*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label கவிதை சமூகம். Show all posts
Showing posts with label கவிதை சமூகம். Show all posts

Tuesday, July 22, 2014

கடக்கும் வாழ்வில்...

மழைக்குப்பின்
எறிக்கும் ஊமைவெயிலாய்
சிலரின் வார்த்தைகளை
கழற்றவும் முடியாமல்
எறியவும் முடியாமல்
அவிந்தபடி...
அணிந்துகொண்டு.

மூடும் கதவை
உறுதியாய் நம்பும்
அவிழ்ந்த
நம்பிக்கை உள்ளாடைகளை
ஏமாற்றும்
பிணைப்பின் இருப்பு.

ஓடும் ஆறு இது
பாசி தங்காது.

மனமேந்தும் சொற்கள்
புறக்கணிப்பின் சாடல்களின்
வேகம் தாங்காது
ஆனாலும்
இயல்பாய் ஓடும்
வன்மமின்றி.

உமிழ்ந்துகொண்டேயிருக்கும்
வார்த்தைகளில்
வழுக்கி விழுந்து
எழும்பி நடப்பதுதான்
'இதுவும் கடந்து போகும்'
என்கிற
போகுதலோ?!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 04, 2014

கடவுள்களான பாவிகள்...


கடலில்
நிலவைக் குளிக்கவைத்து
அசுத்தப்பட்டதாகக்
கழுவிக்கொண்டிருந்தார்கள் கடலை
ஒருபோதும்
தங்களை முகர்ந்து பார்க்காதவர்கள்.

பைத்தியமெனப் பெயரிட்டுவிட்டு
சுற்றிச் சூழ்ந்து பிடுங்கிக்கொண்டார்கள்
சுதந்திர தேசத்து வாழ்வையும்.

பின்னொருநாளில்
பேயனவும் விமர்சித்தார்கள்
பேயகற்றும் வித்தையில்
கைதேர்ந்தவர்கள்.

வாதைகளுக்குள் பழக்கப்பட்டாலும்
முடி பிடுங்கப்பட கதறி அலறுகையில்
அன்பறுத்து நசுங்கிய
வன்ம ஓலமெனவும்
பேசிக்கொண்டார்கள்.

பைத்தியங்களைத் துரத்தும் காமுகர்களும்
பேயை விரட்டும் ஆனந்தாக்களும்
மாறுவதற்கில்லை
ஆனால்...
கடலையும் நிலவையும்
என்ன செய்வார்கள் இனி ?!!!

ஹேமா(சுவிஸ்)



Tuesday, January 21, 2014

பிரிக்கப்படா சிக்கல்...

பார்வைகள் சிதைந்த
இயல்பினர் அவர்கள்
இதயம் பருத்த பருந்துகள்
பெயர் ஆண்களாம்.

அவர் பெற்ற
அன்னைபோலன்றி
விஷேசமாக
ஏதுமில்லை என்னிடம்.

பிரமாண்ட மடிப்புக்களில்
நீலநரம்புகள் குறித்த வருத்தம்
எனக்கும்தான் என்றாலும்
திரண்ட மார்பை
சீவிக்குறைக்க முடியவில்லை.

சுவர்க்கோழியென
ஒட்டிக்கிடக்கிறேன்
அடுப்பங்கரையில்
குடத்தோடும்
உட்சுவர் உடைத்த
இடுப்புவலியோடும்.

என் இயலாமையின் உமிழ்தல்
ஒரு இரவுப்பாடகனின்
நிரம்பாப் பாத்திரமென
ஆனாலும்
உனை நிரப்பும்
விலைமாதென
வரையறையிடுகிறாய்.

அந்தநேரத்தில் மட்டும்
எப்படிச் சல்லாபமாய்
கொஞ்சமுடிகிறது
செல்ல வார்த்தைகளோடு
உன்னால்!

http://kaatruveli-ithazh.blogspot.co.uk/2014_01_01_archive.html

ஹேமா(சுவிஸ்)

Monday, January 20, 2014

உறவென்பது...

படைப்பின்
புதிரறுக்கா மனிதன்
பூட்டிக்கிடக்கும்
புரியா உறவுடைக்க
சாவியொன்று தேட
நினைப்பதேயில்லை.

பயங்களாய்
பயன்களாய்
பிறழ்வுகள் காட்டி
பிணைத்து நிற்கும் சங்கிலியாய்
உராய்ந்து தீ உமிழ்ந்தாலும்
உறவுகளின் உன்னதம்
அறிவதில்லை.

