*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, August 30, 2008

நீயும் தமிழன்தான்...

நீயும் தமிழன்தான்
நீ... என் சகோதரன்
நீ... என் உறவு
நீ... என் இனம்
நீயும் தமிழன்தான்
என்றாலும்...

நீ...ஒரு இந்தியன்!!!

நீ...உன்
நாட்டிலேயே
நிராகரிக்கப் பட்டிருக்கிறாயா...
உன் உயிர் காக்க
ஓடி ஒழிந்திருக்கிறாயா
அநுபவித்திருக்கிறாயா...
அகதி வாழ்வு.
இரத்தமும் சதையும்
தந்த பெற்ற தெய்வங்கள்
கண் முன்னே
இரத்தமாய் சதையாய்
சிதறிக் கிடந்தும்
இறுதிக் கிரியைகள்
செய்யக் கூட
கையாலாகாதவனாகி
உன் உயிர் காத்து
ஓடி ஒளித்திருக்கிறாயா!!!

சிதறிய உடல்களைக்
கிண்டிக் கிளறி
அப்பாடி.....
எவருமில்லை
என் வீட்டில் என்று
நின்மதிப் பெருமூச்சு
விட்டிருக்கிறாயா!!!

இறந்து கிடக்கும்
தாயின் உணர்வறியாப்
பச்சைக் குழந்தை
முலை பிடித்துப்
பால் குடிக்கும்
பரிதாபம்
பார்த்திருக்கிறாயா!!!

சொட்டு அசைந்தாலும்
"பட்"என்று
உன் தலையிலும் வெடி
விழுமென்று
இரத்த வெள்ளத்துள்
பிணத்தோடு பிணமாக
பாதி இரவு வரை
படுத்திருக்கிறாயா!!!

உயிரோடு புதைகுழிக்குள்...
கழுத்தில்லா முண்டங்கள்...
காணாமல் போனவர்கள்...
கற்பையும் பறித்துக் கொண்டு
கருவறைக்குள்ளும்
குண்டு வைத்துச்
சிதறடிக்க விட்டவர்கள்...
ஐயோ ஐயோ...
எத்தனை எத்தனை
கொடிய நச்சு விலங்குகள்
நடுவில் நாங்கள்
அகப்பட்டிருக்கும்
வேதனை அறிவாயா நீ!!!

இலங்கைத் தீவில்
தமிழனாய்ப் பிறந்த
பாவம் தவிர......
தவறு வேறொன்றும்
செய்யவேயில்லையே!!!

ம்ம்ம்.....
கேட்டு உணர்வதை விட
பட்டு உணர்வதே மேல்.
இருந்தும்...
புரிந்துகொள்
இனியாவது என்னை...
உன் தமிழ் சகோதரர்
நிலைமை அறிந்துகொள்.

நீயும் தமிழன்தான்
நீ...என் சகோதரன்
நீ...என் உறவு
நீ...என் இனம்
நீயும் தமிழன்தான்
என்றாலும்....

நீ ஒரு இந்தியன்!!!

ஹேமா(சுவிஸ்)18.01.2007

46 comments:

ஆயில்யன் said...

உணர்வுகளை பகிர்ந்துக்கொண்டு
உள்ளத்தால் அழுது தீர்க்கிறேன் :-(

thamizhparavai said...

விமர்சனம் செய்ய இது கவிதை வரிகள் அல்ல கண்ணீர்த்துளிகள்.
இதனை என்னால் முடிந்த அளவுக்கு என் நண்பர்களுக்கு ஃபார்வர்டு மெயில் அனுப்புவேன்.
//சிதறிய உடல்களைக்
கிண்டிக் கிளறி
அப்பாடி.....
எவருமில்லை
என் வீட்டில் என்று
நின்மதிப் பெருமூச்சு
விட்டிருக்கிறாயா!!!
//
நான் நினைத்துப்பார்க்கக் கூட அஞ்சும் வரிகள். இல்லை இல்லை வாழ்க்கை...
என்று இந்தியாவுக்குத் தெரியுமோ...?

