*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, September 30, 2014

சமிக்ஞைகள் மீறிய குற்றம்...

சுவடுகளை
அடையாளப் படுத்திக்கொண்டார்கள்
அவர்கள்.

சிலந்தி வாயில் பூச்சியென
நெருங்கிய
மரண விளிம்பினோரம்
அடர்நீலக் கண்களோடு
அந்நியப் பறவையொன்று
கருக் கலைதல் பற்றி
பேசிக்கொண்டிருக்க...

மின்னிப் பறக்கிறது
சுண்டிய
சிகரெட்டின் துண்டொன்று.

வெள்ளைப் புறாக்கள்
வாழும் கனவுகளோடு
தகட்டுக் குகை முகடுகளில்.

விநாடிக்குள்
கணநேரச் சிலிர்ப்பில்
எல்லாமே ஆகிவிட்டது
யாருமறியாமல்.

வாழ்வு...

புயலடித்தோய்ந்த மணல்
ஆசுவாசப்படுத்தியபடி
அதன் மேலேயே
ஏலாமையோடு படர்வதாயும்...

கருக்கலைந்தவள்
மீண்டும்
முதல்முறை புணர்ச்சிக்கு
ஆயத்தமாவதாயும்!!!

குழந்தைநிலா ஹேமா !

Saturday, September 27, 2014

நாயும் தவளையும்...

மூச்சிளைக்க
எதையோ உளறியபடி
போராடிக்கொண்டிருக்கிறது
அந்த நாய்
எதிர்வாதம் செய்யாத
அந்தத் தவளையுடன்.

ஆற்றுப்படுத்த
ஒரு மல்லுக்கட்டல் போதும்
அதற்கிப்போ.

இல்லை...

களேவர மனதை அடக்க
மெத்தெனெ
சிறு குறிப்பிசை.

மன்னிப்பின்
மன்றாட்ட
பிரதட்சணத் தாவல்.

அல்லது
பின்னடைவின் ஒடுக்கம்.

இல்லை
பெருங்கோபமடக்க...

ஒரு அடைமழைக்கான
கரகரப்பிரியாவும்
அமிர்தவர்ஷினியும்.

வாயால் கெடுவதே
அதன் விதியென்றால்
விடிவதற்கு
இன்னும் நேரமிருக்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா !

Friday, September 26, 2014

திலீபன் தினம் 2014...

வறுமையில் சாகவில்லை
வாடவைத்து
வஞ்சத்தில் சாகடித்தது.

வயிற்றில் பசி அல்ல
மனதில் விடுதலைப் பசி.

விழுந்தாலும் முளைப்பேனென
யாசகம் கேட்டிருந்தவன்
தலையில்....
ஏன் நம் தலையிலும்
இடி வீழ்த்தியது
காந்தி தேசம்.

இருக்கட்டும்
இருக்கட்டும்

கற்பனையில் வாழும்
குழந்தைகளாக
மணல் வீடு கட்டி அழித்த
அண்ணா அக்காக்களாக
இருந்துவிட்டு
அப்படியே சாவோம்.

மகிழ்ச்சிதானே
இப்போ ?!!!

குழந்தைநிலா ஹேமா !

Monday, September 22, 2014

நிலாப் பிரியங்கள் (1)

பிரியம் என்பது
கைகளுக்குள் குவிந்த
உறையா
இப்பனியென
உனக்குள் உறைவது....

பிரியம் என்பது
பசிக்கும்
பதுங்கு குழிக்
குழந்தைக்கு
நிலாக்காட்டி
தூங்கவைப்பது....

பிரியம் என்பது
மழைக் குமிழியென
உடைந்தும்
ஓடியும்
மனதடங்காமல்
மிதந்துழல்வது....

பிரியம் என்பது
பசித்தாலும்
ஊட்டவியலா
தூரமுத்தம் போன்றது....

பிரியம் என்பது
ஊடலென
ஆயுதங்களை
நீட்டிக்கொண்டே
கட்டியும் கொள்வது....

பிரியம் என்பது
விடிகாலை
நாசி நுழையும்
தேநீர் போன்றது....

பிரியம் என்பது
அதிகபட்ச
விமர்சனங்களையும் தாண்டி
’சுகம்தானே நீ’என்பது....

குழந்தைநிலா ஹேமா !

Sunday, September 21, 2014

தலையாட்டிகள்...

யுத்த பூமியில் இரத்த ஓய்வு
ஆனாலும்
அழுத்தும் அதிகார அரசியல்...

காவலில்லா பூமியில்
காலம் பிரசவித்த
தலையாட்டி பொம்மைகள்
தாளடி நிலம் தடவி
உறவுகள் தேடிக் களைத்து
தாவளக் கழிவில்
தான் விளையாடிய
உடைந்த பொம்மைத் துண்டோடு.

கனத்தளவும் முடியாமல்
கந்தக நெடிக்குள் வினாக்களும்
குண்டுகள் துளைத்த தூண்களுக்குள்
ஒளிந்த பதில்களுமாய்.

