*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, June 13, 2008

காதலித்துப் பார்...

Glitter Graphics
காதல் என்கிற கவிதை கூட
எழுதக்கூடாது என்கிற
தேசமொன்றில் அவள்
சோகங்களைச் சுமந்தபடி.
மனதின் சுமையோடு
துயரத்தின் பிடியில்
இடறி விழுந்து எழுந்து
திரும்பிப் பார்க்கையில்
தவறிய தாலியும்
விதவை என்கிற பட்டமுமாய்.
உணர்வுகளும் எண்ணங்களும்
உள்ளுக்குள்ளேயே
அழுத்தி அமுக்கியபடி.

அழகான காதலின் அரிச்சுவடிதான்
அவளது ஆரம்பம்.
காலத்தின் கடூழியத்தால்
கலைந்த காதல்.
வெள்ளைப் புடவையும்
வெற்று நெற்றியும்
வெறுமையாக்குமா
உள்ளத்தை என்ன?
காதலின் யாகம்
தொலை தூரத்தில்
வியாபித்து எரிகிறது.
தொட்டாலே பாவமாம்
பண்பாடு பாடுகின்ற பாவலர் பலர்.

பாசத்தின் ஏக்கத்தோடு
தோள் சாய்த்து
தலை கோத முடியாத
காதலொடு இவள்.
காதல் மதிக்கப்படுகிறது
கல்லறைகளில் வணங்கப்படுகிறது.
காலத்தால் முறிந்த காதல்
வராதோ மீண்டும்.
கல்லெறிதானோ சொல்லெறியோடு.

குழந்தையாய் ஒரு மடி தேடுகிறாள்
சுருண்டு அணைந்துகொள்ள.
ஒத்துக்கொள்ள எவருமே இல்லை.
பசப்புப் போர்வைக்குள்
பலவீனம் பார்த்து
படுக்கையை மட்டும் பகிர வரும் சிலர்.
காதலுக்காய் ஏங்கும் அவளிடம்
காதலின் கலர் என்னவென்று
கேள்வியாய் கேலியாய்
கேட்கிறது சுயநலக் கூட்டம் ஒன்று.

இன்று செத்தால்
அழைத்த பெயர் மாறி
பிணமாய் ஆகிவிடும்
பிண்டச் சதையை
பிய்த்துத் தின்னக்
காதல் என்னும் புனிதத்துள்
பெருச்சாளிகள் ஊர்வலம்.
பொய்யான உலகில்
எப்படிக் காதலிப்பாள்
வாய்ப்பில்லை காதலிக்க!
மயில் இறகின் தேவைக்காய்
மயிலின் தோலையே
உரிக்கும் உலகம் இது.

காதலிக்க ஆசைதான்
மனம் நிறையக் காதல்தான்
வழி விட்டு வாழ விட்டால்
காதலொடு அன்புக் கதை கூட
தினம் தினம் சொல்வாளே.
வெள்ளை மலரை
வாழ வைக்க யார்!!!

ஹேமா(சுவிஸ்)2003

3 comments:

VIKNESHWARAN said...

நல்லா இருக்கு...

Anonymous said...

16 Jun 08, 10:14
காதலித்து பார் கவிதை வாசித்தேன் .. என் கண்களில் கண்ணீர் முத்துக்கள் ... ஹேமா சுவைத்து மகிழ இனிப்பு போல வாசித்து கரைய(கண்ணீரில்) உங்கள் கவிதைகள்... மது

ஹேமா said...

மது வாங்க வாங்க.ஒரேயடியாய் கரைந்து போக வேணாம்.பிறகு நாங்கள் எங்கே மதுவைத் தேடிப்பிடிக்க...

Post a Comment