Anonymous said...

superb


suthan

தமிழன் said...

இந்த கவிதை மூலம் தான் உங்கள் தளம் எனக்கு பிடித்து,இந்த கவிதையின் மூலம் தான் நம் நட்பு தொடர்கிறது, இந்த கவிதையை மாதம் ஒருமுறை மறுபதிவு செய்யுங்கள்.உண்மையில் உணரவேண்டிய சில ஜென்மங்கள் உணரட்டும்.

தமிழன் said...

இந்த கவிதை என் மனதை பாதித்தால், உங்கள் தளம் எனக்கு பிடித்து போனது,இன்றும் நம் நட்பு தொடர்கிறது.மாதம் ஒருமுறை மறுபதிவு செய்யுங்கள் உணரவேண்டியவர்கள் உணர்ந்து வெட்கி தலை குனியட்டும்.

Unknown said...

இந்தியரைக் குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை என்பது எனது முடிவு!

அவர்களின் குரல்வளையை நெரிக்க முனைந்ததால் குப்புற வீழ்ந்தவர்கள் தான் நாம், இதில் எமக்கு தெளிவு இருப்பின் குறை சொல்ல இடமில்லை.

கவிதையைச் சுருக்கினால் நல்லதல்லவா? சுருங்கக் கூறுவதே கவிதை என்பார்கள்.

மனதைப் பீறிட வைக்கும் ஹேமாவின் கவிதை வரிகள் அபாரம்.

வாழ்த்துக்கள்.

Unknown said...

இந்த சுட்டியில் "என்ன நியாயம்?" எனும் கவிதை உள்ளது பார்த்தீர்களா?
http://kalamm2.blogspot.com/2008/08/blog-post_31.html

ஹேமா said...

நன்றி ஆயில்யன் முதல் வருகைக்கு.உங்களைப்போல் உணர்வுகளைத்தன்னும் பகிர்ந்துகொள்ளப் பலருக்கு மனமில்லை.கவனித்திருப்பீர்கள் சுரேஷ் ஜீவானந்தம் என்பவர் என் தளத்தை அசிங்கப்ப்டுத்தியிருந்தார்.
"அகதி நாய்கள்" என்றிருந்தார்.
இன்னும் அந்த வலி
...சீ...சீ... மனிதர்கள்.

ஹேமா said...

பார்த்தீர்களா களத்துமேடு.இது நல்ல ஆரோக்கியமான அலசல்தான்.ஆனால் நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவுதானா!என் கவிதைகளைக் கவனித்துப் பாருங்கள்.நான் யாருக்காகவும் ஒரு பக்கச் சார்பாகப் பேச விரும்புவதில்லை.எங்கள் நாட்டு அரசியல் அப்படி.
எல்லோரிடமுமே நிறையவே தப்புக்களும் பிரச்சனைகளும்.நான் சொல்வதெல்லாம் எங்கள் நாடு,
எங்கள் மக்கள்..புலம் பெயர்ந்த எங்கள் பிரச்சனைகள்,துன்பங்கள்,மன உளைச்சல்கள்தானே!நான் ஒரு போதும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பேசவும் இல்லை எதிர்க்கவும் இல்லையே.சிலர் எங்கள் வலி தெரியாமல் தூற்றுகிறார்கள்.
எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறேன்.அவ்வளவுதான்.