விதி வரைந்த கரிக்கோடுகள்
சுயமிழந்த வலியோடு
பொம்மைக் குடிலுக்குள் நிலமளைய
தம் வேலி தின்னும் ஆடென
சாக்குருவியாய்
அழவைக்கிறார்கள் எம்மை.

அப்போதும்
முழுமையான என் கோபத்தையோ
வெறுப்பையோ
அதிகாரத்தையோ
அலட்சியத்தையோ காட்டமுடியாமல்
மாறாத தலையாட்டலோடுதான்.

பொம்மைகளுடன் படுத்து
பொம்மைகளுடன் கட்டிப்போட்டு
பொம்மைகளுடனான வாழ்வு
பொம்மையாய்ப் பிடிக்கவில்லை.

கொடூரமாயிருக்கிறது
ஒவ்வொன்றிற்கும்
பொம்மையென தலையாட்ட
பிடிக்கவில்லையென
உணர்த்தவோ சொல்லவோ
முடியாதிருப்பதன் சாபம்.

இன்றளவும்
நான் தலையாட்டிக் கொண்டேதான்.

காட்சிகளை மாற்றிக்கொண்டு
அவர்களும்
அப்படியேதான் இன்றளவும்!!!

பனிப்பூக்கள் பத்திரிகையில் பிரசுரமானது
www.panippookkal.com
நன்றி தியா......
Rasaiya Kandeepan

குழந்தைநில ஹேமா !

Friday, September 19, 2014

சூரியத் தேடல்...

என் சூரியனைக்
கண்டீர்களா யாராவது?

பூவரசு பூத்திருக்கும்
குச்சொழுங்கைகளில்
ஒளிந்திருக்கலாம்
அல்லது
கறையான் புற்றிடை
சிதறியிருக்கலாம்....

சூரிய விசாரிப்பை விடுத்து
இப்போதெல்லாம்
எனைத் தொட்டு விழும்
விம்பத்தைக்கூட
விழுங்கத் தொடங்கியிருக்கிறேன்
பெரும் பாம்பாக.

உச்சி முடியை
எரிக்கத் தொடங்கியிருந்தான்
அவன்!!!

குழந்தைநிலா ஹேமா !

Tuesday, September 16, 2014

அலை கக்கிய நிலா...

ஆதியிருப்புத் துளிகளை
அளாவி
அள்ளி வந்திருக்கிறது
இத்தாலியக் கடலுக்குள்
குழந்தைநிலா.

ஆக்கையழுந்த
ஆயிரம் விண்மீன்கள்
கண்களுக்குள் மின்ன
சுனாமி விழுங்கிய
சொச்சமாய்
என்னையும் விழுங்க
பெருங்குரலெடுத்து
மாரடித்தழுதது அலை.

முன்னெப்போதும் பார்த்திரா
வெள்ளைக்குதிரைப் பயணம்
கொங்காணிபோலொரு
கொம்போடு
புழுதி பறக்க..

ஆகரச் சுரங்கம்
நீர் வற்றிய தடாகம்
ஹா ஹா
என்றொரு கந்தருவன்
ஆகாசத்தாமரை
விதமான
செவ்வண்ணத்தில்
செம்பருத்தி
ஆக்கியோனின்
அழகிய கம்பீரக் கிரீடம்
என்காடு
அதில் தாவும்
தத்தம்மாக்கள்
தங்கவால் குரங்குகள்
அடங்காப் பெருங்காமத்தில்
கருகிய இரு வெண்புறா இறகுகள்.

இத்யாதி இத்யாதி....

வேகம்
சூடு பறக்கும் அதிவேகம்
காற்றேயில்லா
பூமி கிழித்து
மிதப்பதாயும்
நடப்பதாயும்
ஒரு வித்தை.

உயர்ந்த
கையுரசிய தூரத்தில்
ஆஸ்திரிய மலைகள்
கடந்துதான் வந்தேன்
அவைகளைக்
கேயிலேந்தும்
பலமெனக்கிப்போ.

ஜேர்மனிய
நிர்வாண மலைகளுக்கு
முடிந்தமட்டும் நீர்பீச்சும்
அலையுயர்த்திய வானத்தில்
மூழ்கிக்கிடக்கிறேன்.

கையேந்தி நிமிர்த்துகிறது
என் கால்களை
இரு கைகள்
சிருட்டித்த அத்தனையும்
அழித்ததாய் திட்டினேன்
நாசிக்குள் நிரவிய
உப்புக் கைக்க.

சாதிக்க ஏதுமில்லை
சாவதற்குப் பயமுமில்ல
ஆனாலும்
உயிர் போகும் தருவாயில்
வாழத்தான் பிடிக்கிறதோ ?

இல்லையென்றால்
உந்தி மூழ்கி
சிரசு சிலிர்ப்பும்
ஒவ்வொரு தரமும்
'பிடி....பிடி'
என்கிற சொல்மட்டும்
வந்தது ஏன்
என் வாயில் ?!!!


குழந்தைநிலா ஹேமா ! 05.09.2014