*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, October 30, 2014

பற்று...

இன்னும் திட்டியே
முடிக்கவில்லை
ஏன் முறைக்கிறாய்
கை ஓங்குகிறாய்.

எண்ணத்தைச் சொல்வதற்கும்
உன்னைத் திட்டுவதற்கும்
உரிமையில்லாமல்
ஏன் நான் உன்னோடு
போறேன்.... போடா
போ.......

ம்......ம்
போகமாட்டேன்
உன்னையும் விடமாட்டேன்
வாடகை மனைவியல்ல
நான்..........
இப்படித்தான்.

என்னோடு இரு
என் வார்த்தைகளை
இதுதான்
இதுதானென
கணக்கிலெடுத்து
இரவில் கேட்டு வை
முத்தமாய்த் தீர்த்துவிடலாம்.

இறுதியென முடிவெடுத்தால்
என் முட்டாள் மூதேவி
நீ....தான்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Saturday, October 25, 2014

ஆசையற்றவன்...

புத்தனின் போதனைகளை
ஒன்றொன்றாய்
சொல்லிக்கொண்டிருந்த உன்னிடம்
ஒரு மாற்றம் திடீரென்று.

அவகாசம் கேட்ட நீ....

போதனைகளில் இல்லாத ஒன்றை
உனக்காகவும் எனக்காகவும்
ஒப்புவிப்பதாய்ச் சொன்னாய்.

ஆசைகளே இல்லாத
வாழ்வைச் சொன்ன
புத்தனின் எதிர்மறையாய் இருந்தது
நீ உரியும் உடை.

வாழ்வை
அனுபவிக்கத் தெரியாத புத்தனென
முணுமுணுத்துக்கொண்டே...... !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 21, 2014

சதுரங்கக் காதல்...

சதுரங்கப் பலகையில்
உன் முத்தங்களுக்குப்
பலியான சிப்பாய் நான்.

காய்களென அடுக்கிய
பற்களில் அடியிலோ
நாக்கின் கீழோ
ஒளித்துவைத்த
எனக்கான
முத்தங்களைத் தந்துவிடு.
ஆடிக் களைத்த குதிரையென
நான் விழ
கண்களால் கொய்திழுக்கிறாய்
கமுக்கட்டுக்குள்.

பூனை மயிர்களை
ஒதுக்கிச் சிலிர்த்து
மீசை படர்த்தும்
கன்னக்குழிகளில்
நீ....
நிரப்பிய மோகம்
சூளையாகிறது
அசுரத் தீயாய்.

மிதக்கும் காற்றென
பலகைக்குள்
அடங்குகிறது என்னுயிர்
அசைதலுக்கும்
இசைதலுக்குமான
சம விரதத்தோடு.

சிலிர்த்து விறைத்த
என் கணுக்காலை
ஏவலாளிகள் கொண்டு
இழுத்துக் கட்டி
காமப்பேயென
மீண்டும் மீண்டும்
உறைந்த முத்தங்களை
எச்சிலாய்ப் பீய்ச்சிவிடுகிறாய்.

நான் வெல்ல நீ தோற்க
நீ வெல்ல நான் தோற்க
இன்னொரு ஆட்டம்
ஆரம்பமென
சொல்லிச் சொல்லியே!!!

நன்றி - கல்கி தீபாவளி மலர் 2014

நன்றி - அமிர்தம் சூர்யா

Sunday, October 19, 2014

கண்ணா...

குழல் துவாரங்களில்
கண்ணீர் நிரப்பியபின்னும்
மொழி கலைந்து
உமிழ் நீருடன் சமித்த பின்னும்
இளைத்த உடல் களைத்த பின்னும்
இடைமெலிந்து
ஊண் மறந்து நோன்பிருந்த பின்னும்
புகட்டுவாய் பாலெனக் காதல்
பரிந்துண்பாய் இதழ் முத்தமென
காத்திருந்த பின்னும்
கண்ணா....
செய்யா தயவிது ஏன்
தாயுமானவனே
இதுவோ பேரன்பு ?!

படம் - தோழி பூங்கோதை செல்வன் 

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Friday, October 17, 2014

சுயமா நான் சுகமா ?

என்னையறிந்துகொள்ள
யாரோ ஒருவரின் நிபந்தனையற்ற அபிப்பிராயம்
தேவைப்படுகிறதிப்போ எனக்கு
கருப்பொருள்
என் இருத்தல் பற்றியும்
என் எழுத்துப் பற்றியும்.

என்னைப்பற்றித் தெரிந்திருக்கிறது
என் எழுத்துவகை தெரிந்திருக்கிறது
ஆனால் 'நான்' எனும் என் உள்ளூடன் ஏதும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆனாலும்....
அவரவர் விருப்பத்திற்கேற்றபடி
கதைக்கத் தெரிந்திருக்கிறது.

என் எழுத்துக்களின் திமிரோடு
நான் ஒரு கவிஞராகவோ , போராளியாகவோ
மேடைப் பேச்சின் வல்லமையுள்ளவளாகவோ
அதே நேரம் சிறு பெண்ணாகவோ
காட்டிக்கொண்டதேயில்லை எப்போதும்.

