*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, January 30, 2014

காதல் குறிப்பொன்று...

கனவுகளுக்கு
வால்கட்டிப் பறக்கவிடமுடிகிறது
உன் சில்மிஷங்கள்
தாளாப் பொழுதுகளில்
காதலின் பூரணத்தை உணரும்
இரவின் உயர்ந்த கோபுரமமர்ந்து.

ஆழ்கடலென்றும்
ஆழ்தவம் புரியும் மலரென்றும்
காதல்
அது ஒரு மரணத்தின் வாசலுமாய்.

ஒருவேளை காதலைத் தாண்டி
என் மரணம் முந்திக்கொண்டால்
நாளும்
பொழுதும்
இரவும்
பகலும்
கோபுரமும்
எல்லாமும் மாறாதிருக்கும்.

ஆனால்
உன் காதலும்
சில்மிஷங்களும்
கனவும்
வாலும்
என் சந்தோஷங்களும்
இப்படி
சொல்லப்படாமலே அலைந்திருக்குமோ!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, January 27, 2014

படைத்தவனும் படைத்தவனும்...

பார்த்துக்கொண்டிருக்க....

இது பத்தோ அல்லது
பதினைந்தாவதாகவோ இருக்கலாம்
வட்டம் வட்டமாய் சிகரெட் புகை
கடவுளைச் சுற்றிலும்.

வானத்தின் தேகமெங்கும்
அதிரும் இரும்புப் பறவைகள்
பச்சையம் அழித்து
இரத்தக் களறியாகும் பூமி.

பச்சைக்குழந்தையிடம்
இச்சைதேடும் நரன்.

இதற்குள்ளும்
நன்றி மறவாத நாய்
கொடுத்துண்ணும் காக்கா
வரிசை கலையா எறும்புகள்
மனிதன் தவிர
தம்மை மாற்றா மாற்றுயிர்கள்.

அழிக்கும் வனம் அழ
பாறையில் முளைவிடும் சிறுவிதை
பெருமரமென மலை பிளந்து
தடைக்கற்கள் கடந்து வேர் விரித்து
சிக்கும் சின்ன வேர்களை விசாரித்தபடி
ஆழப் பதிய வைக்கிறது தன்னை.

கடவுளைப் பார்த்து முறைக்கிறேன் நான்
மனிதன் பண்ணிய புகைக்குள் அவர்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, January 25, 2014

மயூரத்தவம்....

ப்ரியத்தை....
மயூரமிசைத்து
தூளியாட்டுகிறது
மௌனக் காற்றுவெளி.

புள்ளியாய் அசையும்
தீபத்தில்
நானென்ற திரியும்
நாமென்ற வெளிச்சமும்.

இரவுகளை நீட்டிச்செல்லும்
தூங்கா வானத்தில்
வெளித்த
வெளிச்ச நிலவில்
அவனோடு நான்..

முகமுரசி
கருந்தாடி எழுதும்
மோகத்தீயில்
சிலிர்த்தெழுந்து
சுயம் தொலைக்கவைத்து
அடையாளமிடுகிறாய்
சாதாரண சகமனுஷிதான்
நானுமென.

ஒரு கோப்பை
தேநீர் மயக்கத்தில்
சிறுதூரல் மழையணைப்பென
சரிந்துகிடக்கும்
என் விழிக்கா விழியில்
மேகம் கடக்கும் கருமுகில்
அழகு காட்டிப்போகிறது
என் மீசைக்குழந்தையை.

தன் எச்ச விதையில்
முளைத்த மரத்தில்தான்
சில விதிப்பறவைகளின்
கூடுகள்
விதியென இணையும்
என்னையும் அவனையும்போல!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 21, 2014

பிரிக்கப்படா சிக்கல்...

பார்வைகள் சிதைந்த
இயல்பினர் அவர்கள்
இதயம் பருத்த பருந்துகள்
பெயர் ஆண்களாம்.

