*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, August 03, 2008

கண்டால் பிடியுங்கோ...

இங்கையொரு வெங்காயம்
யாழ்ப்பாணம் போய் வந்தது...
சொன்னதை சின்னக் கவிதைக்
கதையாய் மனம் வலிக்க.
என்னடா...எங்கட கோண்டாவில்
(யாழ்ப்பாணம்)எப்பிடி இருக்கு.
சனங்கள் எல்லாம் என்ன செய்யினம்.
நீ போகேக்க ஊரடங்குச் சட்டமோ.
ஆமிக்காரன்கள்...
எங்கட கோயில் சந்தியிலயுமோ!
எங்கட பள்ளிக்கூடம்
இப்ப ஆமிச் சென்றியாமே!
நிரு டியூசன் டியூட்டறி இருந்த வீட்லதான்
அவங்கட சமையலாம்!
தொடங்கினான்...

ம்ம்ம்...பரவாயில்ல
எங்கட சனங்கள் அதுகளுக்கென்ன.
நல்லாத்தான் இருக்குதுகள்.
வெளிநாட்டுக் காசில சுதியா...சோக்கா.
சுதியென்டா...சோக்கென்டா...அப்பிடியென்டா...?
உடுப்பென்ன நடப்பபென்ன
நாங்கள்தான் இஞ்ச குளிருக்க
கோழிபோல குறுகித் திரியிறம்.
அவையள் அங்க தடல்புடல் கல்யாணம்
கோயில் திருவிழாக்கள்.
வீட்டுக்கு வீடு ஹோம்சினிமா
இன்ரனெட் எண்டு மூச்சுவிடாமல்
நக்கலாய்ச் சொன்னான்.

சோதனைச் சாவடியும்
பாஸ் பாக்கிறதும் சும்மா கண் துடைப்பு.
அங்க ஆமிக்காரங்களும்
எங்கட பெடியளும் நல்ல ஒட்டு.
வீடுகளில எங்கட பெண்டுகள்
யாழ்ப்பாணச் சாப்பாடு எண்டு
சமைச்சுமெல்லோ குடுக்கினம்.
இதில வேற இளநீரும் குடிக்க.
அங்க ஒரே ஜாலிதான் என்று...
தேனீயாய்த் துளைத்து
நெஞ்சை நோண்டி நுரையீரல் பிய்த்தான்.
அப்பிடியெண்டா யாழில் சுதந்திரம்தான்
ஆமிக்காரன்ர அட்டகாசம் இல்ல.
நாங்களும் அங்க போயிடலாம் என்ன...
போதும்தானே எங்களுக்கு
இந்த சுதந்திரமும் சந்தோஷமும்.
கடுப்பு எனக்கு.
சோத்து முண்டம்..எருமை மாடு
எங்கே விளங்கப் போகுது சுதந்திரம்.
வெளிநாட்டில் பிராங்கில் உழைச்சு
கசினோ பார்ல விட்டு
பாத்ரூம்ல படுக்கிற சென்மத்துக்கு
தாய் மண்ணும்...உறவும்
ஊரும் ...சுதந்திரக் காத்தும்.
விடுதலை என்றால்
பாட்டும் படமும்
ஹோம் சினிமாவும் கொம்யூட்டரும்
எண்டு நினைக்குது இது.

செம்மணிச் சுடலைக்குள்
இன்னும் இருக்காம் எலும்புக்கூடுகள்.
அங்க உறவுகளைத் தேடினபடி
இன்னும் எங்கட சொந்தங்கள்.
எத்தனை கிருஷாந்திக்கள்
எத்தனை சாரதாம்பாக்கள்.
பிராணணோடு புதைக்கப்பட்ட புதை குழிகள்.
"அ"எழுதின முற்றத்திலும்
பின் கொல்லையிலும்
கிணற்றடியிலயும்
வயல் வெளிகளிலும்
புகையிலைத் தோட்டத்திலயும்
ஒரு தமிழனின் எலும்புக்கூடு
எந்த நேரத்திலும் கண்டு பிடிக்கலாம்
என்கிற அவல நிலை.
மனம் அழுத்த உயிரை உலைக்குள்
கொதிக்க விட்டுத் தவிக்கும்
என் பூமியில் சிரிக்க வழியுண்டா.
எங்கள் பாரம்பரிய
பழக்க வழக்கங்களையே மாற்றி
சமூகச் சிதைப்பையே செய்து கொண்டிருக்கும்
காமுகக் கரடிகள் கூடாரங்களோடு
கை கோர்த்து வரவேற்பாம்.
இன அழிப்புஇசமூகச் சிதைவு
கல்விப் பறிப்பு,ஊட்டச்சத்து மறுப்பு.

