*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label விரக்தி. Show all posts
Showing posts with label விரக்தி. Show all posts

Tuesday, May 07, 2013

வெறும் நாள்...


சுருண்டு படுத்திருக்கும் பூனைக்குட்டியென
இன்று வெறும் நாளாயிருக்கிறது
எந்தப் பாத்திரத்துக்குள்ளும் அடங்குவதாயில்லை.
படுத்திருக்கும் சருகென
கொஞ்சம் படபடத்து தெருக்கள் விடிந்தாலும்
என் நாள் வெறுமையாய் இதுவரை படுத்திருந்தது.
பள்ளிப்பிள்ளைகள் நியாயமற்ற பத்திரிகைகளை
வீசிப்போனார்கள் என் வாசலில்.
எதிர்ச் சுவரில் காதலுக்கான வியாபார விளம்பரம்.

இப்போது மதியம்.....

சூரியன் என் கண்களுக்கு
எப்போதும் மறைந்தபடிதான்
வெறும் நாளிலாவது
எனக்காகச் சிரித்திருக்கலாம் ஒரு கையசைப்போடு.
பூங்காவில் விளையாடும் குழந்தை
ஒளித்துவிளையாடிப் பின் பிடிபட்டபோது
இந்த வெறும் நாள் ஒரு கூடல்காட்டின்
பயங்கரத்தைக் கடப்பதாய் உணர்கிறேன்.

ஒன்றேயொன்று.....

ஒரு மென்மையான வெள்ளைப்பூவை
என் வாசலில் வைத்து வணக்கமும் எழுதிப்போயிருக்கிறது
யாரொருவரும் கையளிக்காத ஆதுரத்தில் நனைத்தெடுத்து
இன்றைய வெறும் நாள்!!!

ஆதுரம் - பரபரப்பு

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 20, 2009

தேவையில்லை இரவல்...

தனித்த இரவொன்றில்
சிலையாய் இருந்தேன்.
என்மீது பாரமழுத்தி
என் மௌனங்களும்
சிலையாய் இறுகியபடி.

இரவலாய் சிறகுகள் கிடைத்தால்
கொஞ்சம் பறக்கலாம் போல.
எழும்ப வைத்தது
தூரத்து நிலவைத் தேடும்
நட்சத்திரங்களின் பாடல்.

இரவல் மூச்சுக்கள் பற்றி
இறாக்கைப் புத்தகங்களுக்குள்
இரவல் சிந்தனைகள் தேடினேன்.
கிடைத்தது.

மூங்கிலின் இசை
காற்றின் இரவல்.
சூரிய ஒளியின் இரவல்
நிலவிடமும் நட்சத்திரங்களிடமும்.

ஆனால் மனுஷியாய் எனக்குப்
பிடிக்கவில்லை இரவல் மூச்சு.
தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே.

இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்து கொண்டு
மீண்டும்...
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!

வாழ்வியல் பற்றி எழுத மாட்டேனாம்
என்று தூண்டியவர் மேவீ

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 30, 2009

எல்லாம் சும்மா...

காத்துக் கிடப்பதிலேயே
வாழ்வின் காலம் கழிந்தபடி.

கரு தாண்டி வெளி உலகம் வர
அம்மாவின் முகம் காண
அப்பாவைச் சந்திக்க
இயற்கையை சுவாசிக்க
நடக்கப் பயில
பேசிப் பழக
பாடசாலை போக
பள்ளி படிக்க
காதலி தேட
வானத்தை வில்லாய் வளைக்க
காற்றோடு ஊர்வலம் போக
உத்தியோகம் பார்க்க
கல்யாணம் பண்ணிக்கொள்ள
கனவுகளைத் தூரம் தள்ள
குழந்தை பெற்றுக்கொள்ள
எதிர்காலத்தை எதிர்த்துப் பேச
பணம் சேர்க்க
வீடு கட்ட
உறவுகளுக்காக
உரிமைகளுக்காக என்றபடி
எத்தனை...எத்தனையோ...

இதற்குள்...
இறைவனும் காத்திருக்கிறான்
தந்த உயிரைத்
திரும்பவும் எடுத்துக் கொள்ள.