வியாபாரமாகிவிட்ட வாழ்வில்
உயிர்களைப் பணயமாக்கி
அண்டவெளியை
தனதாக்கி
ஈரமற்ற மனதிற்கு
தண்ணீர் தேடியலையும்
மனிதனுக்கு புரிவதில்லை
அணைக்கும் அன்பின் அதிசயத்தை.

காது குடைய
ஒற்றை இறகின் தேவைக்கு
ஒரு பறவையையே
உணவாக்கும்
இரக்கம் விற்கும்
ஈசன் பெயரில்
பெயர் புகழ் தேடி
கோடியாய் கொட்டி
தானம் செய்யும்
தர்மர்களுக்குத் தெரிவதில்லை
தாய் முலைதேடும்
குழந்தையின் பசியை.

உபத்திரவமற்ற
வதைசெய்யா
நண்பனோ எதிரியோ
என் உறவெனச் சொல்வதில்
பெருமையெனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, January 03, 2014

கூத்துக்காரன்...

மாட்சிமை பொருந்திய
கடவுள்களை
லஞ்சம் கொடுத்து
பாராட்டிக்கொண்டிருந்தான்
காரியக்காரன்.

வெளியில் வைத்தே
புன்சிரிப்போடு
குறளித் தேவைதை பற்றிய கதையைச்
சொல்லிக்கொண்டிருந்தார் அவர்
குறுகிய உருவம்
குறுணிபோல
குட்டையாய்
குட்டன்போலவென்று.

பேச்சை மாற்றியபோதும்
தடுமாறாத கடவுள்
சூத்திரப்பாவையின்
கயிற்றைச் சரிசெய்யத்தொடங்கியபடி
குட்டிச்சாத்தான்பற்றிய விளக்கத்தை
விளக்கியபடியே.

கடவுள் சொன்னால்
எல்லாமே சரிதானென
ஏற்றுக்கொண்டவன்
தானுமொரு குட்டிக்கடவுளை
செய்யத்தொடங்கியிருந்தான்
பலரது
கோணல் கண்களில்
வாய்களில்
தொங்கப்போவதை
அறியாமல்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 23, 2013

அழுக்குக் கடவுள்...


பாதாளக்கரண்டியொன்றுக்கான
கவிதைதான் ஞாபகம் வருகிறது.

தொலைத்து விட்ட
உன் வாழ்வைத் தேடியெடுக்கிறேன்
நீ வளர்த்துவிட்ட உறவுகளுக்குள்.

பாதங்களைக் கிழிக்கிறது
காலமுட்கள்
நம்பிக்கைகளைப் பதம் பார்க்கிறது
வார்த்தைச் சம்மட்டிகள்.

கொஞ்சம் அண்ணாந்து பாரேன்...

விண்மீன்களை ஓடிப்பிடித்தும்
நிலவுக்குள் பாட்டியைத் தேடியும்
பறவை விட்டுப்போன சிறகோடு
வானலையும் உன்னையும் கண்டு
எத்தனை காலம் நீ....?

நிசப்தக் கற்களால் வீடமைத்து
நிலா வழிய ஒரு சிறு துவாரமிட்டு
சாணக வாசனை நாசிக்குள் நிரப்ப
உயிரசைக்கும் இசை ரசித்து
எத்தனை காலம் நீ....?

கற்களைக் கடவுளாக்கி
நேர்த்திகளை
மரங்களில் ஊஞ்சலாக்கும்
மனிதர்கள் நடுவில்
அழுக்கான கடவுள் அழகற்றவர்தான்
ஒத்துக்கொள்.

ஒரு இரவின் பெருவெளி நிரப்பும்
என்றோ பாடிய
தெருப்பாடகனின் பாடலொன்று.

பறவையின் பசியையும்
எண்ணிக் கசியும் குழந்தையின் மனம்.

கொஞ்சம் பொறு
அன்பின் நீள்சுவரில் உன் பெயர்.

என்றோ தொலைந்த
நெடுங்கனவொன்றில்
சற்று நேரம்
உன் இரவை அகலப்படுத்தி
உறங்கிக்கொள்.

