*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 30, 2013

சாத்தியக்கூறுகளின்போது...


நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்...

நீர் தெளித்து
புள்ளியிட்ட கோலத்தில்
மஞ்சளாய்
காக்கை எச்சம்
திருஷ்டிப்பொட்டென...

சுழித்தோடும்
நீருக்குள் போராடி
கடலட்டையொன்று
செத்து
மீண்டும் மேலெழுந்து
சுழன்றபடி....

தளிர்கொன்ற சூரியன்
அதேமரத்தில்
வேரொட்டி வளரும்
குருவிச்சைக்கும்
பச்சையம் பகிர்கிறான்....

ஒரு ஆற்றாமைக்
கவிதையை 

ச்சீ....என்கிறது 
எழுத்துலகம்....

பிற்போடப்பட்ட செய்திகளை
வாசிப்பதாக உறுதியளித்தவன்
இறந்துவிட்டதாக
அடுத்த செய்தியில்....

கருத்தரிக்கா
த் தாயின் 
கல்லறை நிழலில்
தேம்பியழும்
அநாதைக் குழந்தை....

ஊடறுத்த
சில சொற்களில்
குற்றம் இருப்பதாக
வரையறுத்து
தூக்கிலிடப்படுகிறது
நூலகமொன்று....

மாதங்களற்ற சிசுவொன்றை
பெற்றெடுக்கிறாள்
பார்வையற்ற
பெண்ணொருத்தி....

முலையறுத்த
எம் தேசப் பெண்களுக்கு
குறியறுத்த மனிதர்களை
காட்டி
போர் வேண்டாமென
போதிக்கிறது
உலக சமாதானம்....

இயற்கையில்
நஞ்சு படிகிறதாமென
போராடி
ஆயுத விற்பனையில்
வெற்றி பெறுகிறது மனிதம்...

எல்லாமும்
அவரவர் நினைவில்
சரியாகவும்
அடுத்தவர் பார்வையில்
தவறாகவும்....

தொடர்ந்துகொண்டிருக்க.....

நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்!!!

ஹேமா(சுவிஸ்)Friday, April 26, 2013

அவனு(ஆணு)க்கும் வெட்கம்...காதல் சிலுவையில்
முத்த ஆணி அறைந்தால்....

அத்தனை
அவஸ்தையோடு நீ
என்றாலும்.....
புதுக்காதலன் கதை சொல்லி
பொறாமை நெருப்பு மூட்டி
சில முத்தங்களும்
சில வெட்கங்களும் பெற
நான் பட்ட பாடு.

இன்றும் என்னை
ஈரமாய் வைத்திருக்கிறது
உன் வெட்க முத்தம்.

சிட்டுக்கள்
கூடிப் பேசும் ரகசியமாய்
சில்லென்று நனைக்கிறது
நேற்றைய நினைவுகள்.

தொட்டாச் சிணுங்கியாய்
சுருங்குவதும் விரிவதுமாய்
மனதைக் கூசச் செய்து
கிள்ளிக் கடக்கிறது இப்போதும்.

நீ கேட்பது போக
நான் கேட்டும்
உன் முகம்
முத்தாய் வியர்த்ததும்
குரலில்
வெட்கக் கோடுகள் கீறியதும்
தரலாமா வேண்டாமா யோசித்ததும்
புதிய அனுபவமாய் உனக்கும்
ஏன்..........எனக்கும்தான்.

என் ஆதங்கம்தான் அதிகம் இதில்

நான் உன்னருகில்
இல்லாமல் போனதும்
உன் சிவந்த முகத்தைக்
காணாமல் தவித்ததும்
எப்படி நெளிந்து
உன்னைச்
சமன் செய்திருப்பாயென்பதும்
காற்றலையில் களவாய்
போனதப்போது.

பாதி நிலவுக்குள்
பக்க முகிலுக்குள்
உன் வெட்கம் மறைய
செவ்வானச் சூரியனாய்
உன் முகம்.

புதிதாய்
புத்தம் புதிதாய்
புதிதான முத்தப்பூக்களோடு
நீ.....தந்து விட்டுப்போன
முத்தத்து நினைவோடு
ஜோடி மயில்
முத்தம் பார்த்து
பிரமித்தபடி நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 23, 2013

புத்தகமானவனுக்கு...


