*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label மாவீரர் தினம் 2009. Show all posts
Showing posts with label மாவீரர் தினம் 2009. Show all posts

Friday, November 27, 2009

தோழா நீ எங்கே...

தோழா...
எமக்கான தேவைகளை
சமாதானத்திற்கான வார்த்தைகளை
எமக்காகப் பேசி
பார்வைகளால் விதை தூவி
பயிரிட்டவன் நீ
எங்கே நீ !

கொஞ்ச நாட்களாக நீயின்றி
பரிதவித்து நீரின்றி வறண்டு
வரப்புகளில் ஆடும் மாடுமாய்
நத்தைககளும் ஊர
களைகளுக்குள்
அகப்பட்டுக் கிடக்கிறோம்
தோழா எங்கே நீ!

என் அம்மா சொன்னா
பாட்டி சொன்னா
பாலுக்கு அழுதேனாம்
பட்டுப் பாவாடைக்க்கும் அழுதேனாம்
உனக்கும் அதுபோலவே
ஆசைகள் இருந்திருக்குமே !

என்றாலும் தீராத வெறியோடு
எமக்கான பாதைகளைச் சீர் திருத்தி
இடைவெளிகளை நிரப்பிச் செப்பனிட்டு
ஒற்றைச் சீருடையோடு மட்டும்
கல்லறைத் தோழர்களோடு
உன் உணர்வுகளைப்
பகிர்ந்து கொண்டிருந்தாயே
இப்போ கொஞ்ச நாளாய்க் காணோமே
எங்கே நீ !

முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !

அந்தரத்தில் எம்மை விட்டு
பலியாடாய் ஆக்கிவிட்டு
போதுமடா சாமி என்று போவாய்
கனவிலும் பறைந்திருக்க மாட்டோமே.
தமிழீழம் தாங்கி நின்று
வழி காட்டி பாதை வெட்டி
வீரனாய் விழித்திருந்த தோழா எங்கே நீ!

வாராயோ ஒரு நிமிடம்
உன் குரல் தாராயோ ஒரு முறை
எமக்கான சேவகனே...
சென்ற இடம் சொல்லாமல் போனதேன்
இல்லை என்று தெரிந்தபின்னும்
இன்னும் தேறாத மனதோடு
தோழனே காத்திருக்கிறோம்
எங்கே நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 24, 2009

பிறந்தான் தமிழாய்...பிரபாகரன்

இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
அகத்தியக் கமண்டலத்துள்ளும்
அடக்கமுடியாச் சொற்களாய்
அவன் பெயர் அழகாய்.

தேரோட்டும் தலைவனாய்
தென் பொதிகைத் தமிழாய்
நெஞ்சுக்குள் பூத்து
அழகாய்த்தான் இருக்கிறான்.

தமிழ்த் தாயின் செல்ல மகன்
உணர்வை உழுதுகொண்டவன்
படுக்கைப் பாயைத்
தானும் சுவீகரித்த புன்னகையோடு.

அவன் முகமும் பால் மணமும்
தும்பியோடு
வண்ணத்துப் பூச்சியின் சிநேகமாய்.
சிந்திய சிரிப்போடு
மலர் கொய்யும் என் தலையில்
அவன் கரங்கள்
வீரப் புண்களின் வடுக்களோடு.

வேர் அறுந்து ஓடி வந்த அகதி நான்.
பிரபஞ்ச முட்டைக்குள்
என்னோடு தஞ்சம் கேட்டுத்
தானும் கம்பீரமாய்.

அழகே இன்னும் ஒருமுறை
பலமுறை
என் கண்ணுக்குள்
என் நெஞ்சுக்குள்
நான் படுக்கும் பாயில்
என் பூமியில்
பூத்தபடியே இரு.

நானும்...
தமிழ்ப்பறவைகளின்
வார்த்தைகளில்
வாழ்த்துக்கள் சேகரித்து
பாடியபடியே
சரிவேன் உன் மடியில் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 20, 2009

கேட்பாரற்ற பொழுதுகளில்...

சில கதவுகள் வேண்டுமென்றே
மூடப்பட்டே...யிருக்கும்.
மூடியிருப்பதாய் மௌனித்துத்
ஏன் திரும்புகிறாய் நீ.

தட்டு எங்கே உன் கைகள் ?
கூப்பிடு எங்கே உன் குரல் ?
கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க நியாயமில்லை
இரத்தக் கறைகள் அங்கில்லை.
அங்கு...
உண்மைகளின் யன்னல்கள் மூடப்பட்டே.

கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை.

விசாலங்களும் வீடும்
தேவையாயிருக்கிறது உனக்கு.
விடு சிந்தட்டும்
ஒரு துளி இரத்தம் மண்ணில்.
முட்டியில் இரத்தம் தோயும்
கையும் வலிக்கும்
என்றாலும்
முட்ட முட்ட
தட்டத் தட்ட தகரும்.

சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே.

பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!

"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"

ஹேமா(சுவிஸ்)