*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, July 28, 2013

என் காதலன்...


என் வலிகளைத் தனதாக்கி
அகோர வெயிலிலும்
மனதை ஈரமாக்கும்
என் இனிய தோழன்
அந்தசாரன்.

காதோரம் முடி ஒதுக்கி
நாடி(சி) நெருங்கும்
பேராசைக்காரன்
மோகத்தீ மூட்டி
குளிர்காயும் புத்திசாலி.

பைத்தியமாய் உளறினாலும்
ரசித்து
உயிருக்குள் உயிர் திணித்து
நாட்காட்டி நாளில்
நல்லவனாய்
பிரகாசிக்கும் பேரழகன்.

வாழ்தலையும் சாதலையும்
உள்ளங்கைக் கதகதப்பில்
வைத்துக்கொண்டு
கண்ணாமூச்சி ஆடும்
கண்ணழகன்.

இமை அசையும் 
ஒரு கணத்தில்
இதழ் சுவைத்து
இறைவனையும் கண்மூடி
வெட்கப்பட வைக்கும்
இயக்கன்.

போராடி விட்டுக்கொடுத்து
எச்சில் ரசங்களால்
காயங்களாற்றும்
காதல் மருத்துவன்.

தையலிட்ட பள்ளங்களை
நிரப்பிப்போகிறான்
சில முத்தங்களிட்டு
மீண்டும் வரும்வரை
ஆறாக்காயம் தந்து!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, July 27, 2013

கொஞ்ச நாட்களாய்.....


ஆறாம் விரலோடு
என் கனவில் வரும்
நான்
சிவப்பு வண்ணத்திலும்...

சொற் கேளா
குழந்தையென
என் பொழுதுகளும்....

ஒற்றை அலைவரிசையில்
இயங்கும் மனம்
ஏதோ ஒரு பய
கிலேசத்தோடும்....

நூறு முறை
வானொலியில்
எவரினதோ
மரண அறிவித்தல்
சொல்லும் உன் குரல்
என்னுள்
அமிழ்ந்து
மூழ்கிக்கொண்டிருக்க....

அலையடித்துத் தூக்கியெறியப்பட்ட
சிறுமீனின் துடிப்பு
இன்னும் ஒரு
நொடிதானென
அறிவிக்கிறது
வானிலிருந்து
நூலிறங்கிய வாழ்வொன்று!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 25, 2013

தொலை(த்)தல்...


சாவி தொலைந்த
வீடென்றார்கள்
நானும்.....
'சாவி' என்று
சொல்லிக்கொள்கிறேன்.

வீட்டுக்குள்.....
இரு தேவ அர்ச்சகர்கள்
ஒருவர்
வேதம் சொல்ல சொல்ல
இன்னொருவர்
எழுதிக்கொண்டிருக்கிறார்.

தேடட்டும் சாவியை அவர்கள்
கிடைக்குமட்டும்
அவர்கள் அர்ச்சிப்பும்
எழுத்தின் பதிவுகளும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்.

எனக்கும் சாவி தொலைந்த
வீடொன்று
கா(க)ட்டித் தாங்களேன்
அப்படியே அவனுக்கும்
சொல்லி வையுங்கள்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 23, 2013

காதல் சேமிப்பு...


உன் அத்தனை நினைவுகளையும்
சேமிக்கத் தொடங்குகிறேன்
சிரிக்கும்பலூன்
பேசும் பலூன்
திட்டும் பலூன்
கொஞ்சும் பலூன்
அதட்டும் பலூனென...

பலூன்கள் வெடிக்கும்
காற்றில் பறக்கும்
ஒருநாள் என்பாய்
உண்மைதான்
காலம்...
என்னையும் காற்றாக்கியிருக்கும்
உன் அன்பின் துகள்களோடு
அந்நேரம்!!!அடித்து ஓய்ந்த
கனத்த மழை
களைத்துவிட்ட
மூன்றாம் நாளில்
குப்புறக் கிடக்கும்
ஒற்றைச்சருகொன்று
ஒளித்து வைத்திருக்கிறது
உன் பெயரை
மென்னீரம் தடவி
உனக்குள் கிடக்கும்
என் நினைவுபோல்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, July 19, 2013

சொல்லாடை...