யாரோ ஒரு கவிஞனின்
நிறவேறாக் கவிதைகளைத் தொடர்ந்திருப்பேன்
சிலசமயம் முடிக்கப்படா ஓவியத்தை ரசித்திருப்பேன்
என் இமை நனைத்த மழையை ரசித்தும்
கால் புதைத்த பனியைத் திட்டியும்
நித்திரை கலைத்த தொலைபேசியை உடைத்தும்
அப்பாவின் சிகரெட் பழக்கத்தை வெறுத்தும்
அம்மாவுக்குப் பாயாசம் பிடிக்குமென்றும்
பார்வை மங்கல் பற்றியும்
என் நிலாவோடு கதைத்துக் கனகாலமாயிற்று
என்றும் புலம்பியிருப்பேன்.

அழகாய் பந்தி பிரித்து என் வலிகள் இல்லா வாழ்வை
விளங்கியும் விளங்காமலும் நேசமித்ரன் கவிதைபோல
நவீனத்துவமாய்
குறியீடுகள் மறைக்கப்பட்டிருக்கவேணும்
பலர் அறியா என் முகம் போலவே.

நான்கு புத்தகங்கள் வெளியிட்டு
பத்து மேடையில் பேசியவரைக் பெருங் கவிஞரென்றும்
ஐநூறு கவிதை எழுதினாலும் புத்தகம் வெளியிடாவிட்டால்
"முகப்புத்தகத்தில் என்னதான் செய்கிறாய்
என்ன எழுதிக் கிழிக்கிறாய்
உன்னை யாராவது பெருங் கவிஞர்கள்
இதுவரை பாராட்டியிருக்கிறார்களா"என்று
நான்கு புத்தகம் வெளியிட்ட கவிஞரும் பேராசிரியுமானவர்
திட்டுவதுபோல முற்றில்லா வாக்கியங்களோடு
தமிழில் எழுதி ஆங்கிலத்தில் ஒப்பமிட்டும் தரவேணும்.

ஆனால்....

தமக்காய் கூட்டமொன்று வைத்திருக்கும்
பாராட்ட மனமில்லாக் கவிஞர்களுள்
அவருமொருவர்
அவரும் என்னைப் பாராட்டியிருப்பதாய்க் காட்டக்கூடாது.

அகதி வாழ்க்கையில் தனிமைக் கொடுமையோடு
மலம் கழிப்பதுபோல எழுத்தில் மன நாற்றம் கழிக்க
எழுதித் தொலைப்பதையும்
கவிஞர் என்று காட்டிக் கொள்ளவோ
மேடைப் பேச்சுக்கு ஆயத்தமாகவில்லையென்பதையும்
தூஷண வார்த்தைகள் போலவும் போலில்லாததாகவும்
நல்லவானாய் நடித்துக்கொண்டே
நடிகைகளுக்குக் கிசு கிசு எழுதுபவன்போல
எழுதித் தரவேணும்.

முக்கியமாய் ஒன்று...

இலக்கிய இலக்கணத்திற்குப் பொருத்தமில்லா
நவீன நாகரிகம்போல
விளக்கமில்லாக் கையெழுத்துபோல
கையால் வரைந்த கிறுக்கலாய் ஒரு படமும்
எடுத்துத் தரவேணும்.

மிக மிக அழுத்தமாக....

நான் பெயர் புகழ் வாங்க எழுதுபவளில்லை என்பதையும்
அதேநேரம்....
பொழுது போக்குக்காகவும் எழுதுபவள் இல்லையென்பதையும்
என் சந்தோஷங்களையோ துக்கங்களையோ
எழுத்துக்களோடு கதைத்துக்கொண்டிருக்கும்
கதைசொல்லிபோல
எங்கட ஊர் நாய்க்குட்டி விசரிபோல ஒரு விசரென்றும்
சொல்லி முடிக்கவேணும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, October 16, 2014

மோட்சம்...

உரசிப்போனது
கரப்பான் பூச்சியொன்று
நேற்று ராத்திரி.

தோழியின் குழந்தை
முத்தத்தோடு
முகத்தில் பூசிப்போன
பனிக்கூழ் சுவைக்காகவோ

இல்லை...

சர்க்கரை பிசைந்த
கையைத் தேடியோ அல்ல
நிச்சயமாய்.

இறந்து கிடப்பதாயும்
தூங்குவதாயும்
பாசாங்கு காட்டி
ஒளிந்து விளையாடுகிறது
பேணிக்கடியில் சிதறிய
சீனித் துகள்களுக்குள்!!!

பேணி - குவளை

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, October 09, 2014

09.10.2014

கடந்து போக
நினைக்கிறேன்
கையசைக்கிறது
ஏணைக்கயிறு பிடித்த
தொட்டில் கையொன்று.


பூக்களின் புன்னகைக்கும்
அர்த்தமுண்டு.

