*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, February 27, 2013

வார்த்தை வலி...


சுழலும் நாக்கு வழி
இழுத்துப் பிடுங்கப்பட்ட
சில வார்த்தைகளில்
துடித்துச்சாகும்
சில மனங்கள்.

மனம்தாண்டி
சுண்டவைக்கும்
இரத்த நாளங்களையும்
செரிக்க முடியா
வார்த்தைகளால்
உறவுகளின்
ஒவ்வொரு அணுக்களும்
அறுந்து தொங்கும்.

நாட்காட்டிகள்
நாட்களைப் பிய்த்தெறிந்து
கூடிக் கொண்டாடும்
வார்த்தைகள்
மதுக்குவளைகளோடு !

ஹேமா(சுவிஸ்)

Friday, February 22, 2013

மணிக்கு 300 கி.மீ...


காற்றின் இடுக்குகளில் புகுந்து
மிகவேகப் பயணம்
பசியின் கொடூர ஓசை
நடுவயிற்றுப்பகுதியில்
உருட்டிய தாயக்கட்டையாய்
உருண்டு திரும்பி
சிவப்பு மஞ்சளில்கூட
தரித்தலுக்கு நேரமின்றி...

வானம்
பரந்து விரிந்து
எல்லையற்றதென
படித்த ஞாபகம்...
ஒற்றை இறகைக்
கழற்றிவிட்டுப்
பறக்கிறதோர் பறவை...
தன் வாழ்வை உறுதிப்படுத்தியபடி
வானொலிச் செய்திகளேதும்
மகிழ்ச்சியாய் இல்லை...

பறக்கும் வேகத்தில்
எதிர்த்திசைக் காற்றில்
யாரோ.....
" 'ஓ' குறுப் இரத்தமாம்
சேமிப்பில் இல்லையாம்"
நிறுத்தல் தேவையற்று
ஓட்டம்
எங்கே.....ஏனெனத் தெரியாமல்...

பிந்திய இரவில்
கூட்டம் கலைந்து
ஓட்டம் ஓய்ந்து
கூடு வந்தடைய
செவி நுழைந்த செய்தியது
எனையறைந்து வெளிவர...

ஓ.........
'ஓ' குறூப்தான்
என் இரத்தம்....
கொடுத்தோ கேட்டோ
வந்திருக்கலாமோ !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, February 20, 2013

காலம் கடத்தும் காதல்...


உனக்கான காதலைப்பற்றி
எழுதிக்கொண்டே இருக்கிறேன்
நீயோ...
காதலே தெரியாதவனாய்
நடித்தபடி
உனக்கு யார்
ஆஸ்கார் தரமுடியும்
என்னைத்தவிர.

தள்ளிப்போகிறாய்
காலம் கடந்துகொண்டிருக்கிறது
காலத்திற்காக காத்திருப்பதும்
அதைக் கடந்து நடப்பதும்
கொடுமை.

பேரம் பேசி
போன நேரநிமிடங்களை
பெற்றுக்கொள்வாயா
சமாதானமற்றது காலம்
நம் அரசியல்போல 

இரக்கமற்றது உன்னைவிட.

தொலைந்த ஒன்றிற்காக
தவமிருந்து
காலத்தோடு சமரசம்
பேசிக்கொண்டவள் நான்.

ஒரே ஒரு தரம்
காதலித்துத்தான் பாரேன்
பிடிக்கும் உனக்கு என்னை.


யாரோடும்.....
எதுவும் முடிவதில்லை!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 19, 2013

கோரத்தாண்டவம்...



என் மண் மிதித்தபோது
வீரிட்ட கிபீரில்
"இது என் தேசமென"
வெளிவரவிருந்த
வார்த்தை
என் குரல்வளையை
நெரித்துப் போனது.

என் வீட்டு வாசலில்
கடத்தலும் கப்பமும் கேட்டு
மிரட்டிய
"சகோதரமொழிமுகங்கள்".

அந்நியப்பட்டவளாய்
முழி பிதுங்கி நிற்கையில்
மரணத்தின் வாசகத்தை
காதில் சொல்லிப் போனார்கள்
அவர்கள்.

இங்கேதானே விளையாடினேன்
கை தேயத் தேய
இந்த மண்ணில்தானே
"அ" எழுதினேன்.