உனக்கான சவப்பெட்டியின்
இறுதி ஆணி
உன் உள்ளங்கையிலேயே
இருக்குமென்று
ஒப்பமிட்டு வாழப்பழகு
இனியாவது!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 11, 2013

யுகம் மாறாதவர்கள்...


அடித்துடைக்கும்
ஏழையின் தகரவீடென
வார்த்தைச் சிதறல்களைப் பொறுக்கி
சமாதான முயற்சியில்
வீட்டெறும்புகள்.

இறுக்கிக் கட்டும்
வார்த்தைகளை முறித்து
நொருக்கி
மிதக்கும் தக்கைக்கு
காரணம் தெரிந்தும்
விளக்கவியலா ஆணதிகாரம்
'மிதக்கிறது
அவ்வளவேதானென' அறிவிக்கும்.
அகங்கார கர்வம்.

இருள் கிழித்தெரிக்கும்
அக்கினியை
நிமிடங்களில் கையேந்தி
தட்டிலும் கட்டிலிலும்
தன்னை நிரப்பி
தடம் மாறி
சுயம் கடக்கும் பெண்மை
பார்வையிருந்தும்
பார்வையற்றவனைக்
கடக்கும் பாவனையில்.

யூகத்தில் கடக்கும்
ஆயிரம் ரகசியக் கேள்விகளை
"எல்லாம் என் விருப்பம்
வாதமிடாதே
சொல்வதைக் கேள்"
எதிர்க்கேள்விகள் இல்லா
பிரேதப்பெட்டியின் மூடியென
அடங்கும் பதில்களற்று.

கைகுலுக்கும் வெள்ளைச் சமூகத்தில்
படிப்பும் பொருளாதாரமும்
நிறைத்தாலும்
மனமென்னவோ
பெண்ணுக்கு ஆணியறையும்
ஆணாதிக்க சமுதாயத்தில்
ஆனாலும்....
உணர்வுகளை மதிக்கும்
மனிதராய்.

இயலாமையை
ஏங்கும் அன்பை
நசித்து புசிக்கும் பசியோடு
ஒரு வாழ்க்கைப் புரிதல்.

அன்றிலிருந்து இன்றுவரை
ஆதிக்க வர்க்கம்
இப்படியாகத்தான்
புதிரறுக்கும் சொற்களை
அவிழ்க்கும் அவளிடம்
சட்டென்று பறித்திழுக்கும்
உரிமையை .

பிரியங்கள்
வன்மையின் காயங்களைச் சரிசெய்யும்
நிச்சயமாகச் சொல்லமுடியாவிட்டாலும்
நிலைமை அதுவேதான்.

சொற்பமாவது பேசவிடுங்களேன்
புரிதலின் காற்று உள்வரட்டும்....!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 24, 2013

அதி'காரம்'...


தடித்த எருமைத்தோலுக்குள்
குத்தியெடுத்த ஆணியென
சொற்கள் கடுக்க
பிறப்பின் கர்வமாய் 
ஆண் அதிகாரங்கள்.
 
தண்ணியில்லா
ஆழ் கிணறு விழுத்தி
அடக்கி மறுக்கும்  
ஆணவத்தை
அண்டம் அமுக்க   
புகைச் சுளியங்கள்
ஆழக்கிணறு கடந்து  
மேலெழும்பி வந்து 
நிலம் பரவும்.
 
ஒற்றைப்படைப் பூச்சில்
முகம் மட்டுமே அழகாய்
உள்ளிருந்து அசிங்கமாய்
ஆணாய்... 
அதிகாரம் சுட்டெரிக்க
விழுத்திய கிணற்றுக்குள்
கிடக்குமெனக்கு
பலநாள் சந்தேகமொன்று....

பகல்கள் கலங்க
கதிகலக்கும் உன்னால்
என்னதான் முடிகிறது   
இரவுப் பொழுதுகளில் 
மாத்திரம்!!!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5944

ஹேமா(சுவிஸ்)

Monday, September 30, 2013

கழிவறைச் சாட்சி...


மருந்துகள் பலனளிக்காது
அறிந்தபடியேதான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்.

அவசர அழைப்பில்
வைத்தியரும்
சம்பிரதாயம் சொல்கிறார்.

அப்போதும்
உதடுகள் குவிந்து
விரிகிறது சொல்ல.

விடிந்த பொழுதில்
வைத்தியருக்காகக்
காத்திருக்கமுடியவில்லை
காப்பாற்ற
வரவில்லை அவரும்.