பிறப்பின் பலனோ
இல்லை அர்த்தமோ
தெரியா வாழ்வில்
கடக்கிறது
இன்றொரு நாளும் !

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, October 06, 2014

குருதி வழிகின்ற குறியீடுகள்...

குழந்தை வெள்ளையாகவும்
கண் நீலமாக இருப்பதாகவும்
பலத்த சர்ச்சை அவர்களிடம்.

இருள் மண்டிய
கர்ப்பத்தின் திரவத்தால்
மூடப்பட்ட குழந்தைக்காக
பயம் கொள்கிறது
சுற்றமும் சூழலும்.

தந்தைக்கு
மெல்லச் சந்தேகம்.

ஆழ்கிடங்கிற்குள்
ஆதவன் கண்படா
பச்சையமற்ற அவிந்த குழந்தைக்கு
உயிர்ச்சத்துக்கள்
கிடைக்காக் கவலை தாய்க்கு.

மறுத்தலும் குறுகுறுத்தலும்
வேண்டாம் பிரச்சனையென்று
ஒதுங்கிக்கொள்கிறார்கள் பலர்
பேசப்போனால் வில்லங்கமென
ஒத்திவைக்கிறார்கள் சிலர்.

தெருவோர மதிலில் ஒருவன்
எதையோ எழுத முயற்சிக்க
தீவிரவாதியென்ற பட்டத்தோடு
காணாமல் போய்விடுவானென
கரிக்கட்டை பறிக்கிறார்
பாவப்பட்ட தந்தையொருவர்.

ஊடகவியலாளன் தன் குறிப்பில்
"அவிந்த குழந்தையும்
அதன் அவதியும் அங்கீகாரமும்"
எனத் தலைப்பிடுகிறான்
கைதாகும் சாத்தியக்கூறுபற்றி
அவன் பயந்திருக்கவில்லை.

கர்ப்பம் விட்டு வருமுன்னமே
சர்ச்சைக்குரிய
குழந்தையாகிவிடுகிறது அது.

எழுதுபவர் எழுத
உறவினர்கள் குசுகுசுக்க
வைத்தியர்கள் ஆராய
தந்தை முகம் சுளிக்க
தாய் தவிக்க
தூரங்கள் துண்டித்துக்கொள்ள
பிறக்குமுன்னமே
தோல் முளைக்காமல்
பிறக்கலாமோவென
எண்ணிக்கொள்கிறது அக்குழந்தை.

நாடுகடத்தப்பட்ட சூழ்நிலையில்
அதிகாரிகளால்
சட்ட ஒழுங்குகளுக்குள்
மீண்டும் சிறைபிடிக்கப்படுகிறது
அக்கர்ப்பம்.

நாடில்லா அகதிகளென
முத்திரை குத்தப்பட்டு
பிறக்கவும்
இறக்கவும் விரும்பா
உடலைச் சுமக்கிறது
ஒரு தாயின் வயிறு.

அந்நியமாக்கப்பட்ட
அது
அதுவாகவே
அடங்கிக்கொள்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா !

Saturday, October 04, 2014

குலவை சேமிப்பவன்...

குலவை தொக்கி நிற்கும்
தேயிலை மலைகளெங்கும்
வாத்தியக் குறிப்புக்களை
சேகரித்து
கொண்டு வந்திருந்தான்
நிசப்தத் தொகுப்புக்களாய்.

உள்ளங்கை வெற்றிலையில்
தனக்கான சாத்தியங்களை
சத்தியமாக்குகிறான்.

முன்வினைக் கட்டினை
நீக்கிப் புரள்கிறது இரவு
மூச்சிழுத்து
கண்ணீர் துருத்த.

இனி....
தீரா முத்தங்கள்
கலக்கும் குலவைகளில்
கலக்கக்கூடும்
அவன் சுவாசம்.

அன்று....
ஆறிய தேநீரானாலும்
காத்திருக்கும்
பருகிய இதழோடு.

கணப் பொழுதில்
கனம் அதிகமாகிறது
குரல் பேழையில்
அவனாய் இருக்குமோ!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, October 02, 2014

மோன இரவொன்று...

'சப்பாத்திக்கள்ளியடி நீ'
என உலர்த்திய
மோனச் சிரிப்பின் விளிம்பில்
தொங்கித் தயாராகிரது
மையலிரவொன்று.

அம்பென
ஊதித் துளைத்து
உயிரை
தூசாய் எண்ணி
கரையும் கண்மையில்
பரபரப்பில்லாமல்
காமரேகை வரைந்து
வசிய இருட்பாயில்
பிரிய வார்த்தைகள்
வலிபடர.

உயிர் உரு(க்)கிய
கணங்களைக் கணக்கிட
ஆணையிட்டு
துயிலாடுகிறது
கவசம் களைந்து
வீரவாள் வீசிய
வெற்றிக்களிப்பில்
ஏதுமறியாததாய்
சொண்டு சுளித்து.

சாட்சியாய்
தகனித்த சுவாசம்
வெட்கி விழித்தபடி
பாவம்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)