சாத்தாத கதவுகளே பாதுகாப்பென
இரத்த மேட்டில்
தெருநாயாகிவிட்ட
எவரினதோ ஒரு நாயும்
வியர்த்துக் கொட்ட
என்னோடு குந்தியிருக்க.

காகக் கூட்டமொன்று
ஒப்பாரி வைக்கிறது
அநாதரவாய்
கொல்லப்பட்டுக் கிடக்கும்
தமிழனின் உடலொன்றுக்கு !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 14, 2013

கருத்த இரவிலொரு காதல் சிதறல்...




மழைபிடித்திருந்தாலும் குடை பிடித்து நடக்கையில் தவறுதலாய்த் தொட்டு விழும் தூறல் துளிகளை ஏதோவொரு திரவமெனத் துவாலையால் துடைத்து எடுத்துவிடுவதுபோல சுலபமாய் முடிந்துவிடுவன அல்ல அவன் நினைவுகள்.

ஒரு மழைக்காலத்தில் என் வீட்டில் கூரை பிய்த்தெறிந்த காற்றின் ஈரலிப்போடு புகுந்த அவன் தேகத்தின் தத்துவங்களை ரசித்திருந்தேன்.வாழ்வு ஒரு அணுவென்றால் அதன் எல்லாத் துகள்களையும் உணர்ந்துவைத்திருந்த அமைதி அந்த முகத்தில்.

நேற்றைய போதை தீர இன்றும் கொஞ்சம் போதை தேவைப்படுவதுபோல இப்போதெல்லாம் தினம் தினம் தேவைப்படுகிறது போதையான அவன் நினைவுகளைத் தூங்க வைக்கக் கொஞ்சம் சிவப்புத் திராட்சைரசம்.போதையேறினால் தூக்கம் கண்ணைக் கட்டுமென்பார்கள்.எனக்கோ அப்போதுதான் அவன் மடிதேடித் தூக்கம் தொலைந்து கலைகிறது.


நீ....சொல்லாத
ஒற்றைச் சொல்லுக்குள்
பெருஞ்சுழியென
விழுந்தும்
அமிழ்ந்தும் மிதந்துமாய்
குமிழிகள்
விடத்தொடங்குகிறதென்
கற்பனை
ஏதாவது
சொல்லியிருப்பாயோ
என்னோடு பேசியிருந்தால்
இன்று......நீ !



செல்லா......இப்போதெல்லாம் முன்னைவிட அதிகம் நினைக்கிறேன் உன்னை.அதிகமான கவிதைகளுக்குள் உன் ஞாபகம் ஒரு சொட்டாவது சொட்டி கவிதையை அழகுபடுத்தியிருக்கும் நம் காதல்.....இல்லையில்லை உன் காதல்.காதல் ஒரு பொதுமறையென்பார்கள்.உன்னை நினைத்து நான் எழுதத் தமக்கானதாய்ப் பலர் பொருத்தியும் கொள்கிறார்கள்.உன் பெயரைப் பலமாதிரியும் திரித்தெழுதப் பழகிவிட்டிருக்கிறேன் யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி நான்.ஆனால் எழுதும்போது உயிராய் நீ என் எண்ணம் இறுக்கி வலித்து கண்வழி கசிவதும் உன் குரலைக் காற்றுப்பிரித்து நான் தேடுவதும்.......யாருக்குத் தெரியும்.உனக்காவது.....சொல்லாமல் போன உனக்கு உணர்வின் அவஸ்தை புரியுமா என்ன.உணர்வுகளை தேசக்காட்டில் பரப்பிவிட்டல்லவா என்னைத் தொலைத்திருந்தாய்.மன்னிப்பேயில்லா பாவக்காரன் நீ...!

பறத்தலும் இருத்தலும் எனக்கேனோ இயல்பாயில்லை.இயல்பாயிருந்தாலும் உள்நிற்கும் நீ என் எழுத்துவழி என் இயல்பைப் பறித்தபடி.நீ என்கிற வட்ட வடிவத்துள் அடைத்துப்போய்விட்டாய் என் சந்தோஷங்களை.பலதரப்பட்ட சமூகச் சதுரத்துள் நான் திணிக்கப்பட்டாலும் உனக்கான வட்டத்துள் வாழ்வதே பிடித்திருக்கிறது எனக்கு.