கழிவறை மூலையில் சேமித்த
உண்மைகள்
வறண்டு ஆவியாகின்றன!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 02, 2013

துரோக அறிவிப்பொன்று...


மிகச்சிறந்த போராளியின்
கைகளைகளைக்
கட்டிக் கொன்றவர்களின்
அரசியலில் எழுதி
அழிக்கப்படுகிறது
ஆயுதமற்ற காதல்.

சாதியற்ற பிரியங்களைத்
தாரை வார்க்கும்
ஆகாசவாணிகள்
வியர்க்கும்
உவர்ப்புநீரில்
இரு உயிர்களின் மிதப்பு.

இணைந்த மனங்கள்
இச்சைகள் பிழிய
ஆட்டு(ம்)ப்பலகை
அவிழ்த்தெடுக்கும்
வன்மங்கள் சில.

அன்பெனப் பொய்சொல்லி
குவளை நிரப்பும்
போலிக்கடவுள்
புழுக்கொல்லிப்
பூண்டுகளையும் கலந்து
கொடுத்துக் காத்திருக்கும்
வார்த்தைகளினூடே
வழிந்துவிடாமல்.

மூளைச் சலவை செய்தவளிடம்
தோற்ற ஆத்மா
குப்புற விழுந்து
விழிகளால் மண் தோண்டி
விசாரித்துக்கொண்டிருக்கிறது
நியாயங்களை.

முதுகில் பதுங்கும் ஆயுதம்
சாதியக் குருதிகளில்
பிரியங்களைப் பிரித்து
சேமித்துக்கொண்டிருக்கும்
பரம்பரைக் கலயங்களில்.

காதல் வாழ்வதும் இறப்பதும்
சமூகக் கொடிகளிலென
ஆதாரங்களை
ஏந்திக்கொண்டிருக்கிறது
அப்போரளியின் அழகு முகம்!!!

ஹேமா(சுவிஸ்)

ஆட்டுப்பலகை - செக்கின் கீழ்ப்பக்கத்தில் மாடுகள் இணைக்கப்பட்டுச் சுற்றி வரும் மரம்.

Friday, July 19, 2013

சொல்லாடை...


உதடு சுழித்துக்
கிழித்த துண்டில்
இழுத்து எறியப்பட்ட
சில வார்த்தைகளால்
துடித்துத் தவிக்கும் சில உயிர்கள்.

ஓடி அடங்கி
அவிழ்த்தோடும்
நாடி நரம்புகள்கூட
செரிக்கமுடியா வார்த்தைகளால்
அவதியுறும்.

தேடி விடியும்
நாளொன்றின் கதவுகள் திறந்து
சாத்தான்களோடு
கூடிவரும்
அந்நாளில்
அந்த வார்த்தைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 04, 2013

கிச்சு கிச்சு...


குடை மறைத்த
தலைகள்
எதைப்பற்றியும் பேசலாம்.....

இலக்குகள்
இலட்சியங்கள் பற்றியும்
இளையராஜா
இசை பற்றியும்....

குடும்பம் பற்றியும்
குழந்தைகள் பற்றியும்
சமூகம் பற்றியும்
கவிதை பற்றியும்
நண்பர்கள் பற்றியும்
அவர்களின் காதல்
பற்றியும் கூடப் பேசலாம்.

ஆனால்....

தெருக்கரைகளை
பற்றிக்கொண்டு
மறைந்திருப்பதே
குசுகுசுக்கவைக்கிறது
காமமென்று !

ஹேமா(சுவிஸ்)

Friday, June 28, 2013

ஞாலத்துளி...


கடக்காது கரை
ஆர்கலி (கடல்)
மீள்கூடும் கூழாங்கல்.

சிதைந்துலர்ந்த வர்க்கபேதம்
உருமேறு தெருநாயின்
நச்சுப்பல் புண் புணர்வு
இரவுக்குறியோசை.

கல்லும் உதவும் ஒருக்கால்
எள்ளின் புல்லும்
சூடாற்ற புவிபரவ
மனிதம்
மதியாக் காளான்
கோட்டமாய்
மண்சாடிக் காலிறங்கும்.

குருதி குடித்த சாத்தானின்
சூன்யச் சீரழிவு
கடைவாய் வழி
நாகரீக அலங்காரமென
நிர்வாண காதம்
பேச்சு உடை.

