*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, March 17, 2012

கடவுளுக்கான நேரமிது...

சத்தியமாய் இந்நேரம்
கடவுள்
தற்கொலை
செய்துகொண்டிருப்பார் !

இறந்தபின்னும்
திறந்திருந்த கண்களின் ஏக்கமும்
அடைத்த கதவுகளுக்குள்
கை துளைத்தாட்டும் விரல்களும்
புரட்சிகளும் அவலங்களும்
சாட்சியில்லா கற்பளிப்புக்களும்
கண்டபிறகுமா
அவர் இருக்கக்கூடும் !

போராட்டங்கள்
விடுதலைக்கான ஆயுத மனிதர்கள்
உயர்ந்தவர்கள்
எமக்காகத் தம்மை இழந்தவர்கள்
ஆனாலும் அவர்களின்
இறுதி அவலங்கள்
ஒரு உயிர்...
அதுவும் ஒரு உயிர்
புரட்சியை நடத்திக் காட்டி
தடங்கள் இல்லா
மரணம் அறிந்த பின்னுமா
கடவுள் இருப்பார் !

புரட்சிக்கான ஏடுகளில் எல்லாம்
இரத்தக் கறைகள்தான்
வேண்டாம் தாங்கமுடியா வலி
என்றாலும்
வேண்டும் புரட்சி
என்று சொல்வதில்
பயமில்லை எனக்கு
பிடிக்காவிட்டால்
தற்கொலை
செய்துகொள்ளட்டும் கடவுள் !

ஒட்டி உதிரும்
மணல் துகள்போல
என் தேசத்தில்
மரணம் மலிந்துவிட்டாலும்
வலிக்கத்தான் செய்கிறது
மரணம் சிலவேளைகளில் !

இல்லாமல் போன
மண்ணை...
என் மண்ணை மட்டுமே
இன்னும் நேசிக்கிறேன்
சாகட்டும் கடவுள்!!!

ஹேமா(சுவிஸ்)

49 comments:

Kanchana Radhakrishnan said...

:((

கலை said...

அக்கா ரொம்ப மனசைக் கணக்க வைத்துவிட்டது

dheva said...

வலிக்கிறது ஹேமா...!

கடவுள் தற்கொலை செய்து கொள்ளத்தான் வேண்டும்....
எம் இனத்தைப் படைத்து இப்படி ஒரு வலியை எமக்கு புகுத்தியதற்காக...!
இல்லையெனில்...
நாங்கள் அவரைக் கொலை செய்யவும் கூடும்...!

கலை said...

கடவுள் இல்லை எண்டு தான் தோன்றுகிறது சில நிகழுவல் ....

ஸ்ரீராம். said...

உங்கள் கோபத்திலும் துக்கத்திலும் அர்த்தம் இருக்கிறது. பார்க்க முடியாத காட்சிகள். ஈரமாகும் கண்கள்.

விச்சு said...

கடவுள் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது.உங்கள் வலியும் வேதனையும் புரிகிறது.

விச்சு said...

என்னுடைய பதிவுகள் உங்கள் dashboardல் வருகிறதா? என்னுடைய பழைய follower gadget வேலை செய்யவில்லை.(ஏனென்று தெரியவில்லை)அதனால் கேட்டேன்.புதிதாக follower gadget இணைத்துள்ளேன்.

Yoga.S.FR said...

புரட்சிக்கான ஏடுகளில் எல்லாம்
இரத்தக் கறைகள்தான்
வேண்டாம் தாங்கமுடியா வலி
என்றாலும்
வேண்டும் புரட்சி
என்று சொல்வதில்
பயமில்லை எனக்கு
பிடிக்காவிட்டால்
தற்கொலை
செய்துகொள்ளட்டும் கடவுள்.////உண்மை!வலிக்கிறது.இப்போதும் பெருமூச்சே!!!!!!!

சசிகலா said...

என்னவோ செய்யுதுங்க .

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மனம் தாங்கவில்லை ஹேமா.. இரத்தக்கண்ணீர் வருகிறது. இன்னொரு வலைப்பூவில் இப்போதுதான் இதைவிடக் கொடுமையான படங்களைப் பர்ர்த்து தாங்கமுடியாமல் வந்தேன்... என்ன செய்வது... கையாலாகாமல்.....?

விமலன் said...

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வியை விட அவர் மீது வருகிற கோபம் மிக,மிக நியாயமானது.

தீபிகா(Theepika) said...

கடவுள்களால் கைவிடப்பட்ட
பூமி எமது.
மன்றாட்டுக்கள்
நிராகரிக்கப்பட்ட மனிதர்கள் நாங்கள்.
நாற்பது ஆண்டுகளாய்
ஆண்டவர்கள் பார்த்திருக்க
நாம் சிலுவைகள் சுமக்கிறோம்.
ஆண்டவனின் மடியில்
அடைக்கலம் தேடிய போதே
கடவுள்களோடு சேர்த்து
எம்முறவுகளையும் பலிகொடுத்த
வரலாறு நம்முடையது.

