*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, April 26, 2008

காத்திருக்கிறது போதிமரம்....

தடுமாறி
பாவங்களைச் சுமந்தபடி
காத்திருக்கிறது...
புத்தனின் போதனைகள்
சுமந்த போதிமரம்.

புத்தனின் வருகைக்காக
அவனைத் தண்டிக்க...
புதிய போதனைகளைத்
தூசு தட்டிப் புதுப்பிக்க.

மூப்பும்...நரையும்
நோயும்...வறுமையும்
ஆசையும்...அரசும்...
இறப்பும்...இரத்தலும்
வேண்டாமென்று
ஆசைகள் துறந்த புத்தன்
புதிதாய் பிறந்து
இரத்த பூமியில்
தன் பாதம் நனைத்தால்
புதிய வேதம் போதிப்பானோ!?

புத்தனின் புத்திரர்கள்
மனிதராயும் வாழவில்லை
மதத்தின் வழியில்
செல்வாரும் இல்லை.

போதித்து
ஆசைகள் துறந்த பிக்குக்கள் கூட
யுத்தம் வேண்டிச் சத்தியாக்கிரகம்.

மதம் போதிப்பவர்
மதம் கொண்டு
இனபேதம் போதித்தபடி.

ஆசைகள் வெறுத்தவர்
அரசாளக் கட்சிகள் அமைத்தபடி
பிரிவினை கேட்டு
கொடும்பாவி கொளுத்தியபடி.

அரசு சமாதானம் சொல்லி
அரங்கு வந்தாலும்
அரசையே...
கொலை செய்யத் துணியும்
பன்சல(புத்தர் கோவில்)ஆசாமிகள்.

போதிமரம் தவமே இருந்தாலும்
என்றுமே வரப்போவதில்லை
புத்தன்...
இரத்த வாடையோடு வாடும்
பூமிக்கு...

பாவம் போதிமரம்
காத்திருக்கிறது!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

தமிழன் said...

உங்கள் சிந்தனைகள் வித்தியாசமாக உள்ளன, சிந்திக்க மறுபவர்களையும் சிந்திக்க தூண்டும் ஆழமான கருத்து. இந்த கவிதையை திருடி (தங்கள் பெயருடன் தான்) மற்றவருக்கு அனுப்ப தங்கள் அனுமதி தேவை. என் தளத்தில் தங்கள் தளத்தின் தொடர்பை கொடுக்கவும் தங்கள் அனுமதி தேவை.

ஹேமா said...

சந்தோசம் திலீபன்.
நீங்கள் கேட்டவைகளுக்கு என் சம்மதத்தைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களையும் குழந்தைநிலா நண்பணாக ஏற்றுக்கொள்கிறாள்.

விச்சு said...

பாவப்பட்ட போதிமரம்.

Post a Comment