*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, February 21, 2009

தூரமாய் ஒரு குரல்...

நண்பனே,
ஆதாரமில்லாத
கொத்திக் குதறும்
கழுகுகள் நடுவில்
கதறும் உனக்கு
நான் என்னதான்
செய்யமுடியும்!

என் கண்களும்
என் கைகளும்
உன் திசை
கவனித்தபடியேதான்.

எனினும்
எங்கோ தொலைவில்
புதைந்து கொண்டிருக்கும்
பூமியில்
கந்தகப்புகை நடுவில்
நின்று நீ

கூக்குரலிடும்
உன் குரல்

காற்றில் அடிபட்டு
என் செவிப்பறையில்
அறைந்தபடி.

உன் குரலை நசுக்கி
அழுத்தும் விரல்களை
முறிக்க முடியா
எட்டாத்தூரத்தில்
அகதித் தொலைவாய் நான்.

மீட்டு இழுத்துவர முடியாமல்
காற்றுவழி
கண்ணீர் கயிறு கட்டி
உன்னை இழுக்க
மனது நினைத்தாலும்
மூளை மறுக்கிறது.

அகதித் தொலைவும்
அன்னிய தேசமும்
வேண்டாம் உனக்கு.

ஒரு உண்மை தெரியுமா
தோழனே உனக்கு.
நானும்
சுதந்திரப் பசியோடுதான் இங்கு.

ஒற்றைப்

பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!

ஹேமா(சுவிஸ்)

68 comments:

நட்புடன் ஜமால் said...

எவ்வளவு தூரம் ...

கடையம் ஆனந்த் said...

வேதனைகள் வார்த்தைகளாக. கவிதை துளிகளாக சிதறியிருக்கிறது. உணர்வுபூர்வமான கவிதை. இது கவிதையாக பார்க்க முடியாது. உணர்வாக தான் தெரிகிறது.

ஹேமா said...

வாங்கோ ஜமால்.தூரத்தின் அளவு தெரியவில்லை.இயலாமையின் குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஹேமா said...

ஆனந்த்,உண்மையில் உணர்வுதான்.

கடையம் ஆனந்த் said...

ஆறுதல் கூற முடியாத வரிகள் பல இடங்களில் நெஞ்சை அழுத்துகிறது.

நட்புடன் ஜமால் said...

\\ஹேமா said...

வாங்கோ ஜமால்.தூரத்தின் அளவு தெரியவில்லை.இயலாமையின் குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.\


கேட்டுவிடும் தூரம் தானே ...

கவலை வேண்டும்

விரைவில் வானம் வெளிக்கும் ...

நட்புடன் ஜமால் said...

\\ஒரு உண்மை தெரியுமா
தோழனே உனக்கு.
நானும்
சுதந்திரப் பசியோடுதான் இங்கு.

ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!\\

மிக அற்புதம் ஹேமா!

நிச்சயமாய் பருக்கை அல்ல விருந்தே கிடைக்கும் ...

நட்புடன் ஜமால் said...

\\அகதித் தொலைவும்
அன்னிய தேசமும்
வேண்டாம் உனக்கு.\\

நல்ல உணர்வு ஹேமா!

இது அதிகம் சிந்திக்க வேண்டிய விடயமாகத்தான் உள்ளது ...

tamil24.blogspot.com said...

எங்கள் எல்லோரினதும் குரலாக உங்கள்: உணர்வுகள்.
உணர்வின் அதிர்வுகள் அப்படியே வந்து கொட்டியிருக்கிறது கவிதையாக.

சாந்தி

புதியவன் said...

//கந்தகப்புகை நடுவில்
நின்று நீ
கூக்குரலிடும்
உன் குரல்
காற்றில் அடிபட்டு
என் செவிப்பறையில்
அறைந்தபடி.//

வேதனைகளை வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள்...ஆறுதல் சொல்ல மட்டும் தான் எங்களால் முடிகிறது...

புதியவன் said...

//ஒரு உண்மை தெரியுமா
தோழனே உனக்கு.
நானும்
சுதந்திரப் பசியோடுதான் இங்கு.

ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!//

என்ன சொல்வதென்று தெரியவில்லை...தூரமாய்
கேட்கும் குரல் விரைவில் மகிழ்ச்சியின் குரலாக ஒலிக்க வேண்டுகிறேன்...கவிதை முழுவதும் உள்ளத்தின் உணர்வுகள் ஹேமா...

Tamilish Team said...

Hi kuzhanthainila,
Congrats!
Your story titled 'தூரமாய் ஒரு குரல்... ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st February 2009 10:35:10 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/34826
Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

கமல் said...

எனினும்
எங்கோ தொலைவில்
புதைந்து கொண்டிருக்கும்
பூமியில்
கந்தகப்புகை நடுவில்
நின்று நீ
கூக்குரலிடும்
உன் குரல்
காற்றில் அடிபட்டு
என் செவிப்பறையில்
அறைந்தபடி.//

வார்த்தைகளில் வலிகள் தெரிகின்றன..

கமல் said...

இப்படி எத்தனை நாளைக்குச் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கழிப்பது??

கமல் said...

கடையம் ஆனந்த் said...
வேதனைகள் வார்த்தைகளாக. கவிதை துளிகளாக சிதறியிருக்கிறது. உணர்வுபூர்வமான கவிதை. இது கவிதையாக பார்க்க முடியாது. உணர்வாக தான் தெரிகிறது.//

அப்படிப் போடுங்கள் அரிவாளை??

கமல் said...

நட்புடன் ஜமால் said...
\\ஹேமா said...

வாங்கோ ஜமால்.தூரத்தின் அளவு தெரியவில்லை.இயலாமையின் குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.\


கேட்டுவிடும் தூரம் தானே ...

கவலை வேண்டும்

விரைவில் வானம் வெளிக்கும் ...//

அதான் எப்பவுங்க??

கமல் said...

தமிழன் கண்ணீர் விடவும், உலக நாடுகளிடம் தங்களை அங்கீகரி என்று கையேந்திப் பிச்சை கேட்பதிலும் தன் காலத்தைக் கடத்துகிறான்? ஒருவரும் எங்கள் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாய்த் தெரியவில்லை??

ஹேமா கவிதை நிழலினூடு நிஜங்களைத் தரிசிக்கிறது. களம், புலம் எனும் இரு தளத்தின் மனக் குமுறலாய்த் தொனிக்கிறது. தொடருங்கள்!

ஆதவா said...

முதலில் நான் வாழ்த்து சொல்ல விரும்பவில்லை.. ஏனெனில் இது வாழ்த்து சொல்லும் தருணமல்ல. கவிதைகள் வலிகளைச் சொல்கின்றன... நன்றாக இருக்கிறது என்று வெறுமே எழுதிவிட்டு போய்விடமுடியவில்லை!உண்மையிலேயே எனக்கு எழுதுகிற வரையிலும் ஈழமக்களின் வலி உணரவில்லை சகோதரி... ஆனால் என்று எழுத ஆரம்பித்தேனோ, உங்களைப் போன்றவர்களின் கவிதை படிக்க ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்தே அடுத்தவர் வலி என்றால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

சுதந்திர பசியோடு வேறு நாட்டில் திரியும் முரண் ஈழ சகோதர சகோதரிகளை விடுத்து வேற எவருக்கும் இருக்க வாய்ப்பில்லை

ஆதவா said...

ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!


ஜமால் அண்ணன் சொல்கிற மாதிரி பருக்கைகள் அல்ல,  விருந்தே கிடைக்கும்.. அந்த நாளுக்காகத்தான் எல்லோருமே காத்திருக்கிறோம்..

ஆதவா said...

மீட்டு இழுத்துவர முடியாமல்
காற்றுவழி
கண்ணீர் கயிறு கட்டி
உன்னை இழுக்க
மனது நினைத்தாலும்
மூளை மறுக்கிறது.

என்னதான் வலிகளைக் கட்டி எழுதியிருந்தாலும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை,. எழுத்தாளன் புத்தி அது!

நட்புடன் ஜமால் said...