செப்படி வித்தைகள் கற்ற
சொக்கும் உன் சிரிப்புனக்கு
பத்திரமாய் புத்தகமாகி
ஞாபக ஊஞ்சலில்
இப்போ.

தொலைதூரமானவன் மட்டுமே
தொலைந்தவனல்ல நீ
உன்னைப் படிக்கும்போதெல்லாம்
ஒற்றைத் துளிக் கண்ணீர்கூட
கரைப்பதில்லை
உன் நினைவுகளை.

அன்பே....
சுவர்க்கப்பூமியில்
வசித்துக்கொண்டே தேடுகிறேன்
என்னைச் சுற்றிக்கிடக்கும்
சுவர்க்கம் நீதானே.

புத்தகமாக்க நினைத்தும்
கோர்வைக்குள் அடங்காதவளென
கை விட்டவன்
அப்போ நீ...
என் புத்தகத்தில்
ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும்
இப்போ நீ.

கனவுச் சூரியனடா நீயெனக்கு
பகலும் இரவும்
வெளிச்சமாய் எந்நேரமும்
நல்லதொரு வழிகாட்டியாய்.

ஒரே ஒருமுறை
ஒரே ஒருமுறை
வருவாயா
என் கைகளை
இறுக்கிக்கொள்கிறாயா
உன்னைத்தாண்டி
எந்த மரணமும்
என்னை நேசிக்காது.

வாசிப்பும் நீ
வசிப்பும் நீ
எனக்குள் மட்டுமே
திறந்து மூடும்
புத்தகமும் நீயே!!!

ஹேமா(சுவிஸ்)

(புத்தகதின வாழ்த்துகள்)

நிறையாத ஓவியங்கள்...


திணிக்கப்பட்ட விதிகளின்
மௌனித்த பொழுதிது...

வரைந்த பொழுதில்
தனைமறந்த பிரம்மன்
தவறவிட்ட
தூரிகை எச்சங்களாய்
இவர்களோ.

வலு நொடித்தாலும்
விதைத்த தைரியம்
மனதோடு
கக்கத்தில்
தன்னம்பிக்கையும் கூட.

வசைபாடும் சமூகத்தில்
பாசத்தால்
தம் வசமிழந்து
இரணங்களின் முடிவில்
தொடங்கும் மரணமென
இவர் வாழ்வு.

ஆழ ஊன்றும்
ஊன்றுகோலால்
மாற்றுத் திறனாளிகளென
விதியை
நொந்து எழுதியபடி
பயணிக்கும்
ஆற்றாமைகளோடு
வாழ்வு சலித்தபடி.

என்றாலும்
அன்போடு
ஒரு கையணைக்கும்
வா
நீயும்....என் இனமென!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 19, 2013

சொல்ல மறந்து...


எழுத நினைத்த நேரத்தில்தான்
இறந்துகொண்டிருக்கிறது
அது....
தன்னைக்குறித்தும்
தன் தனிமை குறித்தும்.

ஈர மரக்கிளைகள்
பற்றிக்கொண்டு
சுரக்கும் கண்ணீரோடு
பச்சிலைக் கடனுக்கு
உடன்பட்டு
எச்சில் பறக்க
கதறியது ஒரு நாள்
ஓவென்று.

உருபு மயக்கத்தோடு
ஒரு வேற்றுமை
மற்றொரு வேற்றுமையின்
பொருளில் வருவதுகூட

பொருத்தம் இல்லையென
கருத்துச் சொல்லிப் போனார்கள்
தெருவைச் சிலாகிப்பவர்கள்.

தனித்துப் பேசுபவர்களை
விசரென்று அறிபவர்கள்
தாங்களும் ஒரு வகையில்
அவர்களேயென
சொல்லிவைக்கலாம்
எதுவிதத் தயக்கமுமின்றி
மலசலக்கூடச் சுவர்களிலோ
பள்ளிச்சுவர்களிலோ.

சிலுவைகளில் தனித்து
அறையாமல்
குருதி சுண்டிக் கருக்குமளவு
கதறிப் பின்
இறப்பவர்களுக்கு
புதிது புதிதான
சில ஆறுதல் வார்த்தைகளை
சொல்லி ஆசீர்வதியும்
எம் பிரானே!!!

ஹேமா(சுவிஸ்)


Thursday, April 18, 2013

நான்...