உதடு சுழித்துக்
கிழித்த துண்டில்
இழுத்து எறியப்பட்ட
சில வார்த்தைகளால்
துடித்துத் தவிக்கும் சில உயிர்கள்.

ஓடி அடங்கி
அவிழ்த்தோடும்
நாடி நரம்புகள்கூட
செரிக்கமுடியா வார்த்தைகளால்
அவதியுறும்.

தேடி விடியும்
நாளொன்றின் கதவுகள் திறந்து
சாத்தான்களோடு
கூடிவரும்
அந்நாளில்
அந்த வார்த்தைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 14, 2013

முன்னிலைக் காதல்...


நான் நட்பென்கிறேன்
நீ காதல் என்கிறாய்
நீ காதல் என்கிறாய்
நான் நட்பென்கிறேன்.

எல்லாவற்றிற்கும்
பாதகமில்லா
விளக்கம் வேறு
யாரையும்
பாதிக்காத
வழிமுறைகளோடு.

நான் நல்லவளா
நீ நல்லவனா
துரோக வழிகளை
அடைக்கிறோமா
திறக்கிறோமா?

எனக்கானது
எனக்கானது மட்டுமே
கொடுத்துத் தின்னமுடியாத
ராஸ்கல் நீ
நானும்தான்...!

இருவருமே
துரோகம் பண்ணவும்
ஏமாற்றவும்
விரும்பவில்ல
ஏமாறவும்
பிடிக்காத
பெருச்சாளிகள்.

உனக்குப் பாசமில்லையோ
போகிறேன் என்றுவிட்டாய்
சுலபமாக
நான்.....?

முடிவில்
முற்றுப்பெறா
அல்லது
முன்னிலைக்
கவிதையொன்றுக்கு
நாயகன்
நாயகி
என்கிற உச்சரிப்புக்கள்
மட்டும்
நம் கதை கேட்பவர் மனதில்.

ஒன்றுக்கும்
உபயோகமில்லா
மழையென
தேங்கிக் கிடக்க
ஈக்களும் கொசுக்களும்
புணர்ந்துகொள்ளும்
ஒரு ஒதுங்குமிடமாய்....

விடு என்னை
போய்விடு நீ!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, July 13, 2013

வாழ்வு (1)


விழுந்தால்
ஏந்திக்கொள்ள இரு கைகள்.
பள்ளம் நிரம்பிய பூக்கள்
ஆற்றில் இழுத்தாலும்
அணைத்துக்கொள்ளப்
பாறைகள்.
கொத்தாமல்
துரத்தும் பாம்பு.
தயார்ப்படுத்தியபிறகே
கனவுகள்கூட
மிரட்டுகின்றன.

அந்த இரக்கம்கூட
சில மனங்களுக்கு
இல்லாமல் போனதேனோ !

சீரான
வார்த்தைக் கோர்வைபோல்
அழகாய்
அடுக்கடுக்காய்
எதிர்பார்த்த வண்ணத்தில்
அமைவதில்லை
வாழ்க்கை !

ஒவ்வொரு நிமிடங்களும்
விட்டுச் செல்கிறது
தேடலின் அதிசயங்களை
முடியாத கனவைத்
தொடர வரும்
அடுத்த இரவுக்கான
காத்திருப்புப்போல!

கடின தருணங்களை
கடந்துகொண்டிருக்கிறேன்
விளக்கம் தேவையில்லை
அவசியமற்றது
தெரிந்தவர்களுக்கு
மிச்சமிருப்பவர்களோ
நம்பமாட்டாதவர்கள் !

ஒற்றைப் புள்ளியில்
குந்தியிருக்கிறேன்
கனகாலம்.
எங்கு சுற்றிலும்
பெரிய முள்ளை
உரசிப்போகும்
சின்னமுள்ளை
நிர்வாணப் பகலிலும்
தேடுகிறதென் கண்
நேற்றைய கனவில்
தவறி விழுந்ததாய்
பின் வந்த செய்தி !