இதற்கு நடுவில்...
மனிதனின் காத்திருப்புக்கள்
அர்த்தமே இல்லாமல் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 06, 2009

நான் கறுப்பு...

காலக்கிறுக்கனின்
வார்த்தைகளில் தடுமாற்றம்.
குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி
திருப்திகள் அற்ற மரணங்கள்போல
அர்த்தமற்றதாய் அந்தச் சொல்.


கறுப்பு நீ....
அருவருக்கும்
அட்டைக்கறுப்பு...நீ.


கறுப்பின் கை பிடித்து
லாகவகமாய் புல்லாங்குழல் வாசித்து
கறுப்புக் காற்றில் கலந்துவரும்
கறுப்பு இசை.


ஏழைகள் எவருமில்லா
நகரத்தை உருவாக்க
அங்கும்
கடவுளும் கறுப்பாய்.
மழை பிரசவிக்க
கருக்கொள்ளும் மேகம் கறுப்பு.


நான் புதைத்துவிட்ட
கறுப்பு இரகசியம் அது.
தேடிப்பிடித்து
அதைத் தோண்டி எடுத்தாலும்
கறுப்பாய்தான்
கருவைரமாய் அதுவும்.


கறுப்புப் புள்ளியில் வாழ்க்கை
ஆரம்பம் எங்கே
முடிவும் எங்கே.
சுற்றி வரும் சனிப்பார்வை கறுப்பாம்.
கருவறை கறுப்பாம்.
காறித்துப்பும் கயவரின்
எண்ணங்கள் கறுப்பாலேயே
வரையப்பட்டதாய்.


ஒரு சிறு விம்பம்
என் பின்னாலேயே
குரூரமாய்...
சிலசமயம் குழந்தையாய்
கறுப்பு நிழலோடு காத்திருப்பதாய்.
இறப்பிலும்கூட
கறுப்புச் சவக்குழிக்குள்ளும் கூட
வருவதாய் உறுதிமொழியோடு.


திட்டமிட முடியாத
கறுப்பு உலகில்
நேற்றும் நாளையும்
இன்றுபோல
கறுப்பு வண்ணமாய் எனக்கு.
கனவாய் மிதக்கும்
நம்பிக்கைகளும் கறுப்பு.


முடிந்த முடிவுகளோ
முடிக்க முடியாத முடிவுகளோ
எதுவுமற்று
பயங்கரமான
கறுப்பு உலகத்தில்
வாழும்
கறுப்பு மனிதனாய் நான்!!!


ஹேமா(சுவிஸ்)

Sunday, March 23, 2008

விதிக்கு ஓர் வேள்வி...

வாழ்வு புயல் வேகம்.
விழுதலும் எழுவதுமாகி
வலிக்கிறது.
வழி கடக்க
உடம்பும் மனமும்
சேர்ந்தே சோர்கிறது.
வைராக்கியத்தை
விட்டு விட்டால்...
கிடையில் கிடந்தேவிடும்.
தொடர்ந்து நடக்க...
காடும் கரம்பும்
கல்லும் முள்ளும்.
மலர்ப்பாதை ஒன்றுக்காய்
தாகம் தீர்க்க...
தடாகம் ஒன்றுக்காய்
ஏக்கமும் எதிர்பார்ப்புக்களும்
வாழ்வுக்குக்குள்.
ஏக்கமும்...எதிர்பார்ப்புக்களும்
இயற்கையே.
வாழ்வே ஏக்கமானால்....?
விடுகதைக்கு விடையுண்டு.
விடையில்லா வாழ்விது.
விதி என்ற பெயரில்
வேளை என்ற பெயரில்
வாழ்வின் எல்லை வரை
எல்லாமே ஆசாபாசங்கள்.
கொள்ளை போகிறதே வாழ்வு.
விதியும் வேளையும்
எதுவரை...?
விதிக்கும் வேளைக்கும்
வராதா சாவொன்று.
கொள்ளி கொண்டு
நான் கொழுத்திவிட!!!!!!

ஹேமா(சுவிஸ்)11.02.2003

Wednesday, March 12, 2008

விதவை...