அவர் பெற்ற
அன்னைபோலன்றி
விஷேசமாக
ஏதுமில்லை என்னிடம்.

பிரமாண்ட மடிப்புக்களில்
நீலநரம்புகள் குறித்த வருத்தம்
எனக்கும்தான் என்றாலும்
திரண்ட மார்பை
சீவிக்குறைக்க முடியவில்லை.

சுவர்க்கோழியென
ஒட்டிக்கிடக்கிறேன்
அடுப்பங்கரையில்
குடத்தோடும்
உட்சுவர் உடைத்த
இடுப்புவலியோடும்.

என் இயலாமையின் உமிழ்தல்
ஒரு இரவுப்பாடகனின்
நிரம்பாப் பாத்திரமென
ஆனாலும்
உனை நிரப்பும்
விலைமாதென
வரையறையிடுகிறாய்.

அந்தநேரத்தில் மட்டும்
எப்படிச் சல்லாபமாய்
கொஞ்சமுடிகிறது
செல்ல வார்த்தைகளோடு
உன்னால்!

http://kaatruveli-ithazh.blogspot.co.uk/2014_01_01_archive.html

ஹேமா(சுவிஸ்)

Monday, January 20, 2014

உறவென்பது...

படைப்பின்
புதிரறுக்கா மனிதன்
பூட்டிக்கிடக்கும்
புரியா உறவுடைக்க
சாவியொன்று தேட
நினைப்பதேயில்லை.

பயங்களாய்
பயன்களாய்
பிறழ்வுகள் காட்டி
பிணைத்து நிற்கும் சங்கிலியாய்
உராய்ந்து தீ உமிழ்ந்தாலும்
உறவுகளின் உன்னதம்
அறிவதில்லை.

வியாபாரமாகிவிட்ட வாழ்வில்
உயிர்களைப் பணயமாக்கி
அண்டவெளியை
தனதாக்கி
ஈரமற்ற மனதிற்கு
தண்ணீர் தேடியலையும்
மனிதனுக்கு புரிவதில்லை
அணைக்கும் அன்பின் அதிசயத்தை.

காது குடைய
ஒற்றை இறகின் தேவைக்கு
ஒரு பறவையையே
உணவாக்கும்
இரக்கம் விற்கும்
ஈசன் பெயரில்
பெயர் புகழ் தேடி
கோடியாய் கொட்டி
தானம் செய்யும்
தர்மர்களுக்குத் தெரிவதில்லை
தாய் முலைதேடும்
குழந்தையின் பசியை.

உபத்திரவமற்ற
வதைசெய்யா
நண்பனோ எதிரியோ
என் உறவெனச் சொல்வதில்
பெருமையெனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, January 17, 2014

அச்சம் எழுகிற தருணங்கள்...

மௌனப் பெருவெளி பிரித்து
நாசித்துவார இடுக்கில்
நுழையும் தாழம்பூ மணமென
சில நினைவுகள்
மறந்தாலும் மறக்காமலும்.

உந்தி எம்பி
வெளிவந்து மூச்சிழுத்து
உள்ளிழுக்கும் நீருக்கும்
'சற்றுப் பொறு' சொல்லி
காற்றுவாங்கும் மீனென
பிரதின்மையாகும்
புரவி வேகத்தில் எல்லாமே.

மனப்பரப்பெங்கும்
அரவம் கொத்திப் படரும்
நஞ்சின் நீலமாய்
துரோகிக்கும் மனித மனதின்
பல வர்ணக் கேள்விகளை
பெரும்பாறை
இறுகிச் சிதறும் மணல்துகளென
மாறி மாறி
விழியிழுத்து வெளிதாண்டி
வழி காட்டும்
அகத்தெளிவின் உண்மைகள்.

சரிவாய்
நீளமாய்
குவிந்து
கவிழ்ந்த இரவின் இருளில்
மெல்லப் புதையும் நான்.