விருப்பமான வழிகளை
நாங்களே
தேர்ந்தெடுத்த பிறகு
வலிகளை
ஏன்...
தாங்க மறுக்கிறோம் !

ஹேமா(சுவிஸ்)

Friday, July 05, 2013

ஆடிக்கரிநாள்...

 
எத்தனை
யூலைகள் வந்தபோதும்
நாம் நினைத்தாலும்
பிரசவிக்கமுடியா
உயிர்களின்
கரி நாள் இது.

உடைந்த ஏதோவொன்றில்
ஞாபகமூட்டி
மனம் எப்போதும்
துடித்தாலும்
இடம் மாறி
மனம் மாறி
நகர்ந்தாலும்
தடக்கும் அலைவரிசையில்
நின்று நலம்கேட்கும்
கரிநாள் இது.

அழகான
மறக்க முடியாத
ஒரு வசந்தத்தின் போது
அருகில் இருந்தவர்கள்
அது போதும்
உயிர் உள்ள வரை.

கருத்த நாட்களுக்கும்
வர்ணம் பூசிக்கொண்டிருந்தோம்
களவாடியது உலகம்
நிறம்மாறுமுன்.

காத்திருங்கள்....
முன்னறிவிப்பேதுமில்லா
ஓவியன்
இன்னொரு சந்திப்புக்கு
உறுதியளிப்பான்.

மண்பார்த்து விழிமூடுமுன்
நிச்சயம் நினைத்திருப்பீர்
இனிவரும் சந்திப்பை.

சொல்ல நினைக்கிறேன்
மறுமுறை
கரிநாளாய் இல்லாநாளில்தான்
சந்திப்போம்
நிச்சயமிது!!!

கண்ணீருடன் ஹேமா(ஈழம்)

Thursday, July 04, 2013

கிச்சு கிச்சு...


குடை மறைத்த
தலைகள்
எதைப்பற்றியும் பேசலாம்.....

இலக்குகள்
இலட்சியங்கள் பற்றியும்
இளையராஜா
இசை பற்றியும்....

குடும்பம் பற்றியும்
குழந்தைகள் பற்றியும்
சமூகம் பற்றியும்
கவிதை பற்றியும்
நண்பர்கள் பற்றியும்
அவர்களின் காதல்
பற்றியும் கூடப் பேசலாம்.

ஆனால்....

தெருக்கரைகளை
பற்றிக்கொண்டு
மறைந்திருப்பதே
குசுகுசுக்கவைக்கிறது
காமமென்று !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 02, 2013

முத்தத் துளிகள் (2)

தேன் முத்தம்
தரும்
திருடன்
உன்னைத் தின்ன
என்னோடு
காத்திருக்கிறது
தேன் களவு கொடுத்த
வண்ணத்துப்பூச்சியுமொன்று !

ஒரு கன்னம் நிறைத்(ந்)தால்
மறு கன்னமும் காட்டு
சொல்லி வைத்தார்
சிலுவைச்சாமி
சரி சரி....
மறு கன்னத்தையும்
நிறைத்திவிடு
இது காதலர் தினம் !
இன்றெல்லாம்
சொன்ன உன் வார்த்தைகளை
கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
போதவில்லை கவிதையாக்க....
உன் வெடிச்சிரிப்ப்பும்
போதாது....
ராத்திரி
மு...த்...த...ம் தர
விடிகாலை...
முழுக்கவிதையாகிவிடும்
பாரேன் !
நீ.....
தராத முத்தத்தால்
நிரவாமல் கிடக்கிறது
கன்னக்குழிகள்
என்.........
முழுமையடையாக்
கவிதைபோல !
உன்...
தீராக்கோபங்களால்
எனக்குள்....
கருக்கொள்கிறது
முத்தக்குஞ்சுகளாய்
தரப்போவதில்லை
இப்போதைக்கு
உன்னிடம் நான் !

ஹேமா(சுவிஸ்)