிறைவில்லாமல் இருக்கிறது.முயற்சி செய்கிறேன்.நன்றி.கருத்துக்குச் சந்தோஷம்.

கையில நகச்சுத்திதான்
இன்னும் மாறல.

thamizhparavai said...

இந்தக் கவிதையின் 75 சதவீத வரிகள் எனக்குப் பிடித்தது. உங்களின் சமீபத்திய கவிதைகளில் எனக்கு முழு நிறைவைத் தந்த கவிதை இது.
காதலின்(அன்பின்) பிரிவை வார்த்தைகளில் வார்த்து(வறுத்து) எடுத்திருக்கிறீர்கள்.. நன்று...

மன்னிக்கவும்... "நீறானது" என்றால் அர்த்தம் என்ன?

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா,கவிதையை மிகவும் ரசிச்சு இருக்கிங்க."நீறானது" என்றால் உள்ளுக்குள் தணல் இருக்கும்.மேலான சாம்பலை நீறான நீர்த்த சாம்பல் என்போம்.நீறு பூத்தல் என்றும் ஆகும்.

Post a Comment