இலங்கையின் வரைபடத்தில்
வடக்கு நோக்கிய திசையில்
இப்போ சுடுகாடு.
எங்கள் யாழ் கற்பகக்தையே
மாற்றியமைத்த கைங்கரியச்
சீமான்களோடு சமாதானமாம்.
மனைவியோடு பாய் விரிக்கவும்
மாந்தோப்பில் காதல் செய்யவும்
குழந்தைகளோடு கொஞ்சவும்
வேளையையும் விதியையும்
குறிக்கிறது சிங்கள அரசாங்கம்.
எங்கள் கையில் ஏதுமற்று வெறுமையாய்.

அபத்தம்...அவலம்...ஆக்கினை
இவ்வளவு நடப்புக்கும் புகார் கொடுத்தால்
அவர்கள் காலடியிலேயே மண்டியிட்டு
விசாரணை என்னும் பெயரில்
போலி நாடகங்கள்.
பிச்சை எடுக்கிறோம்
எங்கள் அழகிய எங்கள் தீவுக்குள்ளேயே.
ஒரு நாளைக்கு எத்தனை தடவை
உன்னை நீதான் என்று உறுதிப்படுத்த
பாஸ் என்கிற அறிமுக அட்டையைக் காட்டுகிறாய்.
இன்னொரு அன்னிய தேசத்தில் கூட
என்றோ ஒரு நாள்தான் அறிமுக அட்டை
தேவையாய் இருக்கிறது எங்களுக்கு..

எத்தனை சுதந்திரங்கள் இழந்து தவிக்கிறோம்.
கல்வி தொடக்கம் கலவி வரை.
வயிறு பசிக்க சோற்றை விழுங்கி
பயம் போக்கப் படம் பார்த்து
விதியை மாற்றக்
கெஞ்சிக் கேட்க கோவில் போய்
காலம் கழித்து விட்டால்
சுதந்திரம் கிடைத்ததாய்
சுகமாய் வாழ்வதாய் அர்த்தமா?

இரத்தம் கொதிக்க கண்டபடி திட்டிக் கொண்டு
திரும்பிப் பார்த்தேன்.
புழுதி கிளப்ப பென்ஸ் ல்
பறக்கிறான் பன்னாடைப் பயல்.
கண்டால் சொல்லுங்கோ...
கஞ்சி காய்ச்சி
தோய்ச்சுக் காயவிட....அவனை!!!

ஹேமா(சுவிஸ்)

29 comments:

தீலிபன் said...

வலிகள் புரிகிறது ஆவேசம் எதற்கு, அன்புடன் சொல்லுங்கள் கண்டிப்பாக புரியும்.

உருப்புடாதது said...

நெஞ்சைத் தொடும் பதிவு. வாழ்த்துக்கள்


///ீலிபன் said...

வலிகள் புரிகிறது ஆவேசம் எதற்கு, அன்புடன் சொல்லுங்கள் கண்டிப்பாக புரியும்.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

junaid said...

5 Aug 08, 09:30
சிங்களத் தமிழ் கவிதை மிக்க அருமை ஹேமா.

தமிழ்ப்பறவை said...

//விடுதலை என்றால்
பாட்டும் படமும்
ஹோம் சினிமாவும் கொம்யூட்டரும்
எண்டு நினைக்குது இது.
//
ஒரு சமயத்தில் நானும் நினைத்தவன் தான்..
நிறையப் பேர் இன்னமும் அப்படித்தான் நினைக்கிறார்கள்..
//எங்கள் அழகிய எங்கள் தீவுக்குள்ளேயே.
ஒரு நாளைக்கு எத்தனை தடவை
உன்னை நீதான் என்று உறுதிப்படுத்த
பாஸ் என்கிற அறிமுக அட்டையைக் காட்டுகிறாய்.
இன்னொரு அன்னிய தேசத்தில் கூட
என்றோ ஒரு நாள்தான் அறிமுக அட்டை
தேவையாய் இருக்கிறது எங்களுக்கு//

நெத்திய‌டி....