நீ....
அப்படியே இருந்துவிடு
முறைத்த முகம்தான்
உனக்கழகு
கலைக்கும் நான்
கிராதகியாகவும்
தெரியலாம் உனக்கு.
 

இல்லை....
இல்லாமல் இருப்பதுதானே
அதன் நிறைவு
சபிக்கப்பட்ட
சில விஷயங்கள்
அப்படியே இருப்பதுதான்
சௌகரியம்
அப்படியே இருந்துவிடு
நீ....!


போர்க்காலங்களில் அதிகமாகச் சந்திப்பதுகூட முடிவதில்லை.4 - 5 மாதத்திற்குப்பிறகு நீ வந்திருப்பதாக அறிந்து கோழி தூங்கும் இரவு எமக்காய் இன்னும் கருகியிருக்க வந்தேன்.அதுவும் ஒரு காதல் மாதம் முடியும் தருணம்தான்.மணல் குவித்த கடைச்சல் பட்டடை முற்றத்திற்கு.இரவு 11 ஐத் தாண்டியிருந்தது.உன்னைச் சுமந்து பறக்கும் வாகனம் சாய்த்து வைத்திருந்த அடையாளத்தில் உன்னை நெருங்கினேன்.நீயோ கையைத் தலையணையாக்கிக் பயண அலுப்பில் கொஞ்சம் அசந்துமிருந்தாய்.எழுப்ப மனமில்லாமல் உன் தலையை என் மடி மீது அணைத்துக் கிடத்த.....வந்துவிட்டதைத் தெரிந்துகொண்டே என்னை இறுக்கிவிட்டு மீண்டும் தளர்த்தித் தொடர்ந்தும் உறங்கிவிட்டிருந்தாய்.

15 நிமிடத்தின் பின்.....

ஏனப்பா அலுப்பாயிருந்தால் வந்திருக்கவேணாமே என்றேன்....

வராவிட்டால் இந்த தலை கோதும் சொர்க்கமும் இந்த மடிமீதான நித்திரையும் கிடைச்சிருக்குமோ.அதுதானே என்னை இங்கு இழுத்து வருகிறதென்றாய்.

தொடர்ந்து.....இப்பிடித்தானடி சொல்லுவாய்.வராவிட்டாலும் காதலர் தினத்துக்குத்தான் வரவுமில்ல தரவுமில்ல.பிறகெண்டாலும் வந்திருக்கலாமே எண்டும் கோவிச்சுக்கொள்ளுவாய்.எனக்குத் தெரியாதோ உன்ர குரங்குக் குணத்தை......

அப்ப....அப்ப நான் குரங்கோ.எனக்காகத்தான் வந்தனீங்களோ.உங்களுக்காக இல்ல......எனக்காக மட்டுமெண்டா இனி வராதேங்கோ.....

என்ன சொன்னாலும் முட்டையில என்னமோ பிடுங்கியெடுக்கிறமாதிரித்தான் நீ.....உன்னை.....உன்னை.....

என்ன என்ன....இப்ப என்ன....கொஞ்சம் கையைக் காலை அந்தந்த இடத்தில ஒழுங்கா வச்சிருங்கோ சொல்லிப்போட்டன்.....

சரி நேரமாகுது.சாப்பிட்டும் இருக்கமாட்டீங்கள் என்றபடி நான் கொண்டு வந்திருந்த உணவைக் குழைத்துக் கொடுக்க குழந்தைபோல ஆ...... என்கிறாய் ஊட்டிவிடும்படி.ஊட்டும்போது வேண்டுமென்றே கையில் மெதுவாகப் பல் படக் கடித்து இருட்டிலும் கொஞ்சிச் சிரிக்கிறாய்.

அச்சூஊஊஊஊஊஊஊஊஊஊ...........சாப்பாடு தந்தால் பேசாமல் சாப்பிடுங்கோ பாப்பம்.அதுக்குள்ள ஒரு சேட்டை உங்களுக்கு.ஆளைப்பார் ....என்கிறேன் நான்.

இந்தக் கரிசனத்துக்காவும் கையைக் கடிக்கவும்தானே இவ்வளவு நேரம் இந்த மணல்ல தவம் கிடந்தன்.வரம் தரும் தேவதையடி நீ என்கிறாய் நீ.

நாளைக்கே போறீங்களோ என்கிறேன்....

ம்ம்ம் என்கிறாய்.....

ம்ம்ம்............

எதுக்கு இந்த ம்ம்ம்ம்ம்.......