\\ஆதவா said...

ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!

ஜமால் அண்ணன் சொல்கிற மாதிரி பருக்கைகள் அல்ல, விருந்தே கிடைக்கும்.. அந்த நாளுக்காகத்தான் எல்லோருமே காத்திருக்கிறோம்..\\

சர்வ நிச்சயமாய்

நட்புடன் ஜமால் said...

\\கமல் said...

நட்புடன் ஜமால் said...
\\ஹேமா said...

வாங்கோ ஜமால்.தூரத்தின் அளவு தெரியவில்லை.இயலாமையின் குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.\


கேட்டுவிடும் தூரம் தானே ...

கவலை வேண்டும்

விரைவில் வானம் வெளிக்கும் ...//

அதான் எப்பவுங்க??\\

நம்பிக்கையுடனும் எதிர்ப்பார்ப்புடனனும் நாங்களும்

Muniappan Pakkangal said...

When will be the Dawn?

நட்புடன் ஜமால் said...

\\Muniappan Pakkangal said...

When will be the Dawn?\\

still with expectations

கவின் said...

உணர்வுகளை கவிதையாக்கி இருக்கிறீர்கள்.. யதார்தமான வரிகள். விரைவில் வானம் வெளிக்கும்

கவின் said...

\\ஒரு உண்மை தெரியுமா
தோழனே உனக்கு.
நானும்
சுதந்திரப் பசியோடுதான் இங்கு.

ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!\\
புலம் பெயர்ந்தவர்களின்.. ஏக்கம்

ஹேமா said...

//நட்புடன் ஜமால் said...
\\அகதித் தொலைவும்
அன்னிய தேசமும்
வேண்டாம் உனக்கு.\\

இது அதிகம் சிந்திக்க வேண்டிய விடயமாகத்தான் உள்ளது ...//

சிந்திக்கவே தேவையில்லாத விஷயம் ஜமால்.அத்தனை விரக்தி.

ஹேமா said...

//எங்கள் எல்லோரினதும் குரலாக உங்கள்: உணர்வுகள்.
உணர்வின் அதிர்வுகள் அப்படியே வந்து கொட்டியிருக்கிறது கவிதையாக.

சாந்தி//

சாந்தி நாங்கள் எல்லோருமே படும் வேதனை ஒன்றுதானே.
விதிவிலக்காகச் சிலபேர் மட்டும்."நாம் யார்.எங்கு இருந்தோம்.எப்படி வாழ்ந்தோம்.எது எங்களுடையது என்கிற நினைவே இல்லாமல் தாம் தூம் என்று வாழ்கிறார்கள் இங்கு.

ஹேமா said...

//வேதனைகளை வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள்...ஆறுதல் சொல்ல மட்டும் தான் எங்களால் முடிகிறது...//

புதியவன்,வலி உணர்ந்து ஆறுதலாவது கிடைக்கிறதே என்கிற சந்தோஷமே மனதுக்கு ஆறுதல்.

//தூரமாய் கேட்கும் குரல்
விரைவில் மகிழ்ச்சியின் குரலாக ஒலிக்க வேண்டுகிறேன்//

உண்மையாகவா....
மனம் மரத்துவிட்டது!

ஹேமா said...

//கமல் said...
தமிழன் கண்ணீர் விடவும், உலக நாடுகளிடம் தங்களை அங்கீகரி என்று கையேந்திப் பிச்சை கேட்பதிலும் தன் காலத்தைக் கடத்துகிறான்? ஒருவரும் எங்கள் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாய்த் தெரியவில்லை??

ஹேமா கவிதை நிழலினூடு நிஜங்களைத் தரிசிக்கிறது. களம், புலம் எனும் இரு தளத்தின் மனக் குமுறலாய்த் தொனிக்கிறது. தொடருங்கள்!//

//கமல் said...
இப்படி எத்தனை நாளைக்குச் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கழிப்பது??//

கமல்,நீங்களே கேள்வியும் நீங்களே பதிலும் மாதிரி.நீங்களே சொல்லிட்டீங்களே.

ஹேமா said...