கொட்டாவி ஊழியன்
தட்டும் தகரம்
ஊர்வெளியில்
நிர்மாலியச் சடங்காய்
 
நிருத்தம்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, June 19, 2013

எழுதா வரிகளில்...


உருவம் உலர்ந்து
மரித்துக்கொண்டிருக்கும்
பறக்கவியலா
எண்ணெய் தோய்ந்த சிறகொன்றை
பெயரில்லாப் பூச்சியென
புல்லிடுக்கில்
முண்டி வளரும் புல்லென
கண்டிருந்தேன்
புறநகர் வீதியொன்றில்.

பெரியாரையும்
ஓஷோவையும்
சேகுவராவையும்
தனக்கான அடையாளங்களோடு
தன் அலமாரியின்
இரண்டாவது அடுக்கில்
சேமித்து
வம்சம் வளர்க்க
நானென்ன இயந்திரமாவெனக்
கேட்டவளை....

எழுதப்படா
என் கவிதை வரிகளில்
நீண்ட வகிடெடுத்து
இரட்டைப்பின்னலோடு
சில கம்பீர வரிகளில்
பொருத்தியுமிருந்தேன்.

அலட்சியங்களுக்குள்
அர்த்தமற்ற சுலோகமென
புதைகிறது
சில இலட்சியங்கள்!!!

ஹேமா (சுவிஸ்)

Tuesday, June 04, 2013

அழகுத் தேடல்...


கதவைத் திற
காற்றால் நிரப்பிக்கொள்
உண்மைகள் நிரம்பிய
நிர்வாணமாய்
மனதை திறந்து வை
ஈரம் கசிய
வறட்சி குறையும்.

ஏதேன் தோட்டத்துக் கனி
உண்ணும்வரை
ஆதாமும் அழகு
ஏவாளும் அழகு
உண்மை நிர்வாணத்தில்
அழகாய்.....
மிக அழகாய்.

போர்த்திப் பூசிய
ஆடைகளைக் களைந்தெறி
சாத்தான் தந்த
அத்தி இலையது.

அந்நியமாய் இல்லாத
உன் நிர்வாணம் அழகு
உனக்குள் உணர்வு
உனக்குள் உண்மை
உனக்குள் தேடல்
உனக்குள் ஒளி
உனக்குள்தான் எல்லாமே
உன்னைத் தவிர
உனக்குள் எதுவுமில்லை
அது அசிங்கமுமில்லை.

நிர்வாணமா
சீ...
என்ன இது அசிங்கமாய்
என்பதும் கேட்கிறது
ஆனாலும்
தோழனே
நிர்வாணமே நிஜம்
பேரழகு
நிர்வாணத்தில் நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 17, 2013

முலையில்லா மனிதம்...


தொலைத்த ஒன்று
தொலையாமல்
யாருமற்ற
தெருவோரம்.

கொத்தும் காக்கைகள்
வண்டிச் சில்லுகள்
தப்பி
இரத்தம் உறைய
தூசுக்காற்றில்
துடிக்கும் குரல் கேட்டும்
துடிக்காத
இதயத்தோடு
பாதசாரிகளாய் பலர்.

அள்ளிச் செல்லும்
குப்பைகளோடு
கொட்டிச் சிதறிய
செல்வமொன்று
உடல் வெக்கை தணித்த
முகவரியில்லா
இருவர் சதை பொருத்திய
முகத்தோடு
பலமுறை சுழன்ற
பாதங்களுக்குள்
அகப்படாமல்
அழுதபடி.

கடி நாய்கள் கூடுமிடமிது
விநாடிக்குள் செத்துவிடும்
மனிதம்
யாராவது
அணைத்துக்கொளுங்களேன்.

இரங்காத முலை கொண்ட
காக்கை குருவிக்கும்
இரக்கமுண்டு
என் முலையிலும்
ஏதுமில்லை
ஆனாலும்...!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 03, 2013

மறுக்கப்பட்ட செய்திகள்...


காற்றில்.....
பலமான செய்திகள்
எத்தனையோ
ஊடகப் பாதுகாப்பின்றி
அலைகிறது நம் தேசத்தில்.

முள்வேலிட்ட
அரசியல் வானம் துளைத்து
உலகின்
காதுகளிலோ கைகளிலோ
கிடைக்காதவாறு.