சுவாலை வீச
கன்னம் நனைத்து
காது சிவக்க
கண்வழி கசியும் நீர்
உணர்த்தி வெளியேறும்
போன ஜென்மத்துக்
கடன்களை!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 14, 2014

பொங்குகிறோம்...


குருதிச் சரித்திரமெழுதிய
புழுதி மண்ணில்
இப்போதும் நரம்பறுத்து
செம்மண் மெழுகி
மாவிலை தொங்கும்
மனப்பானையில்
நாசித்துவாரமிட்டு
பால் மணத்தோடு
கண்வழி பொங்குகிறது
பொங்கல்.

மறைத்து விளையாடுகின்றன
துளசிமாடச் சிற்றெறும்புகள்
பொங்கலுக்கான சூரியக்கதிர்களின்
திரியறுத்து.

நகம் இறங்கிய ஊசி
கசிந்திறங்கும் இரத்தம்
ஒவ்வொரு சிவப்பரிசியிலும்
எத்தனை எத்தனை முகங்கள்.

அவரவர் பருக்கையில்
எழுதப்படும் விதி
இதுதானோ ?!

ஆக்கி அழித்த
ஆச்சாரியக் கூட்டமதை
மரநாய்கள் துரோகித்ததை
சகிக்கமுடியா
பொங்கல் விநியோகம்
இப்போதும் ஈழத்தில்
இல்லாச் சூரியனுக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, January 09, 2014

என் ஊரும் ஒரு நாளும்...

பெருமழைதான்
என்றாலும்
வியர்வை பிசுபிசுக்க
நான் பிறந்த மண்ணில்
பரிச்சயமற்றவளாய்
பெண் தெய்வம்
ஒன்றைத் தேடி
மிக நிதானமாக
நடந்துகொண்டிருந்தேன்.

வாகனங்கள் நிறைந்த
ஒரு கூட்ட நெரிசலில்
பெண் தெய்வம் நிற்பதாக
அறிவித்துக்கொண்டிருந்தார்கள்
நானோ....
பாதை மாறியதை உணர்ந்து
மார்க்கங்களற்ற
பெண் தெய்வத்தை
தேடிக்கொண்டிருந்தேன்
பிறகும்.

மன்னிப்பும் தவறும்
மனித இயல்பென
மறுதலிக்கும் மனதில்
புத்தனின் பிறப்புக்கு
முன் பிறந்து 
கடவுளாக
மதிக்கப்படாத மனிதனின்
மென்சாந்தம் கண்டேன்
ஒரு சிலரிடம்.

சிரிப்பு என்னவென்றால்
பெண்கடவுளர்களோடு 
வீரக் கடவுளர்களையும்
பூட்டி வைத்திருந்தார்கள்
கள்ளர்களுக்குப் பயந்து.

ஊர்க்காற்றை மட்டும்
சேமித்துக்கொண்டு
மீண்டும்.....
வாடகை தேசம் 
வந்துவிட்டேன்
வெள்ளைக்
கடவுளர்களைக் கும்பிட!!!

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6058

ஹேமா(சுவிஸ்)

Friday, January 03, 2014

கூத்துக்காரன்...

மாட்சிமை பொருந்திய
கடவுள்களை
லஞ்சம் கொடுத்து
பாராட்டிக்கொண்டிருந்தான்
காரியக்காரன்.

வெளியில் வைத்தே
புன்சிரிப்போடு
குறளித் தேவைதை பற்றிய கதையைச்
சொல்லிக்கொண்டிருந்தார் அவர்
குறுகிய உருவம்
குறுணிபோல
குட்டையாய்
குட்டன்போலவென்று.

பேச்சை மாற்றியபோதும்
தடுமாறாத கடவுள்
சூத்திரப்பாவையின்
கயிற்றைச் சரிசெய்யத்தொடங்கியபடி
குட்டிச்சாத்தான்பற்றிய விளக்கத்தை
விளக்கியபடியே.