//அ"எழுதின முற்றத்திலும்
பின் கொல்லையிலும்
கிணற்றடியிலயும்
வயல் வெளிகளிலும்
புகையிலைத் தோட்டத்திலயும்
ஒரு தமிழனின் எலும்புக்கூடு
எந்த நேரத்திலும் கண்டு பிடிக்கலாம்
என்கிற அவல நிலை//
//எத்தனை சுதந்திரங்கள் இழந்து தவிக்கிறோம்.
கல்வி தொடக்கம் கலவி வரை.
வயிறு பசிக்க சோற்றை விழுங்கி
பயம் போக்கப் படம் பார்த்து
விதியை மாற்றக்
கெஞ்சிக் கேட்க கோவில் போய்
காலம் கழித்து விட்டால்
சுதந்திரம் கிடைத்ததாய்
சுகமாய் வாழ்வதாய் அர்த்தமா?//
வ‌ரிக‌ளிலேயே வாழ்க்கை...கேள்விக்குறிக‌ளே இன்னும் விடைக‌ளாய்...
//புழுதி கிளப்ப பென்ஸ் ல்
பறக்கிறான் பன்னாடைப் பயல்//
அதீத‌க் கோப‌ம் ச‌கோத‌ரி...

Anonymous said...

இன அழிப்பு,சமூகச் சிதைவு
கல்விப் பறிப்பு,ஊட்டச்சத்து மறுப்பு.

இலங்கையின் வரைபடத்தில்
வடக்கு நோக்கிய திசையில்
இப்போ சுடுகாடு.(Jaffna)

Hema,manathai sudderikkom varikal.
porumaiyin ellaiyil ilangkaith thamizharkal.poruththiruppom. Ram.

ஹேமா said...

வாங்க திலீபன்.எத்தனை வருடப் போராட்டம்.எத்தனை இழப்புக்கள்.இவ்வளவுக்குப் பிறகும் எங்கள் நாட்டில் பிறந்து அகதியாய் வாழும் ஒருவனுக்கே எங்கள் சுதந்திரமும் சுகமும் புரியவில்லை என்றால்...இதில் என்ன அன்பு வேண்டிக் கிடக்கிறது போங்கள்.இதில் வேறு தமிழ நாட்டுத் தமிழர்கள் எங்கள் வேதனையைப் புரிந்து கொள்ளவில்லை என்கிறோம்.எப்படி?

ஹேமா said...

நன்றி உருப்படாதது.சில சென்மங்களுக்கு எப்படி ரிப்பீட்ட்ட்ட்ட்....
பண்ணினாலும் புரியாது.பார்க்கலாம் இப்படியானவர்களின் எதிகாலத்தை!

ஹேமா said...

வாங்க யுஜுனைத்.எங்க ரொம்ப நாளா காணோம்.ஊருக்கு விடுமுறைக்குப் போய்டீங்களோன்னு நினைச்சேன்.உங்க கருத்துக்களுக்கு நன்றி.

ஜுனைத்,அது சிங்களத் தமிழ் இல்லை.எங்கள்"யாழ்ப்பாணத் தமிழ்".யாழ் தமிழர்களின் வழக்குத் தமிழ்.தமிழ் நாட்டுத் தமிழர்கள் பலர்"சிங்களத் தமிழ்"என்று சொல்லக் கேட்டு நிறையத் தடவைகள் வேதனைப் பட்டிருக்கிறேன்.ஆஹா FM இலும் கூட ஒரு நாள் சிங்களத் தமிழ் என்றுதான் சொல்கிறார்கள்.ஏன் இப்படி வழக்கப் படுத்திக் கொண்டீர்கள் என்று புரியவில்லை.
ஒரு தடவை தமிழன்(காதல் கறுப்பி)அவர்களுடைய ஒரு பதிவிலும் கூட இது பற்றிக் கண்டித்திருந்தேன்.இனி உங்களுக்குப் புரிந்திருக்கும்.
தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள் தயவு செய்து.

ஹேமா said...

வாங்க தமிழ்ப்பறவை அண்ணா.
நிறைந்த கருத்துக்கு நன்றி.
கவிதையை நன்றாக உள்வாங்கியிருக்கிறிங்க.நன்றி.