விஞ்சும் பாரமிருக்க
இறங்கினாலோ
இறப்பு உறுதியென
எழுதி வைத்திருந்தார்கள்
முன்னம் செய்தி சொன்னவர்கள்.

முடியாப் பாரத்தோடு
இறங்கி
பின் இறந்த செய்திகள்
பல
என்றாலும்
வீறு கொண்டு கக்கும்
இன்னொரு பேனாவில்
இன்னொரு செய்தியாய்!!!


(எனக்கும் மிக மிகப்பிடித்த துறை ஊடகம்.
ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 30, 2013

சாத்தியக்கூறுகளின்போது...


நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்...

நீர் தெளித்து
புள்ளியிட்ட கோலத்தில்
மஞ்சளாய்
காக்கை எச்சம்
திருஷ்டிப்பொட்டென...

சுழித்தோடும்
நீருக்குள் போராடி
கடலட்டையொன்று
செத்து
மீண்டும் மேலெழுந்து
சுழன்றபடி....

தளிர்கொன்ற சூரியன்
அதேமரத்தில்
வேரொட்டி வளரும்
குருவிச்சைக்கும்
பச்சையம் பகிர்கிறான்....

ஒரு ஆற்றாமைக்
கவிதையை 

ச்சீ....என்கிறது 
எழுத்துலகம்....

பிற்போடப்பட்ட செய்திகளை
வாசிப்பதாக உறுதியளித்தவன்
இறந்துவிட்டதாக
அடுத்த செய்தியில்....

கருத்தரிக்கா
த் தாயின் 
கல்லறை நிழலில்
தேம்பியழும்
அநாதைக் குழந்தை....

ஊடறுத்த
சில சொற்களில்
குற்றம் இருப்பதாக
வரையறுத்து
தூக்கிலிடப்படுகிறது
நூலகமொன்று....

மாதங்களற்ற சிசுவொன்றை
பெற்றெடுக்கிறாள்
பார்வையற்ற
பெண்ணொருத்தி....

முலையறுத்த
எம் தேசப் பெண்களுக்கு
குறியறுத்த மனிதர்களை
காட்டி
போர் வேண்டாமென
போதிக்கிறது
உலக சமாதானம்....

இயற்கையில்
நஞ்சு படிகிறதாமென
போராடி
ஆயுத விற்பனையில்
வெற்றி பெறுகிறது மனிதம்...

எல்லாமும்
அவரவர் நினைவில்
சரியாகவும்
அடுத்தவர் பார்வையில்
தவறாகவும்....

தொடர்ந்துகொண்டிருக்க.....

நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்!!!

ஹேமா(சுவிஸ்)



Tuesday, April 23, 2013

நிறையாத ஓவியங்கள்...


திணிக்கப்பட்ட விதிகளின்
மௌனித்த பொழுதிது...

வரைந்த பொழுதில்
தனைமறந்த பிரம்மன்
தவறவிட்ட
தூரிகை எச்சங்களாய்
இவர்களோ.

வலு நொடித்தாலும்
விதைத்த தைரியம்
மனதோடு
கக்கத்தில்
தன்னம்பிக்கையும் கூட.

வசைபாடும் சமூகத்தில்
பாசத்தால்
தம் வசமிழந்து
இரணங்களின் முடிவில்
தொடங்கும் மரணமென
இவர் வாழ்வு.

ஆழ ஊன்றும்
ஊன்றுகோலால்
மாற்றுத் திறனாளிகளென
விதியை
நொந்து எழுதியபடி
பயணிக்கும்
ஆற்றாமைகளோடு
வாழ்வு சலித்தபடி.

என்றாலும்
அன்போடு
ஒரு கையணைக்கும்
வா
நீயும்....என் இனமென!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, February 27, 2013

வார்த்தை வலி...


சுழலும் நாக்கு வழி
இழுத்துப் பிடுங்கப்பட்ட
சில வார்த்தைகளில்
துடித்துச்சாகும்
சில மனங்கள்.

மனம்தாண்டி
சுண்டவைக்கும்
இரத்த நாளங்களையும்
செரிக்க முடியா
வார்த்தைகளால்
உறவுகளின்
ஒவ்வொரு அணுக்களும்
அறுந்து தொங்கும்.

நாட்காட்டிகள்
நாட்களைப் பிய்த்தெறிந்து
கூடிக் கொண்டாடும்
வார்த்தைகள்
மதுக்குவளைகளோடு !

ஹேமா(சுவிஸ்)