போர்க்குற்றங்கள் பற்றி
எமது நீதியான கோரிக்கைகள் பற்றி
காயம் பட்ட எங்கள் ஊரின்
கடவுள் சிலைகளுக்கும்..
கோபுரங்களுக்கும்...
தேவாலயங்களுக்கும்..
மிக நன்றாகவே தெரியும் இல்லையா..

சுருவங்களை அகற்றிவிட்டு
புத்தர் சிலைகளையும்
அரசமரங்களையும் நடுகிற போது கூட
கடவுள்
தனக்காக ஏனும் போராட முடியாத
மௌனத்தோடு இருக்கிறார்.

நம்
நம்பிக்கைகளும்..
கனவுகளும்..
குரூரமாக சிதைக்கப்பட்ட போதும்..
செய்வதறியாமல்
கடவுள்களையே மன்றாடினோம்.
கெஞ்சினோம்.
கதறினோம்.
அழுது அழுது கண்ணீர் வறண்டு
துடித்தோம்.

இப்போதும்..
இத்தனைக்கு பிறகும்...
இன்னும்...இன்னும்...

எங்களுக்கான நீதிக்காக
நாம்...
இதுவரை காணாத கடவுளையே
பிரார்த்திக்கிறோம்.

ஏனெனில் காண்கிற
எந்த மனிதரும்..
எங்களுக்கான நீதியை
இதுவரை தந்ததில்லையே.

----xxx-----

உங்கள் கோபங்களில் நியாயமிருக்கிறது சகோதரி.ஏன்? ஏன்? கைவிட்டார் கடவுள் என்கிற எல்லா சனங்களின் கேள்வியாய்..உங்கள் வரிகள் இருக்கிறது.

தீபிகா.

தமிழ் உதயம் said...

படுகொலைகள் எல்லா நூற்றாண்டுகளிலும்... எப்போதும் வராத கடவுள் இப்போதும் வரவில்லை. கடவுள் இருந்தால் - உங்களை போலவே நானும் சொல்வேன்"சாகட்டும்" என்று.

இயற்கைசிவம் said...

கடவுள் இருந்திருந்தால் குறைந்தபட்சம் தனக்கான இலக்கணங்களை காத்துக்கொல்வதர்க்கேனும் சற்று இந்த அநீதிகளை பார்க்கவேணும் செய்திருப்பார் தோழி. பக்க வடிவமைப்பு நடந்துக்கொண்டிருக்கும் நமது வெயில்நதி இதழுக்கு உங்களின் படைப்புகள் கொடுத்து உதவுமாறும் வேண்டுகிறேன், உங்களின் மின்னஞ்சல் முகவரியையும் தருக
-மிக்க அன்போடு இயற்கைசிவம்

கணேஷ் said...

நான் பார்த்த படங்களும், காட்சிகளும் மனத்தை உலுக்கி அசைத்து விட்டது தோழி! உங்களின் கோபத்தில் நானும் துணை வருகிறேன் ஹேமா... சாகட்டும் அந்த பாழாய்ப் போன கடவுள்!

இராஜராஜேஸ்வரி said...

புரட்சியை நடத்திக் காட்டி
தடங்கள் இல்லா
மரணம் அறிந்த பின்னுமா
கடவுள் இருப்பார் !

வலி மிகுந்த ஆக்கம்..

Seeni said...

ஹேமா!

புகை படத்தை பார்த்தவுடனே!
கலங்கி விட்டேன்!

படிக்கும்போது....


நிச்சையம் கடவுள்-
இருக்கிறார்.அநியாயம் செய்யாபட்டவனும்-
செய்தவனையும் நியாயம் பேச கடவுள்-
இருக்கிறார்.
மனிதன் அனைவரும் சாக போகிறோம்-
என்று இருக்கிறான்!ஆனால்
நல்லது செய்தவனுக்கு கூலியும்-
கெட்டது செய்தவனுக்கு தண்டனையும்-
பெற வேண்டாமா!?

மனிதனின் தண்டனை-
கொஞ்ச நேரம்- ஆனால் கடவுளின்
தண்டனை-.......

நிச்சயம் கடவுள் இருக்கிறான்.
அணியாயகாரற்கை தண்டிக்க..

வேர்கள் said...

நமக்கு வேண்டாம் ஹேமா அந்த கடவுள்
கவிதையை படித்த போது என் கண்ணில் கண்ணீர்
ஏனென்றால் நான் மனிதன்

அமைதிச்சாரல் said...

