*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, October 21, 2010

இணைய விடுப்பு...


வணக்கம் வணக்கம் என் அன்பு நண்பர்களுக்கு நான் சுகம் சுகம்தானே எல்லோரும்.

வீடு திருத்தப்படுகிறது.இந்தவருடத்தில அடிக்கடி திடீர் விடுமுறை எடுத்துவிடுகிறேன் என்னையறியாமல்.என்ன செய்ய !

தற்சமயம் சிநேகிதியின் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன்.கணணியை என் வீட்டைப்போல அதிக நேரம் அவர்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ பயன்படுத்த முடியாமலிருக்கிறது.
மின்னஞ்சல்களை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொள்கிறேன் அலுவலகத்தில்.சிநேகிதி வீட்டில் 3 குழந்தைகள்.நான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.

இன்னும்.......ம் 10 - 15 நாள் ஆகும்போல இருக்கு சுதந்திரமாக இணையத்தோடு இணைய.கஸ்டமாகத்தான் இருக்கிறது.என்றாலும் வேலை வேலை.அதோடு வீடு ஒரே தூசும் துடைத்தலுமாக நிறையவே வேலை.அதுவரை...........

அன்போடு ஹேமா.

Saturday, October 09, 2010

இன்று...

மாமாவின் சாயலாம்
அத்தையின் நடையாம்
அப்பாவின் குணமாம்
அம்மாவின் றாங்கியாம்.

பள்ளித் தோழி ஒருத்திதான்.
தம்பிதான் உயிர்த்தோழன்.

காதலிக்காமலே
காதல் தோல்வி.
படிப்பில் மண்.

திருமணம்
புரியாத உறவு
இல்லாமலே போனது.

காலச்சுழற்சியில்
வறுமை நிரப்பிய பணம்.
சுற்றம் புறம்பேச
முதுகில் புண்.
நோவைப் புதைக்க
நீண்டதொரு பிரயாணம்.

ஒற்றை மயிர் வெளுப்பு
வயதை ரசிக்கும் கண்ணாடி
கண்ணிலும்தான்.

கிடைக்கவும் இல்லை
இழக்கவும் இல்லை
விரும்பிய ஒன்றுக்காக
இன்னொரு பிறவிக்கான
ஏக்கக் கண்ணீர்.

இருண்ட இரவுகளில் ஒன்று
புதிதாய் விடிகிறது இன்று!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 04, 2010

நிறங்கள்...

எல்லோராலும் முடிவதில்லை
^
எதிர்த்துப்பேச
^
பல் இளிக்க
^
பசப்ப
^
பயப்பட
^
ஒத்துப்போக
^
பொய்யாய் புகழ்பாட
^
புறம்கூற`
^
பச்சோந்தியாய் வாழ....

உண்மையாய் இருக்கிறேன்
அம்மணமாய் இருக்கிறேனாம்.

நீலத்தைப் பச்சையென்றும்
வெள்ளையை நீலமென்றும்
தலையாட்ட முடியவில்லை.

மாற்ற நினைத்தாலும்
நிரந்தரமாக்கப்பட்ட
மாறாத நிறங்கள்
சில மனங்களைப்போல.

நீலம் நீலம்தான்
அது எப்போதுமே.

நானும் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)