சரி அப்ப வெளிக்கிடுங்கோ.நல்லா நேரமாச்சு.கொஞ்சம் அமைதியா வீட்ல போய்ப் படுங்கோ என்கிறேன்.

போகலாம் பொறு என்றபடி அணைத்து என் தலைகோதி நெற்றியில் ஒரு முத்தமும் இடுகிறாய்......ஒரு கவிதையடி நீயெனக்கு என்றபடி.

அடிக்கடி என் பிறவிப் பயனை நினவுகொள்ள வைத்தாய் உன் அன்பால்.உன் தோள் சாய்ந்தபடியே புளியமரத்தடிச் சந்திவரை வருகிறேன் உன்னோடு.என் வலது கையில் பத்து விரல்கள் இருந்து அப்போது.

குழந்தைபோல எனைச்சுற்றியிறுக்கி அழாமல் இருக்கவேணும்.நேரம் கிடைச்சால் ஓடி வந்திடுவன் என்ர செல்லத்தைப் பார்க்க........ என்று சொன்னாலும் குரலில் தளர்வு விளங்கியது எனக்கு.இருவருமே அழுதுவிட்டோம் ஒருவருக்கொருவர் தெரியாமல்.

அணைத்தபடி சமைந்திருக்க பூவரசு உரசி எம்மை நேரம் பார்க்க வைத்தது.

அமர்ந்திருந்த மணல்மேடுகூட எமைப்பார்த்து ஏங்க எம் காதலை அம்மணலுக்குள் அப்போதைக்குப் புதைத்துவிட்டு பிரிந்துபோனோம்.

அதன் பிறகு....



சூன்யத்துள் வாழ்வதாகப் பரிகசிக்கிறார்கள் சிலர் என்னை.இல்லை......காலம் இப்போதும் என்னை எடுத்துச் சென்றுகொண்டுதானிருக்கிறது என்னுள் படர்ந்திருந்த உனக்கான தீ அணையாமல்.பற்றிக்கொண்ட சுடர்கள் எங்குமிருக்கிறது.எங்காவது சில உருவங்களின் திருப்பத்தில் உருமாற்றங்களோடு சந்தித்துக்கொள்கிறேன்.என் சுவாசம் தொலைத்த உன்னை எப்போதாவது காணாமலா இறந்துவிடுவேன்.நீ வளர்த்த தேசத்துக் காற்றில் கலந்த காவலன் தானே நீ....கண்டு கொள்வேன் உன்னை என் காவலனாய் காதலனாய்...........!!!


இன்னொரு நிழல்
உன் போல
இந்தா பிடி...
பிடியென
உன்னோடு
ஒளித்தோடி
பார்வைகள் மறைத்து
தேடுவதும்
தொலைப்பதுமே
வாழ்வாகிறது எனக்கு
கண்
மாற்றிக் கட்டுகிறாய் நீ
வாழ்வின்
அத்தனை கனவுகளையும்
வலிகளையும்
கட்டிக்கொள்கிறேன்
உனக்காக நான் !


நட்புக்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான காதலர் தின வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 12, 2013

காதல் மாதமிது...


பனிநிறைந்த நாளொன்றில்
கைபிடித்துக் கூட்டி போகிறாய் நீ
இருவர் கால்களும்
புதையப் புதைய
கனதூரம் நடக்கிறோம்
தெருமுடிவதாக எழுதிய பலகை
திரும்ப எத்தனிக்க.....

கட்டியிழுத்து
வாழ்வின் ஆனந்தங்களை
அள்ளித் தந்துக்கொண்டிருந்தாய்
அந்தப் பனியிரவும் வெட்கி இறுக.....

நான் மௌனதேசமென்றேன்
நீயோ மயக்கதேசமென்றாய்
கண்கள் செருக
உள்ளங்கையில் 
அள்ளி வைத்த பனியில்
உயிரின் வெக்கையை
அளந்து சொல்லென
அமர்த்துகிறாய் ஒரு இருக்கையில்
அதுவொரு கல்லறை.....

கனத்து அணைக்கிறது ஒரு காற்று
சிலிர்த்து இதழில் குந்தியிருந்து
முத்தமிட்டுக் களைத்துக் கரைகிறது
ஒற்றைப் பனித்துளி
பனிப்பாரம் தாங்கா
கிளையொன்று ஒடியும் ஓசை
சாய்ந்துகொள்கிறேன்
கல்லறைமீது
ஆசீர்வதிக்கப்படுகிறது காதல்
அது கனவல்ல
உன் மீது நான் !