கடவுள் இருக்காருன்னு இன்னுமா நீங்க நம்பறீங்க.. மனசு ரொம்பவே கனத்துப்போச்சுப்பா.

Ideamani - The Master of All said...

ஹேமா, அப்போதையே படித்துவிட்டேன்! வலிமிக்க கவிதை!! எங்கே கமெண்டு போட்டால் மூட் அவுட் ஆகிடோ என்று பேசாமல் போய்விட்டேன்!!

இது தீராத வலி! இன்று வருந்தியென்ன? நாளை வருந்தியென்ன? கடவுள் இருக்கிறார் ஹேமா!

கண்ணைத் திறப்பார்! பொறுத்திருங்கள்! :

தனிமரம் said...

வேதனைகளுக்கும் வடுக்களுக்கும் கடவுளைத் தூற்றல் தகுமோ !கடவுள் நின்று கொல்லூவார் காலத்தின் தீர்ப்பு என்று வரலாறு சொல்லும்!

காட்டான் said...

கடவுள்..,?????????

சத்ரியன் said...

செத்தொழியட்டும், கடவுள் இருந்தால்.

Ramani said...

சாபம் பலிக்கட்டும்
லேசான நம்பிக்கையூட்டி அனைவரையும்
அடியோடு சாய்க்கும் அவன் செத்தால்தான் நல்லது
அருமையான பதிவு.தொடர வாழ்த்துக்கள்

Rathi said...

ஹேமா, இது தான் கவிதையின் வலிமை. எதையும் சுருங்கச் சொல்லி மனதின் ஆழத்தை தொடுவது.

மற்றப்படி, புரட்சி என்பது ஆசையுமல்ல, அச்சமுமல்ல ஈழத்தமிழர்கள் விடயத்தில். இனவொடுக்குமுறைக்கு எதிராய் உரிமை கேட்கப்போய் நாதியற்றவன் ஆனான் ஈழத்தமிழன்.

புலவர் சா இராமாநுசம் said...

// இல்லாமல் போன
மண்ணை...
என் மண்ணை மட்டுமே
இன்னும் நேசிக்கிறேன்
சாகட்டும் கடவுள்!!!//

சகோதரி!
நொந்த தங்கள் உள்ளத்தின்
வேதனையை கவிதையில்
வந்த வரிகள் தெளிவாக
உணர்த்துகிறது!
அமைதி கொள்க!
புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

ஆயிரம் இறைவன் அநாதைத் தமிழனுக்கு. பட்டுடுத்தி நகை பூட்டி அழகு பார்த்தான். ஆனால் அவனை காக்க மட்டும் அந்த கடவுள்களுக்கு இரக்கமில்லாமல் போய்விட்டது. அல்லது அவன் அட்டூழியங்களைப் பார்த்து தற்கொலைதான் புரிந்து கொண்டானோ? மனதை வாட்டும் கவிதை.

sury said...

அரசியல் நிர்ப்பந்தக்களுக்கிடையேயும்
தமிழனையும் தமிழ் மண்ணையும்
காத்துத்தான் தீரவேண்டும் என்ற
உணர்வும் வேகமும் ஒற்றுமையும்
இன்னும் எங்களிடையே இல்லை !!

வருந்துகிறோம்.
கண்ணீர் சிந்துவதைத் தவிர
காணும் வழி தெரியவில்லை.


சுப்பு ரத்தினம்.

அம்பலத்தார் said...

ஏற்கெனவே நாங்கள் இந்தியா உதவிசெய்யும், அமெரிக்கா செய்யும் ஐரோப்பா செய்யும் என்று அடுத்தவர்களை நம்பி நம்பியே ஏமாந்த ஆக்கள். இல்லாத கடவுளையும் நம்பி ஏமாறாமல் இருக்கிற அறிவையும் கிடைக்கிற சந்தர்ப்பங்களையும் எமக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு செயற்படுவ்வொம். இல்லாத சாமி தற்கொலை செய்யாவிட்டால் அவரை கொலைப்ண்ணினாலும் தப்பில்லை ஹேமா.

அம்பலத்தார் said...

//இல்லாமல் போன
மண்ணை...
என் மண்ணை மட்டுமே
இன்னும் நேசிக்கிறேன்
சாகட்டும் கடவுள்!!!//
காட்டிக்கொடுப்பவனும், கூட்டிக்கொடுப்பவனும், கூட இருந்து குழிபறிப்பவனும் சாகட்டும். தன்னையே காக்க முடியாமல்போன கடவுள் இருப்பதுவும் சாவதுவும் எமக்கு ஒன்றேதான்.
இனக்கலவரநேரம் கடவுள் சிலையை உடைத்து கடலில் வீசிவிட்டு. கண தெய்யோ நாண்டகீயா (பிள்ளையார் குளிக்கபோய்விட்டார்) என்று சிங்கள காடையர்கள் கோவில் சுவரில் எழுதிவிட்டு போனதையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்த கடவுள் இருந்தென்ன செத்தென்ன எல்லாம் ஒன்றுதான்.