நானாயிருக்கக்கூடாது
என்னைக் காட்டவேண்டாம்
என்றே
சரி செய்வேன்
ஒவ்வொரு கவிதையின்போதும்.

கற்பனைக்காய்
ஆயிரம் சம்பவங்கள்
அடுக்கி உயிர் கொடுத்து
உள்வாங்கும்
சில அனுபவங்கள்
அனுபவித்தலே உணர்வானாலும்
அடுத்தவர் உணர்வெழுத
தேடுவேன்
தனிமர நிழல்.

என் எழுத்தின் இயல்பை மறைக்க
மெனக்கெடடுவேன்
சம்பவங்களைத்
திணித்துக்கொண்டிருப்பேன்
எங்கிருந்தோ
ஒரு சிறு அசைவு
என் இயல்பைக்
காட்டிக்கொடுத்துவிட்டு
கை காட்டி நகைக்கிறது
அழுவாச்சியென்று!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 16, 2013

என் செல்லக்குட்டி...


சொல்லிக்கொள்ளாமலே போன
உன் நாட்களையும்
உன்னையும் அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறான்
ஒருவன்....
சொல்லிக்கொள்கிறான்
காதல் பொய் என்றும்.

வா.....
வந்து பதில் சொல்
ஆன்மாவாய்
நீ பொய்யா
அன்பும் காதலும் பொய்யா
உன்னை நினைப்பும் பொய்யா.

உனக்கென்ன....
உன்பாட்டில் போய்விட்டாய்
உருகி வழிகிறேன் மெழுகாய்
அவன் பின்னால்
உன் சாடை அவனில் கண்டு
அவனோ உன்னைப்போல் இல்லை
அலட்சியமாய்.

நீ விட்டுப்போன
புத்தகத்துள்
மயிலிறகின்
சாம்பல் நிறக்குட்டிக்கு
உன் பெயர்தான்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, April 14, 2013

சித்திரைப்புத்தாண்டு 2013...


சித்திரையே
நீ செத்து
பல பத்தாண்டாயிற்றே.

உன் ஆடையவிழ்த்து
அவர்கள் புணர்கையில்
எம் கைகள்
ஆகாயம் பார்க்க
கட்டியிருந்தது.

காமமும் கயமையும்
போட்டிபோட்டு
கற்பழிக்கையில்
'ஒரு பெண்ணை
தாங்கா உம் கரம் 
இனம் தாங்குமோ'வென
உடைத்துப்போட்டார்கள்
கைமுனுக் கூட்டங்கள்
எம் மணிக்கட்டை.

உம்மோடே
கல்லறை கொண்டன
எங்கள் கோவில்களும்
கொண்டாட்டங்களும்.

அவர்கள்
சிதை என்றார்கள்
நீர் உறங்கும்
மயான பூமியை
நாமோ
சீதைகளின்
அந்தப்புரமென்றோம்.

கொண்டு வருவீர்கள்
புத்தாடை கட்டிய
எம் சித்திரையாளை
ஆத்மாக்களின்
ஆவல்கள் உண்மையானால்.

பறக்கும் ஒருநாள்
ஈழத்தின் தன்மானக்கொடி
அவள்  தாவணியில்

புத்தாண்டு
நம் தேசத்தில்
அன்றே.....

எமக்கெல்லாம்
அதுவரை புத்தாண்டு
சித்திரையாளின்
சிதையெரிந்த  வெக்கையோடுதான்!!!

 
என்னை மறக்காத என் அன்புறவுகள்
அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப்
புத்தாண்டு வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

Friday, April 12, 2013

அன்பின் அறைகூவல்...