என் தளத்தில் சுரேஷ் ஜீவானந்தம் என்பவர் எவ்வளவு அசிங்கமாக எங்கள் வேதனைகள அசிங்கப்படுத்திருந்தார்.நிச்சயம் கவனித்திருப்பீர்கள்.ஒரு ஈழத்தமிழனாக அவருக்கு பதில் சொல்லாமலே மௌனமாக இருந்துவிட்டீர்கள்."அகதி நாய்களுக்கு செருப்பால் அடித்தாலும் புத்தி வராது என்றார்"இன்னும் என்னென்னவோ!!!அரசியலில் ஆயிரம் ஊழல்கள்.
என்றாலும் சாதரண மக்கள் வலியைப் புரிந்து கொள்ளாமல் அவரைப் போலப் பலர்.அதனாலேயே அந்தக் கவிதையை மறுமுறை பதிவில் இட்டேன்.
என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
நீங்களும் சொல்லுங்கள் களத்துமேடு.

இந்தக் கவிதை எழுதினது பாருங்கள் 18.01.2007.அப்போதே ஒரு இந்தியத் தமிழர் எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்.நாங்கள் உழைப்புக்காகத்தான் வெளிநாடுகளில் இருக்கிறோமாம்.ஏன் ஆயுதம் எடுத்துச் சண்டை போடுகிறீர்கள் என்கிறார்.படிப்பறிவில்லாதவர்களாம்.இன்னும் நிறைய.எங்கள் போராட்டம் வேதனை தெரியாத இந்திய தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள்.

தவிர நான் என்றும் இந்தியாவை வெறுக்கவில்ல.உண்மையில் என் தாத்தா...அம்மாவின் அப்பா தமிழ்நாட்டைச்(வலங்கைமான்)சேர்ந்தவர்.அப்பாவின் அப்பாவும் இந்தியப் பரம்பரையே.இன்றும் என் சொந்தங்கள் நிறையப் பேர் வலங்கைமானில் இருக்கிறார்கள்.

Anonymous said...

Hi kuzhanthainila,

Congrats!

Your story titled 'வானம் வெளித்த பின்னும்.......: நீயும் தமிழன்தான்...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th August 2008 05:57:26 PM GMT
Regards-Tamilish Team

தமிழ் விரும்பி said...

கண்ணீர் இல்லையே!
கண்ணீர் இல்லையே!!
அழுது தீர்ப்பதற்கு
கண்ணீர் இல்லையே!!!

காட்டமான வரிகள். இனி அழுதால் அது இரத்தக்கண்ணீர். அழுதோம். அழுகிறோம். நாளையும் அழுவோம். ஆனால் நாளை மறுதினம் ஆனந்தக்கூத்தாடுவோம். பொறுத்திருங்கள்.
வரிகள் எல்லாவற்றிலும் எங்களின் வலிகள் இருந்தன. அற்புதமான படைப்பு. சும்மா 'நச்' ன்னு இருந்திச்சு. அவர்களுக்கு நிச்சயமாக உணர்த்தவேணும். அவர்களும் நிச்சயமாக உணரவும் வேணும். நாம் குப்புற வீழ இல்லை. எமக்கு போதிய தெளிவும் உள்ளது.

கிடுகுவேலி said...

வேதனைகளை தாங்கி தாங்கி எம் இதயம் மரத்து போய்விட்டது. நாம் பட்ட துயரத்தில் ஒன்றை வேறொருவர் பட்டிருந்தால் இத்தருணம் துடித்தே மாண்டிருப்பர். உதட்டில் புன்னகை உள்ளத்தில் அழுகை. இதுதான் எங்கள் ஏதிலி வாழ்வு. உன்னதமான வரிகள். உள்ளத்தை தொட்டீர்கள்.

தமிழன்-கறுப்பி... said...

ம்...

தமிழன்-கறுப்பி... said...

இதுக்கு நான் என்ன பின்னூட்டம் எழுத ஹேமா...?

மே. இசக்கிமுத்து said...

உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறீர்கள்!! உண்மைகளை எழுதியிருக்கிறீர்கள்!!

என்ன ஒரு கொடிய வேதனை,
என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை!!

Anonymous said...

உயிரை உலுக்கிப் போட்ட கவிதை. கவிதைக்குள் உள்ளாடும் சோகமும், வேதனையும், ஆவேசமும் நிலைகுலைய வைக்கின்றன.

