*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 17, 2009

தவிடு தின்னும் தமிழன்...

தூங்கமுடியா...
தூக்க முடியாச் சுமைகளாலே
நோய்களின் இடுக்குப் பிடிக்குள் நான்.
நுரை கக்கிய சவர்க்காரத் துண்டாய்
அடி நீருக்குள் அமிழ்ந்து கிடக்கிறேன்.
எழுத்துக்கள் குமிழியாய் எழுந்து
கண்ணீராய் சுரந்தபடி.

பெருந்துயரப் பாம்பொன்று என்னை
விழுங்கியும் கக்கியுமாய்.
அடங்காமல் மீண்டும்...மீண்டும் பற்றியெரியும்
போர்த்தீயின் சுவாலை
உடலையும் உள்ளத்தையும் சுட்டபடி.

என் இனத்தின் அவல ஓலம்
இரைச்சலாய் செவிப்பறை தெறிப்பதாய்.
இரத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் என் உறவுகள்.
நீ...ண்டகாலக் காய்ந்த இரத்த வாடையில்
நனைந்தும் ,உணர்ந்தும் ,கேட்டுமான மன ஓலங்கள்
இரவில்கூட அசந்து உறங்காதபடிக்கு.

கால்நடைகளுக்குக்கூட இடைநேரத் தீனி போட்டவன்.
வரும் விருந்து காத்திருந்து
வரவேற்ற வன்னித் தமிழன்-இன்று
தவிடு தின்னும் இனமாய்.
தான் தவழ்ந்த மண்ணே தன் காயத்து மருந்தாய்.
எலும்பில் தோல் தடவிய மனித எச்சக் குவியல்கள்
குமுறும் மனதால் மறக்க இயலவில்லை.

தீர்ப்பின் முட்டைகளுக்குள்
உயிர்கள் முழி பிதுங்கியபடி.
உடைக்கும் சொண்டுகள்
அலட்சியமாய் அல்லது திராணியற்றதாய்
அல்லது விலங்கிடப்பட்டதாய்.

சமாதானப் பருந்துகள்
ஒவ்வொரு முறை பறக்கையிலும்
இலவங்காய்க்காய் காத்திருக்கும் கிளியாய்
கிழிந்துவிடும் என் மனம்.
பனியின் விறைப்பை மிஞ்சி
முடங்கிகொள்ளும் ஏமாற்றம்.

உணவின் வாசனை
மூக்கின் நர்ம்புகளை உள் இழுத்தும்
பசியாத வயிறு.
மனம் முட்டிக் கிடந்தும்
எழுத முடியாக் கரங்கள்.

வேண்டுதலா எமக்கு.
பைத்தியமா எங்களுக்கு.
அடுத்த வீட்டிற்க்குக் கூட
கரைச்சல் தராத நாங்கள்
அடுத்தவன் நாட்டுத் தெருவில் கூச்சல் போட.
அதற்கா வந்தோம் அகதி முகவரி தேடி.
உண்ணாவிரதமும்...ஊர்வலமும்
கொடிகளும்...கூச்சல்களும் எதுவரை!
காக்கும் கரங்கள் எதுவுமின்றி.
இரங்கி எம்மை உணர மறுக்கும் உள்ளங்கள் இன்றி.

கனதூரம் கடந்த பின்னும்
என் தேசத்தின் திசையிலேயே என் மனப்பறப்பு.
பரிதாபம் பரிகசிக்க படுகிறான் பாடு தமிழன்.
அவலமும் களைத்துவிட
சகிக்கமுடியா அவதியோடு
உணர்விழந்து தவிக்கிறது என் புலம்பல் !!!

அன்பின் என் இனிய நண்பர்களுக்கு,
மனம் சரியில்லை.அதனால்தான் உங்கள் தளங்களைப் பார்க்கவோ
பார்த்துப் பின்னூட்டம் இடவோ மனமும் நேரமும் இல்லாத நிலை.
மன்னித்துக்கொள்ளுங்கள்.அதோடு இன்னும் ஒரு மாத விடுமுறையில் கனடா போகிறேன்.வந்து எப்பவும்போல குழந்தைநிலாவில் சுறுசுறுப்போடு சந்திப்பேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

ஹேமா(சுவிஸ்)