*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 28, 2013

கடந்த ஞாயிறு...


விரலிடுக்குகளில்
இடுக்கி வைத்திருந்த
ஒற்றைச் சூரியன்
காணாமல் போயிருந்தது.

குழந்தைச் சூரியனாய்
இருந்தபோதே
வானிடம்
திருடியிருந்தேன்.

முகில் பிளந்து
பொத்திக் காத்திருக்க
வானுக்கு
முண்டு கொடுக்கவென
கால் வளர்ந்த சூரியன்
காலில்லாக் கதிரையையும்
காவிப் போயிருந்தது.

பதைத்துத் தேடுகையில்
முழுச்சூரியனாய்
வானோடு
நடந்துகொண்டிருந்தது
நான் வளர்த்த சூரியன்.

சூரியனைத் தேடும்
விரல்களை
சமாதானம் செய்தபடியே
பக்கவாட்டில்
துளாவித் தேட
என் தலையைக்
கடந்து கொண்டிருக்கிறது
காலை வெயில்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, March 21, 2013

திரண்ட தமிழ்...



இருப்பு......
இருப்பவர்க்கல்ல
அது இல்லாதவர்க்கே
அந்த இருப்பின் வலி தெரியும்.

இருப்பை மாற்றினால்தான்
வாழ்வென்றால்
அதை எதிர்ப்பது
புரட்சியென்றால்
செய்திடலாம்
அதைப் பலமுறை
மகிழ்ச்சியோடு.

ஈழம்....
என் தாயின் பிரசவம்
நமக்கான வலி
தலை சிதறிப் போனாலும்
எம் தலைமுறைகள்
மறவாது
பிணங்கள் தாண்டிய
இரத்தம் தோய்ந்த
எம் கால்களும் கூட.

எம் கால் பட்ட புழுதிகள்
காத்திருக்கும்
எமக்கான தேசத்தில்
இன்றும்....
இன்னும்....
வித்தாகிப் போனவர்கள்
வீரத்தைத் தந்தே போனார்கள்
இப்போதெல்லாம்
மரணங்கள் பயமில்லை
சலிப்புத்தான்.

குண்டுகள் விழுந்த தேசம்
குயில் கூவும் தேசமாகும்
சாவுகள் கண்ட பூமியில்
புதுப் பனைமரங்கள்கூட
சாமரம் வீசும்
என் தாய்க்கு
நித்தவிடியலில் விலாசமெழுதும்
நம் ஒற்றுமை.

கை கோர்ப்போம்
கனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்
வாழ்க மாவீரர்களின் தாகம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தனித்தமிழ் தாயகம் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, March 07, 2013

நிலாக்குட்டி 2013 !

என் செல்லம் அன்பு நிலாக்குட்டி......... அன்போடும் பண்போடும் பல் கலைகளும் பெற்று வாழ 8 ஆவது இனிய நிறைவான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நிலா வாலுக்கு செல்ல முத்தங்கள் நூறு...ஆயிரம் !  

ஹேமா(சுவிஸ்)