//aathavaa said...சுதந்திர பசியோடு வேறு நாட்டில் திரியும் முரண் ஈழ சகோதர சகோதரிகளை விடுத்து வேற எவருக்கும் இருக்க வாய்ப்பில்லை.//

நானும் இங்கு சுவிஸில் 120 நாட்டவர்களோடு வாழ்கிறேன்.
யாருமே பெரிதாக எங்களைப்போல அரட்டிக்கொண்டிருப்பவர்களாக இல்லை.ஐரோப்பிய மக்களோடு ஒன்றியும் விடுகிறார்கள்.எங்களால் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் ஒன்ற முடிவதும் இல்லை.

ஹேமா said...

//ஆதவா said...
ஜமால் அண்ணன் சொல்கிற மாதிரி பருக்கைகள் அல்ல, விருந்தே கிடைக்கும்.. அந்த நாளுக்காகத்தான் எல்லோருமே காத்திருக்கிறோம்..//

அப்படி ஒரு நாளுக்காகவும்,அன்று உங்களுக்கு நாங்கள் விருந்து வைக்கவும் காத்திருக்கிறோம்.
விடுவார்களா....!

நிறைந்த கருத்துக்கு நன்றி ஆதவா.

ஹேமா said...

நன்றி முனியப்பன்.நீங்களும் எங்களைப்போலவே பதிலற்ற கேள்வியோடும்-ஆதங்கத்தோடும்.

ஹேமா said...

//கவின் said...
உணர்வுகளை கவிதையாக்கி இருக்கிறீர்கள்.. யதார்தமான வரிகள். விரைவில் வானம் வெளிக்கும்.//

கவின் நிச்சயம் வானம் வெளித்தே தீரவேணும்.இல்லையென்றால் இயற்கைக்கு மாறானது என்றாகிவிடும்.ஆனால்.எப்போ....?

நட்புடன் ஜமால் said...

\\நானும் இங்கு சுவிஸில் 120 நாட்டவர்களோடு வாழ்கிறேன்.
யாருமே பெரிதாக எங்களைப்போல அரட்டிக்கொண்டிருப்பவர்களாக இல்லை.ஐரோப்பிய மக்களோடு ஒன்றியும் விடுகிறார்கள்.எங்களால் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் ஒன்ற முடிவதும் இல்லை.\\

தாய் நாட்டின்மீதும்

தாய் மொழியின்மீதும்

உங்களுக்கு உள்ள காதலை வெளிப்படுத்துகின்றன இவ்வரிகள்.

நசரேயன் said...

தூரம் அதிகம் இல்லைன்னு நம்புவதை தவிர வேற வழி இல்லை

ஹேமா said...

ஜமால்,பெற்ற தாயையும்,பிறந்த நாட்டையும்,தாய் மொழியையும் மறப்பவன் அல்லது மாற்றுபவன் மிருகங்களை விடக் கேவலமானவன்.இது என் கருத்து.

ஹேமா said...

நசரேயன் சில நம்பிக்கைகளுக்குச் சக்தி உண்டாம்.
நம்புவோம்...நம்புவோம்...நம்புவோம்.

thevanmayam said...

ஒரு உண்மை தெரியுமா
தோழனே உனக்கு.
நானும்
சுதந்திரப் பசியோடுதான் இங்கு//

உண்மையா?

thevanmayam said...

ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!

புரியவில்லை!

thevanmayam said...

மீட்டு இழுத்துவர முடியாமல்
காற்றுவழி
கண்ணீர் கயிறு கட்டி
உன்னை இழுக்க
மனது நினைத்தாலும்
மூளை மறுக்கிறது.///

இது பின்னீட்டிங்க!

அத்திரி said...

//ஒரு உண்மை தெரியுமா
தோழனே உனக்கு.
நானும்
சுதந்திரப் பசியோடுதான் இங்கு.//


மனதின் வலியை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்

அபுஅஃப்ஸர் said...

வலிகள் தெரிக்கிறது உஙகள் வரிகளில்

அபுஅஃப்ஸர் said...

