*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, August 26, 2008

திருமலை அதிர்வு...

இப்போ...இப்போ
ஒரு நொடிக்குள்
இரத்தம் உறைந்து நீராய்.

பெற்றவர் குரலோடு
இணைந்திருக்க
அவலக் குரல்களும்
வெடிச்சத்தமும்
வானூர்தியின் இரைச்சலும்
நாய்களின் குரைப்பும்
கைபேசியில் தெளிவாய்
மிக மிகத் தெளிவாய்.

"அப்பா வாங்கோ...
அம்மா லைட்டை நிப்பாட்டுங்கோ...
உள்ளுக்கு வாங்கோ...
பின் வேலி கேட்டைத் திற...
ஓடு..ஓடு...
புரியவில்லை
ஏன் எதற்குப் புரியவில்லை
அழுகிறேன் .
தவிர தெரியவில்லை எனக்கு.
திரும்பத் தொடர்பு தரவில்லை.

சுவிஸில் தம்பிக்கும்
ஜேர்மன் தங்கைக்கும் சொல்லிவிட்டு
அழுது கொண்டிருக்கிறேன்
கையாலாகதவளாய்.
என்ன நடந்திருக்கும்.
யாருக்கு என்ன ஆகியிருக்கும்.
ஐயோ...ஐயோ...

திசைகளின் நோக்கம் அரசியல்.
முடியுமோ முடியாதோ
பெரிய பாறாங்கற்களை
விரும்பியபடி
எங்கும் எதிலும்
தூக்க முடிந்த பாரம் தூக்கி
எறியப்படுகிறது.
ஆயுதங்களால்
பாறாங்கற்களைப் புரட்டி
பற்றைக் காடுகளை
வெட்டிப் புற்தரையாக்கி
பசுமையாக்கி
வா பந்தாடுவோம் என்றாலும்
வர மறுக்கும்
வன்மைப் புரட்சியாளர்கள்.

அழிவோம்
ஆனாலும் விட்டுக்கொடோம்
ஆணவ அதிகாரங்கள்.
எறிகின்ற கற்களுக்குள்
புதைபட்டு
ஆயுளை விடுவது
அற்பப் பதர்களே.

வயோதிபம் தள்ளாட
தானுண்டு தன் மருந்துண்டு
உயிர் போகும் வயதினில்
நின்மதியாய் மூச்சைவிட்டு
மூச்சைவிட
கொஞ்சம் விடுங்களேன்!!!

ஹேமா(சுவிஸ்)

26 comments:

Anonymous said...

சிறப்பான கவிதைப் பதிவு,சாதரண மனிதர்களின் மனதின் வெளிப்படையான பார்வை சிறப்பாக உள்ளது.தொடருங்கள்

சுதன்.

நிலா முகிலன் said...

உங்கள் கவிதையின் அதிர்வு திருமலையில் கேட்கிறதோ இல்லையோ.. என் இதயத்தில் இன்னும் அதிர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மனதை கனமாக்கும் கவிதை.

தீலிபன் said...

திருமலை மற்றும் ஒரு திருப்பதி மலை போல் புனிதம் பெறும் என் தலைவன் கால்பட்டால்.

சேவியர் said...

//அழிவோம்
ஆனாலும் விட்டுக்கொடோம்
ஆணவ அதிகாரங்கள்.
எறிகின்ற கற்களுக்குள்
புதைபட்டு
ஆயுளை விடுவது
அற்பப் பதர்களே.
//

கனக்க வைக்கும் கவிதை.

ஹேமா said...

நன்றி சுதன் மனப் பதட்டத்தோடு உடனடியாக எழுதிவிட்டேன்
மனம் வலிக்க.

ஹேமா said...

நன்றி முகிலன்.எனக்குள்ளும் நான் தொலைபேசிக்குள்ளால் கேட்ட அதிர்வு இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஹேமா said...

திலீபன் வந்திட்டீங்களா?சுகம்தானே.உங்கள் வாக்குப் பலிக்கட்டும்.காத்திருக்கிறோம்.ஆனால்அதற்கிடையில் எல்லாவற்றையும் இழந்துகொண்டிருக்கிறோமே.அதுதான் பயமாயிருக்கு.

ஹேமா said...

நன்றி அண்ணா.மனதின் பாரம் எழுத்துக்களிலும் கனக்கிறது.

களத்துமேடு said...

அருமையான எனக்குப் பிடித்த கவி வரிகள்.
//அழிவோம்
ஆனாலும் விட்டுக்கொடோம்
ஆணவ அதிகாரங்கள்.
எறிகின்ற கற்களுக்குள்
புதைபட்டு
ஆயுளை விடுவது
அற்பப் பதர்களே.//

ஹேமாவின் சாட்சியமாக எத்தனையோ ஹேமாக்களின் -அழுகுரல்கள்
திருமலையில் !

இலங்கை வாழ் தமிழர்கள் இன்று கேட்பது நிம்மதியான வாழ்க்கையைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை புரிந்தும் புரியாதவர்களாக ஆணவம் தலைக்கெகிறி யுத்தமே தீர்வென்று வெறி கொண்டலைவோரை என்னவென்று சொல்வது !