ஹேமா(சுவிஸ்)

Monday, February 11, 2013

கர்வம் அவனழகு...

மன்றாட்டங்களை அவன்
ஒருபோதும்
செவிமடுப்பதில்லை
தவிர்க்கிறான்
சிலுவைகளால்
அறையப்பட்டவனிடம்
இரக்கம்
இருக்குமென்றிருந்தேன்
கர்வச் சிலுவைகளால்
தன்னைத்தானே
அறைந்துகொண்டிருப்பதை
அறிந்துகொண்டிருக்கிறேன்
இப்போது.

அவன் மொழியறிந்து
அவனையே சுற்றி வருகிறேன்
தொட்டுத் தடவும் தென்றலாக
தொட்டு வழி கடக்கையில்
தவறிப் பிறழ்கிறது
இலக்கணம்.

தொடரும்
நினைவுகள் அப்பிய
மனச்சுவரில்
வெள்ளையடித்தல் பற்றிய
அப்பிப்பிராயம் ஏதுமில்லாமல்
அவன்.

ஒரு புத்தகம்
இல்லை
ஒரு துளிப் பனி
யன்னல் குருவி
வாசல்படி
என்னைப்பற்றிய எரிச்சல்
வேலைப்பளு
வானம் வரா நிலவு
பசிக்கும் வயிறு
இவைகள் தவிர
எல்லாம் எல்லாமே
பெரும்பாரமாய் அவனுக்குள்.

பெரும்பாரங்களை
சுமந்துகொண்டிருக்கும் அவனிடம்
போதுமானதாய் இருக்கிறது
கொஞ்சம் மகிழ்ச்சியும்
நிறைந்த வலியும்.

இனி யாசிக்க ஏதுமில்லை
அவனிடம்
இயலாமைக்குள்
இல்லையாய்
இருப்பவனிடம்
நிறைந்திருக்கும்
என் அன்பு.

தொடர்கிறேன்
தனிமையென்கிற
மெழுகுதிரிச் சுவர்களின்
அடர்த்தி நிழல்களுக்கு
ஒன்று நான்
ஒன்று அவன்
என்று பெயரிட்டு!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, February 08, 2013

புதுப்புரட்சி...

உன‌க்கும் என‌க்குமான‌
காதல் பேச்சுக்களை 
இடைமுறித்து 
சடுகுடு ஆட 
இரண்டு விருந்தாளிகள்.

விளையாட்டு  தோற்றுவிட
வெளியேறுகிறது 
சாபங்கள் சில.

மைதானம் மிதித்து
புற்கள் கருகச் 
சாபமிட்ட அவர்கள்
தேநீர்க் கோப்பைகளை விட்டுத் 
தொலைந்திருந்தனர்.

நான்கு இருக்கைக‌ள்
இப்போ வெறுமையாய்!!! 

ஹேமா(சுவிஸ்)

Wednesday, February 06, 2013

பனி தேசத்துக் குரல்...


நீண்ட.......
கண் சிவந்த இரவுகளை
தாலாட்டிக்கொண்டிருக்கிறேன்
பகலில்
பனி மேடுகளில்
பெய்யும் மழைத்துளிகளை
வேண்டிக்கொள்கிறேன் கரையாதிருக்க
இரவுப் பாடல்களை
பகலிலும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
பனிக்கரடிகள் நான் ரசிக்க
தேடிக்கொண்டிருக்கின்றன
அவைகள்
வான் ஊதும் வெப்பக்குழலை
எனக்குமாய்
இடைவெளி விட்டு விட்டு
எழுதிப்போகிறது
பனிக்குருவி
கவிதையொன்றை....

நடுங்கும் கைகள்
வெப்ப வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்க
இங்கு யாருமில்லையென
எல்லா இரவுகளிலும்
எழுதி வைப்பதே
பாதுகாப்பாயிருக்கிறது எனக்கு.

திசைகள் அசைந்தபின்னும்
இருண்டே கிடக்கும்
பகலிலும்
நாட்குறிப்புகள் தொடரும்
நீ.........
தனித்தவள் என்றபடியே!!!

ஹேமா(சுவிஸ்)