அன்பு....
தூரத்தே தொங்கும்
திராட்சைப்பழமாகிவிட்டது

சிலசமயம்.....
அடிநாதம் வாய்விட்டலறும்
ஆனாலும் கேட்பாரில்லை

சிலர் அதை......
அழகான இசையெனவும்
வர்ணிக்கிறார்கள்

வாய்விட்டுச் சிரித்து
நாளாயிற்று
என்னைப் புறக்கணித்தோர்
நான் சிரித்த இடங்களிலேயே
ஒப்பாரி வைக்கிறார்கள்

சில நேரம்.....
நான் அழுத
மலைப்பாறைகளின் கீழே
சில்லறையாய்க்
கொட்டி வைக்கிறார்கள்
சிரிப்புக்களை

என்னை......
அவன் ரசித்த கணங்கள்
கானகக் கிளைகளில்
தொங்கும் வௌவால்களாய்

ஏன்...
என்மீது இன்னும்
இடிவிழாமல்
அப்படியாவது
எட்டிப் பார்க்காமலா
போவார்கள்
அவனும்
கூட வரலாமென்ற
நப்பாசை எனக்கும்

வந்தால்.....
இருளில் ஒளி கிடைத்த
அதிசயத்தோடு வியக்கும்
என் விழிகள்
கோபமாய் வந்த வார்த்தைகளை
அளக்கத் தெரிந்த அவனுக்கு
என் அடிமன அன்பின்
அளவு தெரியாமல் போனதெப்படி

காற்றில்லா பூமியில்
வண்ணத்துப்பூச்சி இறகசைக்கும்
காற்றுப் போதும்
நாம் சுவாசிக்க
வா..............
நீயும் நானும் வாழ!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, April 07, 2013

காதல் துளிகள் (6)

காதல்....
இரவுகளைக் குழைக்க
உன்னால் மட்டும்தான்
சாத்தியமோ
ஏன்.......
என் இரவுகளையும்
சேர்த்தெடுத்துக் குழைத்துப்
பூசியிருக்கிறாய்
கருப்பா...!

உன்னைச் சுற்றும்
வண்ணத்துப்பூச்சி நான்
வானவில்லின்
பல நிறம் கொண்டவனே
என் நிறமறியாமல்
நீலத்தை வெள்ளையென்றும்
சிவப்பை இளமஞ்சளென்றும்
சொல்லி
கடைசியில்
கலவையில் குழம்பிய
நீ.....
அன்பு
கருப்பாய் இருப்பதாய்
கிறுக்க
நிறமற்றுக்கொண்டிருக்கிறது
என் இறக்கைகள் சுனாமியில் !

ஒரு உண்மை
சொல்ல'வா'...
உன் நினைவு
கண்ணை மறைக்க
சுட்டுக்கொண்டேன்
விரலில்
சுடவில்லை.....
உன் சொற்களைவிட
விரலும்
நானும்
உன்...
ஒற்றைச்சொல்லுக்காக
எரிந்தபடி !

ஒரு முறைக்கு மட்டுமே
ஏங்கும் மனம்
அதன்பின்
இன்னும் இன்னும்
எனத்
தணியாத தாகமாய்
தவிக்க வைக்கிறதே
உன் குரல்
ஞாபகத்தை அதிகமாக்கி
உரசிப்போகிறது
நீ....
முணுமுணுக்கும் பாடல்கள் !

மரமுதிர்த்த
மஞ்சள்
வீதி முழுதும்
உன் நினைவுகள்.

உன்னால்...
என் செல்லப் பெயர் எழுதிய
சருகொன்றைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
இன்னும்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 02, 2013

கொடுக்க'வா' குட்டிக் குருவி...


வந்து வந்து குந்திக்கொண்டிருக்கிறது
ஒரு குருவி
உண்டு கழித்த
நினைவுகளை மறக்காதோ.

பல்கனியில் தானியத்தை
பரப்பிவிட்டுக் காத்திருப்பேன்
அடிபட்டு
கொஞ்சிக் குலவி
சாப்பிடும் அழகை ரசிக்க
பசி போக்கிப் புசிக்க.

எச்சம் கழுவுவது
ரசனையை விட மோசமது
தமிழில் செல்லத்திட்டு வேறு
 'கக்கா இருந்தால்
சாப்பாடு போடமாட்டேன்
.......போ'.

மெல்ல மெல்ல
குவளைத் தேனீர்
என்னைச் சூடாக்க
இன்னும் பனி மழை
பூமியை வெள்ளைப்பூக்களால்
அலங்கரிக்க
குருவியோ குந்தியிருக்கிறது
பாவமென 

சற்றுத் தள்ளி
பரிதாபமாய்!!!


"கட்டித்தொங்கவிட உருட்டிய உணவு விற்பனையில்.பனிக்காலத்தில் பறவைகளுக்கும் உணவுத் தட்டுப்பாடு."

ஹேமா(சுவிஸ்)