எம்மால் முடிந்ததை ஊடகங்களினூடாக செய்வோம் !

நிலா முகிலன் said...

கேட்க மறந்துவிட்டேன். தங்கள் உறவுகளுக்கு ஒன்றும் ஆகவில்லையே?

ஹேமா said...

நன்றி முகிலன்.இன்று காலை தொடர்பு கொள்ளக் கூடியதாக இருந்தது.அம்மாதான் இன்னும் பயத்திலிருந்து வெளிவரவில்லை.
மற்றும்படி சுகமே.

ஹேமா said...

களத்துமேடு நன்றி.எமக்கு அமைதியாக வாழ ஒரு தீர்வு வேணும் என்பது உண்மை.என்றாலும் அழிவுகளையும் இழப்புக்களையும் இனியும் தாங்கமுடியவில்லை.
நிறையவே இழந்துவிட்டோம் எல்லா வகையாலும்

Anonymous said...

kalakkurinka Hema.manasin vethanaiyai appadiye allik koddi irukku kavithai.mana paaraththaik kuraikka ithuvum oru nalla vazhi.thodarunkal.Ram.

கோவை விஜய் said...

அமைதியும் சுதந்திரமும் நிம்மதிப் பெருமுச்சோடு ஆனந்தம் தரும் நன்னாள் வெகு அருகிலுள்ளது.

சோகக் கவிதையெல்லம்
சுகக் கவிதயாய் மாறதோ

மாறும் நிச்சயம் இது
நடக்கும் நாள் விடியட்டும்

தீலிபன் said...

என்ன இந்த விரக்தி, வீழமாட்டோம் வீழ்ந்தாலும் வீர தோல்வி, சில நாய்கள் போல் நக்கி கொண்டு தோல்வி அடையவில்லை. ஈழ நாட்டை உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உருப்புடாதது_அணிமா said...

மனது கனக்கிறது

ஹேமா said...

நன்றி ராம்.அடிக்கடி வராவிட்டாலும் எப்போதாவது வந்து ஆறுதல் சொல்லிப் போகிறீகள்.உண்மைதான் எழுதுவதால் மனப்பாரங்கள் குறைகிறது.

ஹேமா said...

ஆமாம் கோவை விஜய்,நிச்சயம் ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையோடுதான் காத்திருக்கிறோம்.அதோடு உங்களைப் போல நல்ல உள்ளங்களின் பிரார்த்தனைகளும் சேரட்டும்.

ஹேமா said...

திலீபன் உண்மையில் மனம் சில சமயங்களில் விரக்தியடைகிறதுதான்.
என்ன செய்யலாம்!எங்களை விட நீங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.
நம்புவோம்.காத்திருப்போம்.
அந்த நல்ல நாளுக்காக.

ஹேமா said...

நன்றி உருப்படாதது-அணிமா.
எத்தனை காலங்கள்தான் இந்தப் பாரங்களையும்,துயரங்களையும் சுமக்கிறோம்.பார்ப்போம்...ஏறிய சுமை இறங்கத்தானே வேணும்.

இசக்கிமுத்து said...

பதட்டப்பட்டு எழுதினாலும், உணரச்சி பொங்க எழுதியிருக்கிறீர்கள் ‍சகோதரி!! எல்லா தமிழர்களின் ஆசையும் ஈழத்தில் அமைதி திரும்பி ஆனந்தமாய் வாழவேண்டும் என்பது தான்!!!

உருப்புடாதது_அணிமா said...

///எத்தனை காலங்கள்தான் இந்தப் பாரங்களையும்,துயரங்களையும் சுமக்கிறோம்.பார்ப்போம்...ஏறிய சுமை இறங்கத்தானே வேணும்.///

கண்டிப்பாக துயரங்கள் ஒருநாள் சந்தோசமாக மாறும்..
மாறிவிடும் என்ற நம்பிக்கை தான் வாழ்கையே..

தமிழ்ப்பறவை said...

///எத்தனை காலங்கள்தான் இந்தப் பாரங்களையும்,துயரங்களையும் சுமக்கிறோம்.பார்ப்போம்...ஏறிய சுமை இறங்கத்தானே வேணும்.///
சுமக்கிற துயரச்சுமைகள் எல்லாம் மலர்ப்பந்தங்களாக வேண்டுகிறேன்.
அனைவரும் சுகம்தானே ஹேமா...?

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா அப்பா அம்மா ஊரில் சுகம்.உங்கள் வாழ்த்துப் பலிக்கட்டும்.
நன்றி.காத்திருக்கிறேன்.

Anonymous said...

ம்.....கவி.....தை
பரவாயீல்லை- கவி வரியிலாவது.
"ஜெர்மன்யில் உள்ள தங்கை "
என்ற நினைவிக்கு நன்றி கவி வரிகளுக்கு இடயிலாவது
தங்கையாக வாழும்


பாதுநி

ஹேமா said...

பாதுநி,யாரும் எதையும் மறந்து போவதில்லை.மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை கிளறிப் பார்க்கத்தான் விரும்புவதில்லை.
மறக்கின்ற உறவும் இல்லை இது.

நன்றி மாலா அல்லது பாரதி.

Post a Comment