கடவுள் சொன்னால்
எல்லாமே சரிதானென
ஏற்றுக்கொண்டவன்
தானுமொரு குட்டிக்கடவுளை
செய்யத்தொடங்கியிருந்தான்
பலரது
கோணல் கண்களில்
வாய்களில்
தொங்கப்போவதை
அறியாமல்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, January 01, 2014

2013 ன் இனித்த நாட்கள்...

யாழ்ப்பாண
(பனை+கள்)பனங்கள்ளாக
உன் பேத்தல்களை
வோட்கா தூக்கிக்கொடுக்க
உன் போதைக் கண்களை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

நிரப்பிய நேரத்தைவிட
நினைக்கும் நேரம்தான்
வழிந்தோடுகிறது
கன்னக் கிண்ணமும்
இதழின் பள்ளமும்.

நினைவுகள் முட்ட முட்ட
திணறுகிறது வயிறு
இரைமீட்டிச் செரிக்கவிடுகிறேன்.

இன்னும் மாறாமல் நீ அப்படியேதான்...

சர்வமும்
காதல் சர்வஞ்ஞனென்று
சொல்லிக்கொள்ளும்
உன்னிடம் நான்...
2013 ல் நீ நிரப்பிய
முத்தக்குவளைகள் நீட்டியபடி
உன் ஒப்பத்திற்காக.

ஒருநாள்..

என்முலை கசிந்த
பால்வாசனை பரவி
விழித்த இரவில்
அமிலம் பட்ட விழிகளோடு
ஒரு காமமுத்தம்.

பிறந்த நாளில்...

சித்திரக்குழந்தைகள்
வன்னிச் சத்திரத்தில்
கும்பலாய் கொல்லப்பட்ட
கொடூரம் மறக்க
மறக்காத நாளில்
உப்புமுத்தம்.

இன்னொரு நாளில்...

கௌவுதலும் விடுவித்தலுமாய்
பிறந்த நாய்க்குட்டியென
கண்விழிக்கத்தொடங்கிய சமயம்
முழுசாய் சுயமறுத்து
காலடியில் வீழ்த்திய
மின்சாரமுத்தம்.

’ம்’ சொன்ன நாளில்...

மூங்கிலுக்குள்
ஒரு விடியற்காலையில்
உள் நுழைந்த இசைவண்டாய்
காட்டையே நிறம் மாற்றிய
கலவையில் குழப்பிய
ராகமுத்தம்.

மம்மல் நாளொன்றில்...

பனித்துளி நுனியில்
வலிக்காமல்
அமர்ந்தெதெழும்
சிறு பட்டாம்பூச்சியென
நுனி இதழ் கடித்து
ஏமாற்றி
பின் முழுவதையும்
மூச்சில் அள்ளும்
வாமன முத்தம்.

மழை நாளில்...

சமையல் பிந்திய கோபத்தில்
சண்டை முடித்து
சமாதானம் சமைத்த
வௌவால் முத்தம்...

சம்மதித்த நாளில்...

புதினங்கள் ஏதுமற்ற
செய்தித்தாளெனக் கிடக்கையில்
என் தனிமை கலைக்கும்
கலவியில்
கர்ப்பமும் சுமத்தலுமில்லா
குழந்தைகளை அருகே கிடத்தும்
யுத்தமுத்தம்.

அன்றும் இன்றும் என்றும்...
புத்தகத்தின் பக்கங்களென
நாளொன்றின் ஏடாய்
புரட்டினாலும்
தீராப் பக்கங்களை
ஒளித்தே வைத்திருக்கும்
அகராதியின்
வார்த்தைகள்போலத்தான்
எனக்குள் எப்போதும் நீ...

சரி...சரி
சரிபார்த்து ஒப்பமிடு
2013 க்கான பதிவேட்டில்
நம் முத்தங்களைக் கிரீடமாக்க !!!

ஹேமா (சுவிஸ்)