//நண்பனே,
ஆதாரமில்லாத
கொத்திக் குதறும்
கழுகுகள் நடுவில்
கதறும் உனக்கு
நான் என்னதான்
செய்யமுடியும்!
/

ஒன்னுமே செய்யமுடியாது, பிரார்த்திப்பதை தவிர‌

அபுஅஃப்ஸர் said...

//உன் குரலை நசுக்கி
அழுத்தும் விரல்களை
முறிக்க முடியா
எட்டாத்தூரத்தில்
அகதித் தொலைவாய் நான்.//

அதே தொலைவில்தான் நாங்களும்

அபுஅஃப்ஸர் said...

//ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!/

சொந்தநாடு, வீடு, நிலம், உறவு திறந்த எல்லோரும் ஏதோ ஒருவகையில் அகதியே

ஊர் சுற்றி said...

இடுகையை படிக்கும் போது தோன்றிய எண்ணங்களை விட, பின்னூட்டங்களை படிக்கும் போது அதிக ஆழம் நிறைந்த உணர்வுகள் தோன்றுகின்றன.

VASAVAN said...

ஹேமா, பதிவு போல் உங்கள் உணர்வுகளின் உண்மை வெளிப்படுத்தல். அருமை.

//ஊர் சுற்றி said...

இடுகையை படிக்கும் போது தோன்றிய எண்ணங்களை விட, பின்னூட்டங்களை படிக்கும் போது அதிக ஆழம் நிறைந்த உணர்வுகள் தோன்றுகின்றன.//

இதுவே உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. வேறென்ன வேண்டும்.
வாழ்த்துக்கள்.

கிருஷ்ணா said...

இதே நிலைதான் எங்களுக்கும்!
வேதனையே வாழ்க்கையாக நம் உடன் பிறப்புக்கள் அங்கே... இயலாமையில் செய்வதறியாது தவிக்கும் எத்தனையோ கோடி உள்ளங்கள் இங்கே! இறைவா.. இயலாமை என்பது உனக்குக் கூடவா??

MayVee said...

"நண்பனே,
ஆதாரமில்லாத
கொத்திக் குதறும்
கழுகுகள் நடுவில்
கதறும் உனக்கு
நான் என்னதான்
செய்யமுடியும்!"

செய்திட ஒன்றும்
இல்லையே தோழா....
முயற்சிதிட
எதோ
இருகிறதே.....

MayVee said...

"என் கண்களும்
என் கைகளும்
உன் திசை
கவனித்தபடியேதான்."

உண்மை
உமையான பின் ....
எதோ சொல்ல
நினைகிறதே உண்மை
உமையாய்.......

MayVee said...

"எனினும்
எங்கோ தொலைவில்
புதைந்து கொண்டிருக்கும்
பூமியில்
கந்தகப்புகை நடுவில்
நின்று நீ
கூக்குரலிடும்
உன் குரல்
காற்றில் அடிபட்டு
என் செவிப்பறையில்
அறைந்தபடி."

அறைத்தபடி
இருக்கிறது உன் ஓலம்
செவிடு செவிகள்
இவை என்று
தெரியாமல்....

MayVee said...

"உன் குரலை நசுக்கி
அழுத்தும் விரல்களை
முறிக்க முடியா
எட்டாத்தூரத்தில்
அகதித் தொலைவாய் நான்."நான்
அகதியான பின்
அகதியாய்
வருகிறதே உன்
வார்த்தைகள் ......

MayVee said...

"மீட்டு இழுத்துவர முடியாமல்
காற்றுவழி
கண்ணீர் கயிறு கட்டி
உன்னை இழுக்க
மனது நினைத்தாலும்
மூளை மறுக்கிறது."


அங்கே தான்
போர் என்றால்
இங்கையும்
அதே .....
மனதிற்கு
மூளை க்கும்
திவிரவாதம்

MayVee said...

"அகதித் தொலைவும்
அன்னிய தேசமும்
வேண்டாம் உனக்கு."


வேண்டாம்
உன்னக்கு
அதே
வாழ்வு இங்கேயும்.....

MayVee said...