இது கவிதையல்ல சகோதரி
ஈழத் தமிழனின் ஈரக் குருதி.

முகுந்தன் said...

நெஞ்சை உலுக்கி விட்டது
உங்கள் இந்த கவிதை ...

வால்பையன் said...

உங்கள் பிளாக் டெம்ப்ளேட், தலை சுற்ற வைக்கிறது

Anonymous said...

30 Aug 08, 22:56
Wow hema.. Enai neengal thedinaal migavum adhirstasali nan Ungal kavidhaigal padikum podhu enadhu ennangalin kavidhai vadivam pol ulladhu..Aanal ungal " Nee.." kavidhai valikiradhu.Madhu.

Anonymous said...

1 Sep 08, 10:50
Hema thaangal kavidhai manadhai varudiyadhu.Thamizhan.

ஹேமா said...

1 Sep 08, 18:34
மது பாருங்கோ...நீங்களும் கொஞ்சம் கொஞ்சமா கவிதை எழுதிற மாதிரி இருக்கு.நன்றி மது கவிதையை உள்ளத்தால் உணர்ததற்கு.

ஹேமா said...

வணக்கம் தமிழன்.அடிக்கடி வராவிட்டாலும் எப்போதாவது வந்து உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள்.
நன்றி தமிழன்.

ஹேமா said...

திலீபன்,கவனித்தீர்களா?இந்திய அரசியல்தான் ஏனொ ஈழத்தமிழரோடு இழுபறியில் இருக்கிறது.தமிழ்நாட்டுத் தமிழர்கள்...என் சகோதரர்கள் ஒரு சில சாத்தான்களைத் தவிர எல்லோருமே எங்களில் அக்கறையாய்த்தான் இருக்கிறார்கள்.எங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள்.நம்பிக்கையோடும் இருக்கிறார்கள்.உண்மையில் எனக்கு சந்தோஷமாயிருக்கிறது திலீபன்.நிச்சயம் ஒரு நாள் எல்லோருமே சேர்ந்து சந்தோஷப் படலாம்.என் இந்தியத் தமிழ் சகோதரர்கள் அத்தனை உறவுகளுக்கும் என் நன்றி.

ஹேமா said...

தமிழ் விரும்பி வாங்கோ.அழுது களைத்து விட்டோம்.இனி எங்களுக்கு நம்பிக்கையும் துணிவும்தான் தேவை.எங்கள் மக்களுக்கு முடிந்தவரை உதவி செய்வோம்.காத்திருப்போம்.
காலம் வரும்.

ஹேமா said...

கதியால் இத்தனை காலமும் நான் காணவில்லையே.அடிக்கடி வாருங்கள்.கலங்கிய மனதுக்கும் கருத்திற்கும் நன்றி.

thamizhparavai said...

//ஒரு சில சாத்தான்களைத் தவிர எல்லோருமே எங்களில் அக்கறையாய்த்தான் இருக்கிறார்கள்.எங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள்.நம்பிக்கையோடும் இருக்கிறார்கள்//

உணர்த்தியமைக்கு நன்றி சகோதரி...
பிற கவிதைகளில் எனது சந்தேகங்களுக்கு நல்ல விளக்கம் அளித்தீர்கள்...
'நீறானது' 'நீறு பூத்த நெருப்பு' என்று வழக்கமாகச் சொல்லுவோம்...

Anonymous said...

Halloooooo.... Hema enappa ithu.neenga ezhuthvathu kavithaiya illadi unga manasa?enna solrathu nu puriyama irukkiren.very nice.Ram.

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா,நாங்கள் நித்தமும் அனுபவிக்கும் வாழ்க்கையைத்தான் வரிகளாக்கியிருக்கிறேன்.பங்கர் கிடங்கிற்குள் வாழ்ந்திருக்கிறீர்களா?நாங்கள் அதற்குள்ளேயே நாட் கணக்கில் இருந்திருக்கிறோம்.பாம்பு தேள் கடித்துக்கூட எத்தனையோ பேர் இறந்திருக்கிறார்கள்.அப்பாடி....நன்றி உங்கள் உள்ளத்துப் பகிர்வுக்கும் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும்.