இவ்வளவு அழிந்து கெட்டு நிற்கிறோம்.இதன் பிறகும் சோத்தைத் தின்று தூங்கும் சென்மங்களிடம் கோவம் வராமல் எப்படி?ஊரில் பிரச்சனை.எங்களை அடிக்கிறார்கள் உதைக்கிறார்கள் எங்களுக்கு இருப்பிடம் இல்லை.என்று சொல்லி இங்கு அகதித் தஞ்சம் கேட்டு இருப்பிட உரிமை கிடைத்த பிறகு என்னென்னவெல்லாம் கதைக்கிறார்கள் தெரியுமா?அப்போ இவர்களிடம் அன்பாய் எப்படிச் சொல்ல முடியும்.நேரில்
தன்மையாகச் சொல்வேன்.எட்டித் தலையில் கொட்ட முடியாது.மனதின் வலிகளில்தான் கொட்டித் தீர்க்க முடியும்.

ஹேமா said...

வாங்க வணக்கம் Ram.கருத்துக்குச் சந்தோஷம்.காத்திருப்போம் பொறுத்திருப்போம்.ஒரு நாள் விடியும் எங்களுக்காய்.

மது said...

5 Aug 08, 19:41
Hi Hema..Nalamaga Irukeengala? Unga Latest kavidhai
"yaazhpanathai.." padikaiyil Yaazhuku sendru vanthathathu pol ulladhu...
Really ...( No Words tto say) Madhu

ஹேமா said...

மது நான் எப்பவும் நல்ல சுகம்.நீங்களும் தானே!
மது சந்தோஷமாயிருக்கு.அடிக்கடி எனக்கு வந்து ஊக்கம் தரும் ஒரு ரசிகை நீங்க.எல்லோருமாக ஒரு நாள் யாழ்ப்பாணம் போவோம்.
நிச்சயமாக.ஆயத்தமாயிருங்க.

Anonymous said...

"அ"எழுதின முற்றத்திலும்
பின் கொல்லையிலும்
கிணற்றடியிலயும்
வயல் வெளிகளிலும்
புகையிலைத் தோட்டத்திலயும்
ஒரு தமிழனின் எலும்புக்கூடு
எந்த நேரத்திலும் கண்டு பிடிக்கலாம்
என்கிற அவல நிலை


இந்த வரிகள் மனதில் வலியை தூண்டுகின்றன.ஏடு தொடக்கி அரிசியில் அ எழுதி பழகிய பின்னர் பக்கத்து வீட்டு தோழர்களுடன் வேப்பமர கீழ் புழுதியிலும்,தேக்குமர ,நாவல் மர கீழ் புழுதியிலும் அல்லது மதில் கட்டுவதற்காகவோ வீடு கட்டிவதற்காகவோ குவிக்கப்பட்ட மணலில் அ எழுதி சந்தோசப்பட்டதும்,வீடுகட்டுவத்ற்காக சீமெந்து குழைத்து அரிந்து வைத்த கல்லில் அ எழுதியதும் உங்கள் கவிதையை படித்ததும் நினைவுக்குள் சுழன்றன.அதே அ எழுதிய புழுதியில் இன்று நடக்கும் கொடூரம் உங்கள் கவிதையில் கனக்கிறது.காலத்தின் கட்டாய பதிவு இது.சரிவர உணர்வுகளை கவிதையாக வடித்துள்ளீர்கள்.

ஒரு சிறிய திருத்தம் செம்மணியில் எனது இரண்டு நண்பர்கள் புதைக்கப்பட்டார்கள்.ஒருவர் செந்தா மற்றவர் யாழ் பல்லலைக் கழக மாணவன் குகன்,நான் அறிந்த மட்டும் குகனின் வயதான தாயார் யாழ் பெருமாள் கோவிலில் எனது மகன் வருவான் என்ற நம்பிக்கையோடு 2000 ஆண்டுவரை கற்பூரம் கொழுத்துவா.அந்த நினைவுகள் மீண்டும் மனத்திரையில்வந்துவிட்டன,

இலங்கை இராணுவம் அவர்களை புதைத்தது செம்மணி சுடலையில் அல்ல செம்மணி வெளியில்.இலங்கை அரசை சர்வதேச நீதி மன்றில் நிறுத்த எமக்கு கிடைத துன்பியல் வரலாறு அது ஆனால் தவறவிட்டுவிட்டோம்.இனி வரும் காலங்க்களில் கறுப்பு ஆடி போல போல செம்ம்மணிபடு கொலையையும் நினைவு கொள்வோம்.ம்

மனிதம் வளரட்டும்.அன்புடன்
சுதன்.