"ஒரு உண்மை தெரியுமா
தோழனே உனக்கு.
நானும்
சுதந்திரப் பசியோடுதான் இங்கு."என்று தணியும்
இந்த பசி ....
உணவு அருகே
இருந்தும்
பசியோடு நான் .....

MayVee said...

"ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!"


இறைவன்
ஒருவன் இருந்தால்
அருளட்டும் நாமக்கு .....
இருக்கிறானா அவன் ......

MayVee said...

nalla kavithai...
ennathu thoughts yai yum
written in kavithai form above...

ஈழவன் said...

கவிதை காத்திரமாகவுள்ளது, பாராட்டுக்கள் ஹேமா.

ஹேமா said...

நன்றி தேவா.நிறைய வேலைகள் நடுவிலும் ஓடிவந்து கருத்துக்கள் த‌ந்தமைக்கு.

//thevanmayam said...
ஒற்றைப்
பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!

புரியவில்லை//

வரிகள் விளங்கவில்லையா...இல்லை எங்கள் நிலைமையே விளங்கவில்லையா!

ஹேமா said...

அத்திரி உங்கள் முதல் வருகைக்கு நன்றி.ஊக்கம் த‌ரும் கருத்துக்கும் நன்றி.சந்திக்கலாம்.

ஹேமா said...

//சொந்தநாடு, வீடு, நிலம், உறவு திறந்த எல்லோரும் ஏதோ ஒருவகையில் அகதியே//

அபுஅஃப்ஸர்,எங்கள் வலியோடு உங்கள் வலிகளையும் சேர்த்துப் பார்க்கிறீர்கள்.உண்மைதான்.

ஹேமா said...

//ஊர் சுற்றி said...
இடுகையை படிக்கும் போது தோன்றிய எண்ணங்களை விட, பின்னூட்டங்களை படிக்கும் போது அதிக ஆழம் நிறைந்த உணர்வுகள் தோன்றுகின்றன.//

வணக்கம் ஊர்சுற்றி.முத‌ல் வருகைக்கும் கருத்துக்கும் நிறைவான நன்றி.உங்கள் பின்னூட்டம் இன்னும் ஊக்கம் தருகிறதாய் இருக்கிறது.
மிக்க‌ நன்றி.

ஹேமா said...

வாங்க வாசவன்.வாழ்த்துக்கு நன்றி.உண்மையில் ஊர்சுற்றியில் கருத்து மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது.

ஹேமா said...

//கிருஷ்ணா said...
இதே நிலைதான் எங்களுக்கும்!
வேதனையே வாழ்க்கையாக நம் உடன் பிறப்புக்கள் அங்கே... இயலாமையில் செய்வதறியாது தவிக்கும் எத்தனையோ கோடி உள்ளங்கள் இங்கே! இறைவா.. இயலாமை என்பது உனக்குக் கூடவா??//

கிருஷ்ணா,உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நீங்கள் சொன்ன உண்மையை நான் மலேசியா போன சமயத்தில் நேரிலேயே கண்டேன்.
எங்களைப் போலவே அங்குள்ள த‌மிழ‌ர்களும் வேதனையோடுதான் வாழ்கிறார்கள்.

ஹேமா said...

//அங்கே தான்
போர் என்றால்
இங்கையும்
அதே .....
மனதிற்கு
மூளை க்கும்
திவிரவாதம்//

மேவி,உங்கள் பின்னூட்டத்தை வைத்தே ஒரு கவிதை எழுதிவிடலாம்.நன்றி.எங்கள் உணர்வை உங்களுக்குள் இருத்தித் தந்த பின்னூட்டங்கள்.

ஹேமா said...

ஈழவன் பலநாட்க‌ளுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் மனநிறைவைத் தருகிறது.நன்றி.

ஊர் சுற்றி said...

பாருஙகள். நான் பாட்டுக்கு ஒரு பின்னூட்டம் இட்டுவிட்டு சென்றுவிட்டேன். என் பின்னூட்டத்திற்கு உங்கள் பதி்லை இன்றுதான் வாசிக்கிறேன்.

Post a Comment