ஹேமா said...

வாங்க இசக்கிமுத்து.என்ன செய்ய,எங்கள் விதியா...வேளையா.
நிறையவே அனுபவிக்கிறோம்.
வராமலா போகும் ஒரு காலம்.
அப்போ விதி நாங்களே செய்வோம்.
உங்கள் அன்பு ஆதரவிற்கு என்றும் என் நன்றி ஈழத்தமிழர்கள் சார்பில்.

ஹேமா said...

//இது கவிதையல்ல சகோதரி
ஈழத் தமிழனின் ஈரக் குருதி.//

நன்றி அண்ணா.எங்களுக்காக உங்கள் கண்ணில் அல்லவா குருதி.நேற்றைய உங்கள் பதிவில் ஈழத்துக் கவிஞர் திலகன் அவர்களின் உரையாடலைப் பார்த்தபின் உங்களுக்குள்ளும் நாங்கள் நிறைவாக இருக்கிறோம் என உணர்ந்து கொண்டேன்.எங்களில் வைத்திருக்கும் அக்கறை உணர்விற்கு நன்றி அண்ணா.

ஹேமா said...

நன்றி முகுந்தன்.

நன்றி சுதன்.

நன்றி ராம்.

உங்கள் ஆதரவுக் கரங்கள் என்றும் எங்களுக்குத் தேவை.

தமிழன் said...

ஹேமா என்ன எங்கள் தமிழகம் தங்கள் பின்னால் அணி திரண்டு இருப்பதை பாருங்கள். தமிழகத்தில் சரியான அரசியல் வழிநடப்பு இல்லை, அதுவே இந்த நிலைமைக்கு காரணம், கண்டிப்பாக பாருங்கள் இந்த ஆதரவுஇன்னும் நீளும்.வாழ்த்துகள் ஹேமா.ஒரு நாள் இந்த "வலைப்பூ" முழவதும் ஈழ ஆதரவு பரவும்.

Anonymous said...

நெஞ்சை உலுக்கி விட்டது
உங்கள் இந்த கவிதை ...

Anonymous said...

மிக்க வருத்தமாக உள்ளது. ஒரு நுற்றாண்டு முன்பு ஏது இந்த நாடுகள்?

நான் தங்கள் நாட்டில் பிறந்திடின் என்ன நிலையோ? ஏன் இந்த பிரிவினை? ஏன் இந்த பாகுபாடு? ஐரோப்பா குழுமம் போல மனிதன் குழுமத்துள் எங்கு செல்லவும், குடியேறவும், வணிகம் செய்வும் உரிமை வேண்டும். எல்லோர்க்கும் சம நிலை வேண்டும்.

நான் தமிழன் என்று பேசவில்லை. ஒரு மனிதன் என்று கூறுகிறேன் - "நாடு, இனம், மொழி, மதம் இவை சாதகமாக அமையாமல் பாதகமாகவே அமைந்துள்ளது. எவ்வளவு ஏற்ற தாழ்வுகள்?"

- மாதவன்

ஹேமா said...

//உங்கள் பிளாக் டெம்ப்ளேட்,தலை சுற்ற வைக்கிறது.//

வாங்க வால்பையன்.முதன் முதலா வந்திருக்கிங்க.கவிதைக்கு கருத்துக் கூடச் சொல்ல முடியாத அளவுக்கு தலை சுத்துதா!கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்.என்ன செய்யட்டும் நான்?

ஹேமா said...

வாங்க கடையம் ஆனந்த்.இனிமேல் வரமாட்டீங்களோன்னு நினைச்சிட்டு இருந்தேன்.வந்து கலங்கிய கருத்துக்கு மிகவும் நன்றி.திரும்பவும் வரணும்.