முதலாளித்துவம் ஒழிக்கப்படு சர்வதேச பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் தேசியம் வெற்றிபெறட்டும்.வந்தாறுமுலை படுகொலை, நவாலி தேவாலைய படுகொலை என்பவற்றையும் நினைவு கொள்வோம்.

ஹேமா said...

வணக்கம் சுதன் வாங்...க.
நிறைந்த கருத்துக்கு நன்றி.

"அ"எழுதிய மண் அங்கு அனாதை.
இங்கு நாம் அனாதைகள்.யாரின் மனப்பாரங்களை யாரிடம் குறைக்க என்கிற நிலைமைதான்
எம் தமிழருக்கு.எல்லோருமே
வெதும்பும் உள்ளங்களோடு.

ஓ...செம்மணி வெளி என்றா எழுதவேணும்.இனித் திருத்துக் கொள்கிறேன்.

மனிதம் வளரட்டும் என்கிறீர்கள்.
மனிதம் வளர... முதலில் மனிதன் வளர வேண்டுமே!!!!

நிலா முகிலன் said...

மன்னிக்கவும்...தவறுதலாக சிங்கள தமிழ் என பதிந்து விட்டேன்.. யாழ் தமிழ் என்னும் சொல்லே அழகாக இருக்கிறது

நிலா முகிலன் said...

நிலா முகிலன்
வித்தியாசமான சிந்தனை..தங்கள் தாய்மொழியாம் சிங்களத்தமிழில் அற்புதமான பதிவு..

August 7, 2008 8:37 PM

ஹேமா said...

முகிலன் முதன் முதலா வந்திருக்கிங்க.வாங்க.
வணக்கம்.கருத்துக்களுக்கு
நிறைந்த நன்றி.இனி அடிக்கடி வருவேன் உங்கள் பக்கத்திற்கு.

முகிலன் மன்னிப்பு எதுவும் வேண்டாம்.யாழ்ப்பாணத் தமிழ் என்பது அழகு என்றில்லை.அதுதான் எங்கள் வழக்கத் தமிழ்.ஏனோ தெரியவில்லை தமிழ்நாட்டில் சிங்களத் தமிழ் என்று வழக்கப் படுத்திக் கொண்டீர்கள்.நன்றி.
இனித் திருத்திக் கொள்ளலாம் தானே!

நிலா முகிலன் said...

நன்றி ஹேமா.. நான் அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழன் என்றாலும் தமிழும் தமிழர்களும் உலகில் எங்கு வாழ்ந்தாலும் சகோதரர்களே..உங்களின் வலி வேதனைகளை நான் அறிவேன்.. நாடு விட்டு பிழைக்க வந்த எங்களுக்கே...இவ்வளவு வலி என்றால்.. திரும்பி செல்ல சொந்த நாடு இன்றி தவிக்கும் உங்களின் வேதனைகள் எனக்கும் புரியும். உங்கள் கவிதைகளும் புரிய வைக்கின்றன.. விரைவில் விடுதலை போரில் வென்று நீங்கள் தாயகம் திரும்ப வாழ்த்துகிறேன்.

உங்களின் வலிகளையும் பதிவு செய்வேன்..எதிர்காலத்தில்..உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் என்னால் இயன்ற அளவுக்கு... வாழ்த்துக்கள்...

ஹேமா said...

வணக்கம் முகிலன்.உங்கள் பின்னூட்டம் பார்த்து மிகவும் சந்தோஷம்.எம் வலிகளை நன்கு உணர்ந்திருக்கிறீர்கள்.நன்றி.எத்தனையோ தமிழ்நாட்டு எம் சகோதரர்கள் எம்மைப் புரிந்து கொள்ளவேயில்லை.
எத்தனையோ தரம் முரண்பட்டுக் கொள்கிறார்கள்.சுகபோக வாழ்க்கையைத் தேடித்தான் நாடு நாடாக அலைகிறோமாம்.எங்கள் அரசியல் பிரச்சனைகளைச் சொன்னாலும் சரிவரப் புரிந்து கொள்வதில்லை."ஏன் நீங்கள் அடித்தால் அவர்களும் அடிப்பார்கள் தானே" என்கிறார்கள்.எத்தனயோ வருட வலியைப் புரிந்து கொள்ளவே இல்லை.எம் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.
உங்களைப் போல சிலரே உணர்ந்திருக்கிறீர்கள்.நன்றி.