நிரூபன் said...

வணக்கம் அக்கா.
கடவுளுக்கு கல்லால் அடிக்கும் ஓர் கவிதையினை சொற்கள் கொண்டு உருவாக்கியிருக்கிறீங்க.

எம் அவலங்களைப் பார்த்து கடவுள் எப்போதோ செத்து விட்டார் என்பது உண்மை தான்.

கலா said...

ஒட்டி உதிரும்
மணல் துகள்போல
என் தேசத்தில்
மரணம் மலிந்துவிட்டாலும்
வலிக்கத்தான் செய்கிறது\\\\
வாழ்கையே வலிதான்,ஈழத்தமிழர்களுக்கு!
இருந்தாலும்...பாவம் கடவுள ரொம்பதான் திட்டிவிட்டாய்....

AROUNA SELVAME said...

கொடுரங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் குருட்டுக் கடவுளால் நமக்கென்ன உதவி செய்திட முடியும்? அப்படி ஒன்று இருப்பதும் ஒன்று தான். இல்லாததும் ஒன்று தான்.

பரமசிவம் said...

கடவுள் தற்கொலையெல்லாம் செய்துகொள்ள மாட்டார். நாம் அவரைக் கொலை செய்தால்தான் உண்டு!

யோவ் said...

சத்தியமாய் இந்நேரம்
கடவுள்
தற்கொலை
செய்துகொண்டிருப்பார்...

PREM.S said...

உங்கள் வலி புரிகிறது கடவுள் காப்பார்

PREM.S said...

//கற்பளிப்புக்களும்//"ழ"கர பிழையை கவனியுங்கள் அன்பரே

ரெவெரி said...

கோபம் நியாயமானது ஹேமா...மனசு ரொம்ப கனத்துப்போச்சு...

கீதமஞ்சரி said...

மனத்தை உறையவைக்கும் வரிகள் ஹேமா. நானும் உங்களோடு இணைந்து சாபமிடுகிறேன் அந்தக் கடவுளுக்கு.

roshaniee said...

காத்திரமான பதிவு......வாழ்த்துக்கள் .............
நிச்சயம் கடவுள் தற்கொலை செய்திருப்பார்

roshaniee said...

காத்திரமான பதிவு......வாழ்த்துக்கள் .............
நிச்சயம் கடவுள் தற்கொலை செய்திருப்பார்

மாலதி said...

கண்முன்னே அவலம் நடந்தேறியது கடவுள்கள் இருக்கிறானா இல்லையா இல்லையா இத்தனை நேரம் கடவுள் என ஒன்று இருந்து இருந்தால் உண்மை அரங்கு ஏறி ஈழத்தமிழினம் தமது நாட்டை பெற்று இருக்குமே நசக்கரர்கள் நாசப்படுதியத்தை கடவுள்கள் பார்த்து மகிழ்கிறதோ ? எம்மினம் வெல்லும் என்ற வார்த்தையைத்தான் சொல்ல முடிகிறது கனத்த இதயத்தோடு ....

மோ.சி. பாலன் said...

ஒட்டிய மணல் உதிர்வதுபோல் உயிர்கள் உதிர்ந்தாலும் - தம்முள் ஒட்டிய மண்ணை உதறமுடியாத எமது ஈழச் சகோதர சகோதரிகளை - கடவுள் நிந்தித்தாலும் - காலம் என்று ஒன்று இருக்கிறது.. கவலைகள் மாற்ற.

கார்த்தி கேயனி said...

அவல மனிதர்களின் கோரமான துயரம் உங்கள் கவிதைகளில்

ananthu said...

கடவுளையும் கனக்க வைக்கும் கவிதை !

அப்பாதுரை said...

படித்த ஒவ்வொரு முறையும் மனம் கனத்து எதுவும் எழுதாமல் திரும்பிவிட்டேன்.. இப்போதும் எதுவும் தோன்றவில்லை. அந்தப் படம்! ஐயோ என்று அலறுகிறது மனம்.

வியபதி said...

''கடவுள் நின்று கொல்வார் காலத்தின் தீர்ப்பு என்று வரலாறு சொல்லும்!'' மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறார் நண்பர்

நம்பிக்கைபாண்டியன் said...

கடைசி வரிகள், உணர்வுள்ள மனத்தின் வலிகள்!

செய்தாலி said...

மனம் கனத்தை வரிகள்
ம்ம்ம் வார்த்தைகள் இல்லை தோழி

Post a Comment