ஹேமா said...

நன்றி மாதவன்.நீங்கள் சொன்னது போல பல நூற்றாண்டுக்கு முன் இப்படியான இன,மொழி பேதங்கள் இல்லாமல் இருந்ததால்தானே மக்களும் நோய் நொடி இல்லாமல் மனதளவிலும் சந்தோஷமாய் இருந்தார்கள்.இப்போ நாகரீகமும் விஞ்ஞான வளர்ச்சியும் வளர மனித மனங்களும் ஆசைகளுக்குள் கட்டுப்பட்டு திசைமாறியபடி.

எங்கள் நாட்டின் அடிப்படைப் பிர்ச்சனை உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ நான் அறியவில்லை.
அரசாங்கத்தில் பெரும்பாண்மையினரின்
கை ஓங்கியிருப்பதால் பேதமும் பிரிவினையும் பல ஆண்டுகளாக.
உண்ணும் உணவு தொடக்கம் பாடசாலைக் கல்வி வரை.ஒரு தாய் தன் இரு பிள்ளைகளிடம் பேதம் காட்டினால் வரக்கூடிய பிரச்சனையே எங்கள் நாட்டில் நிலவும் கலவரம்.
நடுவில் அகப்பட்டு அல்லல் படுபவர்கள் பாவப்பட்ட பொதுமக்களே.

NILAMUKILAN said...

மன்னிக்க வேண்டும் ஹேமா.. சில பல அலுவல்கள். என்னை கணினி பக்கம் வராமல் வைத்துவிட்டது. இந்த கவிதை பற்றி மிக நீளமாக என் கருத்தை பதிவு செய்வேன். தற்சமயம் வேலைப்பளு. உங்களது ஈமெயில் முகவரி தர முடியுமா விலாவாரியாக பேசுவோம். எனது ஈமெயில்:nilamukilan@gmail.com
நன்றி

வால்பையன் said...

உங்கள் பிளாக்கில் நீண்ட பயணத்திற்கு பின் தான்,
பதிவையே பார்க்கவேண்டியிருக்கிறது,
அதனால் தான் அப்படி சொன்னேன்.

கவிதை நல்லாருக்கு,
இந்த மாதிரி இலங்கையில் தான் நடக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.
சுவிஸிலும் நடப்பது நீங்கள் சொல்லி தான் தெரிகிறது.

ஹேமா said...

நன்றி வால்பையன்.மனிதன் எங்கு போனாலும் தன் குணத்தைக் காவிக்கொண்டுதானே போகிறான்.
சுவிஸ் போனால் என்ன...சுடுகாடு போனால் என்ன!

Anonymous said...

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை :(

தமிழன் said...

உண்மையில் உங்கள் இந்த கவிதை இத்தனை பேரை பாதித்து உள்ளது, இவர்கள் அனைவரும் தங்கள் கவிதை மூலம் ஈழத்தை அறிய துடிப்பார்கள் என்று நம்புகிறேன். இவர்கள் அனைவரும் ஈழ நாடு வேண்டும் என்று தங்கள் வலைப்பூவில் கோரிக்கை வைக்க விரும்புகிறேன்.

ஹேமா said...

என்ன துயா...முதன் முதல் வந்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போனால்!OK வந்து பார்த்துப் போனதற்கு நன்றி.திரும்பவும் வரவேணும்.

ஹேமா said...

திலீபன்,எங்களை விட உங்கள் ஆர்வமும் துடிப்பும்!

Anonymous said...

aluthuvathai thavira verillai vali nam tamilanukku..tamil ena thorikal vaalum varai namakku illai vidiyal.

Anonymous said...

hi hema

realy nice.thamil thurokikal veelthale malarum tamileelam.ungal kavithai varikalai en kanniraal archchanai seikiren.tamil manangalin ulla kumuralkalai kavithaiyai thantha ungalukku nanri.

tharsini

Post a Comment