நர்மதா said...

அருமையான பதிவு. நடைமுறை அவலத்தையும் அதற்கு பழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் அவலத்தையும், வாழ்வின் பெறுமதியையும் உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைக்கின்றீர்கள். தொடருங்கள்.

தமிழ்ப்பறவை said...

இன்னைக்கு உங்க வலைப்பூ முழுசா ஓப்பன் ஆகலை. மன ஓட்டங்கள் மட்டும் திரையில் தெரிந்தது.(இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில்)...
நெருப்பு நரியில் முழுதாக வந்தது..ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் தாறுமாறாகத் தெரியும்... சரி புகார் கொடுக்க கமெண்ட்ஸ் பக்கம் போனால் இணைய இணைப்பு படுத்து விடுகிறது.. அதனால் ஜி மெயிலில் உள்ள இணைப்பில் பின்னூட்டமிடுகிறேன்....
அதிக வேகமுள்ள இணைய இணைப்புகளில் நன்றாக வரும் என நினைக்கிறேன்.. எனது வீட்டில் உங்கள் பக்கம் வந்தாலே தற்போது இணைப்பு பளு தாங்காமல் படுத்து விடுகிறது..

Tamilish Team said...

Hi kuzhanthainila,

Congrats!

Your story titled 'வானம் வெளித்த பின்னும்.......: கண்டால் பிடியுங்கோ...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th August 2008 03:14:32 PM GMT

Regards,
-Tamilish Team

ஹேமா said...

நன்றி Tamilish Team நிர்வாகிகளுக்கு, என் இரண்டு கவிதைகள்
இனியவன் நீ...
கண்டால் பிடியுங்கோ...உங்கள் தளத்தில் popular ஆகி இருந்தது அறிவித்து இருந்தீர்கள்.
சந்தோஷத்தோடு மிகுந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹேமா said...

வாங்க நர்மதா.நன்றி உங்கள் கருத்துக்கு.அவலங்களின் நடுவிலும் எதிலுமே அக்கறையில்லாமல் தங்களுக்கு என்று ஒரு வட்டத்துள் வாழும் மனிதரைக் கண்ட வேதனையே இந்தப் பதிப்பு.

ஹேமா said...

நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.என் தளம் இரண்டு நாட்களாக ஏதோ ஆகித் தடைப் பட்டுக்கொண்டது.
மீண்டும் சந்திக்கிறேன்.
Lee கவனிக்கிறார்.

Anonymous said...

great

Anonymous said...

niraiya naadkal inthap pakkam varavillai.vidumuraiyil irunthen.pala kavithaikalai thavar viddirukkiren.muzhuthum paarppen.

inthak kavithai arumaiyo arumai.thannai maadume ninaikkum saathaarana oru manithanin iyalpu mananilaiyai arumaiyaak solliyirukkurirkal.arumai...arumai.
Ram.

களத்துமேட்டின் ஈழவன் said...

உண்மைக் கதையா அல்லது கவிஞனுக்கே உரித்தான கற்பனையா!
ஹேமாவின் மனதில் இவ்வளவு பாரமா?
திட்டித் தீர்த்ததில் குறைந்திருக்குமே கொஞ்சச் சுமை !

உணர்ச்சிமிக்க கவி வரிகள், அருமை.
பாராட்டுக்கள்.

சமாதானம் வேண்டும்
மண்டாடுகின்றோமே தினமும்
யாழ்ப்பாண மக்களுடன் சிங்களவர் ஒற்றுமையாக இருப்பதை கண்டிக்கின்றீர்களா அல்லது வெறுக்கின்றீர்களா
புரியவில்லை!

ஹேமா said...

"சமாதானம் வேண்டும்
மண்டாடுகின்றோமே தினமும்
யாழ்ப்பாண மக்களுடன் சிங்களவர் ஒற்றுமையாக இருப்பதை கண்டிக்கின்றீர்களா அல்லது வெறுக்கின்றீர்களா
புரியவில்லை!"

களத்துமேடு,வாயைக் கொஞ்சம் கிளறிப் பாக்குறிங்க.இதுக்கு பதில் சொல்லப்போய் திரும்ப நீங்க அதுக்குக் கேள்வி கேட்க...
வேணாம் விடுங்க.

Post a Comment